Last Updated : 09 Feb, 2016 09:39 AM

 

Published : 09 Feb 2016 09:39 AM
Last Updated : 09 Feb 2016 09:39 AM

பொருள் செறிவுள்ள முழக்கம்

கோஷங்களையும் குறும்பெயர்களையும் உருவாக்கு வதில் நம்முடைய பிரதமருக்கு அலாதி இன்பம். ‘ஸ்வச் பாரத்’, ‘மேக்-இன்-இந்தியா’, ‘பேட்டி படாவ் - தேஷ் படாவ்’இதெல்லாம் முன்பு. இப்போது ‘ஸ்டார்ட்-அப்-இந்தியா’, ‘ஸ்டேண்ட்-அப்-இந்தியா’. மத்திய திட்டக்குழு இப்போது ‘நீதி ஆயோக்’. ‘இந்தியாவை மாற்றியமைப்பதற்கான தேசிய நிறுவனம்’ என்ற ஆங்கில வார்த்தைகளின் முதலெழுத்துச் சுருக்கம்தான் ‘நீதி ஆயோக்’. ‘ஸ்மார்ட் சிட்டி’ என்பதில் ‘ஸ்மார்ட்’ என்ற முதலெழுத்துகளுக்கு என்ன விளக்கம் என்று புரியவில்லை.

இப்படிக் குறும்பெயர்களையும் கோஷங்களையும் உருவாக்கும் அவருடைய ஆர்வம் உள்நாட்டு விவகாரங்களோடு நிற்கவில்லை. சீனத்துடனான உறவுக்கு ‘இன்ச்’ என்றும், இன்னொன்றுக்கு ‘மைல்ஸ்’ என்றும் குறும்பெயர்கள். (இந்தியாவும் சீனாவும் என்பதில் இரு நாடுகளின் ஆங்கில எழுத்துகளில் முதலிரண்டைச் சேர்த்து INCH. மைல்ஸ் என்பது Millenium with Exceptional Synergy என்ற பதங்களின் முதல் சொல் சுருக்கம்).

மக்களவைப் பொதுத் தேர்தலின்போது இந்தியாவின் மிகச் சிறந்த விளம்பர வாசக எழுத்தாளர்கள் மோடியின் பிரச்சாரத்துக்கு மிகவும் உதவினார்கள். அவர் பிரதமரான பிறகு உருவான இந்த வார்த்தைகள் அவர்கள் எழுதித் தந்ததா அல்லது பிரதமரின் கற்பனையிலேயே உதித்தவையா என்று தெரியாது. நமக்குத் தெரிவதெல்லாம் இந்த குறுஞ்சொற்களும் கோஷங்களும் அடுத்தடுத்து அலையலையாக வந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான். ஒரு வாசகத்தைப் படித்து, புரிந்துகொண்டு, மனதில் பதியவைத்துக்கொள்வதற்குள் அடுத்தது வந்துவிடுகிறது.

சாஸ்திரி எழுப்பிய ஒரே கோஷம்

நரேந்திர மோடியைத் தொடர் கோஷகர் என்று சொல்லலாம். இன்னும் பத்து அல்லது இருபது ஆண்டுகள் கழித்து எத்தனை கோஷங்கள் அல்லது குறும்பெயர்கள் நினைவில் இருக்கும் என்று தெரியவில்லை. மறைந்த பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் 50-வது நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்தன. சாஸ்திரி தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஒரேயொரு கோஷத்தைத்தான் எழுப்பினார். 50 ஆண்டுகள் கழித்தும் அது நம்முடைய காதுகளில் இன்னமும் ரீங்கரித்துக்கொண்டிருக்கிறது. அது ‘ஜெய் ஜவான்’, ‘ஜெய் கிசான்’ என்ற கோஷம்.

இந்த கோஷத்தை சாஸ்திரி எழுப்பியதன் பின்னணியை அறிவது அவசியம்.

1962-ல் சீனாவுடன் நடந்த போரில் அவமானப்படத்தக்க வகையில் தோல்வியடைந்தது இந்தியா. சீனத்திடமிருந்து தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்பதுடன் சண்டையிட ஆயுதங்களும் போதிய அளவில் இல்லை. இனி நாட்டின் ஐந்தாண்டுத் திட்டமிடலில் ராணுவத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்கில்தான் ‘ஜெய் ஜவான்’ என்றார் சாஸ்திரி. 1960-களின் தொடக்கத்தில் பருவமழை தவறியதால் இந்தியாவின் பல மாநிலங்களில் விளைச்சல் வெகுவாகக் குறைந்தது. கடும் வறட்சி நிலவியது. உணவு தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. மேற்கத்திய நாடுகளிடமிருந்து கோதுமை உள்ளிட்ட தானியங்களை இறக்கி நிலைமை சமாளிக்கப்பட்டது. இல்லாவிட்டால் ஏராளமானோர் பட்டினியால் இறக்க நேரிட்டிருக்கும். இனி இந்த நிலை வரக் கூடாது என்றுதான் அந்த கோஷத்தின் அடுத்த பகுதியில் ‘ஜெய் கிசான்’ என்றார் சாஸ்திரி.

ராணுவப் பாதுகாப்பிலும் உணவுதானிய விளைச்சலிலும் குறைகள் ஏற்பட்டதற்கு அவருக்கு முன்னால் ஆட்சி செய்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்கும் கணிசமான பங்கு உண்டு. ராணுவத் துறையைவிட வெளியுறவுத் துறைக்கே நேரு அதிக முக்கியத்துவம் அளித்தார். பொருளாதார வளர்ச்சியிலும் விவசாயத்தைவிட தொழில்துறைக்கே, அதிலும் கனரகத் தொழில்துறைகளுக்கே அதிக அக்கறை செலுத்தினார். சீனத்துடனான போரில் தோல்வி ஏற்பட்ட பிறகு ராணுவ அமைச்சகப் பொறுப்பிலிருந்து வி.கே. கிருஷ்ண மேனனை நீக்கிவிட்டு, யஷ்வந்த்ராவ் பல்வந்த்ராவ் சவாணைக் கொண்டுவந்தார். ஒய்.பி. சவாண் என்று அழைக்கப்பட்ட அவர் அதிகம் பேசமாட்டார். தன்னுடைய செயலில் கவனமாக இருப்பார். சிறந்த நிர்வாகி. லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானபோது சவாணைத் தொடர்ந்து ராணுவ அமைச்சராக வைத்துக்கொண்டார். அவர் மேற்கத்திய நாடுகளிலிருந்து நவீன ஆயுதங்களையும் கருவிகளையும் வாங்கி ராணுவத்தைப் பலப்படுத்தினார். சோவியத் யூனியன் ஆதரவாளரான வி.கே. கிருஷ்ண மேனன் மேற்கத்திய நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்குவதைத் தடுத்தார். சவாணும் சாஸ்திரியும் மேற்கொண்ட அணுகுமுறைகளால் ராணுவம் பலமடைந்து 1965-ல் பாகிஸ்தான் நம் மீது போர் தொடுத்தபோது பலத்த அடி வாங்கிப் பின்வாங்க வைத்தது. இந்திய ராணுவத்தின் தரைப்படையும் விமானப்படையும் சிறப்பாகச் செயல்பட்டு பாகிஸ்தானைத் தோல்வியடைய வைத்தன.

சி. சுப்பிரமணியம் தேர்வு

வேளாண் துறையில் சாஸ்திரி சாதித்தது அதைவிடச் சிறப்பானது. நேருவின் அமைச்சரவையில் இருந்தவர்களில் மிகச் சிறந்தவர் சி. சுப்பிரமணியம். நேருவின் பார்வையில் தொழில்துறை முக்கியமானது என்பதால் உருக்குத் துறை அமைச்சராக சி. சுப்பிரமணியம் பதவி வகித்தார். அடுத்தடுத்து வறட்சிகள் தொடர்ந்ததால், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சி. சுப்பிரமணியத்தை வேளாண் அமைச்சராக்கினார் சாஸ்திரி. விவசாயிகளின் பிரச்சினைகளை நன்கு உணர்ந்த சி. சுப்பிரமணியம் நவீன உழவுத் தொழில்நுட்பம், உழவுக் கருவிகள், பாசன வசதிகள், விதைகள், இடுபொருட்கள் உதவியுடன் விளைச்சலை மேம்படுத்தத் தீவிரமாக உழைத்தார். புதிய வீரியரக விதைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் விஞ்ஞானிகளை ஊக்குவித்தார். டெல்லியில் தனது அரசு இல்லத்தைச் சுற்றியே புதிய ரக வீரிய விதைகளை விதைத்தார். பிறகு, அந்த வீரிய ரகங்கள் விவசாயிகளுக்குத் தரப்பட்டு நாடு முழுக்கச் சாகுபடி அதிகரித்தது. எல்லா ரகப் பயிர்களின் விளைச்சலும் அதிலும் குறிப்பாக கோதுமையின் விளைச்சல் பல மடங்கு பெருகியது. அதனால் இந்தியா பஞ்சத்திலிருந்தும் உணவுதானிய இறக்குமதியிலிருந்தும் எளிதாக மீள முடிந்தது.

சவாணையும் சுப்பிரமணியத்தையும் தேர்வு செய்த சாஸ்திரி, அவர்களைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் மூலம் கண்காணித்துக்கொண்டிருக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார். இன்ன வேலைக்கு இவர் என்று அடையாளம் கண்டு ஒப்படைப்பதில் அவர் சமர்த்தராக விளங்கினார். நேருஜியிடம் அந்தத் திறமை இல்லை. மோடியிடமோ, தகுந்தவர்களைத் தேர்வு செய்வதிலும் அவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதிலும் திறமை இல்லை என்றே தோன்றுகிறது. மத்திய அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்டதற்காக ‘பாரத ரத்னா’ விருது பெற்ற ஒரே நிர்வாகி சி. சுப்பிரமணியம்தான். ஆனால், சி. சுப்பிரமணியம் சாதித்ததற்குக் காரணம் அவரைத் தேர்வு செய்த பிரதமர் அவரைச் செயல்பட அனுமதித்ததுதான்.

சாஸ்திரி மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தி பிரதமரானார். பசுமைப் புரட்சியின் விளைவுகள் 1960-களின் பிற்பகுதியிலும் 1970-களின் முற்பகுதியிலும் பலன்தர ஆரம்பித்தபோது, அந்தப் புகழையெல்லாம் இந்திரா காந்தி அறுவடை செய்துகொண்டார். அதிர்ஷ்டவசமாக 1965-ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போரில் கிடைத்த வெற்றிக்கான பெருமையை சாஸ்திரியிடமிருந்து மற்றவர்களால் பறிக்க முடியவில்லை.

சாஸ்திரி மேலும் ஆண்டிருந்தால்…

லால் பகதூர் சாஸ்திரி மட்டும் மேலும் 5 ஆண்டுகளுக்குப் பிரதமராகப் பதவி வகித்திருந்தால் நேரு - காந்தி குடும்ப ஆட்சிக்கு வழி ஏற்பட்டிருக்காது. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி இன்றைக்கு உயிரோடு இருந்திருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையே வேறு மாதிரி இருந்திருக்கும். சஞ்சய் காந்தி பெரிய தொழிலதிபராக இருந்திருப்பார். ராஜீவ் காந்தி விமான பைலட்டாகப் பணி செய்து ஓய்வுபெற்றிருப்பார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்க ராஜீவ் காந்தி நிறைய ஆல்பங்களை வீட்டில் வைத்திருந்திருப்பார். இறுதியாக, சாஸ்திரி மேலும் பல ஆண்டுகளுக்கு வாழ்ந்திருந்தால் சோனியா காந்தி இன்று கனிந்த இல்லத்தரசியாகத் திகழ்ந்துகொண்டிருப்பார். பதவிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே சாஸ்திரி இறந்ததால் இந்திரா காந்தியும் அவருடைய வம்சாவழியினரும் காங்கிரஸ் கட்சி மீதும் பிறகு ஆட்சி மீதும் தங்களுடைய பிடிகளை இறுக்க முடிந்திருக்கிறது. நேரு பரம்பரைக்காக உரைகளையும் அறிக்கைகளையும் எழுதும் அறிக்கை தயாரிப்பாளர்கள் அந்த குடும்பத்தைச் சாராத ஒருவரை மட்டுமே குறிப்பிடுகிறார்கள் என்றால் அது மகாத்மா காந்தி மட்டுமே! மற்றபடி 1947-க்குப் பிறகு, நாடு அடைந்த முன்னேற்றத்துக்குக் காரணமே நேருஜி, இந்திராஜி, ராஜீவ்ஜி, சோனியாஜீக்கள்தான். வெட்கமற்ற தங்களுடைய பாரபட்சப் போக்கில் சர்தார் படேல், ராஜாஜி, காமராஜர், சவாண், சுப்பிரமணியம், நரசிம்ம ராவ் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி போன்றோரின் பெயர்களைக்கூட எதற்கும் உச்சரிப்பதே கிடையாது.

இந்திரா, சோனியா தலைமையிலான காங்கிரஸ் வல்லபபாய் படேலின் பெருமையையும் புகழையும் நிராகரித்து தூர எறிந்ததால் பாஜக அதை ஸ்வீகரித்துக்கொண்டு உதாரண புருஷராகக் காட்டிக்கொண்டிருக்கிறது. சாஸ்திரியின் நினைவையும் புகழையும்கூட காங்கிரஸார் தூக்கி எறிந்துவிட்டனர். பாஜக அவரையும் சொந்தம் கொண்டாடுமோ? அப்படி அவர்கள் செய்தால் படேலைச் சொந்தம் கொண்டாடியதைவிட இன்னும் அபத்தமாக இருக்கும். ராணுவத்தைப் பலப்படுத்துவதிலும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் தந்ததிலும் நேருவின் வழியிலிருந்து விலகியிருந்தாலும் இந்தியாவின் சமூக, மத பன்மைத்துவத்துக்கு நேருஜி காட்டிய மரியாதையையும் அளித்த முக்கியத்துவத்தையும் அப்படியே பின்பற்றி மரியாதை செய்தவர் சாஸ்திரி.

நேருவைப் போலவே சாஸ்திரியும் இந்தியாவை ‘இந்துக்களின் பாகிஸ்தானாக்க’ விரும்பவில்லை. 1965-ல் இந்தியா, பாகிஸ்தான் போரின்போது பி.பி.சி. நிறுவனம் இந்தியப் பிரதமரும் இந்துவுமான சாஸ்திரி, இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுடன் போருக்குத் தயாராகிவருகிறார் என்று செய்தியில் கூறியது. தவறான இந்த காட்சிப்படுத்தலை லால் பகதூர் சாஸ்திரி தனக்கே உரிய பாணியில் நிராகரித்தார். 1965 செப்டம்பர் இறுதி வாரத்தில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் திரண்ட கூட்டத்தில் சாஸ்திரி உரை நிகழ்த்தினார். “இந்த பொதுக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் மீர் முஷ்டாக் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் என்பதுடன் இஸ்லாமியரும் ஆவார். உங்களுக்கு முன்னால் உரை நிகழ்த்தி அமர்ந்துள்ள பிராங்க் அந்தோனி மிகச் சிறந்த வழக்கறிஞர், அரசியல் சட்டத்தை வகுத்த சபையில் அங்கத்தினர் என்பதுடன் விசுவாசம் மிக்க கிறிஸ்தவர். இங்கே ஏராளமான சீக்கியர்களும் பார்சிகளும் இதர மதங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். நம் நாட்டின் தனித்தன்மை எதுவென்றால் நம்மிடைய இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றோம் என்பதுதான். நம் ஊர்களில் இந்து ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் நிறைந்துள்ளன. ஆனால் இந்த மத அடையாளத்தை நாம் அரசியலில் கொண்டுவருவதில்லை. இதுதான் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வேறுபாடு. பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துக்கொண்டு அரசியலில் அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறது; இந்தியர்களான நாமோ விரும்பும் மதத்தில் சேரவும் விரும்பும் வகையில் வழிபடவும் சுதந்திரம் பெற்றவர்களாக இருக்கிறோம். அரசியல் என்று வந்துவிட்டால் நாம் அனைவரும் இந்தியர்களாகவே இருக்கிறோம்” என்றார் சாஸ்திரி.

மோடிக்கு இந்தத் தொலைநோக்கு இருக்கிறதா?

சாஸ்திரிக்கு இருந்த இந்த மனோபாவம், தொலைநோக்குப் பிரதமர் மோடிக்கு இருக்கிறதா? சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் செயல்வீரராக மோடி துடித்தாலும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த அவருடைய கடந்தகாலம் இன்னமும் அவருக்குள் விழிப்பு நிலையி லேயே இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்துவர்கள், முஸ்லிம் களுக்கு எதிராக அனல் கக்கியும் விஷம் கக்கியும் பேசும் அவருடைய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் களையும் அமைச்சர்களையும் கண்டிக்காமல் மவுனமாக இருக்கிறார். வட கிழக்கு மாநிலங்களில் பழங்குடிகள் அளிக்கும் எருமைக்கடா கொம்புகளைக் கொண்ட தலைப்பாகைகளைக்கூட அணியும் மோடி, முஸ்லிம்கள் தரும் குல்லாவை அணியத் தயங்குகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியா ‘யாருக்கோ’ அடிமைப்பட்டுக் கிடந்ததாகத் தன்னுடைய பேச்சில் குறிப்பிடுகிறார்.

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு போல நரேந்திர மோடியும் பன்மதத்தன்மையுடன் விளங்குவார் என்று எதிர்பார்ப்பது சற்றே மிகைதான். பிரதமருக்கும் அவருடைய ஆலோசகர்களுக்கும் நம்முடைய பணிவான வேண்டுகோள் இதுதான், இனி வார்த்தைகளையும் கோஷங்களையும் எழுப்புவதற்கு முன்னால் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள் என்பதுதான். லால் பகதூரின் 50-வது நினைவாண்டில் இருந்தாவது புதிய கோஷங்களையும் குறும்பெயர்களையும் உருவாக்குவதில்லை என்று மோடி உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். இதுவரை எழுப்பிய கோஷங்களில் இரண்டு அல்லது மூன்றை மட்டும் தேர்ந்தெடுத்து, தனது அமைச்சரவையில் மிகச் சிறந்த திறமைசாலிகளைக் கொண்டு அவற்றைச் செயல்படுத்த வேண்டும். சவாணையும் சுப்பிரமணியத்தையும் சாஸ்திரி அனுமதித்ததைப் போல அனுமதிக்க வேண்டும்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x