Last Updated : 23 Apr, 2014 10:02 AM

 

Published : 23 Apr 2014 10:02 AM
Last Updated : 23 Apr 2014 10:02 AM

வாக்களிப்பதால் எந்தப் பலனும் இல்லையா?

இன்றைய தேர்தல் அரசியல் சூழலில் ‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி’யை எப்படி உயர்த்துவது என்பது முக்கியப் பொது விவாதப் பொருளாக உள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவது அவ்வளவு ஒன்றும் எளிய காரியம் இல்லை. வேகமான பொருளாதார வளர்ச்சியை அடையச் சரியான அரசியல், பொருளாதார நிறுவன அமைப்பு முறைகள் இருக்க வேண்டும் என்று ஒருசாராரும், கல்வி, சுகாதாரம் முக்கியம் என்று வேறு சிலரும் வாதிடலாம்.

சட்டத்தின்படி சரியான ஆட்சி முறை, வளர்ச்சிக்கு முக்கியம் என்பதும் அதில் குறிப்பாக ‘ஜனநாயகம்’ முக்கியம் என்றும் கூறுவதும் உண்டு. மிகவும் முன்னேறிய 30 நாடுகளில் 25-ல் ஜனநாயக அமைப்பு இருப்பதாகவும், மிகவும் பின்தங்கிய நாடுகளில் அவ்வாறு இல்லை என்றும் ஒரு கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. ஜனநாயகப் பற்றாக்குறை, வளர்ச்சியின்மைக்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜனநாயக அமைப்பு உள்ள நாடுகளில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆறு மாதங்களுக்கு முன் அமெரிக்க அரசு 16 நாட்கள் பொருளாதாரரீதியில் ஸ்தம்பித்துநின்றது, உலகினர் கவனத்தை ஈர்த்தது. ஆனால், இதற்குத் தீர்வுகாணப்பட்டதும் ஜனநாயக அமைப்பினால்தான். சீனாவில் கூட அதிகாரப் பரவலாக்கம், சந்தையில் அதிக போட்டி போன்றவற்றை ஏற்றுக்கொண்ட பிறகு, அந்த நாட்டில் பொருளாதார வளர்ச்சி உயர்ந்தது. இது அந்த நாட்டில் மேலும் ஜனநாயகப் பாதையை விரிவடையச் செய்யும் என்று பலர் நம்புகிறார்கள்.

வளர்ச்சிக்கான நிறுவன அமைப்புகள்

ஜனநாயக ஆட்சி முறை மட்டுமே போதுமா? என்ற கேள்வி எழுகிறது. நம் நாட்டில் எல்லாமே ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் மட்டுமே செய்யப்படுவதில்லை. மிகப் பெரிய பொதுநிர்வாக அமைப்பு, நீதிமன்ற அமைப்பு, ஒவ்வொரு துறையிலும் பல ஒழுங்குமுறை ஆணையங்கள், தன்னிச்சையாகவும் வெளிப்படையாகவும் முடிவுகளை அலசி ஆராயும் ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், தொண்டுநிறுவனங்கள் என்று எண்ணற்றவை உள்ளன. இவற்றின் கூட்டுச் செயல்பாட்டால்தான் நம் சமூக-பொருளாதாரச் சக்கரம் சுழல்கிறது. இதில் குறைகள் உள்ளன. ஒவ்வொன்றும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விமர்சனங்கள் உள்ளன. இந்திய ஜனநாயகமும் அதிக விமர்சனத்துக்கு உட்பட்டதுதான். தேர்தல் அரசியலை மையமாகக் கொண்ட ஜனநாயக அமைப்பு மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது. மற்ற அமைப்புகளும் அவசியம்.

வாக்களிக்காதது ஏன்?

ஒருவேளை, இதனாலேயே நமக்குத் தேர்தலில் நம்பிக்கை குறைந்துவிட்டதோ? பொதுவாகவே, ஜனநாயக நாடுகளில் தேர்தலில் வாக்களிக்கும் மக்களின் விழுக்காடு குறைவாகவே உள்ளது. இதை ஒரு பொருளாதாரக் கோட்பாடு விவரிக்க முனைகிறது.

சந்தைப் பொருளாதார முறையொன்றில் ஒவ்வொருவரும் செய்யும் செயல் வரவு-செலவு கணக்குக்கு உட்பட்டது. ஆரோ என்ற நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர், மக்களிடம் மூன்றுக்கும் மேற்பட்ட தரவரிசைப் பட்டியல் இருந்தால், வாக்குகள் மூலம் சரியான தரவரிசைப் பட்டியலைத் தேர்ந்தெடுக்க முடியாது என்று நிரூபித்தார், இதற்கு, ‘சாத்தியமின்மைகுறித்த ஆரோவின் தேற்றம்’ என்று பெயர்.

இன்னொன்றும் உண்டு. ஒன்று அல்லது இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்கள் மிகமிக அரிதே. ஒருவேளை, ஒரு வாக்கில் வெற்றிபெறும் சூழல் இருந்திருந்தால், என்னுடைய வாக்கும் மிக முக்கியமானதாகும். ஆனால், பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் பெரும்பாலானோர் வெற்றிபெறுகின்றனர். ஆக, என் ஒருவனின் வாக்கு, தேர்தலை மாற்றிவிடாது. எனவே, நான் வாக்களிக்கும் வேட்பாளர் வெற்றிபெறுவது என் ஒருவனின் வாக்கால் அல்ல என்பது தெளிவு. வாக்களிக்க எடுத்துக்கொள்ளும் சிரமத்துக்கு எந்தப் பலனும் இல்லை என்பதாலேயே நான் வாக்களிக்காமல் இருப்பதுதான் சரி என்று ஸ்டீஃபன் ஜே. டப்னர், ஸ்டீவன் டி. லெவிட் ஆகிய பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இங்கு வாக்களிப்பதும், லாட்டரிச் சீட்டு வாங்குவதும் ஒன்றுதான். லாட்டரிச் சீட்டு வாங்குவது பொருளியல்ரீதியில் சரியான முடிவு இல்லை. ஆனாலும், அதில் உள்ள சுவாரஸ்யத்துக்காக லாட்டரிச் சீட்டு வாங்கலாம். அதேபோல், வாக்களிப்பது ஒரு சுவாரஸ்யமான வேலை என்பதால் பலர் அதில் ஈடுபடலாம்.

வாக்களிப்பது ஒரு முக்கியமான சமூகக் கடமை என்று சொல்வதை நாம் நம்புவதாலும் இதை நாம் தொடர்ந்து செய்வதும் உண்டு. பலர், குறிப்பாக ஒரு கட்சி அல்லது வேட்பாளரின் விசுவாசி, தன்னுடைய வாக்கு அந்தக் கட்சியின் அல்லது வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களிக்கலாம். ஆனால், வாக்களிப்பது, சந்தைப் பொருளியல் கோட்பாட்டில் லாபம் தராத தேவையற்ற நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு எல்லோரும் நினைத்தால் தேர்தலே நடக்காமல் போகும் அல்லவா? ஒவ்வொருவருக்கும் தேவையற்ற செயலாக உள்ள ஒன்று, எல்லோரும் சேர்ந்து செய்யும்போது உபயோகமான செயலாக மாறுவது ஒரு புதிர்தான்.

ஓட்டுக்குக் காசு

எல்லோரையும் வாக்களிக்கச் செய்யப் பல முயற்சிகள் நடந்துள்ளன. அரசியல் கட்சிகள் வாக்களிக்கக் (தங்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று நம்பி) காசு கொடுக்கின்றன. இதன் மூலம், வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்வதை அவர்கள் உறுதிசெய்கின்றனர். வேறு சிலர் பொருட்களைக் கொடுக்கின்றனர். அரசாங்கங்களும் வாக்களிப்பதை எளிமையாக்குகின்றன. இப்போது உள்ள வாக்கு இயந்திரம், முன்பு இருந்த வாக்குச் சீட்டு முறையைவிட மிகமிக எளிது. மின்னஞ்சலில் வாக்களிப்பது, இணையம் மூலம் வாக்களிப்பது என்று முயற்சிகள் நடக்கின்றன. வாக்களிப்பதை எளிமையாக்கினாலும், வாக்களிக்கும் மக்களின் சதவீதத்தைப் பெரிய அளவில் உயர்த்த முடியவில்லை. இதற்குக் காரணம், நான் மேலே கூறியிருக்கும் விஷயம்தான்: என் ஒருவனின் வாக்கு எந்தவிதத்திலும் ஒரு வேட்பாளரின் வெற்றி, தோல்வியைப் பாதிக்காதபோது நான் வாக்களிக்க மாட்டேன்.

வாக்களிப்பது ஒரு முக்கியமான சமூகக் கடமை என்ற எண்ணத்தை விதைத்த பின், வாக்களிப்பது என் சமூக நிலையை உயர்த்துகிறது என்பதாலேயே பலர் இன்றும் வாக்களிக்கின்றனர். நான் வாக்களிப்பது முக்கியம் என்பது பிரதானமாகவும், சிந்தித்து வாக்களித்தோமா என்ற கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருப்பதும் வேதனைதான்.

கிளென் வெய்ல் என்ற பொருளியல் அறிஞர், சுவாரஸ்யமான ஆலோசனையொன்றைக் கூறுகிறார். ஒருவர் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போதும் அரசாங்கத்துக்குக் கூடுதல் பணம் செலுத்த வேண்டும். முதல்முறை வாக்களிக்க ஒரு ரூபாய், இரண்டாம் முறை வாக்களிக்க நான்கு ரூபாய், மூன்றாம் முறை வாக்களிக்க ஒன்பது ரூபாய், நான்காம் முறை வாக்களிக்க 16 ரூபாய் என்று உயர்ந்துகொண்டே போகும். இதனால், தன்னுடைய வாக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து, பொறுப்புடன் வாக்களிப்பார்கள் என்று கூறுகிறார். இதில் வாக்களிப்பவர்கள், தங்கள் வாக்கின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அந்த வாக்கை வலுவானதாகவும் (பல முறை வாக்களித்து) மாற்றுகின்றனர் என்று கிளென் கூறுகிறார்.

இந்த முறையில் பணக்காரர்கள் அதிக வாக்குகளைப் பெற முடியும் என்பதும், பணக்கார வேட்பாளர்கள் அதிக வாக்குகளை வாங்க முடியும் என்பதும், ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற கோட்பாட்டிலிருந்து மாறுவதும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றாலும், இதுபோன்ற புதிய தேர்தல் முறைகளைச் சிந்திக்க இது தூண்டுகிறது.

வாக்களிப்பது மட்டுமே சமூகப் பொறுப்பு இல்லை. நடுநிலையுடன் சிந்தித்து வாக்களிப்பதுதான் சமூகப் பொறுப்பு என்பதை நிலைநிறுத்த வேண்டும். இது மட்டுமே நாம் வாக்களிப்பதைப் பொருளியல்ரீதியில் நியாயப்படுத்தும்.

- இராம. சீனுவாசன், இணை பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்
தொடர்புக்கு: seenu242@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x