Last Updated : 23 Aug, 2016 08:56 AM

 

Published : 23 Aug 2016 08:56 AM
Last Updated : 23 Aug 2016 08:56 AM

நம் கல்வி... நம் உரிமை!- புதிய கல்விக் கொள்கையில் நல்ல விஷயங்களே இல்லையா?

எல்லோரும், ‘அந்த அறிக்கைக்குள் பூதம் இருக்கிறது’ என்றரீதியில் மிரட்டியதால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில்தான், ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ வரைவு தொடர்பான ஆங்கில ஆவணத்தையும், தமிழ் மொழிபெயர்ப்பையும் (தமிழாக்கம்: பி.இரத்தினசபாபதி) படித்தேன். ரொம்ப மொக்கையான விமர்சனங்களைப் படித்துவிட்டு, மொக்கைப் படத்தைப் பார்த்தால்கூட நல்ல படமாகத் தோன்றுமே அப்படியிருந்தது என் அனுபவம். எனக்கு நல்ல, கெட்ட விஷயங்கள் இரண்டுமே கண்களில் பட்டன. கெட்ட விஷயங்களை எல்லாம் நிறையப் பேர் சொல்லிவிட்டதால், நல்ல விஷயங்களை மட்டும் இங்கே சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

அறிக்கையில் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம், ஆசிரியர்களுக்குச் சாட்டையடி கொடுப்பதுபோல் இருந்த சில பரிந்துரைகள். ‘ஆசிரியர் மேம்பாடும் மேலாண்மையும்’ என்ற பிரிவு ஆசிரியர்களை வாட்டி எடுக்கிறது. ‘பணிக்கு வராமை, பணிப் பொறுப்பின்மை போன்ற தவறுகளைச் செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் ஒழுங்கின்மையையும், வராமையையும் செல்பேசிகள், உடல் அடையாளப் பதிவுக் கருவிகள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா ஆசிரியர்களும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணியிடைப் பயிற்சியில் பங்கேற்பது கட்டாயமாக்கப்படும். அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களின் குறிப்பிட்ட கால இடைவெளியில் பணித்திறன் கணிக்கப்படுதல் (அப்ரைசல்) கட்டாயமாக்கப்படும். இந்தக் கணிப்பு அவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு அடிப்படையாக அமையும். ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கற்பித்தல் திறன், பாட அறிவு பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படும்’ - இப்படிப் போகிறது அந்த அறிக்கை.

முக்கிய அறிவிப்பு

இந்தப் பரிந்துரைகளைப் பற்றி எந்த ஆசிரியர் சங்கமாவது பேசியிருக்கிறதா என்பதுதான் என் கேள்வி. வரவேற்க வேண்டாம், கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லையே… ஏன்? இந்தப் பரிந்துரைகளை எல்லாம் வெளியே சொன்னால், அதை மக்கள் ஆதரித்துவிடுவார்களோ என்ற பயமின்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

‘ஆசிரியர்களைத் தேர்வுசெய்வதில், தகுதியும் வெளிப்படைத்தன்மையும் இருக்குமாறு விதிமுறைகளும், வழிகாட்டல்களும் முறைப்படுத்தப்படும். இதற்கு உதவியாகத் தன்னாட்சி கொண்ட ஆசிரியர் தேர்வு வாரியங்கள் அமைக்கப்படும். காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர் பணியிடங்கள், படிப்படியாகத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் நிரப்பப்படும். தொலை தூரங்களில் உள்ள பள்ளிகளுக்கும், மலைப்பிரதேசம் உள்ளிட்ட செல்ல முடியாத பள்ளிகளுக்கும் உள்ளூரில் இருந்து ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. இது எவ்வளவு முக்கியமான அறிவிப்பு? நம்மூரின் முக்கியமான பிரச்சினை போதிய ஆசிரியர்கள் இல்லாததா? இருக்கிற ஆசிரியர்களும் பாடம் சொல்லித்தரும் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதா? - மக்களுக்குத் தெரியும். தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், எத்தனை ஆசிரியர்கள் தங்கள் பாடம் சம்பந்தமான விஷயங்களில் தங்களை அப்டேட் செய்துகொள்கிறார்கள்? அவ்வளவு ஏன்… எத்தனை பேர் பத்திரிகை வாசிக்கிறார்கள்?

நம்பிக்கை தரும் அறிவிப்புகள்

‘சில தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களின் தனிப்பட்ட ஆர்வம், செயல்திறன் காரணமாகப் பல பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுவதற்குச் சான்றுகள் உள்ளன. எனவே, தலைமை ஆசிரியர்கள் நியமனத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். குறைந்தது ஐந்து ஆண்டுகள் பட்டறிவு பெற்றுள்ள ஆசிரியர்களிலிருந்து, தகுதியும் நாட்டமும் உள்ளோர் தலைமை ஆசிரியர் அல்லது முதல்வராக நியமிக்கப்படுவார்கள்’ - இது முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு இல்லையா? தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும், சாதித்துக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகளைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே, அங்கு பணிபுரியும் அத்தனை பேருமா அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கிறார்கள்? ஒன்றிரண்டு ஆசிரியர்களின் அற உணர்வே ஒட்டுமொத்தப் பள்ளியையும் உயர்த்துகிறது. அவர்கள் தலைமை ஆசிரியர்களாகி, தடையின்றித் தங்கள் பணியைச் செய்ய இந்த முறை உதவுமா இல்லையா?

‘அரசு மீதான புகார்களையும், தனியார் பள்ளிகள் குறித்த புகார்களையும் விசாரிப்பதற்கு, மத்தியிலும் மாநிலங்களிலும் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்படும். வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்கென, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நடுவர்களின் தலைமையில் இவை இயங்கும்’ என்றும் கூறியிருக்கிறார்கள். அரசுப் பள்ளியில் கழிவறை இல்லை, இந்த மெட்ரிக் பள்ளியில் சமச்சீர் பாடத்திட்டம் பின்பற்றப்படுவதில்லை, அந்தத் தனியார் பள்ளியில் கட்டணக் கொள்ளை நடக்கிறது என்பதையெல்லாம் முறையிட ஓரிடம் கிடைக்கிறதே என்ற நம்பிக்கை தரவில்லையா இந்த அறிவிப்புகள்?

‘5-ம் வகுப்பு வரையில் தாய்மொழி வழிக்கல்வி, (பழங்குடியினருக்கு வட்டார மொழியில் கல்வி) ஆங்கிலம் இரண்டாவது மொழியாக்கப்படும். நடுநிலை, உயர் நிலைப் பள்ளிகளில் அந்தந்த மாநிலங்களே மூன்றாம் மொழியைத் தேர்வுசெய்து கொள்ளலாம்’. ஆக இந்தியோ, சம்ஸ்கிருதமோ கட்டாயமாகத் திணிக்கப்படவில்லை. இன்னொரு விஷயம், அறிவியல், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குத்தான் பொதுப் பாடத்திட்டமே தவிர, சமூக அறிவியல், தமிழ், போன்ற பாடங்கள் குறித்து மாநில அரசுகள் தான் முடிவெடுக்கப்போகின்றன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரியார், காமராஜர், அயோத்திதாசரைப் பற்றியும் சொல்லிக்கொடுக்கலாம். அல்லது அவர்களைவிடச் ‘சிறப்பானவர்’களான கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆரைப் பற்றிய பாடங்களையும் சேர்க்கலாம். இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகம், சமச்சீர்க் கல்வியை ஆதரிப்பவர்கள், பொதுப் பாடத்திட்டத்தை ஏன் எதிர்க்கிறார்கள்?

இணையும் மழலையர் பள்ளிகள்

‘கணினி அறிவியல் 5-ம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்படும். மனப்பாடக் கல்வியை ஒழித்து, புரிந்து படிக்கிற வகையிலான கல்வி ஏற்பாடும், கற்பித்தல் முறைகளும் காலந்தோறும் சீரமைக்கப்படும். டீன் - ஏஜ் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பற்றி பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தெரிவிப்பதற்கு ஏற்றவாறு பயிற்சி பெற்ற ஆற்றுநர்கள் (கவுன்சிலர்கள்) பணியமர்த்தப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர் படிப்பு, ஆசிரியர் பணியிடைப் பயிற்சியில் டீன் - ஏஜ் கல்வி குறித்த பயிற்சிகள் இடம்பெறும். மனஅழுத்தத்தில் உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்கு மருத்துவ உளவியலாளர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள். பள்ளிகளில் விளையாட்டு, தனி விளையாட்டுகள், யோகா, என்சிசி, என்எஸ்எஸ், கலை, கைவினைக் கல்வி போன்றவை கட்டாயமாக்கப்படும். புதிதாகப் பள்ளிகள் தொடங்க இதற்கான வசதிகள் கட்டாயம் தேவை என்று விதி ஏற்படுத்தப்படும். சில மாநிலங்களில் தொடக்கப்பள்ளி வரையில் மட்டுமே உள்ள சத்துணவுத் திட்டங்களை, இடைநிலைக் கல்வி (10-ம்வகுப்பு) வரையில் கொண்டுவரப்படும்’ என்பது போன்ற அறிவிப்புகளும் இருக்கின்றன.

இன்னொரு முக்கியமான விஷயம், ‘அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளியாக (முன் பள்ளிக் கல்வி) மாற்றுவது. இதற்கென அங்கன்வாடிப் பொறுப்பாளர்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிப்பது, காலப்போக்கில் எல்லா மழலையர் பள்ளிகளும் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்துக்குள்ளோ, அதன் அருகில் உள்ள இடத்துக்கோ மாற்றப்படும். தனியார் மழலையர் பள்ளிகளுக்கென விதிமுறைகளும், இயக்க முறைகளும் வகுக்கப்படும்’ என்று உள்ளது. இது ஏற்கெனவே இடதுசாரிகள் வலியுறுத்தி வருகிற விஷயம்.

மறுக்க முடியாத உண்மை

திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தங்களின் கொள்கையை எல்லாம் ஒட்டுமொத்த மக்கள் மீதான சட்டமாக மாற்றுகிறது, கம்யூனிஸ்ட்டுகளும் தங்கள் கொள்கைகளைச் சட்டதிட்டமாக அறிவிக்கிறது. இதைப் போலத்தானே பாஜகவும் செய்யும் என்று பீதி ஏற்படுவது நியாயம்தான். ஆனால், சம்ஸ்கிருதத்துக்குப் புத்துயிர் அளிப்பது, சிறுபான்மையினர் அல்லாத ஏழைக் குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை, உலகமயமாதலுக்கேற்ற வகையில் கல்வித் திட்டத்தை மாற்றுவது போன்ற அறிவிப்புகளைத் தாண்டி, அவர்கள் இந்தக் கல்விக் கொள்கையில் எந்தப் புரட்சியும் செய்யவில்லை.

பொதுக் கல்வி முறை, அருகமைப் பள்ளி, கல்வி வணிக மயத்தை ஒழித்து, உயர் கல்வி வரை இலவசம் போன்ற லட்சியங்களை நோக்கி ஒரு அடிகூட எடுத்து வைக்கப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இந்தக் கொள்கை வரைவில் உள்ள விஷயங் களை மட்டும் எடுத்துக்கொண்டு விமர்சித்தால், கணிச மான அளவில் நன்மையும் இருக்கின்றன. எனவே, தீய விஷ யங்களைச் சொல்கிற விதத்தில் சொல்லி, அதைத் திருத்த வும், கூடுதல் விஷயங்களைச் சேர்க்கவும் முயற்சிப்பதே சரி. அதை விட்டுவிட்டு, ரஜினி படத்தை கமல் ரசிகர்கள் விமர்சிப்பதுபோல் விமர்சித்தால் எந்த மாற்றமும் இங்கே ஏற்பட வாய்ப்பில்லை. அது அரசியல்ரீதியான திருப்தியைத் தரலாமே தவிர, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் எந்த நன்மையும் பயக்காது!

ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்பது தமிழக கம்யூனிஸ்ட்டுகளுக்குத் தெரிந்த விஷயம்தான் என்பதை திமுக, அதிமுக அரசுகளை விமர்சிப்பதில் அவர்கள் கையாளும் நுட்பத்தை வைத்தே புரிந்துகொள்ளலாம். அதை ஏன் மத்திய பாஜகவிடம் காட்ட மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

- தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

கே.கே.மகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x