Last Updated : 30 Apr, 2015 10:07 AM

 

Published : 30 Apr 2015 10:07 AM
Last Updated : 30 Apr 2015 10:07 AM

நம் கல்வி... நம் உரிமை!- ஜெயமோகன்களாலேயே அஜிதன்கள் உருவாகிறார்கள்

வணக்கம் ஜெயமோகன். என்னை உங்களுக்குத் தெரியாது. தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. நான் உங்கள் ரசிகன் அல்ல. சொல்லப் போனால், உங்களை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது; காரணம் ஏதும் இல்லை.

நவீனப் புதினங்கள் பிடிக்காததும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், உங்களைப் பற்றியும், உங்கள் சகாக்களான சாருநிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் தொடர்பாகவெல்லாம் ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்படும் விஷயங்களையெல்லாம்கூட இதுவரை ஆர்வம் இல்லாமல் தான் கடந்து சென்றிருக்கிறேன்.

நீங்கள் எத்தனையோ ஆயிரம் பக்கங்களை எழுதியிருக்கிறீர்கள். ஆனால், உங்களின் ஆயிரத்துச் சொச்சம் வார்த்தைகளை மட்டுமே கொண்ட ஒரு கட்டுரை என்னுள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது ஜெயமோகன்.

ஏப்ரல் 27 காலை 7 மணி இருக்கும். நண்பரின் வீட்டுக்கு ஒரு துக்கத்துக்காகச் சென்றிருந்தேன். யதேச்சையாக, அங்கு இருந்த ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் புரட்டியபோது, >உங்கள் கட்டுரை படிக்க நேர்ந்தது. நிச்சயம் அந்தக் கட்டுரையை உங்களுக்காகப் படிக்கவில்லை. அரசுப் பள்ளி என்ற வார்த்தை மட்டும் தலைப்பில் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் நான் அந்தக் கட்டுரையைப் படித்திருக்க மாட்டேன். அரசுப் பள்ளி எனும் வார்த்தை ஏற்படுத்திய ஈர்ப்பால், கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தேன்.

முழுக் கட்டுரையும் படித்து முடிப்பதற்குள் இரண்டு முறை அழுதுவிட்டேன். இருந்தது ஒரு துக்க வீட்டில், இறந்தவருடன் எனக்கு நேரடி அறிமுகம் கிடையாது. அவருடைய மகன் நல்ல நண்பர். அறிமுகமே இல்லாத ஒருவருக்காக நான் ஏன் அழுகிறேன் என்று நினைத்து துக்க வீட்டில் இருந்த பலரும் என்னை ஒரு மாதிரி பார்த்தாக உணர்ந்தேன்.

உங்கள் மகன் அஜிதனுடன், உங்கள் கட்டுரையின் ஒவ்வொரு புள்ளியிலும் என்னைத் தொடர்புபடுத்திக்கொண்டேன் ஜெயமோகன்.

நான் படித்தது ஓர் அரசு உதவி பெறும் பள்ளியான தஞ்சை கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளியில். தஞ்சையில் நான் படித்த காலகட்டத்தில் அது ஒரு சிறந்த பள்ளி. அந்தப் பள்ளியில் இடம் கிடைப்பதே மிகவும் கஷ்டம். ஆனால், அந்தப் பள்ளியின் துரதிர்ஷ்டம் எனக்கு அங்கு இடம் கிடைத்தது. பத்தாவது வரை அங்குதான் படித்தேன். படித்தேன் அல்ல; சென்று வந்தேன் என்பதே சரி.

மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே ஒரு மாணவனின் திறமைகளை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு நான் ஒரு உருப்படாத மாணவன்.

எதற்குமே லாயக்கில்லாதவனோ நான்?

உங்களைப் போல என் தந்தையும் பிஎஸ்என்எல் ஊழியர் தான். எழுத்தாளர்தான். அப்போது மாலை நேரங்களில் அந்தப் பகுதிக் குழந்தைகளுக்கு வீட்டின் மேல் தளத்தில் டியூஷன் எடுத்துக்கொண்டிருந்தார். ஒருநாள் சிவப்பு மை அடித்தல்களால் நிறைந்த என் தேர்வு விடைத்தாளை அவரிடம் நீட்டுகிறேன். எல்லா விடைத்தாள்களிலும் கையெழுத்திட்டுவிட்டுச் சொன்னார்: “இனி, நீ மேல் தளத்துக்கு வராதே. உன் மதிப்பெண்களைப் பார்த்தால் மற்ற குழந்தைகளும் கெட்டுவிடும்!”

நான் முழுவதுமாக உடைந்துபோனேன். அன்றிரவு என் படுக்கைத் தலையணைகள் கண்ணீரால் ஈரமாயின. அந்தப் பருவ மாணவர்கள் அதிகம் விரும்பும் கிரிக்கெட்டும் அப்போது எனக்கு விளையாட வராது. அவர்களும் என்னைக் கிண்டல் செய்த காலம் அது. எனக்கே என் மீது கடும் அவநம்பிக்கை ஏற்பட்டது. “எதற்குமே லாயக்கில்லாதவனோ நான்?”

தந்தையின் மாயாஜாலம்!

ஆனால், ஒரு மாயாஜாலம்போல என் தந்தை அனைத்தையும் அடுத்த நாளே சரிசெய்தார். அப்போது, தஞ்சை ராஜராஜன் திரையரங்கில் ‘முதல்வன்’ படம் திரை யரங்கில் ஓடிக்கொண்டிருந்தது. நல்ல விஸ்தாரமான அந்தத் திரையரங்குக்கு என்னை அழைத்துச் சென்றார். டிக்கெட் எடுத்துவிட்டு, திரையரங்கு வளாகத்தில் இருந்த செயற்கை நீர் ஊற்று அருகே உட்காருகிறோம்.

“டேய்... உனக்கு எது பிடிக்குதோ அதைச் செய்டா... மார்க்கெல்லாம் சும்மா. அதுக்கும் அறிவுக்கும் சம்பந்த மில்லை. எது செஞ்சாலும் முழு ஈடுபாட்டோட செய்... அவ்ளோதான். உனக்கு என்னவாகணும்னு ஆசை ?” என்கிறார்.

“தெரியலை பாப்பு” (அப்பாவை அப்படித்தான் அழைப்பேன்).

“சரி, உனக்கு எதுல ஈடுபாடு வருதோ, அப்ப சொல்லு. அதுல உன்னை நீ வளர்த்துக்கிறதுக்கு என்னால முடிஞ்சதை யெல்லாம் பண்றேன்.”

எனக்கு அந்தக் காலகட்டத்தில்தான் ஊடகத் துறையின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. ஏழாம் வகுப்பு ஆண்டு விடு முறையில், சுட்டி விகடன் திருச்சியில் ஒரு வார ஓவிய வகுப்பு நடத்தியது. அதில் சேர வேண்டுமென்று ஆசை. அதில் சேர்த்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஒரு வார காலம் முழுவதும் என்னை அழைத்துக்கொண்டு திருச்சிக்கும் தஞ்சைக்குமாக அலைந்தார்.

சூப்பர்டா... சூப்பர்டா

பத்தாம் வகுப்புக்கு வந்தேன். என் குடும்பம் என்னிடம் அதிகபட்சம் எதிர்பார்த்ததே நான் தேர்வில் தேர்வாகிவிட வேண்டும் என்பதை மட்டும்தான். ஏனென்றால், அப்போதெல் லாம் 40 மதிப்பெண்களை நான் எடுப்பதே பெரிய காரியம். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் 423 மதிப்பெண்கள் எடுத்தேன். அப்பாவின் அலுவலகத்துக்கு ஓடினேன். மதிப்பெண்களைச் சொன்னபோது அவரால் நம்ப முடியவில்லை.

“டேய்... ஒண்ணும் சொல்ல மாட்டேன், உண்மையைச் சொல்லு… எவ்வளவு மார்க்?”

“பாப்பு... உண்மையிலயே இதுதான்...”

“டேய் சூப்பர்டா... சூப்பர்டா” என்றவர் கொஞ்ச நேரம் கழித்துச் சொன்னார். “ஆனாடா, இப்பவும் சொல்றேன்... மார்க்குக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை. இதையெல் லாம் பெரிசா மண்டையில ஏத்திக்காத... உனக்கு என்னா வாகணும்னு தோணுதோ அதையே செய்யி.”

முதல்முறையாகச் சொல்கிறேன். “சினிமா டைரக்டர் ஆகணும் பாப்பு...”

எல்லாமே தந்தையால்தான்

சினிமா பார்ப்பதையே ஹராம் என்று ஒதுக்கும் ஒரு மதப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்திலிருந்து வந்தவன், சினிமா எடுக்கச் செல்ல வேண்டும் என்கிறேன். ஆனால், அதற்கு அவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. “நல்ல விஷயம்டா... நிறைய புத்தகம் படி, தினமும் பேப்பர் படி...” என்றார்.

உடன் படித்த எல்லா மாணவர்களும் ப்ளஸ் டூ முடித்த பிறகு மெடிக்கல், இன்ஜினீயரிங்குக்காக கவுன்சலிங், கோச்சிங் என்று பரபரப்பாக இருந்தபோது, எனக்கு எந்த நெருக்கடியும் அவர் கொடுக்கவில்லை. த்ரீடிஸ் மேக்ஸ், மாயா என்று நான் விரும்பிய அனிமேஷன் படிப்புகளில் சேர்த்துவிட்டார். அடுத்து என்னை விஷுவல் கம்யூனிகேஷனில் சேர்த்துவிட்டார்.

கல்லூரிக் காலத்தில் என் விருப்பம் அச்சு ஊடகம் மீது மாறியது. விகடனில் மாணவப் பத்திரிகையாளராகத் தேர்வானேன். அந்தப் பிரிவில் சிறந்த மாணவப் பத்திரிகை யாளனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எல்லாமே என் தந்தையால்தான்!

அரணாகத் தந்தை

இதுநாள் வரை பெரிதாக ஏதும் சம்பாதிக்கவில்லை. சம்பாதிக்கும் பணத்தின் பெரும் பகுதி பயணத்துக்கும், புத்தகங்களுக்குமே செலவாகிறது. ஆனால், இதுவரை அவர் எதுவும் என்னிடம் கேட்டதில்லை. ஒரு முஸ்லிம் குடும்பத்துக்கென்றே சில அபிலாஷைகள் இருக்கும். இதுவரை அவற்றில் நான் எதையும் நிறைவேற்றியதில்லை. அதனால், என் சுற்றத்தார் என் மீது எறியும் எந்தக் கல்லும் என் மீது விழாமல் ஒரு அரணாக அவர் இருக்கிறார்.

அன்புக்குரிய ஜெயமோகன்... என்னை எப்படி அஜிதனுடன் நான் பொருத்திப்பார்த்தேனோ, அதேபோல உங்களை என் தந்தையுடன் பொருத்திப் பார்க்கிறேன். ஆமாம், ஜெயமோகன். அரசுப் பள்ளிகள் மட்டும் அஜிதன்களை உருவாக்குவதில்லை... ஜெயமோகன்களும் சேர்ந்துதான் அஜிதன்களை உருவாக்குகிறார்கள்!



பின்குறிப்பு: நீங்கள் ஆனந்த விகடன், குமுதம் வாசகராக இருந்தால் தஞ்சை தாமு என்ற புனைபெயரில் எழுதும் என் தந்தையை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. வல்லம் தாஜூபால் என்ற பெயரில் கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். ஐம்பதின் பிற்பகுதியில் இருந்தாலும் அவர் என்னைவிட அதிகம் வாசிக்கிறார்; உழைக்கிறார்!

-நியாஸ் அஹம்மது,

‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் செய்தியாளர்.

தொடர்புக்கு: nomadniya@gmail.com

‘தி இந்து’ கட்டுரையைப் படித்து ஃபேஸ்புக்கில் அவர் எழுதியிருந்த பதிவு இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x