Last Updated : 17 Sep, 2013 11:44 PM

 

Published : 17 Sep 2013 11:44 PM
Last Updated : 17 Sep 2013 11:44 PM

வேலைக்கு என்ன செய்யப்போகிறோம்?

இந்தியாவின் இன்றைய மாபெரும் சொத்து என்ன என்ற கேள்விக்கு உலகெங்கிலிருந்தும் வரும் பதில்களில்பெரும்பாலனவை ‘அதன் மக்கள்தொகை ஆதாயம்’ (demographic dividend) என்பதாகத்தான் இருக்கும். இந்த ஆதாயம் எந்த நாட்டுக்கு இருக்கிறதோ அந்த நாட்டின் உழைக்கும் மக்கள்தொகை கணிசமாக உயரும் வாய்ப்புகள் உருவாகின்றன.

உழைப்பவர்களுக்கும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கும் இடையே இருக்கும் வீதம் ஏறத்தாழ 60:40 என்ற நிலையை அடைகிறது. அதாவது, உழைப்பவர்களின் எண்ணிக்கை அவர்களைச் சார்ந்திருப்பவர்களைவிட அதிகமாகிறது. இதனால் தனிமனித வருமானம் உயர்கிறது. கூடவே நாட்டின் வளமும் உயர்கிறது.

இந்தியாவுக்கு இந்த ஆதாயம் உண்மையாகவே இருக்கிறதா?

சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் உழைக்கும் மக்களின் வீதம், 2004-05-ல் 43%. கடந்த 2011-12-ல் இது 40%. எனவே, இன்று வரை நமக்கு இந்த ஆதாயம் கிடைத்ததாகத் தெரியவில்லை. நாளை கிடைக்கலாம்.”ஆனால், இது நல்ல சேதிதான், நாடு சரியான திசையில் செல்கிறது என்பதையே இந்தக் குறைவு காட்டுகிறது”என்கிறார் பொருளாதார வல்லுநரான சுவாமிநாதன் ஐயர். 15 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30 கோடிக் குழந்தைகள் இன்று பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்கிறார்கள், இவர்கள் கல்விக்கூடங்களிலிருந்து வெளிவரும்போது உழைக்கத் தயாராக இருக்கும் இளைய மக்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டும்” என்கிறார் அவர். அவர் சொல்வது சரி என்றுதான் தோன்றுகிறது.

தமிழகத்தையே உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 15 வயதிலிருந்து 59 வயதுவரை உள்ளவர்களின் எண்ணிக்கை 1981-2001-க்கு இடைப்பட்டகாலகட்டத்தில் 58.6 சதவீதத்திலிருந்து 64.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதன் விளைவாக தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 2004 -2011-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வருடத்துக்கு 10.4 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருப்பதற்கு இது ஒரு முக்கியமான காரணம். ஆனால், இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவானதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் 2000-2008-ல், ஆண்டுக்கு 4.4% தான் அதிகரித்ததாக ‘அசோசேம்’ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் வேலைவாய்ப்புகள் 6.2 % அதிகரித்திருக்கின்றன. ஆனால், தனிநபர் வருமானம் தமிழகத்தில் அதிகரித்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. வேலைவாய்ப்புகள் அதிகமாக இல்லாவிட்டாலும் தனிநபர் வருமானம் குறிப்பிடத் தக்க அளவில் தமிழகத்தில் அதிகரித்திருப்பதின் காரணம் வெளிநாடுகளில் வேலைசெய்யும் தமிழர்கள் அனுப்பும் பணம்.

இந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும்? வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்தையே எதிர்பார்த்துக்கொண்டு எத்தனை ஆண்டுகள் தள்ள முடியும்? உள்நாட்டு வேலைவாய்ப்புகளைப் பெருக்கிக்கொண்டால் ஒழிய, நாடு தனது மக்கள் நலமாக வாழ்வதற்கு நிரந்தரமான வழிமுறைகளை அமைத்துக்கொள்ள முடியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(GDP) வீதம் அதிகரிப்பதோடு, வேலைவாய்ப்புகளும் அதிகரித்தால்தான் நாட்டின் வளர்ச்சி சீரானதாக இருக்கும். கல்லூரிகளிலிருந்தும் பள்ளிக்கூடங்களிலிருந்தும் வெளிவரும் பெரும்பாலானவர்களுக்கு வேலைகள் தயாராக இருக்க வேண்டும். இது இந்தியாவில் நடக்குமா?

நமது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கல்லூரிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 2.7 கோடி. கல்லூரிப் படிப்பு படிக்க வேண்டிய - ஆனால் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களின் - எண்ணிக்கை சுமார் 11 கோடி. இவர்களில் 21 வயதைக் கடந்தவர்கள் குறைந்தது 1.5கோடியாவது இருப்பார்கள். இவர்களுக்கு உடனடியாக வேலை தேவை.

இந்த 2.7 கோடிப் பேர்களில் படித்து முடித்து வெளியில் வருபவர்கள் வருடத்துக்குக் குறைந்தது 50 லட்சம் பேராவது இருப்பார்கள். எனவே, வருடத்துக்கு சுமார் இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில்நாம் இருக்கிறோம்.

ஆனால், நிலைமை என்ன? 2012-ல் இந்தியாவில் சுமார் 5.3 லட்சம் வேலைகள்தான் உருவாக்கப்பட்டன என்று ‘அசோசேம்’ அறிக்கை சொல்கிறது. இந்த வேலைகள் அனைத்தும் கல்லூரிப் படிப்பை முடித்து வந்தவர்களுக்கே அளிக்கப்பட்டன என்று எடுத்துக்கொண்டாலும். படிப்பை முடித்து வந்தவர்களில் 90 சதவீதத்தினருக்கு வேலை கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் பெருநகரங்களில் வாழும் நமக்கு வியப்பை அளிக்கலாம். எனது நண்பர் ஒருவர் ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எவ்வளவு தேடியும் ஆட்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது’ என்றார். இதுவும் உண்மைதான். பெருநகரங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. மும்பையில் 259%, ஹைதராபாத்தில் 114% சென்னையில் 81% அதிகரித்திருக்கின்றன. ஐந்து பெருநகரங்களில் மட்டும் சுமார் 3.25 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெருநகரங்கள் மட்டும் இந்தியா அல்லவே?

இனி இன்னொரு கணக்கெடுப்பைப் பார்ப்போம். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பின் (NSS) புள்ளிவிவரங்கள் சிலமாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. அவற்றின்படி இந்தியாவில் 2011-12-ல் சுமார் 1.4 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டன. முன்னே கூறிய 5.3 லட்சத்துக்கும் 1.4 கோடிக்கும் இடைவெளி அதிகம். இதற்குக் காரணம்,முந்தைய புள்ளிவிவரம் முறைசார்ந்த (formal) துறைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தயாரிக்கப்பட்டது.பிந்தையது சுயமாக வேலை பார்ப்பவர்களையும், நாள்கூலிக்கு வேலை செய்பவர்களையும் கணக்கில்எடுத்துக்கொள்கிறது. இந்தக் கணக்கீட்டின்படி இந்தியாவின் வேலைச் சந்தையில் இயங்குபவர்கள் 48.4 கோடி.வேலையில் இருப்பவர்கள் 47.3 கோடி. வேலையில்லாமல் இருப்பவர்கள் 1.1 கோடி. வேலையில் இருப்பவர்களில் முறையான வேலையில் இருப்பவர்கள் 18% மட்டுமே. சுயமாகத் தொழில் செய்பவர்கள் சுமார் 52%.தினக்கூலியாளர்கள் 30 %. கடந்த ஆண்டில் உருவான வேலைகளில் பெரும்பாலானவை சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தினக்கூலியாளர்களையே சேர்ந்தடைந்திருக்க வேண்டும்.

இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. கல்லூரிகளிலிருந்து படித்து வருபவர்களுக்கு முறையான வேலை கிடைப்பது மிகவும் அரிது. மற்றவர்களுக்கு எந்த வேலை கிடைப்பதும் அரிது.

இந்தியா முன்னேறுகிறது என்பதில் ஐயம் இல்லை. ஆனால், இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் நடைபெறும் முன்னேற்றம் நிரந்தரமானதாக இருக்க முடியாது. தனியார் துறைகளில் நமக்குத் தேவையான அளவில் வேலைகள் உருவாக்கப்படும் என்று கனவில்கூட நினைக்க முடியாது. பொதுத்துறைகள் வேலைகளை உருவாக்கலாம். ஆனால், அவை நம் தேவைகளைப் பாதிகூடப் பூர்த்திசெய்ய முடியாது.

மீதி வேலைகள் எங்கே இருக்கின்றன? அரசிடம் இருக்கின்றன.

அரசு அலுவலகங்களில் எங்கே ஊழியர்கள் தேவையோ அங்கே ஊழியர்கள் இருப்பதில்லை. உதாரணமாக கிராமத்துப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை, செவிலியர் இல்லை.நமது மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்தியாவில் அரசு ஊழியர்கள் தேவைக்குக் குறைவாகத்தான் இருக்கிறார்கள். தடையற்ற சந்தையின் திருத்தலமான அமெரிக்காவில் 1,00,000 பேருக்கு 7681அரசுஊழியர்கள். இந்தியாவில் 1,00,000 பேருக்கு 1622.8 அரசு ஊழியர்கள் மட்டுமே. இது 2500 ஆக அதிகரித்தாலே சுமார் ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்கும்.

பணத்துக்கு எங்கே செல்வது?. இந்த நிதியாண்டில் மட்டும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் வரிச் சலுகைகள் ரூ. 68,000 கோடி. இந்தப் பணத்தை வேலை கொடுப்பதற்காக மட்டும் அரசு பயன்படுத்திக்கொண்டால், குறைந்தது இருபது லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இது ஓர் உதாரணம்தான். பல வழிகள் இருக்கின்றன. தேவையற்ற செலவுகள் எவை என்பது பற்றி மத்திய, மாநில அரசுகளுக்குத் தெளிவான புரிதல் இருக்கிறது. சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை. மனமிருந்தால் பணமும் கிடைக்கும். வரும் தலைமுறைகளுக்கு வேலை கொடுக்க, வாழ்வு கொடுக்க நாம் கடினமான சில முடிவுகளை, எடுத்தாக வேண்டும். உடனடியாக. அதற்கு, பிரச்சினையின் தீவிரத்தை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்!

பி. ஏ. கிருஷ்ணன் - ஆங்கில, தமிழ் நாவலாசிரியர். கட்டுரையாளர். ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. தொடர்புக்கு tigerclaw@gmail.com.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x