Last Updated : 28 Sep, 2016 09:09 AM

 

Published : 28 Sep 2016 09:09 AM
Last Updated : 28 Sep 2016 09:09 AM

வாரிசுகளால் கட்சிக்குள்தான் வெற்றிபெற முடியும்!

வாரிசு அரசியல் சில சமூகங்களுக்கும் பிரிவுகளுக்கும் உதவியாக இருக்கிறது...

நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரியும் காஞ்சன் சந்த்ரா, ‘ஜனநாயக வாரிசுகள்: இந்தியாவின் நடப்பு அரசியலில் அரசு, கட்சி, குடும்பம்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டிருக்கிறது. வாரிசு அரசியல் எப்படி உருவாகிறது, இந்திய அரசியலில் எப்படி அது தகவமைப்பைப் பெறுகிறது என்று விரிவாகப் பேசினார் காஞ்சன் சந்த்ரா...

அரசியலில் குடும்ப வாரிசுகள் உருவாவது மற்றவர்களுக்கு இடமில்லாமல் செய்துவிடும். அது ஜனநாயகத் தன்மைக்கு விரோதமானது என்று நூலில் கூறியிருக்கிறீர்கள்; அதேசமயம், பிற குழுக்களுக்கும் இடம் தரும் என்கிறீர்களே எப்படி?

21-வது நூற்றாண்டில் இந்திய நாடாளு மன்றத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் 1,200 பேர் பற்றிய தரவுகளைத் திரட்டினோம். குடும்பத்துடன் அவர்களுக்குள்ள உறவு, கட்சித் தலைமையுடன் அவர்களுக்குள்ள நெருக்கம், சாதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆராய்ந்தோம். சில ஜனநாயக நியதிகளுக்கு இந்த வாரிசு அரசியல் முறை எதிரானது என்பதற்கு ஆதாரமாக இரு அம்சங்களைக் கண்டோம். முதலாவதாக, வாரிசு அரசியல் என்பது பல்வேறு தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டிய அவையில், ‘முற்பட்ட வகுப்பின’ரின் ஆதிக்கத்தை உறுதிசெய்கிறது. மற்ற பிரிவினரை அது அந்தஸ்தில் குறைந்தவர்களாக்குகிறது. அட்டவணைப் பட்டியல், பிற்படுத்தப்பட்ட வகுப்பு களில் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முஸ்லிம்கள், ஆதிவாசிகள் பிரிவில் வாக்காளர்கள் எண்ணிக்கை அந்த அளவுக்கு உயராவிட்டாலும், பழைய அளவுக்குப் பொருத்தமாக விகிதாச்சாரப்படி உயர்கிறது. இந்தக் குழுக்களின் பிரதிநிதித்துவமும் அவைகளில் அதிகரித்துள்ளன. இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முற்பட்ட வகுப்பினர்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 2009-ல் முற்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் 43% ஆக இருந்தது, 2014-லும் அதே அளவில் நீடித்தது.

வாரிசு என்ற வகையில், அரசியலில் தொடர்ந்து பதவி பெறுபவர்களின் பின்னணியைப் பார்த்தால், அதிலும் முற்பட்ட வகுப்பினர்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். 2014-ல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியல் வாரிசுகளில் 53% முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். வாரிசு அரசியல் என்பது அரசியல் அதிகாரத்துக்கு நெருக்கமான வட்டத்தைச் சேர்ந்தது எனும்போது, முற்பட்ட வகுப்பினர் தங்களுடைய மொத்த எண்ணிக்கைக்கும் அதிகமாகப் பிரதிநிதித்துவம் பெற்றுவிடுகின்றனர். சட்டமன்றங்களில் உறுப்பினர்களாக இடம்பெற்று வெளிவட்டங்களில் உள்ளவர்களிலும் முற்பட்ட வகுப்பினரே அதிகம் இருக்கின்றனர். வாரிசு அரசியல் காரணமாகத்தான், ஒரு குறிப்பிட்ட குழுவினர் மற்றவர்களை அதிகார மையத்திலிருந்து விலக்கி வைக்க முடிகிறது.

அப்படியானால் எப்படி அதுவே அனைவரையும் உள்ளடக்கியதாக முடிகிறது?

வாரிசு அரசியல் காரணமாக அரசியல் அதிகாரம் திரும்பத் திரும்ப ஒரு சில குடும்பங்களிடம்தான் சுற்றிச்சுற்றி வருகிறது என்றாலும், சில அம்சங்களில் அது மற்ற பிரிவினருக்கும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தருகிறது. சமூகரீதியாக மகளிர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முஸ்லிம்கள், இளைஞர்கள் போன்ற பிரிவினருக்கு வழக்கமான வழிகளில் அரசியல் அதிகாரம் கிடைப்பதில்லை. ஆனால், அவர்கள் இன்ன தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் வாரிசு அரசியல் காரணமாக அதிகாரப் பதவியில் அமர வாய்ப்பு பெறுகின்றனர். பிரதிநிதித்துவமே பெறாத குழுக்களுக்கு இடஒதுக்கீடு மூலம் பிரதிநிதித்துவம் தருவதைப் போலத்தான், வாரிசு அரசியல் சில சமூகங்களுக்கும் பிரிவுகளுக்கும் உதவியாக இருக்கிறது. மகளிர், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவில் இப்படி வாரிசு அரசியல் காரணமாகத்தான் ஓரளவுக்காவது பிரதிநிதித்துவம் கிடைத்துவிடுகிறது. தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடிகள் என்ற பிரிவினருக்கு சட்டபூர்வமாக இடஒதுக்கீடு கிடைத்துவிடுவதால், அவர்களிடையே வாரிசு முறை அரசியல் அதிகம் உருவாகவில்லை. வாரிசு அரசியல் தொடர்ந்தால் எல்லா பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்துவிடும் என்பதல்ல இதன் பொருள். சமநிலையற்ற அரசியல் களத்தில் புதிய குழுக்கள், பிரிவுகள் அரசியலில் நுழைய முடியாதபடிக்குப் பல தடைகள் இருக்கின்றன. அவற்றைத் தகர்க்க வாரிசு அரசியல் ஒரு கருவியாகப் பயன்படுகிறது. வாரிசு அரசியலும் இல்லாவிட்டால் இக்குழுக்களின் பிரதிநிதித்துவம் மேலும் குறைவாகவே இருக்கும்.

வாரிசுகளுக்கு அரசியலில் இடம்பெறும் தகுதி இல்லை என்றாலோ, வெற்றி நிச்சயம் இல்லை என்றாலோ அரசியல் கட்சிகள் ஏன் குடும்ப அரசியலை ஆதரிக்கின்றன?

வாரிசுகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களுடைய தகுதி, திறமை, தேர்தலில் அவர்களுக்குள்ள வெற்றிவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு தரப்படுவதில்லை என்பதை அஞ்சலி போல்கனும் நானும் நடத்திய ஆய்வில் தெரிந்துகொண்டோம். கட்சித் தலைமைக்கு விசுவாசம் என்ற அம்சம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு இயல்பாக இருப்பதால் மட்டுமே போட்டியிடும் வாய்ப்பு அவர்களுக்குத் தரப்படுகிறது என்பதை அறிந்தோம். வேட்பாளர்களைத் தேர்வுசெய்ய முறையான இலக்கணங்களைக் கட்சிகள் வகுத்துக்கொள்வதில்லை. அதேபோல கட்சித் தலைமை மீது காட்டும் விசுவாசத்தை முறித்துக்கொண்டு மாற்றுக் கட்சிகளுக்கு யாரும் செல்லாமல் தடுத்துவிடும் அமைப்பும் கட்சிகளிடம் இல்லை. எனவே, உள்ளூர் மட்டத்தில் கட்சித் தொண்டர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்பது அவசியம் என்று தலைமை நினைக்கிறது. அப்படி இருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிடவும் பிறகு அரசில் பங்கு வகிக்கவும் வாய்ப்பு தரப்படுகிறது. இன்னாருடைய குடும்பத்தைச் சேர்ந்தவருக்குப் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்று கட்சித் தலைமை முன்கூட்டியே அறிவித்துவிட்டால், உள்ளூர் அளவில் தொண்டர்கள் வேறு கட்சிகளுக்குப் போவது தடுக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதை உறுதிசெய்ய வாரிசு அரசியல் உதவுகிறது. பாரதிய ஜனதாவில் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேறு வழிகள் இருப்பதால், வாரிசு அரசியலின் போக்கு குறைவாக இருக்கிறது. 2014 நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் களில் 43% பேர் வாரிசுகள். பாஜகவில் அது 15%. 2014-ல் வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும்போது பாஜக தலைமை, ஏற்கெனவே கட்சியில் இருந் தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த வாரிசு களுக்கு வாய்ப்பு வழங்கியதுடன் அவர்களை அவர்களுடைய தந்தை அல்லது தாயின் தொகுதிகளிலேயே நிறுத்தியது. அங்கும் உள்ளூர் தொண்டர்களின் விசுவாசத்தை உறுதிசெய்ய வாரிசு அரசியலுக்கு ஆதரவு தரப்பட்டது.

பகுஜன் சமாஜ் போன்ற கட்சியில், இப்போதைய தலைவர் மாயாவதி, அப்பதவிக்காகவே முன்பிருந்த தலைவரால் தயார் செய்யப்பட்டவர். ஆனால், அக் கட்சியில் இப்போது இரண்டாவதாக சுட்டிக்காட்டக் கூட ஒரு தலைவர் இல்லையே, ஏன்?

பிற சாதிகளைவிட அட்டவணைப் பிரிவினரி டையே வாரிசு அரசியல் மிகமிகக் குறைவு. 2014-ல் பகுஜன் சமாஜ் எம்.பி.க்களில் 8% பேர் மட்டுமே வாரிசுகள். ஆனால், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளில் மட்டுமே இப்பிரிவிலும் வாரிசுகள் அதிகம். அதே சமயம், பகுஜன் சமாஜ் கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாகக் கூறினாலும், அது அக்கட்சியைச் சேர்ந்த முற்பட்ட வகுப்பினரிடையேதான் இருக்கிறது. மாயாவதியைப் பொறுத்தவரை இன்னொரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசைத்தான் தனது பதவிக்குப் போட்டியாகக் கருதுவாரே தவிர, முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சதீஷ் சந்திர மிஸ்ராவின் குடும்பத்தைச் சேர்ந்தவரை அப்படி நினைக்க மாட்டார். சமாஜ்வாடி கட்சியிலும் அதே நிலை. முலாயம் சிங் குடும்பத்துக்குப் போட்டி என்று யாரிடமிருந்தாவது வரும் என்றால், அது இன்னொரு யாதவ் குடும்பத்திடமிருந்துதான் வர முடியும். யாதவ் அல்லாத சாதியைச் சேர்ந்த வாரிசுகளால் முலாயம் குடும்பத்தவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடாது.

காங்கிரஸ் கட்சியில் தலைமுறை மாற்றம் ஏற்பட்டுவருகிறது; இது எங்கே போய் நிற்கும்?

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே கட்சிக்குத் தொடர்ந்து தலைமை வகிப்பதால் காங்கிரஸ் கட்சியால் இனி வெற்றி பெற முடியுமா என்று விவாதம் நடக்கிறது. அதிலும் 2014 மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, இந்த விவாதம் உரக்க ஒலித்துவருகிறது. ராகுல் காந்தியின் தலைமையை எதிர்ப்பவர்கள்கூட வாரிசு அரசியலுக்கு மாற்றாக எந்த யோசனையையும் கூறவில்லை. ராகுல் காந்திக்கு மாற்றாக பிரியங்கா காந்தியைத்தான் கூறுகின்றனர். இந்திய அரசியல் கட்சிகள் அமைப்புரீதியாக எவ்வளவு பலவீனமாக இருக்கின்றன என்பதை வாரிசு அரசியல் உணர்த்துகிறது. வாரிசுகள் தொடர்ந்து கட்சிக்குத் தலைமை தாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையும் காணப்படுகிறது. வாரிசு அரசியலை ஆதரிக்காதவர்கள்கூட, கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதை ஏற்க வேண்டியிருக்கிறது. இதற்கு சமீபத்திய நல்ல உதாரணம் மம்தா பானர்ஜி, மாயாவதி. அரசியலில் செல்வாக்குப் பெற்ற எந்தக் குடும்பத்திலிருந்தும் வராத மம்தா பானர்ஜிக்குப் பிறகு, கட்சியில் அவருடைய சகோதரர் மகன் முக்கியத்துவம் பெற்றுவருகிறார். மாயாவதி கட்சியில் அவருடைய சகோதரர் இப்போது செல்வாக்குள்ள தலைவராகிவருகிறார். இவ்விரண்டு போக்குகளும் என்னவாகும் என்று பார்க்க வேண்டும்.

அப்படியானால், கட்சி அமைப்புகளை எதிர்காலத்தில் வாரிசுகள்தான் நிர்வகிக்கும் என்கிறீர்களா?

வாரிசு அரசியல் வலுப்பட வேண்டும் என்றால், அவர்கள் சார்ந்துள்ள கட்சிகள் முதலில் தேர்தலில் வெற்றிகளைக் குவிக்க வேண்டும். வாரிசுகளால் கட்சிக்குள்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். அவர்களாகவே தேர்தலில் வெற்றி பெற்றுவிட முடியாது. கட்சியினர்தான் உழைத்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும். 2004, 2009, 2014 மக்களவை பொதுத் தேர்தலில் கட்சி சாராமல் தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிட்ட எந்த வாரிசும் வெற்றி பெறவில்லை. சமீப காலமாகத் தேர்தல்களில் போட்டியிடும் சுயேச்சைகள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதேசமயம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதும் மிக மிகக் குறைவாக இருக்கிறது. எனவே, கட்சி எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அரசியல் வெற்றிக்கு அது மிகவும் அவசியமாகிறது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x