Last Updated : 01 Sep, 2014 08:51 AM

 

Published : 01 Sep 2014 08:51 AM
Last Updated : 01 Sep 2014 08:51 AM

பாக் நீரிணைக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் நடுவே...

ராமேசுவரம் தீவைப் பொறுத்தமட்டுல, அன்னிக்குத் தொடங்கி ரெண்டே பொழப்புதான். ஒண்ணு, கோயிலை வெச்சுப் பொழப்பு. இன்னொண்ணு, கடலை வெச்சுப் பொழப்பு. கோயிலை வெச்சு நடக்குற பொழப்பு நல்லாவே போவுது. கடலை வெச்சு நடக்குற பொழப்புதான் நாளுக்கு நாள் நாறுது.

இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்!

மக்களின் ராஜா

நம்மிடத்தில் வீடுகளில் ஒலிக்கும் இளையராஜா வேறு. உழைக்கும் மக்களிடத்தில், அவர்கள் புழங்குமிடத்தில் ஒலிக்கும் இளையராஜா வேறு. கடலில் பல மைல் தொலைவு வந்துவிட்டு, வலையை இறக்கிவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில், ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, அப்படியே வள்ளத்தின் ஓரத்தில் கை மீது தலை சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறார் சேசண்ணா. அதிகாலையில் எழுந்து மீன் கூடை சுமந்து, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக அலைந்து மீன் விற்றுவிட்டு, வீடு திரும்பும்போது, இரு பக்கமும் பனை மரங்கள் மட்டுமே துணையாக இருக்கும் பாதையில், கூடையில் பாலிதீன் பையில் பத்திரமாகச் சுற்றிவைத்திருக்கும் ரேடியோவில் ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு நடக்கிறார் ரோஸக்கா. படகுத் துறையிலிருந்து நடு ராத்திரியில் குட்டி லாரியில் கூட்டம் கூட்டமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகும்போது தனக்கு மட்டுமல்லாமல், பின்புறம் உட்கார்ந்திருப்பவர் களுக்கும் சேர்த்து ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, வண்டியை விரட்டுகிறார் ராமலிங்கம். அந்தத் தருணங்களில், அந்தச் சூழல்களில், இளையராஜாவின் பாடல்கள் கொண்டுசெல்லும் உலகமே வேறு.

அமைதியான தனி அறையில், நுண்ணிய அதிநவீன சாதனங்களின் துணையோடு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போதுகூட இளையராஜா இத்தனை நெருக்கமாகவில்லை. இந்தப் பயணங்களின்போது, மக்களோடு மக்களாகச் செல்லும்போது அப்படி ஒன்றிவிட்டார். அதுவும் கடலோரக் கிராமங்களுக்குச் செல்லும் பஸ்ஸில், ஜன்னலோர இருக்கையில், வெயில் தணிந்த சாயங்கால வேளையில்... வாய்ப்பே இல்லை. அன்றைக்கு இறைவனின் பரிபூரண ஆசி வாய்த்திருந்தது என்று சொல்ல வேண்டும். சரியாக, பாம்பன் சாலைப் பாலத்தில் பஸ் ஏற ஆரம்பிக்கிறது. காற்றில் கரைந்து வருகிறார் மனிதர். ‘அந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...’

ஜன்னலோரத்தில் கீழே வானமும், மேலே கடலும்போல நீலம். மேலே சர்ரெனப் போகிறது ஒரு விமானம். கீழே வரிசையாகச் சென்றுகொண் டிருக்கின்றன படகுகள். பாம்பன் ரயில்வே பாலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறது ரயில். பாம்பன் சாலைப் பாலத்தில், பஸ்ஸில் காதுக்குள் நிலா பிடித்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அடடா, அடடா... சாலைகள், பாலங்கள், தண்டவாளங்களுக்கெல்லாம் உயிர் இல்லை என்று யார் சொன்னது? பாம்பனில் வந்து பாருங்கள். எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. பாம்பன் அழகு, பேரழகு. அந்த அழகு அங்குள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அழகாக்கிவிடுகிறது. இந்தியாவின் மிக ரம்மியமான இடங்களில் ஒன்றான பாம்பனைக் கடந்து பஸ் ராமேசுவரம் நோக்கிச் செல்கிறது. மனமோ ராமேசுவரம் பஸ் நிலையத்தில் இறங்கும் வரை அங்கேயே கிடக்கிறது.

ராமேசுவரம் தீவு - ஒரு குறிப்பு

இந்தத் தொடரில் அதிகமான அத்தியாயங்களை ராமேசுவரம் கடல் பகுதி பிடித்துக்கொள்ள நிறைய நியாயம் இருக்கிறது. முக்கியமாக மூன்று காரணங்கள். ஒன்று, தமிழகத்திலேயே நீளமான 236.8 கி.மீ. கடற்கரையைக் கொண்ட, அதிகமான கடல் உணவு அறுவடையைத் தரும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோடிகளின் மையம் மட்டும் அல்லாமல், தமிழகத்தின் முக்கியமான கடல் கேந்திரமும் ராமேசுவரம். இரண்டு, உலகிலேயே மிகச் செழிப்பான கடல் பகுதி, பாதுகாக்கப்பட வேண்டிய பல்லுயிர் உயிர்க்கோளம் ராமேசுவரத்திலிருந்துதான் தொடங்குகிறது. மூன்று, உலகிலேயே பிழைப்புக்காகக் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் அந்நிய நாட்டுப் படையினரால் கோரமாகத் தாக்கப்படும் அவலத்துக்கும் சுட்டுக் கொல்லப்படும் அக்கிரமத்துக்கும் முதல் பலி கொடுத்ததில் தொடங்கி அதிகமான பலிகளைக் கொடுத்தது ராமேசுவரம்.

இன்றைக்கு இந்திய நிலப்பரப்புக்கு வெளியே இருக்கும் கடல்சூழ் தீவு ராமேசுவரம். அதாவது, நாம் சென்னையிலிருந்து புறப்பட்டால், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் என்று மண்டபத்தோடு முடிந்துபோகிறது நம் நாட்டின் நிலப்பரப்பு. நடுவே, ஒரு ஆறுபோலக் குறுக்கிடுகிறது கடல். அதைப் பாலம் வழியே கடந்தால், பாம்பனில் தொடங்கி ராமேசுவரம் - தனுஷ்கோடி - அரிச்சல்முனை வரை ராமேசுவரம் தீவு. ஒருகாலத்தில் ராமேசுவரம் இப்படித் தீவாக இல்லை என்றும் ஒரே நிலப்பரப்பாக இருந்தது என்றும் சொல்கிறார்கள். தொடர் பெரும் புயல்கள் - குறிப்பாக, கி.பி.1480-ல் ஏற்பட்ட புயல் - நிலத்தை உடைத்துக்கொண்டு கடல் உள்ளே வர வழிவகுத்தது என்கிறார்கள்.

பாக் நீரிணை, மன்னார் வளைகுடா - ஓர் அறிமுகம்

எளிமையாக எப்படிச் சொல்வது? இப்படிப் புரிந்துகொள்ளலாம். கோடியக்கரை முதல் பாம்பன் வரை நீண்டிருக்கும் கடல் பகுதி பாக் நீரிணை. பாம்பன் முதல் கன்னியாகுமரி வரை நீண்டிருக்கும் கடல் பகுதி மன்னார் வளைகுடா. ராமேசுவரம் தீவின் முன்வாசல் பாம்பன். அதாவது, ராமேசுவரம் தீவை ஒரு மாலைபோலச் சூழ்ந்திருக்கிறது கடல். இந்தப் பக்கக் கடல் பாக் நீரிணை. அந்தப் பக்கக் கடல் மன்னார் வளைகுடா.

பொதுவாக, பாக் நீரிணை, மன்னார் வளைகுடா பகுதி முழுவதுமே உயிர்வளம் மிக்கது என்றாலும், ராமேசுவரம் தொடங்கி தூத்துக்குடி வரையிலான பகுதி இதில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இவை இரண்டுக்கும் உட்பட்ட வான் தீவு, கசுவார் தீவு, கரைச்சல்லி தீவு, விலாங்குச் சல்லித் தீவு, உப்புத்தண்ணித் தீவு, புலுவினிசல்லித் தீவு, நல்லதண்ணித் தீவு, ஆனைப்பார் தீவு, வாலிமுனைத் தீவு, அப்பா தீவு, பூவரசன்பட்டித் தீவு, தலை யாரித் தீவு, வாலைத் தீவு, முள்ளித் தீவு, முயல் தீவு, மணோலி தீவு, மணோலி புட்டித் தீவு, பூமறிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடைத் தீவு, சிங்களத் தீவு ஆகிய 21 தீவுகளும் அவற்றை ஒட்டிய பகுதிகளும் உலகிலேயே மிகச் செழிப்பான பகுதியாக இனம் காணப்பட்டு, இந்திய அரசால் கடல்சார் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ராமேசுவரத்தையொட்டியுள்ள பகுதி உயிர்கோளக் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சின்னப் பகுதியில் மட்டும் 96 வகை பவளப்பாறை இனங்கள், 79 வகை நத்தை இனங்கள், 108 வகை கடல் பஞ்சு இனங்கள், 260 வகை கிளிஞ்சல் இனங்கள், 125 வகை பாசி இனங்கள் உள்ளிட்ட 3,600 வகை இனங்கள் கண்டறிப்பட்டுள்ளன. இந்தியக் கடல்பரப்பில் காணப்படும் 2,200 மீன் இனங்களில் 450 இனங்கள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன.

ராமேசுவரத்து விசேஷங்கள்

ராமேசுவரம் தீவுக்கென்று சில விசேஷங்கள் இருக்கின்றன. தீவுக்குள் கலப்பை கொண்டு உழக் கூடாது, லிங்கம் முளைக்கும் என்கிற நம்பிக்கை பல தலைமுறைகளாக நிலவுவதால், நெல் சாகுபடி கிடையாது. பூச்செடிகளைப் பயிரிடுவதே அதிகபட்ச விவசாயம். தீவு முழுக்கத் தென்னை, பனை, முருங்கை, மா, புளிய மரங்கள்தான். பொந்தம்புளி மரம் என்று விசேஷமாக ஒரு மரம் இருக்கிறது. தீவுக்குள் விளையும் புளிக்கும் முருங்கைக்கும் தனி ருசி என்கிறார்கள். பல சாதியினர், இனத்தினர் இருந்தாலும் - சாதிய அதிகார அடுக்குகள் அப்படியே நீடித்தாலும் - தீவுக்குள் அரிதான ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. முக்கியமாக, இந்துக்கள், முஸ்லிம்களிடையே அபாரமான ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. ஓர் உதாரணம், வேறெங்கும்போல அல்லாமல், முஸ்லிம்களின் உடை அடையாளமே இங்கு மாறுபட்டிருப்பது. முஸ்லிம்களின் பொது அடையாளமான குல்லா, கைலிக்கட்டு இங்கு இல்லை. இந்துக்களைப் போலவே வேட்டி-சட்டையில் காணக் கிடைக்கிறார்கள். பெரும்பாலான இந்துக்கள் - முஸ்லிம்கள் அப்பா, மாமா, மச்சான் என்றே அழைத்துக்கொள்கின்றனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் பல தலைமுறைகளாகக் கடை வைத்திருக்கும் முஸ்லிம்களைச் சந்திக்க முடிந்தது. “ஒரே சாமியை வேற வேற பேருல கும்பிடுறோம், வேற என்ன இருக்கு நமக்குள்ள வேறுபட்டுக் கெடக்க?” என்கிறார்கள்.

படகுத் துறைக்குப் போனபோது, எல்லாப் படகுகளும் கட்டிக்கிடந்தன. ஆங்காங்கே மூன்று நான்கு பேர் உட்கார்ந்து பேர் சீட்டு விளையாடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் வெறுமனே உட்கார்ந்திருக்கின்றனர் கடலைப் பார்த்துக்கொண்டு.

“ராமேசுவரம் தீவைப் பொறுத்தமட்டுல, அன்னிக்குத் தொடங்கி இன்னிக்கு வரைக்கும் ரெண்டே பொழப்புதான். ஒண்ணு, கோயிலை வெச்சுப் பொழப்பு. இன்னொண்ணு, கடலை வெச்சுப் பொழப்பு. கோயிலை வெச்சு நடக்குற பொழப்பு நல்லாவே போவுது. கடலை வெச்சு நடக்குற பொழப்புதான் நாளுக்கு நாள் நாறுது” - கடலைப் பார்த்தபடியே பேச ஆரம்பிக்கிறார் அருளானந்தம்.

(அலைகள் தழுவும்...)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x