Last Updated : 28 Oct, 2016 09:04 AM

 

Published : 28 Oct 2016 09:04 AM
Last Updated : 28 Oct 2016 09:04 AM

நான் எப்படி புகைப்பதை நிறுத்தினேன்?

புகைத்தல் வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய்

புது வருஷத்தைத் தொடங்கும்போது “இந்த வருஷமாவது சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திடணும்” என்று வைராக்கியத்துடன் கிளம்புபவர்கள் பொங்கல் முடிவதற்குள் புகைபிடிப்பதை மீண்டும் தொடர்வதைப் பார்த்திருப்போம். பலரும் சொல்வதைப் போல் புகைப் பழக்கத்தை நிறுத்துவது சற்று சிரமமான காரியம்தான். ஆனால், மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை. எனது அனுபவமே அதற்கு உதாரணம்.

அப்பா ஆசிரியர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளுக்கும் பள்ளிக் கூடத்தில் தொண்டை வறளக் கத்தியதும், ஓய்வுநேரத்தில் புகைத்த கோபால் பீடிகளும் அவருக்குத் தீராத இருமலைத் தந்தன. பள்ளியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, திடீரென்று ஆஸ்துமா தாக்குலுக்கு ஆளாகி, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்த நாட்களில் புகைக்க வழியில்லை. கொர்...கொர்… என்று மூச்சுத் திணறல்களுக்கு இடையே பீடி வேண்டும் என்று கேட்டார். நான் முடியாது என்று மறுக்க, இருமிக்கொண்டே திட்டினார். அதில் கோபத்தைவிட கெஞ்சல்தான் அதிகம் இருந்தது. கடைசியில் மனது கேளாமல், நர்ஸ்களுக்குத் தெரியாமல் பீடியும் தீப்பெட்டி யும் கொடுத்தேன். அடுத்த நாள் அவர் இறந்துபோனார்.

தவறான நம்பிக்கைகள்

புகைப் பழக்கம் ஒரு மனிதனை இவ்வளவு தவிக்க வைக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது. பீடி - சிகரெட்டுகள் மீது, புகைப்பவர்கள் மீது கோபமும் வெறுப்பும் வந்தது. புகையை இவ்வளவு வெறுத்த நான் எப்படி, எப்போது, யாரிடமிருந்து பழகினேன் என்று நினைவில்லை. எப்படியோ பழகிவிட்டேன். சுமார் 40 ஆண்டுகளாகப் புகைத்துவந்திருக்கிறேன். புகைப்பதை வெறுத்தவன் படிப்படியாக புகைப்பதைப் போற்றுபவன் ஆகிப்போனேன். புகைப்பது ஒரு ஸ்டைல், ஆண்மகனின் அடையாளம், புகைப்பது மூளையைச் சுறுசுறுப்பாக்கும், பதற்றத்தைக் குறைக்கும், கவலையை மறக்கடிக்கும்... இப்படிப் பலவித தவறான நம்பிக்கைகளால் கட்டுண்டு கிடந்தேன்.

குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் அறிவுரைகள், அல்லது பொருளாதாரச் சிக்கல்கள், அல்லது உடல் ஆரோக்கியம் கெடுதல் போன்ற காரணங்களால் புகைப்பதை விட்டொழிக்கும் ஆசை அவ்வப்போது தலை தூக்கும். முயற்சிசெய்வோம், தோற்போம், அல்லது தற்காலிக வெற்றி பெறுவோம், மீண்டும் புகைக்கத் தொடங்குவோம்.

புகைப் பழக்கம் ஒரு நோய்

புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி யிருக்கும் நாடுகளில் முதன்மையானவை ஆசிய நாடுகள்தான். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்றவை. இந்த நாடுகளில் உள்ள மக்களின் மொழிகளில் புகைப் பழக்கத்துக்கு எதிரான தகவல்கள் கிடைக்காதிருப்பது துரதிர்ஷ்டம்தான். இங்கே கிடைப்பவை எல்லாம் பெரும்பாலும் மிரட்டல்கள்தான். பொது இடங்களில் புகைக்கக் கூடாது போன்ற சட்டங்களால் புகைப் பழக்கத்தை ஒழித்துவிட முடியாது. புகைத்தல் என்பது வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய். புகைப்பவன் ஒரு நோயாளி. தான் நோயாளி என்று அறியாத நோயாளி. புகைப்பவரை ஒரு நோயாளியைக் கையாள்வதுபோல எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.

புகைப்பதை நிறுத்துவதற்கான பயனுள்ள ஆலோசனைகள், தகவல்கள் இணையத்தில் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. நேரடியாக மிரட்டாமல், உளவியல்ரீதியாகப் புரியவைக்கும் மென்மையான மொழியில், ஆலோசனைகள் கிடைக்கின்றன.

ஒரு மாதத்துக்கு முன்னர், ஒரு மாலை நேரத்தில் புகைப்பதை நிறுத்துவது என முடிவுசெய்தேன். சிகரெட் பாக்கெட்டில் இரண்டு சிகரெட்டுகளும், மேசையில் லைட்டர்களும் ஆஷ்ட்ரேவும் இருந்தன. மூன்றையும் துணைவியார் கையில் கொடுத்து, குப்பையில் போடச் சொன்னேன். 28 ஆண்டு கால மண வாழ்க்கையில் நம்பவே முடியாத வியப்பை அவருடைய பார்வை வெளிப்படுத்தியது. ஒரு திடீர் கணத்தில் தூண்டலால் உந்தப்பட்டு எடுத்த முடிவுதான் அது. ஆனால், அந்த முடிவில் உறுதியாக நின்றேன். ஃபேஸ்புக்கில் அதைப் பற்றி எழுதினேன். ஏராளமானோர் வாழ்த்தினார்கள். பலர் தானும் விட்டொழிக்க முன்வந்தார்கள். அதன் பிறகு சிகரெட்டின் தீமைகள் குறித்துத் தொடர்ந்து எழுதினேன். பலருக்கு தொலைபேசி வழியிலும், உரையாடல் வழியிலும் ஆலோசனைகள் வழங்கி ஊக்குவித்தேன். சிலர் என்னோடு சேர்ந்து முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறார்கள்.

புகையை வெல்ல…

தினமும் புகைக்கும் சிகரெட் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து விட்டொழிப்பேன் என்று நினைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது என்று முடிவுசெய்தால் ஒரேயடியாக விட்டொழிக்க வேண்டும். உறுதியெடுத்த அந்தக் கணமே கையில் இருக்கிற சிகரெட்டுகளை உடைத்துத் தூக்கியெறிவது அவசியம்.

சிகரெட்டை நிறுத்துவதென முடிவுசெய் வதற்குக் கால அவகாசம் தேவை என்றால், உங்கள் பிறந்தநாள், மணநாள், அல்லது பிள்ளைகளின் பிறந்தநாள் போன்ற ஏதேனுமொரு விசேஷ நாளில் விட்டொழிக்க முடிவுசெய்யலாம். சிகரெட்டை விட்டொழித்த நாள்தான் மிகச் சிறந்த விசேஷ நாள் என்பதை மறந்துவிடக் கூடாது. எதற்கும் அவசரத்துக்கு இருக்கட்டும் என்று சிகரெட்டைக் கையிருப்பில் வைத்திருக்காதீர்கள். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்ட்ரே எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடுங்கள்.

உறுதிமொழியும் ஆதரவும்

புகைப்பதை நிறுத்தப்போகிறேன் என்ற செய்தியை உங்கள் மீது அக்கறையுள்ள, உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அது ஒருவகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதுபோல் ஆகும். உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவும் அளிப்பார்கள்.

சிகரெட் பிடிப்பதால் பிரச்சினைகள் தீர்வ தில்லை. உண்மையில், பிரச்சினையை எதிர்கொள்ள நாம் புகைக்கும் சிகரெட்டே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பதை நிறுத்திய முதல் இரண்டு நாட்களைவிட அதற்கடுத்த நாட்களில்தான் சிகரெட் ஏக்கம் அதிகமாக இருக்கும். ஒரே ஒரு சிகரெட் புகைத்தால் என்ன குறைந்துவிடும் என்ற எண்ணம் அடிக்கடி வரும். அது ஆபத்து. அந்த ஒரு சிகரெட் ஒருபோதும் ஒன்றோடு நிற்காது.

புகைப் பழக்கத்தை நிறுத்தும்போது உடல் நிகோடினுக்காக ஏங்கும். அதை நிவர்த்திசெய்ய நிகோடின் கலந்த பபுள் கம் அல்லது மின்னணு சிகரெட்டுகள் போன்றவை இப்போது பரவலாக விளம்பரம் செய்யப்படுகின்றன. இது எப்படி என்றால், கஞ்சா போதையிலிருந்து வெளியேற அபின் சாப்பிடலாம் என்பதுபோல. தேவையில்லை. நம் மனவுறுதியைக் காட்டிலும் வேறு எதுவும் துணையில்லை.

புகைக்காமல் இருந்தமைக்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள், பெருமைப் படுங்கள். சிகரெட் வாங்காமல் சேமித்த பணத்தைக் கொண்டு உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தில் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். அந்த சந்தோஷமே தனி!

- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர்.

தொடர்புக்கு: shahjahanr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x