Last Updated : 28 Jun, 2016 09:19 AM

 

Published : 28 Jun 2016 09:19 AM
Last Updated : 28 Jun 2016 09:19 AM

மாணவர் ஓரம்: இடம் பெயரும் ரோஹிஞ்சா மக்கள்

நமக்குப் பக்கத்தில் இருக்கிறது மியான்மர். அதன் இராக்கைன் மாநிலத்தின் வடக்கே வாழ்ந்தவர்கள் ரோஹிஞ்சா மக்கள். மானுடவியலாளர்கள் அவர்களை இந்தோ-ஆரிய இனக் குழுவினர் என்கிறார்கள். இவர்கள் ரோஹிஞ்சா எனும் தனியான ஒரு மொழியைப் பேசுகின்றனர்.

சுமார் 400 ஆண்டுகளாக இவர்கள் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்று தகவல்கள் உள்ளன. பூர்வகுடிகள், ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது குடியேறியவர்கள், வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று வேறுபட்ட தகவல்கள் அவர்களைப் பற்றி உள்ளன. மியான்மர் நீண்ட காலமாக ராணுவ ஆட்சியின் பிடியிலேயே உள்ளது. ராணுவ சர்வாதிகாரி நீ வின் 1982-ல் ‘பர்மிய தேசிய இனம் பற்றிய சட்ட’த்தை அறிவித்தார். அதன் மூலம் இந்த மக்களுக்குக் குடியுரிமை பறிக்கப்பட்டது.

ரோஹிஞ்சா என்று அவர்களை அழைப்பதை உள்நாட்டில் ஆதிக்கநிலையில் உள்ள பவுத்த தேசியவாதிகள் எதிர்க்கின்றனர். வேறு சிலரோ இவர்களை வங்காளிகள் என்றே அழைக்கின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த அந்நியர்கள் என்று அவர்களைப் பற்றி வெறுப்பைப் பரப்புவதும் நடக்கிறது.

மியான்மரில் 2013 கணக்குப்படி 13 லட்சம் ரோஹிஞ்சாக்கள் இருந்தனர். 2015-ல் ஏற்பட்ட வன்முறைகள் அவர்களை இடம்பெயர வைத்துள்ளன. தாய்லாந்து முதல் சவுதி அரேபியா வரை பல நாடுகளுக்கு அவர்கள் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். மீதமுள்ளோரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மியான்மரின் சுகாதாரமற்ற அகதி முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள் இவர்களின் பிரச்சினையில் கவனம் செலுத்தியதால் ஐக்கிய நாடுகள் சபையும் தற்போது இதில் கவனம் செலுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அங்கே சென்று பார்வையிடுவதற்காக பணிகளையும் தொடங்கியுள்ளனர்.

அதனால், அரசு அதிகாரிகளுக்கு மியான்மர் அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ‘இஸ்லாத்தில் நம்பிக்கை உள்ளவர்கள்’ என்று மட்டும் அவர்களைக் குறிப்பிட்டால் போதும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. மற்ற பெயர்களில் குறிப்பிட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. இந்த மக்களின் தனித்தன்மையை அழிக்கும் திட்டமிட்ட முயற்சி இது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x