Published : 21 Apr 2014 09:29 AM
Last Updated : 21 Apr 2014 09:29 AM

ராகுலுக்கு என்ன பிரச்சினை?

‘‘சுயமாகக் கற்றுக்கொள்வதில் நம்பிக்கை கொண்டவன் நான்... நான் எனக்கே உரிய வழியில் அரசியல் செய்வேன்...எதையும் செய்யும்படி யாரும் என்னை நிர்ப்பந்திக்க முடியாது. அரசியல்பற்றிய எனது கருத்து இன்றைய அரசியலிலிருந்து மிகவும் வேறுபட்டது.’’ தெஹல்கா பத்திரிகைக்கு 2005-ல் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியது இது. ஆனால், சுமார் ஒன்பது ஆண்டுகள் கழித்து ராகுலின் இந்த வார்த்தைகளை அவரது செயல்பாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெருத்த ஏமாற்றமே ஏற்படுகிறது. வழக்கமாக நாம் கண்டுவரும் சராசரி அரசியல் தலைவர்களிடமிருந்து எந்த வகையிலும் ராகுல் இம்மியளவும் வேறுபட்டவரல்ல என்பதையே அவரது கடந்த 10 ஆண்டு அரசியல் செயல்பாடுகள் காட்டுகின்றன.

நான் பொறுப்பல்ல…

பொருளாதாரக் கொள்கைகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே அநேகமாக எந்த வேறுபாடுகளும் கிடையாது. பா.ஜ.க-வுக்கு, குறிப்பாக நரேந்திர மோடிக்கு, எதிராக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டு இந்து வகுப்புவாத, மதவாத அரசியல். மோடி எத்தகையவர் என்பதை உணர்த்த 2002 குஜராத் கலவரம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படுகிறது. மீண்டும் மீண்டும் ஒவ்வொரு இந்தியரும் தங்களுக்குத் தாங்களே நினைவுறுத்திக்கொள்ள வேண்டிய கலவரங்களுள் ஒன்று அது என்பதில் சந்தேகமேயில்லை. இந்திய அரசியலமைப்பின் மிக அடிப்படையான கூறுகளுள் ஒன்று மதச்சார்பின்மை. ஆனால், 2002-ல் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டத்துக்கு, படுகொலைகளுக்கு மோடி எந்த அளவு பொறுப்பாளியோ அதே அளவுக்கு 1984-ல் சீக்கியர்கள்மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ராஜீவ் காந்தி பொறுப்பாளி என்பதை காங்கிரஸ்காரர்களைத் தவிர்த்து, வேறு யாராலும் மறுக்க முடியாது. 2002 கலவரத்தில் பங்குகொண்டவர்களுக்கு பா.ஜ.க. மாநில அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ துணைபோனது என்றால், 1984 கலவரத்துக்கு மத்திய காங்கிரஸ் அரசு துணைபோனது. கோத்ரா படுகொலைக்கான எதிர்வினையே 2002 குஜராத் கலவரம் என்று சங் பரிவாரம் முஸ்லிம்கள் படுகொலையை நியாயப்படுத்தியது என்றால், ஒரு பெரிய மரம் விழுந்தால் அதைச் சுற்றி சில அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும் என்று சீக்கியர் படுகொலையை ராஜீவ் நியாயப்படுத்தினார். இந்தப் படுகொலையில் பங்குகொண்டவர்களாகக் குற்றம்சாட்டப்பட்ட முக்கியமான காங்கிரஸ் தலைவர்கள் சஜ்ஜன் குமார், ஜகதீஷ் டைட்லர், எச்.கே.எல். பகத், கமல்நாத் உட்பட யாருமே தண்டிக்கப்படவில்லை. சமீபத்தில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் 1984 கலவரத்தின்போது தான் சிறுவன், காங்கிரஸில் எந்தப் பொறுப்பிலும் இல்லையென்பதால் மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார் ராகுல். அவரது அரசியல் வித்தியாசமானதாக, நேர்மையானதாக இருந்திருந்தால் தனது தந்தையின் பங்கை ஒப்புக்கொள்வதுடன் அதற்காக மன்னிப்பையும் கோரியிருப்பார். அத்துடன் அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்காததற்கு காங்கிரஸே காரணம் என்பதையும் ஒப்புக்கொண்டிருப்பார். தந்தையின் குற்றத்துக்காகத் தனயனை யாரும் பொறுப்பேற்கச் சொல்ல முடியாது. ஆனால், குறைந்தபட்சம் தனது தந்தையின் குற்றத்தைத் தனயன் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் எதிர்பார்ப்பது எந்த வகையிலும் தவறல்ல.

வாக்குவங்கி அரசியல்

மதக் கலவரங்கள் மற்றும் மதவாதத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இருக்கும் ஒரே வேறுபாடு பா.ஜ.க-வில் அவை சித்தாந்தத்தின் ஓர் அம்சம்; காங்கிரஸில் அவை வாக்குவங்கி அரசியலின் ஓர் அம்சம். மதவாதத்தை, வாக்குவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் என்றுமே தயங்கியதில்லை. ஷாபானு வழக்கு விவகாரத்தை முஸ்லிம் வாக்குவங்கிக்காகப் பயன்படுத்திக்கொண்ட ராஜீவ், இந்து வாக்குவங்கிக்காக ஷிலன்யாஸ் பூஜை நடத்த விஸ்வ இந்து பரிஷத்துக்கு பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்துவிட்டார். ஏறக்குறைய இதே உத்தியைப் பயன்படுத்திக் கடந்த உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது, முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் தனது குடும்பத்தினர் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது என்றும் (அப்போதும் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது), இந்துக்கள் அதிகம் உள்ள பகுதியில் பாகிஸ்தானை இரண்டாகப் பிளந்து வங்கதேசத்தை உருவாக்கியதன் மூலம் பாகிஸ்தானைப் பலவீனமாக்கியது தனது பாட்டி இந்திரா காந்தி என்றும் பிரச்சாரம் செய்தார் ராகுல்.

குடும்ப ஊழல்

ஊழல் விவகாரங்களிலும் ராகுலின் செயல்பாடுகள் எந்த வகையிலும் வழக்கமான அரசியல்வாதிகளின் செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டதல்ல. மேலே குறிப்பிடப்பட்ட அதே பேட்டியில் அசோக் சவான், வீரபத்ர சிங், சுரேஷ் கல்மாடி, ஆ. ராசா உட்பட பலரின் ஊழல்கள்குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அவரது சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவின் ஊழலைப் பற்றியோ அதை உலகுக்கு அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுக்க முயன்ற அப்பழுக்கற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அஷோக் கெம்காமீது எடுக்கப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைபற்றியோ ஒரு கேள்விகூடக் கேட்கப்படாதது ஆச்சர்யமானது. அதேபோல், பேட்டியளிக்க பிரியங்காவால் விதிக்கப்படும் மிக முக்கியமான நிபந்தனையே வதேரா தொடர்பாக எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்பதுதான். தான் கேள்விக்கு உட்படுத்தப்படுவதை ஜீரணிக்க முடியாத வதேரா ‘வாழைப்பழக் குடியரசில் மாங்காய் மனிதர்கள்’ என்று இந்தியாவையும் இந்தியர்களையும் தனது ஃபேஸ்புக்கில் கேவலமாக விமர்சித்தார்.

சில சமயங்களில் ராகுல் பேசுவதைக் கேட்கும்போது அவருக்குப் பிளவு ஆளுமை (ஸ்பிளிட் பர்சனாலிட்டி) என்ற உளவியல் பிரச்சினை இருக்கிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸின் துணைத் தலைவராக ராகுல் நியமிக்கப்பட்டபோது, அவர் ஆற்றிய உரை ஓர் உதாரணம். அந்த உரையில் ஊழல், ஒரே இடத்தில் அதிகாரம் குவிதல் ஆகியவற்றைக் கடுமையாகக் கண்டித்துப் பேசியபோது, இவர் என்ன காங்கிரஸின் துணைத் தலைவரா அல்லது ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் தலைவரா என்ற சந்தேகம் யாருக்கும் ஏற்பட்டிருக்கும். பொதுவாக, அரசியல்வாதிகள் மக்களின் மறதி மற்றும் முட்டாள்தனத்தின் மீது நம்பிக்கை வைத்தே பேசுகிறார்கள். ராகுலும் விதிவிலக்கல்ல.

வாரிசு அரசியல்

சுதந்திர இந்தியாவின் 67 ஆண்டுகால வரலாற்றில் சுமார் 55 ஆண்டுகள் காங்கிரஸின் ஆட்சியும், சுமார் 48 ஆண்டுகள் ஒரே குடும்பத்தின் ஆட்சியும் நடந்திருக்கிறது என்றால், இந்தியாவின் இன்றைய நிலைக்கு யார் பொறுப்பு என்பதைச் சொல்லத் தேவையில்லை. பரம்பரை ஆட்சியை, தான் முற்றிலுமாக நிராகரிப்பதாக ராகுல் சொல்லுவதும் மாதவராவ் சிந்தியா, ராஜேஷ் பைலட், முரளி தியோரா, ஷீலா தீட்சித் உட்பட பல காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள் அவர்களது அரசியல் வாரிசுகளாக (தமிழகத்தின் மூப்பனார் மற்றும் ப. சிதம்பரத்தையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்) காங்கிரஸில் உருவாகியிருப்பதும் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. அதிகாரம் பரம்பரையாகக் கைமாற்றப்படுவதன் காரணமாகவே சோனியாவும் ராகுலும் பிரியங்காவும் அதிகாரம் பெற்றவர்களாக இருக்க முடிகிறது. தனக்குப் பின்னர் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் காங்கிரஸில் முக்கியப் பொறுப்புக்கு வர மாட்டார்கள் என்று சொல்லும் துணிவு ராகுலுக்கு இல்லை. தேவையெனில், பிரியங்காவும் நேரடி அரசியலில் ஈடுபடத் தயாராக இருக்கிறார் என்பதையே இப்போதைய அரசியல் நிகழ்வுகள் காட்டுகின்றன.

இந்திய அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவர ராகுல் விரும்பினால், சோனியா, ராஜீவ், இந்திரா ஆகியோரது அரசியலை, அதாவது கடந்த 48 ஆண்டு கால காங்கிரஸ் அரசியலை அவர் ஏறக்குறைய முற்றாக நிராகரித்தாக வேண்டும். ஆனால், அதற்கான துணிவோ விருப்பமோ அல்லது ஆளுமையோ ராகுலுக்கு இல்லை. இந்நிலையில், ராகுல் மற்றும் மோடி என இரண்டேயிரண்டு சாத்தியங்கள் மட்டுமே இந்தியர்களுக்கு இருப்பது பெரும் துயரம்தான்.

- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x