Published : 22 Oct 2014 07:47 AM
Last Updated : 22 Oct 2014 07:47 AM

பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா

இன்று கழகங்கள் நிகழ்த்தும் தனிநபர் வழிபாட்டின் ஆரம்பப் புள்ளியே பெரியார்தான்.

இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் முன்னாள் சோவியத் யூனியனுக்கான இந்தியத் தூதுவராக இருந்தபோது நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்ச்சி இது. அன்றைய சோவியத் தலைவரான ஜோசப் ஸ்டாலினை அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பிற நாட்டுத் தூதுவர்கள் சந்திப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால், ராதாகிருஷ்ணன் தத்துவஞானி என்பதால் அவருடன் உரையாடுவதை ஸ்டாலின் விரும்பினார். ஆகவே, அவர்களின் சந்திப்பு அவ்வப்போது நடந்தது.

அத்தகைய ஒரு சந்திப்புக்குப் பிறகு, கிரெம்ளின் மாளிகையிலிருந்து வெளிவந்த ராதாகிருஷ்ணனுடன் கைகுலுக்க விரும்பினார் அவரை அழைத்துவந்த ரஷ்ய கார் ஓட்டுநர். “என்னுடன் கைகுலுக்க ஏன் விரும்புகிறீர்கள்? என்று ராதாகிருஷ்ணன் கேட்டபோது அதற்கு அந்த ஓட்டுநர், ‘‘இந்தக் கைகள்தானே ஸ்டாலினுடன் கைகுலுக்கியவை, அதனால்தான்’’ என்றாராம். சீனாவில் மாவோ எப்படி வழிபடப்பட்டார் என்பது உலகறிந்தது. பொதுவாகவே, சர்வாதிகாரிகள் வெற்றிகரமாக அதிகாரத்தில் தொடர்வதற்கு, அவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டு வழிபடப்படுவது அவசியம் என்பதால் அவர்கள் அதைத் திட்டமிட்டு உருவாக்கி ஊக்குவித்தனர்.

காந்தியாக இருந்தாலும்…

ஆனால், இது சர்வாதிகாரிகளின் ஆயுதம் மட்டுமல்ல. காந்தி அவரது சீடர்களாலும் மக்களாலும் ஏறக்குறைய தெய்வமாகவே வழிபடப்பட்டார். காந்தியின் சொல்லும் செயலும் இந்த பிம்பத்துக்கு வலுவூட்டுவதாக இருந்ததே தவிர, அதைத் தகர்த்தெறிவதாக இல்லை. காங்கிரஸில் வெளிப்படையான விவாதங்கள் நடந்தபோதிலும் காந்தியின் வார்த்தைகளே இறுதி யானவையாக இருந்தன.

காந்தியையும் மனதில் வைத்துக்கொண்டுதான் அம்பேத்கர், “தனது வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகச் சேவை செய்த மாபெரும் மனிதர்களுக்கு நன்றியுடன் இருப்பதில் தவறில்லை. ஆனால், நன்றி காட்டுவதற்கு எல்லை இருக்கிறது.

அயர்லாந்து தேசியவாதி டேனியல் ஓ கானெல் கூறியதைப் போல எந்த ஆணும் தனது நன்றிக்கடனுக்காகத் தனது கவுரவத்தை விலையாகத் தர முடியாது; எந்தப் பெண்ணும் தனது நன்றிக் கடனுக்காகத் தனது கற்பை விலையாகத் தர முடியாது; எந்த தேசமும் தனது நன்றிக்கடனுக்காகத் தனது விடுதலையை விலையாகத் தர முடியாது. இந்த எச்சரிக்கை வேறு எந்தவொரு தேசத்தையும்விட, இந்தி யாவுக்கு அதிக முக்கியமானது. ஏனெனில், அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடு வகிக்கும் பங்கு உலகின் வேறு எந்த நாட்டை விடவும் இந்தியாவில் மிக அதிகம்.

மதத்தில் வேண்டுமானால், பக்தி என்பது ஆன்ம விடுதலைக்கான பாதையாக இருக்கலாம். ஆனால், அரசியலில் பக்தி அல்லது நாயக வழிபாடானது தாழ்வுக்கும், இறுதியாக சர்வாதிகாரத்துக்குமான பாதையாகவே இருக்கும்’’ என்றார்.

கடவுளை மனிதன் தண்டிக்கலாமா?

தனது வாழ்நாள் முழுவதையும் மனித குலத்தின் மேன்மைக்காக அர்ப்பணித்த மனிதர்களை வழிபடுவதே ஆபத்தானது, தவறானது என்றால் கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், விஜயகாந்த் போன்றவர்கள் அவர்களது தொண்டர்களால் வழிபாடு செய்யப்படுவதை எப்படிப் பார்ப்பது? பல ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதியின் பிறந்த நாளின்போது, ‘நீ வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்தேன் என்ற ஒரு பெருமை போதும் எனக்கு’ என்று அறிவித்த ஒரு சுவரொட்டி வாசகம் நினைவுக்கு வருகிறது.

தங்கள் தலைவர்கள் யாரையும் வாழ்த்த வயதில்லாமல் வணங்க மட்டுமே செய்கிற தொண்டர்களால் தமிழகம் நிறைந்திருப்பது ஏன்? தொண்டர்கள் அல்ல, இரண்டாம் நிலைத் தலைவர்களே தங்கள் கட்சியின் தலைவர்களை மேடைகளில் பெயர் சொல்லிக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவானது எப்படி? கட்சியில் தலைவன்/தலைவியைத் தவிர்த்து, வேறு யாருக்குமே சுயமரியாதை இருக்கக் கூடாது என்ற நிலை இன்று தமிழகத்தின் எல்லா கட்சிகளிலும் (இடதுசாரிக் கட்சிகளைத் தவிர்த்து) உருவாகிவிட்டது எப்படி?

திமுகவில் பொதுக் குழு கூடி விவாதங்கள் நடத்துமென்றாலும், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் எப்போதும் தலைவரிடம் விடப்படும். அதிமுகவில் அதுவுமில்லை. பூமித் தாய் தடுக்காவிட்டால் இன்னமும் சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கத் துடிக்கும் அமைச்சர்கள், பெருமக்களைக் கொண்டவர் ஜெயலலிதா. சுயமாகச் சம்பாதித்த சொத்தை (பரம்பரை சொத்தை அல்ல) ஒருவர் என்ன வேண்டுமானலும் செய்வதற்கு உரிமை உள்ளதைப் போலவே கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சிகளின் மீது உரிமை பெற்றிருக்கிறார்கள்.

நதிமூலம் எங்கே?

சுயமரியாதைக்கென இயக்கம் கண்ட ஒரு மாநிலத்தில் இப்படி நடைபெறுவது மாபெரும் முரண்நகையாகத் தோன்றக்கூடும். ஆனால், சுயமரியாதை அழித்தொழிப்பு இன்று தமிழக அரசியலில் முழுமை பெற்றிருக்கிறது என்றால், அதற்கான தொடக்கம் பெரியார் உருவாக்கி வளர்த்த சுயமரியாதை இயக்கத்திலும், திராவிடர் கழகத்திலும் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது சற்று அதிர்ச்சியாக இருக்கக்கூடும்.

ஆனால், அதுவே உண்மை. ‘‘நான் சொல்வது சரியா, தவறா என்று சிந்தித்துப் பார்த்துச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என்று பொதுமக்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்ட பெரியார், ஒருபோதும் அந்தச் சிந்தனை சுதந்திரத்தைத் தனது இயக்கத்திலிருந்த பிற தலைவர்களுக்கோ தொண்டர்களுக்கோ வழங்கவில்லை.

உதாரணமாக, முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக சௌந்திர பாண்டியனைப் பெரியார் முன்மொழிந்தபோது, ‘‘இனிமேல் வந்து இங்கு அவரை ஒருவர் பிரேரேபிக்கவோ ஆட்சேபிக்கவோ உண்மையாக யாருக்கும் அதிகாரமும் யோக்கியதையும் கிடையாது. பிரேரேபணையோ ஆமோதிப்பதோ ஆதரிப்பதோ கொஞ்சமும் அவசியமே இல்லை’’ என்கிறார்.

‘‘ஜனநாயகம் பித்தலாட்டமான காரியம் மட்டுமல்ல, முட்டாள்தனமானதும்கூட’’ என்று கூறும் பெரியார், “என்னைப் பின்பற்றுகிறவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை, இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்தப் பகுத்தறிவை, மனசாட்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, நான் சொல்வதைச் செய்யுங்கள்” என்கிறார்.

சுயமரியாதை அழித்தொழிப்பு

சர்வாதிகாரியாக நடந்துகொள்வதை ஒப்புக் கொள்ளும் பெரியார், இது கழகத்தின் லட்சியத்துக்காக, பொது நன்மைக்காக என்கிறார். எல்லா சர்வாதிகாரிகளும் சொல்லும் அதே நியாயத்தைத்தான் பெரியாரும் சொல்கிறார். பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப்படும் பெரியாருக்குத் தனது இந்த சர்வாதிகாரம், சுயமரியாதை என்ற கோட்பாட்டுக்கே எதிரானது என்பது புரியாது போயிருக்க வாய்ப்பில்லை.

விதையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? சுயமரியாதை அழித்தொழிப்பு விஷயத்தில் பெரியார் போட்ட விதை இன்று ஆலவிருட்சமாய் ஓங்கி வளர்ந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பெரியார் போட்ட பாதையைத்தான் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பின்பற்றியுள்ளனர். இந்த விஷயத்தில் இவர்களிலிருந்து வேறுபட்டவராக இருந்தது அண்ணா மட்டுமே.

ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டது முதல் பிணையில் விடுவிக்கப்பட்டது வரை தமிழகத்தில் நடந்த கூத்துகளையெல்லாம் என்னவென்று சொல்வது? ‘விதியே, விதியே! தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்?’ என்று 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கேட்ட கேள்விக்கான விடை 21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படி இருக்கும் என்று ‘நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்’ என்று பாடிய பாரதியால்கூட எதிர்பார்த்திருக்க முடியாது.

- க. திருநாவுக்கரசு, சமூக-அரசியல் விமர்சகர்,
தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x