Published : 22 Dec 2014 09:59 AM
Last Updated : 22 Dec 2014 09:59 AM

புத்தகங்களை இலவசமாக ‘விற்றால்’ என்ன?

இன்னொரு புது ஆண்டு பிறக்கவிருக்கிறது; இன்னொரு புத்தகக் காட்சி தொடங்கவிருக்கிறது. புத்தகக் காட்சிகள் நமக்கும் புத்தகங்களுக்கும் உள்ள உறவை உற்றுநோக்கி, அதைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. நம் சமூகம் தமிழ்ப் புத்தகங்களையும் தமிழ்ப் பதிப்பாளர்களையும் எப்படிப் பார்க்கிறது?

பொதுவாக, படித்தவர்களும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும்கூட, பதிப்பாளர் என்பவரை ‘அச்சிடுபவர்’ என்றே அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதை 40 ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பப் பார்த்துவருகிறேன். நீதிபதிகள், வக்கீல்கள், பேராசிரியர்கள், இசைக் கலைஞர்கள் - இப்படி எந்தத் துறையினராக இருந்தாலும், நான் பிறரால் அவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் நேரங்களில் தவறாமல் என்னிடம் கேட்கப்படும் முதல் கேள்வி “உங்கள் அச்சகம் எங்கே இருக்கிறது?”

பரஸ்பர சேவைகள்

சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஒருநாள் காலை அலுவலகம் திறக்கும்போது ஒருவர் எனக்காகக் காத்திருந்தார். தலைமைச் செயலகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் உதவியாளர் அவர். ஒரு கடிதத்தை நீட்டினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது: “என் கவிதைகள் பன்னிரண்டு ஐரோப்பிய மொழிகளில் வெளியாகியிருக்கின்றன. இவற்றின் ஆங்கிலப் பதிப்பு ஒன்றை நீங்கள் வெளியிட வேண்டும். டெமி 1/8 அளவில் 144 பக்கங்கள் வரும். 2,000 பிரதிகளை நீங்கள் அச்சிட வேண்டும். எனக்கு 500 பிரதிகளை இலவசப் பிரதிகளாகத் தர வேண்டும். இது போக, மற்றவற்றின் விற்பனையில், நீங்கள் தரும் ராயல்டியை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவற்றைப் பேசி முடிவெடுக்க என் உதவியாளரிடம் எனக்கு எந்த நேரம் சரிப்பட்டுவரும் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு, என்னை என் அலுவலகத்தில் வந்து சந்திக்கவும்.” நான் என்னுடைய அலுவலக முகத்தாள் ஒன்றை எடுத்து, “ஐயா, உங்கள் கவிதைத் தொகுப்பை என்னால் பரிசீலிக்கக்கூட இயலாது” என்று மட்டும் எழுதி, கையெழுத்திட்டு வந்தவரிடமே கொடுத்தனுப்பினேன். இது நடந்து பதினைந்தே நாட்களில் முன்னணித் தமிழ்ப் பதிப்பாளர் ஒருவர் அந்தக் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டார். அந்தப் பதிப்பாளர் இந்த ‘சேவைக்கு’ ஈடாகப் பல அனுகூலங்களை அந்த உயர்நிலை ஐ.ஏ.எஸ். அதிகாரியிடமிருந்து பெற்றிருப்பார் என்பதும் சந்தேகமில்லை.

புத்தகம் கிலோ என்ன விலை?

இன்னொரு சம்பவம்: 1982-ன் துவக்கத்தில் பெரும் சீடர் குழாத்தைக் கொண்டிருந்த தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் என் அலுவலகத்துக்கு வந்தார். சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ நாவல் வெளியாகி சில மாதங்களே ஆகியிருந்தன. அதை அவர் வாங்க விரும்பினார். அவர் கேட்ட முதல் கேள்வி, “எனக்கு எவ்வளவு கழிவு தரு வீர்கள்?” “வழக்கமாக எல்லோருக்கும் தரும் 10%தான் உங்களுக்கும்” என்றேன். “இல்லை, 30% வேண்டும்” என்றார். “நீங்கள் வாங்கப்போவதோ ஒரே ஒரு பிரதி; நீங்கள் விற்பனையாளரும் இல்லை. எப்படி அதிகக் கழிவு தர முடியும்?” என்று கேட்டேன். “எல்லா பதிப்பாளர்களும் எனக்கு 30% தருகிறார்கள்” என்றார். “மற்ற பதிப்பாளர்களைப் பற்றிப் பேச வேண்டாம். இங்கு இதுதான் நடைமுறை.” “என்னிடம் 3,000 புத்தகங்கள் இருக்கின்றன.” “உங்களிடம் 3,000 புத்தகங்கள் இருந்தால், இந்த வெளியீட்டின் தரம் உங்களுக்குப் புலப்பட்டிருக்குமே. அந்தத் தரத்தைப் பார்க்கும்போது 20 ரூபாய் மலிவு என்று தோன்றவில்லையா?” ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ புத்தகத்துக்கு அப்போது யாரும் பயன்படுத்தாத உயர்தரத் தாளும், அப்போது இருந்த, அதிகச் செலவு பிடிக்கும் இயந்திர அச்சுக்கோப்புத் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தியிருந்தேன். அந்தப் புத்தகத்தின் அடக்க விலை ரூ.11-க்கும் மேலே. விற்பனை விலையோ ரூ.20-தான். வந்த பேராசிரியர் “பதிப்பாளர்கள் செய்யும் தில்லுமுல்லுகள் எனக்குத் தெரியாதா?” என்று தொடர்ந்தார். நான் அவரை நிறுத்தி, “உங்களுக்கு இப்போது ஒரு காசுகூடக் கழிவு தரப்போவதில்லை. முழு விலையைக் கொடுத்து வாங்கிக்கொண்டு போங்கள்” என்று கூறிவிட்டு என் அறைக்குப் போய்விட்டேன்.

‘புனிதர்’ பதிப்பாளர்

ஒருமுறை புத்தகக் காட்சி ஒன்றின் தொடக்க விழாவில், அரசுத் தகவல் தொடர்புத் துறையின் உயர்நிலை அதிகாரி ஒருவர் பேசும்போது இப்படிச் சொன்னார்: “பதிப்பாளர்கள் மிகச் சிறந்த முறையில் புத்தகங்களைத் தயாரித்து, மிகக் குறைந்த விலையில் மக்களுக்குத் தர வேண்டும்.” இந்தக் கூற்றின் அபத்தத்தை அவர் உணர்ந்தாரா என்று தெரியவில்லை. மிகச் சிறந்த முறையில் தயாரிப்பதை எப்படி மிகக் குறைந்த விலையில் விற்க முடியும்? அவர் சிந்தனைப்படி, புத்தகம் என்பது புனிதமான, உன்னதமான விஷயம். இது மக்களுக்குப் போய்ச் சேர வேண்டுமானால், குறைந்த விலையில் விற்றால்தானே அது முடியும்? இப்படிச் சிந்திப்பவர்கள், பதிப்புத் தொழிலை, வரவு-செலவு அடிப்படையில் இயங்கும் மற்ற பிற தொழில்களைப் போல் பார்ப்பதில்லை. உயர்தர ஹோட்டலில் ஏகப்பட்ட பணம் செலவழித்து ஒரு கோப்பை காபியைக் குடிப்பவர்கள், மிகச் சிறந்த காபி மிகக் குறைந்த விலையில் கொடுக்கப்பட வேண்டும் என்று கேட்பதில்லை; கேட்கவும் கூசுவார்கள். ஆனால், புத்தகங்கள் என்று வந்துவிட்டால், பதிப்புத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அன்றாடங்காய்ச்சிகளாக, வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஊதிய கமிஷன் அவ்வப்போது அள்ளித் தரும் ஊதிய உயர்வுகளோ ஓய்வூதியமோ பிற வசதிகளோ, பதிப்புத் துறையில் வேலை செய்பவர்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஏனென்றால், அவர்கள் ஒரு ‘புனிதப் பணியில்’அல்லவா இருக்கிறார்கள்!

அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர், முக்கியமான தமிழ்ச் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் ஒருவர், க்ரியா அகராதியின் முதல் பதிப்பு வெளியான மறு ஆண்டு அகராதி வாங்க வந்தார். அகராதியை வெகுவாகப் பாராட்டினார். தனக்கு இரண்டு பிரதிகள் வேண்டும் என்றார். தனக்குக் கூடுதல் கழிவு வேண்டும் என்றார். எனக்குக் கோபம் வந்தது. “இந்த மாதிரி தரத்தில், இவ்வளவு பெரிய புத்தகத்தை இதே 170 ரூபாயில் அமெரிக்காவில் வாங்க முடியுமா?” என்று கேட்டேன். (அப்போதைய நிலவரப்படி, இந்திய விலைக்கு நிகரான அமெரிக்க விலை ரூ.900.) உலகம் எல்லாம் பார்த்தவர்கள், விலைவாசிகளைப் பற்றித் தெரிந்தவர்கள், இங்கே வந்ததும் 20 ரூபாய்க்கும் 30 ரூபாய்க்கும் பேரம் பேசுவதுதான் அவலம்.

மிக அண்மையில், சென்னை புத்தகக் காட்சிக்கு க்ரியா அரங்குக்கு ஒருவர் வந்தார். மிகத் தரமான உடைகளை, மிகக் கச்சிதமாக அணிந்திருந்திருந்த அவர், க்ரியா அகராதியை நீண்ட நேரம் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு, என்னிடம் வந்து கேட்டார்: “இவ்வளவு அருமையான அகராதியை வெளியிட்டிருக்கிறீர்களே, ஏன் இதை நீங்கள் இலவசமாக எல்லோருக்கும் தரக் கூடாது?” எனக்குப் பதில் பேச நா எழவில்லை.

இந்த அவல நிலைக்குச் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் காரணம். புத்தகம் என்பது ஒருவர் எழுதி ஒருவர் வெளியிடுவதால் உருப்பெற்றுவிடுவதில்லை. அது சமூகத்தில் வேர்விட்டுத் தனக்கான ஆகிருதியை வளர்த்துக் கொள்ள, எழுத்தாளர்கள், பதிப்பாளர்களைத் தாண்டி, கல்வி அமைப்பு, ஊடகங்கள், குடும்பம் என்று எல்லா அங்கங்களும் இடம்தர வேண்டும். புத்தகங்களுக்குச் சமூக அந்தஸ்து ஏற்பட வேண்டும். இந்த அந்தஸ்து கிடைக்க, பதிப்பாளர்களும் தங்கள் தொழிலைத் தொழில் திறனோடு மேற்கொள்ள வேண்டும். மாற்றம் ஏற்பட யார், எங்கிருந்து தொடங்குவது?

- ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன்,

பதிப்பாளர், ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் ஆசிரியர், தொடர்புக்கு: rams.crea@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x