Last Updated : 24 Jul, 2016 12:39 PM

 

Published : 24 Jul 2016 12:39 PM
Last Updated : 24 Jul 2016 12:39 PM

தாமிரபரணியில் மிதக்கும் கேள்விகள்

நெல்லையில் கொக்கிரகுளம் சாலையைக் கடக்கும்போதெல்லாம், தாமிரபரணி கரையெங்கும் இறைந்து கிடந்த ஒற்றைச் செருப்புகளின் சித்திரம் மனதில் எழுந்துகொண்டேயிருக்கிறது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அந்தக் கோரச் சம்பவத்தின் காட்சிகள் மனதில் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. 1998 ஜூலை 23-ல் நடந்த அந்த அசம்பாவிதம் அடக்குமுறைகளால் உரிமைக் குரல்கள் நசுக்கப்படும் அவலத்தை உணர்த்தும் சாட்சியமாக இருக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் மணிமுத்தாறு அணைக்கு மேலே இருக்கும் மாஞ்சோலை தேயிலை தோட்டம், ‘பம்பாய் பர்மா டிரேடிங் கார்பொரேஷ’னுக்குச் சொந்தமானது. சிங்கம்பட்டி ஜமீன் மேற்படி நிறுவனத்திற்கு 110 ஆண்டுகாலக் குத்தகைக்குக் கொடுத்ததன் அடிப்படையில் 8,374 ஏக்கர் நிலத்தில் தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு இத்தோட்டத்தில் பயிரிடப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் 1,650 நிரந்தரத் தொழிலாளர்களும், 750 தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிந்துவந்தனர். இங்கே சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப். மற்றும் புதிய தமிழகம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் என பல சங்கங்கள் செயல்பட்டுவந்தன.

அடிமாட்டுச் சம்பளம்

இங்குள்ள தோட்டத் தொழிலாளர்களுக்குத் தினக்கூலியாகக் கிடைத்தது வெறும் 53 ரூபாய்தான். இந்தச் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கையை நகர்த்தக் கூட முடியாமல் புழுங்கிக்கொண்டிருந்தனர் தொழிலாளர்கள். இவர்கள் வசித்த தகர வீடுகளில் ஆடு, நாய் போன்ற சிறுபிராணிகள் வளர்ப்பதற்குக்கூடத் தடை விதித்திருந்தது தோட்ட நிர்வாகம்.

1998 மக்களவைத் தேர்தலின்போது தென்காசி தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்தபோது, இந்தப் பிரச்சினைகள் அவரது கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன. தேர்தலுக்குப் பிறகு இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்ட அவர், 1998 ஜூலையில் 25 அம்சத் கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன்பு வைத்து போராட்டத்தைத் தொடங்கினார். சேரன்மாதேவி கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர் என பல மட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதையடுத்து, 1999 ஜூனில் மாவட்ட ஆட்சியர் இல்லத்துக்கு மாஞ்சோலை தோட்டத் தொழி லாளர்களைத் திரட்டிச் சென்று முறையிட்டார் அவர்.

போராடிய 451 தொழிலாளர்களைக் கைது செய்து, திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைத்து விட்டது காவல் துறை. அதற்கு மறுநாள், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தங்களது கணவன்மார்களை விடுதலை செய்யச் சொல்லி 230 பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, தடை உத்தரவைக் காரணம் காட்டி, போராடிய 198 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களும் திருச்சிராப்பள்ளி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஜூலை 23-ல் புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஆகிய அரசியல் கட்சிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் சென்று மனு கொடுக்க முடிவெடுத்தன. திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த 451 ஆண் தொழிலாளர்கள், மற்றும் 198 பெண் தொழிலாளர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே பிரதானக் கோரிக்கையாக அன்றைக்கு இருந்தது. தினக்கூலியை 53 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

ஊர்வலத்தின் முன்புறம், ஜீப்பில் சென்ற தலைவர்கள் கிருஷ்ணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.பழனி, நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் அடங்கிய 10 பேரை மட்டும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க அனுமதி அளித்தது காவல் துறை. உள்ளே பேச்சுவார்த்தைக்குச் செல்வது குறித்து விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே விபரீதம் தொடங்கியிருந்தது. கூட்டத்தைக் கலைக்க தடியடிப் பிரயோகம் செய்தும், கண்ணீர்ப் புகை வீசியும் விரட்டியடிக்கத் தொடங்கினர் போலீஸார். இருபுறமும் சூழப்பட்ட மக்கள், வேறு வழியின்றி, தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடத் தொடங்கினர்.

அதிகாரத்தின் கொடுங்கரம்

ஆறடி நீள சவுக்கு கம்புடன் அவர்களைத் துரத்திய போலீசார், அவர்களைத் தண்ணீருக்குள் தள்ளினர். வெளியே வர முயன்றவர்களைக் கம்பால் தாக்கி மீண்டும் உள்ளே தள்ளினர். ஒன்றரை வயதுக் குழந்தை விக்னேஷை இடுப்பில் வைத்தபடி ஓடிய ரத்தினமேரிக்கும் தலையில் அடி விழுந்தது. ஆற்றில் விழும் முன்பு, கையில் இருந்த குழந்தையை நழுவவிட்டார். குழந்தையும் மூச்சு முட்டி இறந்தது. குழந்தையின் மரணம், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைக் கொந்தளிக்க வைத்துவிடும் என்று கருதிய போலீஸார், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸ் வேனின் பின் சீட்டில் வைத்து மறைக்கப் பார்த்தனர். இதைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதைப் படமெடுக்கத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த போலீஸார் கேமராக்களைப் பிடுங்கி, பிலிம் ரோலை உருவி எறிந்தனர்.

போலீஸார் பெண்களைத் தாக்குவதைப் பார்த்த மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் பழனி, வேனை விட்டுக் கீழிறங்கி, அதைத் தடுக்க முற்பட்டார். அவரையும் போலீஸார் கடுமையாகத் தாக்கினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை இரண்டு பெண்கள் தூக்கிச் சென்று ஒரு ஆட்டோ அமர்த்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டார் அவர்.

ஆற்றில் நீச்சலடித்து மறுகரை ஏறியவர்களையும் போலீஸாரின் சவுக்குக் கம்புகள் பதம் பார்த்தன. மீறி வெளியே வந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு பாலம் காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டனர். ஈரத் துணியோடு கரையேறிய பெண்களையும் விட்டு வைக்கவில்லை. ஒரு மணிநேரம் கழித்து களேபரம் முடிவுக்கு வந்ததுபோல் இருந்தது. நெல்லை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவே தோன்றியது.

மறுநாள், காலையில் நான்கு பிணங்கள் கரை ஒதுங்கின. அடுத்த நாள் ஆறு பிணங்கள். அதற்கடுத்து மூன்று என எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, விபரீதத்தை மக்கள் உணரத் தொடங்கினர். இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இறந்து போன 17 பேரில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்றரை வயது விக்னேஷ் என்ற குழந்தையும் அடக்கம். மீதி 14 பேர் ஆண்கள். மூன்று இஸ்லாமியர்கள், ஒரு கிறிஸ்தவ மீனவர், ஏனைய 13 பேரும் தலித்துகள்.

யார் குற்றம்?

இந்தக் கொடூர நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி மோகன் தலைமையிலான குழுவைத் தமிழக அரசு அமைத்தது. "ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் ஒழுங்குமுறையற்ற நடத்தை, கண்ணியக்குறைவான முழக்கங்களை எழுப்பியது, காவலர் மீதும் நிர்வாகத்தின் மீதும் தரக்குறைவானச் சொற்களைப் பயன்படுத்தியது உள்ளிட்டவை, காவலர்கள் அவர்கள் மீது பலப் பிரயோகம் செய்வதற்குக் காரணமாக அமைந்தன. கும்பலைக் கலைக்க பலப்பிரயோகம் அவசியம்தான். எனினும், ஊர்வலத்தில் வந்தவர்களை ஆற்றுப் படுகையில் துரத்திச் சென்ற செயல், அத்துமீறிப் பலப்பிரயோகம் செய்ததாகிறது. அந்தச் செயலுக்கு பொறுப்பான காவல் துறை உதவி ஆணையாளர்கள் இருவரும், பாளையங்கோட்டை வட்டாட்சியரும் கட்டாயப் பணி ஓய்வில் செல்ல வேண்டும்” என்றது அந்த விசாரணைக் குழுவின் அறிக்கை.

“11 இறப்புக்கள் விபத்து என்ற வகையின் கீழ் வரும். ஏனைய 6 பேர் கொக்கிரகுளம் சாலையில் முதற்கண் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்து விட்டனர். காயங்களோடு அவர்கள் ஆற்றுப்படுகையில் இறங்கினர். அவர்களைக் காவல் துறையினர் துரத்தினர். ஆற்றைக் கடக்க முயற்சி செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ஆற்றில் விழுந்து விட்டனர்.." என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்ட நீதிபதி மோகன், “ஹோரேஸ் எனும் கவிஞன் எழுதிய ‘நடுவு நிலை பிறழாத/ வேறுபாடு அறியாத/ மரணத்தின் கோரக்கால்கள்/ இந்த ஏழை மகனின்/ குடிசைக் கதவில்/ எட்டி உதைத்தன" என்ற கவிதை வரிகளைப் போல, இவர்கள் வீர மரணத்தைத் தழுவவில்லை என்பது உண்மையே என்றாலும், தவறான வழியில் அனுப்பப்பட்டுவிட்டனர் என்றே கருதுகிறேன். ஒரு ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களே மற்ற அரசியல் கட்சிகளின் ஊர்வலத்தில் வாடகைக்கு அமர்த்தப்பட்டு வருவதும் நிகழ்வதால், இந்த மக்கள் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவதில்லை. எனவே, அரசியல் கட்சிகளின் இது போன்ற ஊர்வலங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்கிறேன்” என்று அறிக்கையை முடித்தார்.

இன்றைய நிலை

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மாஞ்சோலைக்குத் திரும்பிச் செல்ல விரும்பாத தொழிலாளர்கள் பலரும் பாளையங்கோட்டை அருகில் உள்ள ஆரோக்கியநாதபுரம் என்ற கிராமத்தில் தங்கினர். ஊர் மக்கள் அவர்களுக்கு உணவு அளித்துவந்தனர். கிருஷ்ணசாமி போன்ற தலைவர்கள் இங்கே வந்து, தங்கியிருந்த மக்களுக்கு ஆறுதல் சொல்லியும் வேண்டிய உதவிகளும் செய்தனர். மாஞ்சோலையில் இருந்த தொழிலாளர்களில் பலர் சமவெளிக்கு இறங்கி வந்து, மாற்று வேலைக்குச் சென்று விட்டனர்.

இன்றைக்கு மாஞ்சோலைத் தோட்டத்தில் மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில தோட்டத் தொழிலாளர்கள் 1500 பேர் இருக்கிறார்கள். சுமார் 300 கேரள மாநிலக் குடும்பங்களும் அங்கே உள்ளன. 200 பேர் மட்டுமே தமிழர்கள். இன்றைய தேதிக்கு ரூ. 252 கூலி. எந்தத் தொழிற்சங்கமும் அங்கே இல்லை. அனுமதியின்றி யாரும் அங்கே உள்ளே நுழைய முடியாது. மயான அமைதி!

ஆறாத வடு

இன்றும் ஜூலை 23 நெல்லையில் பரபரப்பான நாளாகவே மாறிப் போயிருக்கிறது. பதற்றத்தைத் தவிர்க்க, அஞ்சலி செலுத்த வரும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொரு தலித் அமைப்புக்கும் வெவ்வேறு நேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. தாமிரபரணிக் கரையின் இருபுறமும் உள்ள சாலைகளில் 3,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்படுகின்றனர். போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது. அஞ்சலி செலுத்தும் இயக்கங்கள் தத்தமது சக்திக்கேற்றபடி தொண்டர்களைத் திரட்டியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரேயுள்ள நதிக்கரையில் சிறிய ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துகின்றன. இவர்களுக்கு இடையில், மெல்லிய சிறு விசும்பல்களுடன் மனதில் பொங்கியெழும் துக்கத்தைச் சுமந்து நிற்கிறார்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த உறவினர்கள்.

- இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர். தொடர்புக்கு: narumpu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x