Last Updated : 27 Sep, 2016 09:49 AM

 

Published : 27 Sep 2016 09:49 AM
Last Updated : 27 Sep 2016 09:49 AM

வஞ்சிக்கப்படும் பழங்குடிகள்

தமிழகத்தில் மொத்தம் 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். மலைப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் போதுமான விழிப்புணர்வு இன்றி மலைப் பகுதிகளிலும், மலையையொட்டிய பகுதிகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். தங்களுக்கு அரசின் சலுகைகள் எத்தனை சதவிகிதம் உண்டு என்றும் அவற்றின் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்றும் தெரியாத நிலையில் இருப்பவர்கள் அவர்கள். ஆனால், பழங்குடிகள் என்று சான்றிதழ் வைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சென்று சேர வேண்டிய உரிமைகளைச் சிலர் கவர்ந்துகொள்வதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

மலைப் பகுதிகளிலேயே வாழ்ந்து பழகிவிட்ட பளியர் இன மக்கள், இன்றும் மலைப் பகுதிகளுக்குச் சென்று மலைப் பொருட்களைச் சேகரித்துவருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அங்கிருந்து கொண்டுவரும் தேன், கிழங்கு, மரப்பட்டை, சாரணத்தி வேர், முருங்கைக் கீரை, பெரண்டை, துளசி, ஆவாரம் பூக்கள், சிறுகுறிஞ்சி, பெரியாநங்கை, கொடி சங்கை, மிளகு நங்கை, வெள்ளை நாகைத்தலைவேர், வண்டுகொள்ளிப்பட்டை போன்ற மூலிகைப் பொருட்களைச் சேகரித்துவைத்து, தங்கள் பகுதிகளுக்கு வரும் இடைத்தரகர்களிடம் விற்பனை செய்கிறார்கள். அதில் கிடைக்கும் சொற்பத் தொகைதான் அவர்களது முக்கிய வருமானம்.

போலிப் பழங்குடிகள்

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த பழங்குடியின மக்கள்தொகை 7,94,697 (1.1%). 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப் பின்போது, தமிழகப் பழங்குடியினர் எண்ணிக்கை 3,11,515. ஆனால், 1981 கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 5,20,226 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது, 1971-1981-க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் மட்டும், பழங்குடி மக்கள் தொகையில் 67% உயர்வு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 50%-க்கும் மேற்பட்டவர்கள் உண்மையான பழங்குடிகளா என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அரசு ஆய்வாளர்களை வைத்து, களஆய்வின் மூலம் சரிபார்க்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் இது.

2007-08-ல், பழங்குடியினருக்கான மத்திய அமைச்சரகம் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பூரியா குழு (2004) அறிக்கைகள் போன்றவை இவர்கள் பற்றிய புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில், பழங்குடியினர் அல்லாதோர் பழங்குடியினராக உருவாகும் போக்கு அதிகரித்திருக்கிறது என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலாளர் தெரிவித்திருப்பதாக பூரியா குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பழங்குடிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். பழங்குடிகள் என்று சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். பழங்குடியின மக்களுக்காக அனுதாபப்பட்ட காலங்கள் மாறி, இன்று அவர்களின் பங்கைக் கவர்ந்துகொள்பவர்களாகத் தரைவாழ் மக்கள் மாறியிருப்பது கவலையளிக்கிறது. சமூகநீதியின் உறைவிடமாகப் போற்றப்படும் தமிழகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் பிரச்சினை இது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அரசுச் செயலராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, போலிச் சான்றிதழ்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் உண்மையான பழங்குடி மக்களுக்கே அதிக பரிசீலனைக்குப் பிறகுதான் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. எனினும், போலிப் பழங்குடிகளைக் களையெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

வேர்களை இழக்கும் பழங்குடிகள்

உண்மையான பழங்குடிகள், தமிழக அரசால் தங்களின் பூர்வீக இடங்களான மலைப் பகுதிகளை விட்டு வெளியேற்றப்பட்டு, தரைவாழ்ப் பகுதிகளில் குடியமர்த்தப்படுகின்றனர். இன்றைக்குத் தங்கள் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்க முடியாதவர்களாகவும். சொந்த நிலங்களை இழந்தவர்களாகவும், தங்களின் பூர்வீகமான மலைக்குள் செல்லக்கூட அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதிகளில் போதுமான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பேருந்து என எந்த வசதிகளும் இன்றி அவதிப்படுகின்றனர். உண்மையில், மலைப் பகுதிகளைவிட்டு அரசாங்கம் நம்மைக் கீழே இறக்கிவிட்டதே என்று நினைத்து ஏங்குகிறார்களே தவிர, இடஒதுக்கீட்டு முறையை, பிற சலுகைகளை மீட்டெடுக்க வேண்டும் என்றெல்லாம் அவர்களில் பலருக்கும் தோன்றவில்லை என்பதுதான் கொடுமை!

ஒருகாலத்தில் வேட்டையாடுவதையும், தேன் எடுப்பதையும், மரம் வெட்டுவதையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த இம்மக்கள், காலப்போக்கில் அவற்றை விட்டுவிட்டு, இன்று தேன் எடுக்கும் தொழிலை மட்டுமே தங்கள் குலத்தொழிலாக வைத்திருக்கின்றனர். ஷாம்பு தயாரிக்கப் பயன்படும் இன்டா பட்டை, நன்னாரி வேர்களைச் சேகரித்தல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் பழங்குடியினப் பொறுப்பில் இருப்பவர்கள் பழங்குடியினர் அல்லாதவர்களாகவே இருப்பதாலோ என்னவோ, மலைப் பகுதிகளில் வாழ்கின்ற உண்மையான பழங்குடியின மக்களுக்கான சலுகைகள் முறையாகச் சென்றடைவதில்லை.

கல்வியின் மீது அக்கறை இல்லாத மக்களாகவே பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். அன்றாட உணவுக்கே வழியில்லாத எங்களுக்குக் கல்வியால் என்ன தர முடியும் என்று கேட்கின்றனர். இதிலிருந்தே அவர்களின் அறியாமை வெளிப்படுகிறது. அப்படியிருந்தும் தமிழகத்தின் மலைவாழ்ப் பகுதிகளில் சில இடங்களில் பலர் படித்து முன்னேறிவருவது குறிப்பிடத்தக்க விஷயம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பட்டியல் சாதியினருக்கு 18% இடஒதுக்கீடும், பழங்குடியினருக்கு 1% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் போட்டிகளே இல்லாமல் இருந்த இடஒதுக்கீட்டு முறைகளில் மக்கள்தொகை வளர்ச்சியால் வெகுவான போட்டிகள் நிலவுகின்றன. இதில் பழங்குடியினருக்கான பதவிகளைப் பூர்த்திசெய்ய சில இடங்களில் ஆட்கள் இல்லாத நிலையும் இருந்தது. இதை அறிந்துகொண்ட தரைவாழ் மக்களில் சிலர்தான் பழங்குடியினச் சான்றிதழ்களைப் பெற்று சலுகைகளைப் பெறுகின்றனர்.

பழங்குடியினர் தங்களுக்கான உரிமைகள் பெற அரசு தேவையான விழிப்புணர்வு அளிக்க வேண்டும். அதேபோன்று தமிழகத்தில் பழங்குடியினர் அல்லாதவர்கள் பழங் குடியினருக்கான உரிமைகளைப் பறித்துக் கொண்டால், முறையான நடவடிக்கை எடுத்து பழங்குடியினர் நலன் காக்க உதவ வேண்டும். அதுவே நம் தமிழகத்தில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள் முன்னேற்றம் பெறுவதற்கும், நம் இந்தியாவில் வாழ்கின்ற ஒட்டுமொத்தப் பழங்குடியின மக்கள் விழிப்புணர்வைப் பெறுவதற்கும் வழிவகை செய்யும்.

முனைவர். கொ.சதாசிவம், உதவிப் பேராசிரியர்,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
மின்னஞ்சல்: sadamku@gmail.com

பெரு.பழனிச்சாமி, முனைவர்பட்ட ஆய்வாளர்,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
மின்னஞ்சல்: palanimku@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x