Last Updated : 31 Aug, 2016 09:33 AM

 

Published : 31 Aug 2016 09:33 AM
Last Updated : 31 Aug 2016 09:33 AM

மார்க்சிஸ்ட்களின் கோபத்திலும் கணக்கு உண்டு

எகிப்து எழுத்தாளர் அதாஃப் சய்யீஃப், டைம்ஸ் பத்திரிகையின் இலக்கிய இணைப்பிதழில் சமீபத்தில் எழுதிய கட்டுரையில் பாலஸ்தீனர்கள் குறித்து புத்தகங்களும் கட்டுரைகளும் வற்றாமல் வந்துகொண்டிருப்பதை மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார். இவை பாலஸ்தீனர்கள் மட்டுமே எழுதியவை அல்ல, இஸ்ரேலியர்கள், தென் ஆப்பிரிக்கர்கள், பிரிட்டிஷார், டேனிஷ்காரர்கள் மற்றும் இந்தியர்களும் இவற்றை எழுதியுள்ளனர். சய்யீஃப் எழுதுகிறார்:

“இதற்கு 5 தசாப்தங்கள் பிடித்துள்ளன; இருந்தாலும் இவை மேலும் வளரும். புத்தகங்கள் விண்ணிலிருந்து விழுந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீனர்கள் பற்றிய கதைகள் உலகில் விரிந்துகொண்டே இருக்கின்றன. இதுதான் பாலஸ்தீனர்களின் பெரிய சாதனை. மிகவும் நவீனமான அரசியல், சட்ட, மக்கள் தொடர்பு அமைப்புகளையும் உலகிலேயே வல்லமை மிகுந்த நண்பர்களையும் தங்களை அடக்கும் (இஸ்ரேலிய) அரசு கொண்டுள்ள போதிலும், ஒரு இனமாக, ஒரு கலாச்சாரமாக அழிந்துபோக மாட்டோம் என்று விடாப்பிடியாக நிற்கிறார்கள் பாலஸ்தீனர்கள்” என்று பாராட்டியிருக்கிறார்.

அப்படியே உள்ளத்தைக் கிளறும் வார்த்தைகள், அவற்றில் ஒரு பகுதி நியாயமும்கூட. நவீன வரலாற்றில் சொந்தமாக ஒரு நாடுகூட இல்லாமல் ஒரு காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட இனமாக இருந்தவர்கள் (யூதர்கள்) இப்போது பாலஸ்தீனர்களை அடக்குவதும் அவர்களுடைய நிலங்களைக் கையகப்படுத்துவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக யூதர்களைக் குறிவைத்து வேட்டையாடிய மேற்கத்திய வல்லரசுகள் தங்களுடைய குற்றத்துக்குக் கழுவாய் தேடிக்கொள்ளும் விதத்தில், வரலாற்றையும் கலாச்சாரத்தையும் புறக்கணித்து அவர்களுக்கென்று ஒரு இடத்தை பாலஸ்தீனத்தில் உருவாக்கித் தந்தனர். அங்கே வசித்த பாலஸ்தீனர்களின் நலன்களைப் புறக்கணித்துத்தான் இதைச் செய்தனர். இஸ்ரேல் என்ற நாடு ஏற்பட்ட பிறகு உலகிலேயே பெரிய வல்லரசு நாடான அமெரிக்கா எந்தக் கேள்வியும் கேட்காமல் அதற்கு மேலும் மேலும் உதவிகளையும் ஆதரவையும் தந்துவருகிறது.

பாலஸ்தீனர்களின் வாழ்வுரிமை, பிரதேச உரிமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து நிறைவேற்றிவரும் தீர்மானங்களை இஸ்ரேலிய அரசு புறக்கணித்தேவருகிறது. பாலஸ்தீன அரசை உருவாக்குவது தொடர்பாக அளித்த வாக்குறுதிகளையும் காற்றில் பறக்கவிடுகிறது. தான் ஆக்கிரமித்த பாலஸ்தீனப் பகுதிகளில் வீடுகளைக் கட்டி அதில் இஸ்ரேலியர்களைக் குடியமர்த்திவருகிறது. அமெரிக்காவில் அடுத்தடுத்துப் பதவிக்கு வரும் அதிபர்கள் அவர்கள் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இஸ்ரேலைத் தாங்கிப்பிடித்துவருகிறார்கள்.

பாலஸ்தீனர் பிரச்சினை என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விவகாரம் என்பதால் சர்வதேச அளவிலேயே இடதுசாரிகள் அதைப் பேசுவது தங்களுடைய கடமை என்று கருதுகிறார்கள், அதில் இந்திய இடதுசாரி கள் விதிவிலக்கல்ல. ஊர்வலங்கள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. கட்டுரைகள், கவிதைகள், புத்தகங்கள் கொண்டுவரப்படுகின்றன, அதிலும் குறிப்பாக, மார்க்சிஸ்ட் கட்சிக்கு நெருக்கமானவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். பாலஸ்தீனத்துக்கான ஆதரவு என்பது அமெரிக்கா மீதான வெறுப்பு காரணமாகத் தீவிரமடைகிறது. பனிப்போர் கால ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவை எந்த அளவுக்குத் தூற்ற முடியுமோ அந்த அளவுக்கு, அசுரனாகப் பாவித்து தூற்றுகின்றனர்.

பாலஸ்தீனர்களின் பரிதாப நிலையும் அவர்களை இஸ்ரேலியர்கள் கொடூரமாக நடத்துவதையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை; ஆனால் அவர்களைப் போலத்தான் திபெத்தியர்களும் அதுவும் இந்தியாவுக்கு அருகிலேயே உள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள். சீனர் களின் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகியிருக்கும் திபெத்தியர்களின் நிலையும் சய்யீஃபின் வார்த்தைகள்படி, மக்கள் கூட்டமாகவும் தனித்துவமிக்க கலாச்சாரமாகவும் வாழும் தாங்கள் அடியோடு நிர்மூலமாக்கப்பட்டுவிடக் கூடாது என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். திபெத்தியர்களின் துயரத்தை சர்வதேச இடதுசாரிகள் கண்டுகொள்வதில்லை அல்லது புறக்கணிக்கின்றனர். பாலஸ்தீனர்களுக்காகப் பரிந்துபேசுவதில் முன்னிற்பவர்கள் திபெத்தியர்களுக்கு ஆறுதலாகக்கூட எதையும் சொல்வதைத் தவிர்க்கின்றனர்.

அடக்குவதற்கும் உடந்தை

இந்திய மார்க்சிஸ்ட்கள் மவுனமாக மட்டும் இருக்கவில்லை, திபெத்தியர்களைப் பேச விடாமல் அடக்குவதற்கும் உடந்தையாக இருக்கின்றனர். திபெத்தில் ஊடுருவி அவர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலை, ‘பிற்போக்குத்தனத்தை அழித்து முற்போக்கு எண்ணங்களை முன்னெடுத்துச் செல்வ’தாகப் போற்றிப் புகழ்கின்றனர். முதலாளித்துவ அமெரிக்கா மீது உள்ள விளக்க முடியாத வெறுப்பு காரணமாக கம்யூனிச சீனாவிடம் கண்மூடித்தனமான விசுவாசத்தைக் காட்டுகிறார்கள். எனவேதான் பாலஸ்தீனர்களின் துயரங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் - பாசமிக்க பரிவு ஒரு புறமும், திபெத்தியர்களின் துயரங்கள் மீது அலட்சியத்துடன் கூடிய - சில சமயம் எரிச்சலும் சேர்ந்து புறக்கணிப்பு என்று நடந்துகொள்கின்றனர்.

பாலஸ்தீனர்களிடம் இஸ்ரேலியர்கள் நாகரிகமற்று நடந்துகொள்கின்றனர் என்றால் திபெத்தியர்களிடம் சீனர்கள் நடந்துகொள்வது அதைவிட மோசம் என்பதே உண்மை. மேற்குக் கரையில் யூதக் குடியிருப்புகளைக் கட்டிக்கொண்டேவருகின்றனர் என்பது இஸ்ரேலியர்கள் மீதான குற்றச்சாட்டு; திபெத்தில் ஹான் பிரிவு சீனர்களைப் பெருமளவில் குடியமர்த்தி மக்கள்தொகை அடிப்படையிலேயே திபெத்தியர்களைச் சிறுபான்மை இனத்தவராக மாற்றும் முயற்சி நடைபெற்றுவருகிறது. இஸ்ரேலியச் சிறைகளில் பாலஸ்தீனர்கள் படும் வேதனைகளைப் போல சீனச் சிறைகளில் அரசை எதிர்க்கும் திபெத்தியர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள் கொடூரமானவை. திபெத்தின் மீது சீனா நடத்தும் சூழலியல் சார்ந்த ஏகாதிபத்தியத்துக்கு வரம்பே கிடையாது. திபெத்தியர்களின் ஆற்று நீர் சீனப் பகுதிப் பயன்பாட்டுக்குத் திருப்பப்படுகிறது, திபெத் பகுதியில் கிடைக்கும் கனிமங்கள் அகழ்ந்தெடுத்துச் செல்லப்படுகின்றன. பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலியர்கள் ஏற்படுத்தும் சேதத்தைவிட நீண்ட காலத்துக்கு திபெத் வேதனைப்படும் அளவிலான செயல்களைச் சீனா செய்கிறது. இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களின் வழிபாட்டுத் தலங்களையாவது விட்டுவைத்திருக்கும் நிலையில், சீனர்கள் திபெத்தியர்களின் பவுத்த மடாலயங்களை டஜன் கணக்கில் இடித்துத்தள்ளித் தரைமட்டமாக்கியதுடன் பலவற்றைச் சூறையாடியும் நாசப்படுத்தியுள்ளனர்.

லாமா அல்ல அராஃபத்

இரு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களில் மிக முக்கியமான வேறுபாடு எதிர்ப்பின் வடிவம் தொடர்பானது; 1959-ல் அரைகுறையான எழுச்சிக்குப் பிறகு சீனத்துக்கு எதிரான போராட்டத்தின் வடிவத்தையே திபெத்தியர்கள் வன்முறையற்றதாக தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்வதாக மாற்றிக்கொண்டுவிட்டனர். சீனத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக புத்த பிக்குகள் தீக்குளித்து இறக்கின்றனர். பாலஸ்தீனத்திலோ இஸ்ரேலியக் குடிமக்களை அழிக்கும் வகையில் தற்கொலைப் படையாக வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு பாலஸ்தீனப் போராளிகள் மாய்கின்றனர். இவ்விரண்டு நடைமுறைகளில் உள்ள வேறுபாட்டுக்குக் காரணம் எதிர்ப்புகளுக்குத் தலைமை தாங்கிய மற்றும் தாங்கும் முக்கியத் தலைவர்களின் அணுகுமுறையை ஒட்டியதே. மிகவும் அடக்கமாகச் சொல்வதானால் பாலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யாசர் அராஃபத், திபெத் தலைவர் தலாய் லாமா போன்றவர் அல்ல.

இரு பிரச்சினைகளுக்குமுள்ள மூன்றாவது வேறுபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இஸ்ரேல் நாட்டுக்குள்ளேயே ‘சமாதான முகாம்’ என்றொரு அமைப்பு இருக்கிறது. நேர்மையும் துணிச்சலும் உள்ள இஸ்ரேலியர்கள் அதில் உறுப்பினர்கள்; இஸ்ரேலிய அரசின் நில ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்கக் கொள்கையை அம்பலப்படுத்தி, கடுமையாக எதிர்ப்பவர்கள். அவர்களில் முன்னணியில் இருப்பவர் இந்தியவியல் நிபுணரான டேவிட் ஷுல்மன். பழந்தமிழ் இலக்கியங்களையும், தெலுங்கு இலக்கியங்களையும் ஆராய்ந்தவர். பாலஸ்தீனர்களின் நிலங்களை இஸ்ரேல் அரசு ஆக்கிரமித்திருப்பதற்கு எதிராக சத்தியாகிரக முறையில் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு போராட்டம் நடத்துகிறவர்.

தன்னுடைய எல்லைக்குள் இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடாகத்தான் திகழ்கிறது. அதன் பத்திரிகைத் துறையும் நீதித் துறையும் சுதந்திரமானவை. எகிப்திய, இந்திய அறிவுஜீவிகள் எந்த அளவுக்கு பாலஸ்தீனர்களுக்குள்ள உரிமைகள் குறித்துப் பேசுகிறார்களோ அந்த அளவுக்கு இஸ்ரேலிய அறிஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் அச்சமின்றித் தீவிரமாகப் பேசுகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலிய அரசின் அட்டூழியங்கள் எப்படிப்பட்டவை என்பதை அமெரிக்கப் பத்திரிகைகள் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் இஸ்ரேலியப் பத்திரிகைகள் தோலுரித்துக் காட்டுகின்றன.

அதே சமயம் சீனத்தில் திபெத்தியர்களுக்காகக் குரல் கொடுக்கவோ பரிந்து பேசவோ யாருமில்லை. சீனத்தில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி இதற்கொரு காரணம். யாருக்கும் கருத்துச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ கிடையாது. நோபல் பரிசு பெற்ற லியு ஜியாபாவ் போன்றவர்களே அரசை விமர்சித்துக் கட்டுரை எழுதியதற்காகப் பத்தாண்டுச் சிறைவாசம் விதிக்கப்பட்டு சிறைக்குள் தள்ளப்படுகின்றனர். இன்னொரு முக்கியக் காரணம் ஹான் இனத்தின் ஆதிக்கம். சீனாவின் பெரும்பாலான அறிவுஜீவிகள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். சீனம் என்பது ஹான் இனத்தின் ஏகபோகப் பிரதேசம் என்ற எண்ணம் அவர்களுக்கு. திபெத்தியர்கள், உய்குர்கள் மற்ற இதர மத, இனச் சிறுபான்மையினர் அனைவரும் ஹான் இனத்தவர் தங்களுக்கு உரியது, உண்மையானது என்று எடுத்துக்கொள்ளும் உரிமை களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியவர்கள்.

சோஷலிஸ்ட்கள் எனப்படும் சமதர்மவாதிகள் தங்களை ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்றும் சர்வதேசியவாதிகள் என்றும் கூறிக்கொள்கின்றனர். இந்திய மார்க்சிஸ்ட்கள் இந்தக் கொள்கைகளை மிகவும் கவனத்துடன்தான் கையாள்வார்கள். பாலஸ்தீனர்களை இஸ்ரேலியர்கள் தங்களுடைய காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட குடிகள் என்று அடக்கி ஆள்கின்றனர் என்றால் சீனர்கள் அதை விடப் பல மடங்குக்கு அதையே திபெத்தியர்கள் விஷயத்தில் செய்கிறார்கள். இரண்டிலுமே அரசின் அதிகாரமும் ராணுவ பலமும் பயன்படுத்தப்பட்டு வலுக்குறைந்த சிறுபான்மையினர் தேசிய அடையாளமின்றி நசுக்கப்படுகிறார்கள்.

1942-ல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஆதரிக்காதவர்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவதுண்டு. திபெத்தில் சீனர்களின் மிருகத்தனமான அடக்குமுறைக்கு வக்காலத்து வாங்கும் இடதுசாரிகளுடைய செயல் அவர்களுடைய வரலாற்றில் மற்றொரு கரும்புள்ளி என்பது என்னுடைய கருத்து. 1942-ல் உலகப் போர் நடந்தபோது ஹிட்லரையும் நாஜிகளையும் எதிர்த்துப் போரிடுவதற்குத்தான் முன்னுரிமை தர வேண்டும் என்பதால் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்துக்கு ஆதரவு தரவில்லை என்று கூறினால்கூட அதை நியாயமான, ஏற்கத்தக்க வாதம் என்று கொள்ளலாம். திபெத்தை சீனா ஆக்கிரமித்து அவர்களை அடக்கி ஒடுக்குவதில் அப்படி நியாயப்படுத்த எதுவுமில்லை. சீனா என்பது ஏகாதிபத்திய, ஆக்கிரமிப்பு சக்தி. திபெத்தியர்கள் நிராயுதபாணிகளான பாதிக்கப்பட்ட அப்பாவிகள். இப்படியிருந்தும் இந்திய மார்க்சிஸ்ட்கள் தலாய் லாமா மீது வசைமாரி பொழிந்தனர், திபெத்திய மக்கள் மீதும் கலாச்சாரத்தின் மீதும் சீனா நடத்தும் தாக்குதல்கள் குறித்து ஏதும் பேசாமல் மவுனம் காக்கின்றனர்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x