Last Updated : 28 Jun, 2016 09:09 AM

 

Published : 28 Jun 2016 09:09 AM
Last Updated : 28 Jun 2016 09:09 AM

பிரெக்ஸிட்டுக்குப் பிறகு மிஞ்சுவது என்ன?

எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு உயிர்க் காற்றை அளிப்பதுபோல இருந்துள்ளது ஆதரவுப் பிரச்சாரம்

‘பிரெக்ஸிட்’ வாக்கெடுப்புக்கு முன்னால் லண்டன் போனவர்களுக்கு ‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனாவது, விலகுவதாவது’ என்று தோன்றியிருக்கும். ‘சேர்ந்தே இருப்போம்’ என்ற வண்ண சுவரொட்டிகளும் பதாகைகளும் பெரும்பாலான வீட்டு ஜன்னல்களில் காட்சி தந்தன. பிரச்சாரம் தொடங்கியபோது தடுமாறிய பங்குச் சந்தைகள்கூட பின்னர் சுதாரித்தன. ‘சேர்ந்தே இருப்பது’ என்ற முடிவுதான் வெற்றி பெறும் எனப் பந்தயங்கள் கட்டப்பட்டன. சுதந்திரக் கட்சி (யு.கே.ஐ.பி.) தலைவர்கூடத் தோற்றுவிடுவோம் என்றுதான் நம்பியுள்ளார்.

சண்டர்லேண்ட் முதல் முடிவைத் தந்தது. அதுதான் தேசிய அளவிலான முடிவுக்கு ‘மாதிரி’யாக இருக்கும். ‘வெளியேற வேண்டும்’ என்றுதான் முடிவு வரும் என்று தெரியும். ஆனாலும் 22% அதிகமாக வந்ததை யாரும் எதிர்பார்க்கவேயில்லை. உடனே பவுண்டின் மதிப்பு இறங்க ஆரம்பித்தது. தெற்கு இங்கிலாந்தின் பாசில்டன் அடுத்த அதிர்ச்சியைத் தந்தது. மூன்றில் இரண்டு பங்குபேர் ‘வெளியேற’ வாக்களித்தனர். மிகப் பெரிய வியப்பு வேஸ்ஸ் தந்த முடிவுதான். அங்கு ‘சேர்ந்தே இருக்க வேண்டும்’ என்றுதான் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள். 22 வாக்கு மையங்களில் 17-ல் ‘வெளியேற வேண்டும்’ என்பதற்கே ஆதரவு! லண்டனிலிருந்தும் ஸ்காட்லாந்திலிருந்தும் வந்த முடிவுகள் ‘சேர்ந்தே இருப்பதற்கு’ ஆதரவைச் சற்றே அதிகரித்தன. ஆனால், அதிகாலை 3 மணிக்கு நிலைமை தெளிவாகிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் ‘வெளியேற வேண்டும்’ என்று 52% பேர் கருத்து தெரிவித்தனர். 43 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த பிரிட்டன், வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டது.

கேமரூன் தான் காரணம

‘சேர்ந்திருக்க வேண்டும்’ பிரச்சாரம் தோற்றதற்கு வாக்காளர்கள் மேல் பழிபோட முடியாது. 72% வாக்குப்பதிவு. பிரதமர் டேவிட் கேமரூன் தான் பொறுப்பேற்க வேண்டும். வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றவரே அவர்தான்! வெளியேறுவதால் உண்டாகும் இழப்பையும், தொடர்வதால் கிடைக்கும் பலன்களையும் தெளிவுபடுத்த அவர் தவறிவிட்டார். அவரது கன்சர்வேடிவ் கட்சியும் இந்த விவகாரத்தில் இரண்டுபட்டுவிட்டது. எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு உயிர்க் காற்றை அளிப்பதுபோல இருந்துள்ளது ஆதரவுப் பிரச்சாரம்.

ஐரோப்பாவுடன் இருப்பதை வலுவாக எதிர்த்தவர்கள் வலதுசாரிகள்தான். ‘பிரிட்டனுக்கென்று சிறப்புச் சலுகைகளை வாங்குவேன்’ என்றார் கேமரூன். ஊடகங்களும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றின. ஐரோப்பாவைவிட உயர்ந்தது பிரிட்டன் என்ற எண்ணம் பெரும்பாலோரிடம் பதிந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினாலும் உலகில் நமக்கென்று தனியிடம் நிச்சயம் உண்டு என்றும் எண்ணுகிறார்கள்.

கடைசிப் பிரச்சாரக் கூட்டத்தில் ‘நமக்கு ஜூன் 23 சுதந்திர நாள்’ என்றார் லண்டன் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சன். ஒரே கைத்தட்டல். ஆரவாரம். அதுதான் மக்களின் மன நிலை. நளினமான, நுட்பமான விவாதங்கள் பெரும்பாலோரின் கருத்துகளை மாற்றிவிடாது என்பதே உண்மை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கோடிக்கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள மானியங்களையும் இதர உதவிகளையும் பெற்றவர்கள் இங்கிலாந்தின் தென் கிழக்கில் உள்ள கார்ன்வால் பகுதியினர். அவர்கள் வெளியேற வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளனர்.

பின்னடைய வைத்த எதிர்மறை உத்தி

சலித்துப்போன அரசியல் தலைவர்களின் முகங்கள், பேச்சுகள் மீது அதிருப்தி ஏற்படுவது உலக நடைமுறை. அதுவும் இதில் எதிரொலித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராவதில் டொனால்டு டிரம்புக்குக் கிடைத்த வெற்றி, ஆஸ்திரியாவில் நவ நாஜியவாதி நார்பர்ட் ஹோஃபர் அதிபர் பதவிக்கான வேட்பாளராகியிருப்பது போன்றவை மேற்கத்திய நாடுகளில் மக்களுக்கும் பிரதான கட்சிகளின் அரசியலுக்கும் இடையேயான இடைவெளியே! இந்த வாக்கெடுப்பும் அத்தகைய போக்கின் ஒரு அங்கமே.

கன்சர்வேடிவ் கட்சி புகுத்திய சிக்கன நடவடிக்கைகள் முடிவில்லாமல் தொடர்கின்றன. இடதுசாரிக் கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர்களிடையே கருத்து வேறுபாடுகள். இவற்றின் காரணமாக, ‘வெளியேற வேண்டும்’ என்று பிரச்சாரம் செய்தவர்களால் ஏழைகள், தொழிலாளர்களிடையே ஆதரவு பெற முடிந்துள்ளது. அதனால்தான் நாட்டின் வட-கிழக்குப் பகுதியில்கூட வெளியேறுவதற்கு ஆதரவு பெருகியுள்ளது.

வெளியேறினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை விளக்குவதற்குப் பதிலாக, சேர்ந்திருந்தால் கிடைக்கக்கூடிய பலன்களை விளக்கியிருக்க வேண்டும். விலகினால் ஆபத்துதான் என்று பயமுறுத்த பொருளாதார, தொழில்துறை, ராணுவ நிபுணர்களைக் கொண்டு ஆபத்துகளையும் இழப்புகளையும் மட்டுமே பெரிதாகக் கூறிக்கொண்டிருந்தனர். இது மேலும் பலரை அவர்களைவிட்டு விலக வைத்தது.

போரிஸ் ஜான்சன் போன்றவர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். ஆபத்தைச் சொல்பவர்கள், ஒன்றியத்திலேயே நீடிப்பதால் என்ன கிடைக்கும் என்று சொல்ல வேண்டியதுதானே என்று அவர்கள் கேட்டார்கள்.

வெளியேறக் கூடாது என்ற தரப்பைச் சேர்ந்த நிஸ்ஸான் கார் நிறுவனத்தால், சண்டர்லேண்ட் பகுதி தொழிலாளர்களைக்கூட ஆதரவாக வாக்களிக்கச் செய்ய முடியவில்லை. பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில் டேவிட் பெக்காம் போன்ற விளையாட்டு வீரர்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் பேசியது போதவும் இல்லை, வெற்றியைத் தரவும் இல்லை.

இதர நாடுகளைச் சேர்ந்தவர்கள், பிரிட்டனில் குடியேறுவதைப் பற்றி பயந்தார்கள். ‘வெளியேற வேண்டாம்’ என்பதை வலியுறுத்திய பிரிட்டிஷ் எம்.பி. ஜோ காக்ஸ் ஒரு வலதுசாரியால் கொல்லப்பட்டார். அதனால் ‘வெளியேற வேண்டும்’ என்ற பிரச்சாரம் அத்துமீறிவிட்டது என்று வாக்காளர்கள் கருதுவார்கள் என்றே கருதப்பட்டது. அதே நாளில் யு.கே.ஐ.பி. என்ற கட்சி, மாநிறத் தோல் கொண்ட அகதிகளின் வரிசையைப் புகைப்படத்துடன் சுவரொட்டியாக்கி ‘அச்சு முறியும் நிலை’ என்று எழுதியிருந்தது. ‘வெளியேற வேண்டும்’ என்பதை வலியுறுத்தியவர்கள் தங்களை யாரும் நிறவெறியாளர்கள், பிற நாட்டவரை வெறுப்பவர்கள் என்று முத்திரை குத்திவிடக் கூடாது என்பதால், பேச்சைக் குறைத்துக்கொண்டனர். ஆனால், அந்தச் சம்பவம் மக்களுடைய முடிவை மாற்றிவிடவில்லை.

செல்ல வேண்டிய பாதை

பிரிட்டன் இனி பயணிக்க வேண்டிய பாதை வித்தியாசமானது. தாங்கள் யார், இனி செய்ய வேண்டியது என்ன, அரசியல் - சமூகரீதியாக என்ன நடக்கும், எதிர்காலத்தை நோக்கி எப்படிக் காலை எடுத்து வைப்பது என்பதற்கான விடைகளுக்காக மக்கள் தவிக்கிறார்கள். இந்த வாக்கெடுப்பு கன்சர்வேடிவ், லேபர் கட்சிகளை மட்டும் பிளவுபடுத்திவிடவில்லை, நாடே பிளவுபட்டு நிற்கிறது.

‘இது சாதாரண மக்களின், கண்ணியமான மக்களின் வெற்றி’என்று ஃபாரேஜ் கூறியிருப்பது கோபத்தைக் கிளறியிருக்கிறது. வேறு நாட்டில் குடியிருக்கிறோமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது என்று ‘சேர்ந்தே இருக்கும்’ முடிவை ஆதரித்தவர்கள் இணைய தளங்களில் கூறியிருக்கிறார்கள். இதையும் கேலி செய்து எதிர்த்தரப்பார் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ‘லண்டனுக்கு சுதந்திரம்’ என்று தனி ஹேஷ்டேக்கைச் சிலர் ட்விட்டரில் உருவாக்கி யிருக்கின்றனர்.

பிரிட்டனின் ஒற்றுமையே கேள்விக்குறியாகிவிட்டது. வடக்கு அயர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் பிரிட்டனிலிருந்து பிரிந்து செல்ல கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தலைதூக்கிவிட்டது.

பிரிட்டன் வெளியேறுவது ஐரோப்பிய ஒன்றியத்தின் வேறு சில நாடுகளிலும் இதே கோரிக்கையை எழுப்பும். இதனால் பிரிட்டனுக்குப் பேச்சு நடத்துவது சவாலாகவும் பதற்றமாகவும் இருக்கும். வெளியேற வேண்டும் என்று பிரச்சாரம் செய்த போரிஸ் ஜான்சன், “ஐரோப்பிய எல்லைகளுக்கும் அப்பால் தொடர்புகொள்ள பிரிட்டனுக்குப் பொன்னான வாய்ப்பு கிட்டியிருக்கிறது” என்கிறார்.

‘வெளிநாட்டவர்கள் என்றாலே வெறுக்கும் தீவைச் சேர்ந்தவர்கள்தான் பிரிட்டிஷ்காரர்கள்’ என்று சில மாதங்களாக நடந்த விஷமப் பிரச்சாரத்தை கவனித்துவந்த உலக நாடுகளின் கண்ணோட்டத்தை மாற்றுவதுதான் மிகப் பெரிய சவாலாக பிரிட்டனுக்கு இருக்கப்போகிறது.

சுருக்கமாகத் தமிழில்: சாரி

C: ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x