Last Updated : 21 Apr, 2014 09:40 AM

 

Published : 21 Apr 2014 09:40 AM
Last Updated : 21 Apr 2014 09:40 AM

மோடி சேவையில் ஆர்.எஸ்.எஸ்.

பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி குறித்து பிலிபிட்-ஷாஜஹான்பூர் சாலையில், காஜிப்பூர் மூங்கேல் என்ற இடத்தில், குடியிருப்புவாசிகள் உற்சாகமாக உரையாடிக்கொண்டிருந்தார்கள். நரேந்திர மோடியை ‘பார்த்தது' குறித்துத் தங்களுக்குள் மாறிமாறிப் பேசிக்கொண்டிருந்தனர். “மோடியைப் பார்த்தீர்களா, உங்கள் கிராமத்துக்கு வந்தாரா?” என்று வியப்புடன் வினவியபோது, “நமோ ரதம் வந்தது” என்று பதில் சொன்னார்கள்.

‘நமோ ரதம்' என்பது பா.ஜ.க-வின் பிரசார வேன். அதில் இரண்டு திரைப்படங்களைத் திரையிடுகிறார்கள். முதல் படம் “மோடி வருகிறார்” என்ற பாடலுடனான விளம்பரம். அடுத்ததில், மோடியே மக்களிடம் நேரடியாகப் பேசுகிறார்!

இன்னும் சிறிது தொலைவு சென்றபோது, பத்ராஜ்பூர் பஜார் என்ற இடத்தில் ‘நமோ ரத'த்தைப் பார்த்தேன். ‘மோடியை அதிகாரத்துக்குக் கொண்டுவருவது உத்தரப் பிரதேச மக்களின் பொறுப்பு’ என்ற வாசகம் அதில் பொறிக்கப்பட்டிருக்கிறது. வார இறுதியில், கடைகளில் சாமான்களை வாங்க வரும் மக்களுக்கு அந்த ரதம் நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது. சின்ன குழந்தைகள் அந்தப் பாடலால் கவரப்பட்டு, “நமோ வருகிறார்” என்று உற்சாகமாகப் பாடிக்கொண்டே அந்த வண்டிக்கு முன்னால் ஆடுகிறார்கள்.

இந்த வாகனத்துடன் வந்த ஸ்ரீபுல் சிங், விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர். இதைப் போன்ற வாகனம் மாநிலத்தின் எல்லா வட்டாரங்களிலும் சுற்றிச்சுற்றி வருகிறது என்றார். அந்த வண்டியை ஓட்டும் டிரைவர் ஒருவரும், ஒலி - ஒளித் தொழில்நுட்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக அசோக் ஆதர்ஷ் என்ற இளைஞரும் அவருடன் இருக்கின்றனர்.

“ஒரு நாளைக்கு 60 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும், ஐந்து இடங்களில் நிறுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு வண்டிக்கும் கட்டளை பிறப்பித்திருக்கிறார்கள். இந்த வாகனங்கள் எங்கு செல்கின்றன, எங்கு நிற்கின்றன, எவ்வளவு நேரம் பிரச்சாரம் செய்கின்றன என்பதையெல்லாம் மாநிலத் தலைநகர் லக்னௌவிலிருந்தே கண்காணிக்கின்றனர்” என்று இன்னொரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர் விவரித்தார்.

இந்த பிரச்சார வண்டிகள் செல்லாத இடமே கிடையாது என்பதால், எல்லா மூலைகளில் இருப்பவர்களுக்கும் மோடியின் பிரச்சாரம் எட்டிவிடுகிறது. மோடி யார், அவருடைய வேண்டுகோள் என்ன, அவருடைய வாக்குறுதிகள் என்ன என்று விளக்கப்பட்டுவிடுகிறது. மற்ற கட்சிகளின் பிரச்சாரங்களும் விளம்பரங்களும் வலுவாக இருக்கும் இடங்களில்கூட இந்த வாகனங்களின் பிரச்சாரம் ஓரளவுக்கு அதை ஈடுகட்டிவிடுகிறது.

வீடுவீடாகப் பிரச்சாரம்

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை இந்த வாகனங் களும் தொலைக்காட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், அடித்தளத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பிரச்சாரத்தைத் தனக்குத் தெரிந்த முறையில், ஆண்டாண்டு காலமாகச் செய்துவரும் வகையில், வீடுவீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறது. குக்கிராமங்களுக்குக்கூட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செல்கின்றனர்.

பிஜ்னூரில் நெரிசல் மிகுந்த குறுகிய சந்தில், ஒரு மாலை நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் ஒன்றுக்குச் சென்றேன். அங்கு மகேஷ் என்பவர் தேர்தல் தொடர்பான வேலையில் மும்முரமாக இருந்தார். ஹெட்கேவார், கோல்வால்கர், புலியின் மீது அமர்ந்த பாரத அன்னை ஆகியோரின் படங்களுடன் அம்பேத்கரின் படமும் சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

“ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அம்பேத்கர் படமா?” - வியப்புடன் கேட்டேன்.

“ஹைதராபாத் நிஜாம் அம்பேத்கரிடம், இஸ்லாத்தில் சேர்ந்துவிடுமாறு அழைத்தார், அம்பேத்கர் அதை நிராகரித்தார். கிறிஸ்தவ மதத்தைத் தழுவவும் அவர் மறுத்துவிட்டார்; பௌத்த மதத்தைத் தழுவினார். பௌத்த மதம் இந்துத்துவத்தையே சேரும்” என்றார் மகேஷ். இந்தத் தந்திரம் அவர்களுக்குப் பலனைத் தருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இப்போது தேர்தல் களத்தில் பணியாற்றிவருகின்றனர். மேற்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளில் சில தொண்டர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இது தெரியவந்தது.

ஒரு சாவடிக்கு 10 பேர்

‘சமன்வய பிரமுக்' என்ற பொறுப்பில் மகேஷ் இருக்கிறார். அவருடன் 10 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அந்தக் குழுவில் இருக்கின்றனர். அவர்கள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கான தேர்தல் பணியை மேற்கொள்கின்றனர். உத்தரப் பிரதேசம் முழுக்க இப்படி 1.3 லட்சம் வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. பாரதிய ஜனதாவின் தேர்தல் களப்பணி எங்கெல்லாம் தொய்வடைகிறதோ அல்லது போதவில்லையோ அங்கே இந்தக் குழுக்கள் அந்தப் பணிகளைச் செய்கின்றன.

சாதாரணமாக இத்தகைய தேர்தல் பணிகளை ஆர்.எஸ்.எஸ்., தேர்தலுக்கு 15 அல்லது 20 நாள்களுக்கு முன்னால்தான் செய்யும். இந்த முறை கடந்த நவம்பர் முதலே வேலையைத் திட்டமிட்டுத் தொடங்கிவிட்டனர். கடைசி நிலையில் இருப்பவரையும் தங்களுடைய பிரச்சாரம் எட்ட வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அத்தனை துணை அமைப்புகளும் ஒரே லட்சியத்தை நோக்கி உழைக்குமாறு திருப்பி விடப்பட்டுள்ளன.

“முசாபர்நகர் (கலவரம்) சம்பவம் தேர்தல் களப்பணியைத் தொடங்க வைத்துவிட்டது” என்றார் மகேஷ். “நரேந்திர மோடி போட்டியிடுகிறார் என்பதால், தேர்தல் பணி வேகமெடுத்தது. இதனால், ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட (பா.ஜ.க.) மக்களவை உறுப்பினர்கள் சரியாகச் செயல்படவில்லை என்று வாக்காளர்களிடம் காணப்பட்ட அதிருப்திகூட இப்போது மறைந்துவிட்டது. பாரதிய ஜனதா தொண்டர்களோ வேறு எவரோ உள்ளடிவேலை செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தொண்டர்களைக் கண்காணிக்க ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் மூத்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவரை நியமித்துள்ளனர் என்று எடாவா அலுவலகத்தில் பேசிக்கொள்கின்றனர்” என்றார் மகேஷ்.

1977 உணர்வு திரும்பிவிட்டது

“நெருக்கடி நிலை விலக்கப்பட்ட பிறகு, 1977-ல் தொண்டர்களிடையே நிலவிய உற்சாகத்தை இப்போது மீண்டும் பார்க்கிறேன்; நாடு இப்போதும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது; அறிவிக்கப்படாத நெருக்கடி நிலவுகிறது. உள்நாட்டில் அராஜகம் நிலவுகிறது. எல்லைகளில் எதிரிகளின் நடமாட்டமும் விஷமங்களும் தொடர்கின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லாவற்றையும் சாதாரணமாகவே கருதுகிறது. தேசத்தை மீட்டெடுக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போவது இந்தத் தேர்தல்தான்” என்று இந்துக்களிடம் கூறுகிறோம் என்கிறார் பரேலியைச் சேர்ந்த உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவிந்த் பிஹாரி அகர்வால்.

கடைசியாக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உள்ளூர் வெளியீடான ‘ராஷ்டிரதேவ்' ஒரு பிரதி ஒவ்வொரு குடும்பத்துக்கும் அளிக்கப்படுகிறது. ‘தனிநபரைத் துதிபாடி வளர்த்துவிடாதீர்கள்' என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தாலும், இந்தப் பிரதி முழுக்க மோடியைப் பற்றி மட்டுமே எழுதப்பட்டிருக்கிறது, முதல் பக்கத்திலும் கடைசி பக்கத்திலும் மோடியின் படங்களுடன்!

தி இந்து, தமிழில்: சாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x