Last Updated : 09 Feb, 2016 09:35 AM

 

Published : 09 Feb 2016 09:35 AM
Last Updated : 09 Feb 2016 09:35 AM

பாலினத் தனித்துவத்தை அங்கீகரிப்போம்!

தன்பாலின உறவாளர்களை இழிவுசெய்பவர்களுக்குப் பதில் தரும் தருணம் உருவாகியிருக்கிறது



தன்பாலின உறவாளர் என்பதால் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவன மாணவர் ஒருவருக்கு 2015-ல் மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. தன்னை மிரட்டியவர்களுக்குப் பணம் கொடுக்க அவர் மறுத்ததால், தனிப்பட்ட முறையில் எழுதப்பட்ட அத்தனை கடிதங்களும் கல்லூரி வளாக அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டன. “இது அசிங்கம், ஒழுக்கமின்மை, அருவருப்பானது என்பேன். இந்தியாவில் தன்பாலின உறவாளராக வாழ்வது சட்டவிரோதமானது என்பது ஏன் என உனக்குத் தெரியுமா? இப்படி வாழ்வதற்குப் பதிலாக நீ தற்கொலை செய்துகொள்” - இப்படி வன்மமான, மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற வார்த்தைகள் அதில் நிறைந்திருந்தன.

பாலினச் சிறுபான்மையினர் பலருக்கு இத்தகைய தருணம் வந்திருக்கும். என்னைப் போன்ற பலர் இத்தகைய அவமானங்களைச் சந்தித்திருக்கிறார்கள் அல்லது இத்தகைய தருணம் எப்போது வேண்டு மானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்திலேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். அவமானத்துக்கு உள்ளானவர் களைவிடவும் எப்போது நேருமோ என நடுநடுங்கு பவர்களின் நிலைதான் பரிதாபம். அவமானங்களுக்குப் பயந்து நம்மை நாமே சுருக்கிக்கொள்கிறோம், வேறுவிதமாகக் காட்டிக்கொள்கிறோம், இடம் பெயர்ந்துகொண்டே இருக்கிறோம். அத்தனையும் மீறி இழிவுபடுத்தப்படும்போது அதையும் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்கிறோம். தங்களுடைய தனிப்பட்ட பாலினத் தேர்வைத் தெரிவிக்கும் வாய்ப்பும் வசதியும் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அது வாய்க்காதவர்களின் வாழ்க்கை, போராட்டங்கள் நிறைந்தது. வீதிகளிலும், காவல்நிலையங்களிலும், பொது இடங்களிலும் இவர்கள் மீது அதிகாரபூர்வமாக வன்முறை பிரயோகிக்கப்படுகிறது.

இத்தகைய வன்முறைக்குச் சட்டம் மட்டுமே பொறுப்பு எனச் சொல்லிவிட முடியாவிட்டாலும், சட்டம் ஒரு வலுவான காரணம்தான். பாலியல் உறவும் தேர்வும் குறித்த இந்தியச் சட்டப்பிரிவு 377எங்களைக் குற்றவாளிகளாகப் பார்க்கிறது, எங்கள் மீதான வன்முறையை நியாயப்படுத்துகிறது. அதனால்தானே மிரட்டல் கடிதம் எழுதியவர், “இந்தியாவில் தன்பாலின உறவாளராக இருப்பது சட்டவிரோதம்தானே…” என்னும் கேள்வியை எழுப்பினார்?

நாஸ் அறக்கட்டளை

சட்டப்பிரிவு 377-ஐ 2001-ல் நாஸ் அறக்கட்டளை கேள்விக்கு உள்ளாக்கியது. அதன் பிறகு பாலின சிறுபான்மையினருக்கு ஒரு விதமான மன உறுதி பிறந்திருக்கிறது எனலாம். அதன் நீட்சியாகத்தான் 2015-ல் தனக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்துக்கு அந்த மாணவர் உறுதியாகப் பதிலளித்தார். எந்த அறிவிப்புப் பலகையானது தன்னை இழிவுபடுத்திய வாசகங்களைத் தாங்கி நின்றதோ அதன் மீதே தன்னுடைய பாலினத் தேர்வு குறித்து தனக்கு எத்தகைய அவமான உணர்ச்சியும் இல்லை எனப் பதிவுசெய்தார். சொல்லப்போனால், 2009-ல் டெல்லி உயர் நீதிமன்றம் பாலினச் சிறுபான்மையினரை அங்கீகரிக்கும் விதமாகத் தீர்ப்பு அளிப்பதற்கு முன்பே அவர்களைப் பற்றிய பார்வையும் மொழியும் நேர்மறையான பாதையில் மாறத் தொடங்கிவிட்டன.

நாங்கள் கூடிப் பேசிக்கொள்ளும்போது ஆபாசங்களைப் பேசுவதில்லை, எங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையைப் பற்றி பேசிக்கொள்கிறோம். எங்கள் ஆளுமையைப் பேசுகிறோம், அன்றாட செயல்களை அல்ல. நட்பு, காதல், களவு என பாலியல் பேதமின்றிப் பேசுகிறோம். வெறும் ஆண்-பெண் உறவு நிலையை மட்டுமல்ல. சுருக்கமாகச் சொல்வதானால், வாழ்வை முழுமையானதாகப் பார்க்கிறோம், கொண்டாடுகிறோம். வீதியில் பீடுநடைபோடுகிறோம். எங்களுக்கு ஆதரவைத் திரட்டிக்கொள்கிறோம், இப்படி இருக்கிறோமே என வாழ்க்கை வெறுத்து தத்தளிப்பவர்களுக்குக் கைகொடுக்கிறோம். ஆனால் பலரை இழந்திருக்கிறோம். இன்னும் பலரை இழக்கப்போகிறோம். ஆனால் இழப்புகளைத் தாண்டி நாங்கள் மிகப் பெரிய யுத்தத்தில் வெற்றியை ருசிக்கத் தொடங்கியிருக்கிறோம். உரிமை கோர எங்களுக்கு உரிமை உள்ளது என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறோம். எங்களுடைய உடல் எங்களுடையது. இந்த உரிமைகள் அனைத்தையும் சட்டரீதியாகவோ போராடியோ வென்றெடுப்போம். இத்தனை நம்பிக்கைக்கும் அடிப்படைக் காரணம் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புதான். ஆக, இனிவரும் தலைமுறையினருக்கு இவ்வளவு பயங்கள் இருக்காது. எதிர்காலத்தில் உங்களால் யாரையும் மிரட்ட முடியாது. அவ்வளவு ஏன், இப்போதே அந்த மாணவர் அஞ்சவில்லையே!

ஜனநாயகத்தின் சாரம்

நம்பிக்கையோடு நாங்கள் நடைபோடத் தொடங்கிய பின்பும் சட்டம் 377-ஐ திருத்த வேண்டியதன் அவசியம் என்னவென்று நீங்கள் கேட்கலாம். அதற்கு பதில் ஜனநாயகம்தான். ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரத்தைப் பிரயோகித்து ஒரு தனி மனிதரின் கவுரவத்தை அச்சுறுத்தும் சூழல் இருக்கக் கூடாது. ஆனால், ஒவ்வொரு பாலின சிறுபான்மையினரும் அச்சுறுத்தப்படுகிறார்கள். தன்னை இழிவுபடுத்தியவர்களுக்குப் பதில் கொடுக்கும் துணிச்சல் ஐஐஎஸ்சி மாணவருக்கு இருந்திருக்கலாம். ஆனால், அவரைப் போன்றே பாதிப்புக்கு உள்ளாகியும் எதிர்வினை ஆற்றாதவர்கள், எதிர்வினை ஆற்ற முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். தான் ஒரு தன்பாலின உறவாளராக வாழும் உரிமைக்கு துணிச்சலாகப் போராடிய கல்வியாளர் ராமசந்திர சிராஸ் இன்று நம்மோடு இல்லை. சட்டம் நமக்குப் பச்சைக்கொடி காட்டினாலும் நிதர்சனத்தைப் புரட்டிப்போட அது போதாது. பாலினச் சிறுபான்மையினராக இந்தியாவில் வாழ அபரிமிதமான சாதிய, பொருளாதார அதிகாரம் அவசியம். கவுரவமாக வாழ்ந்திட அதிகாரம் படைத்தவராக இருக்க வேண்டுமானால் ஜனநாயகம் மடிந்துவிட்டது என்றுதானே பொருள்?

ஆனால், அதற்காக நாங்கள் மனம் தளரப்போவதில்லை. பாலின சிறுபான்மையினரின் வாழ்வும் சகஜமானதாக ஏற்றுக்கொள்ளப்படும்வரை நாங்கள் வெவ்வேறு வழிகளில் போராடுவோம். சட்டத்தை வென்றெடுப்பது அதில் மிக முக்கியமான கட்டம். இருந்தாலும், அதில் வாதாடி ஜெயிக்க வேண்டும் என்பதைத் தவிர, எங்கள் மனோநிலையை, வாழ்க்கை முறையை அது எந்த விதத்திலும் தீர்மானிக்காது. நாங்கள் யார் என்பதை எங்களுக்கும் உலகுக்கும் அதிகாரபூர்வமாகச் சட்டம் அறிவிக்கும் அவ்வளவே. ஆனால், மிகவும் முக்கியமானது, சட்டம் எங்களிடம் மட்டுமே பேசாது நாங்கள் வசிக்கும் உலகத்திடமும் பேசும். “பாலியல் சிறுபான்மையினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாலின அடையாளமும் பாலியல் விருப்பமும் ஒருவர் எங்கு சென்றாலும் அவருடன் சேர்ந்தே பயணிக்கிறது. அதுவே அவருடைய அடையாளமாகவும் மாறிவிடுகிறது. ஒரு தனி மனிதரின் பாலினத் தனித்துவத்தைச் சட்டம் அங்கீகரிப்பது அவரைத் தனிமைப்படுத்தி சமூகத்திலிருந்து விலக்கிவைப்பதற்கு அல்ல. ஒவ்வொருவரும் தனக்குரிய காலகட்டத்தில், இடத்தில், பண்பாட்டில், சமூகக் குழுக்களில் வாழ்வதுபோல அவர்களுடைய உடலில் வாழ்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் நடவடிக்கைதான் இது” என்னும் 2009-ன் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பின் வரிகள் நமக்கு வலிமை சேர்க்கின்றன.

பதில்களுக்கான தருணம்

அந்தத் தீர்ப்பு எங்களை அரவணைத்து, பாதுகாத்து, வளர்த்தெடுத்து, எங்களிடம் அன்புசெய்ய வழிகோலுகிறது. குறிப்பாக, அந்தத் தீர்ப்பின் எந்தவொரு வார்த்தையும் எங்களைச் சகித்துக்கொள்ளச் சொல்லவில்லை. வித்தியாசமானவர்களாக எங்களை ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறது. பன்மைத்தன்மை நிறைந்த பரந்து விரிந்த உலகில் எங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளை, விழுமியங்களை, ஆன்மிகப் பாதையை ஒரு சராசரி குடிமகனின் உரிமைகளிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் பிரித்துப் பார்க்கச் சொல்லித் தந்தது. மொத்தத்தில், எங்களுக்கு ஜனநாயக உரிமை அளித்தது. இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவுக்குள் உயிர் வாழும் தகுதி எங்களுக்கு இருக்கிறது எனச் சொன்னது. ஏட்டில் பதியப்பட்ட இந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் கடமையும் பொறுப்பும் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது என வலியுறுத்தியது. வன்முறையைப் பிரயோகித்து சுயமரியாதையை வென்றெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றது.

இந்த நாஸ் தீர்ப்பை நாம் அமல்படுத்தத் தவறினால், பாலினச் சிறுபான்மையினரின் உரிமைகளை இழக்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அரசியலமைப்பில், நீதிமன்றத்தில், சட்டத்தில் நீதிக்கான இடத்தை இழக்கிறோம் என்றுதான் அர்த்தம். தற்போது நீதிமன்றம் இந்த வழக்கின் சீராய்வு மனுவைப் பரிசீலித்துவருகிறது. இது ஒரு அசாத்தியமான தருணம். இந்தத் தருணம் சிறுபான்மையினரின் உரிமைக்கானது மட்டுமல்ல, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கானதும்கூட. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வாய்க்கும், உரிமைகள் விரிவடையும், எக்காரணம் கொண்டும் உரிமைகளை கைவிடக் கூடாது என்பதை உணர்த்தப்போகும் தருணம். கவுரவத்தைச் சிலர் மட்டுமே சொந்தம் கொண்டாட அநீதியைப் பலருடைய வாழ்வின் மீது இனியும் திணிக்க முடியாது என்று அந்த மிரட்டல் கடிதத்தை எழுதியவருக்குப் பதில் எழுத வேண்டிய தருணம்.

- கவுதம் பான், எழுத்தாளர் மற்றும் பாலினச் சிறுபான்மையினர் உரிமைச் செயல்பாட்டாளர்.

தமிழில்: ம.சுசித்ரா

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x