Published : 30 Jul 2015 09:31 AM
Last Updated : 30 Jul 2015 09:31 AM

டைகர்கள் உலகில் யாகூப்கள் பலிகடாக்கள்

தூக்குக்கு எப்போது தூக்கு?

*

யாகூப் மேமன் தனது கர்ப்பிணி மனைவி ராஹினைக் கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.

“நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்” என்றார் யாகூப் மேமன். அது 1998-ல் நடந்தது. அப்போது நான் மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘பிளாக் ஃபிரைடே’ என்ற எனது புத்தகத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருந்தேன். யாகூபைச் சந்தித்தபோது, தனது கதையைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், விசாரணை முடிவதற்கு முன் அந்தக் கதையை நான் எழுதப்போய், அதனால் இந்த வழக்குக்கு ஏதாவது குந்தகம் ஏற்படுமோ என்று அவர் பயந்தார். அவ்வப்போது தெளிவற்ற சில தகவல்களை உதிர்ப்பார். அவற்றை நான் பின்தொடர்ந்து சென்றால், மிகவும் முக்கியமான தகவல்களாக அவை இருக்கும்.

புத்திசாலித்தனமான, மனசாட்சியுள்ள மனிதர் யாகூப். சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்டாக இருந்திருக்கிறார். இந்து மதத்தவரான தனது பங்குதாரர் சேத்தன் மேத்தாவுடன் இணைந்து வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். சிபிஐ-க்கு யாகூப் அளித்த வாக்குமூலத்தின்படி, மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அவர் முதன்முதலில் கேள்விப்பட்டது, துபாயில் இருந்தபோது 1993 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு பிபிசி செய்திகள் மூலமாகத்தான்.

பாகிஸ்தானில் சிறைவைப்பு

துபாயில் இருந்த ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் குண்டுவெடிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்கள். டைகர் மேமன் மட்டும் விதிவிலக்கு. அவர் அந்தக் குண்டுவெடிப்புகளைக் கொண்டாட விரும்பினார். துபாய் அரசு அந்தக் குடும்பத்தினரை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அங்கே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை டைகர் செய்திருந்தார். கராச்சியில் வெவ்வேறு மாளிகைகள், ராணுவக் குடியிருப்புகள் என்று அவர்கள் மாற்றப்பட்டுக்கொண்டேயிருந்தார்கள். எனினும், டைகர் மேமனையும் அயூப் மேமனையும் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பத்தினருக்கும் இப்படிச் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்துத் துளியும் விருப்பமில்லை. அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.

யாகூப் ஒன்றும் துணிச்சல் மிக்கவர் அல்ல. ஆனால், ஒரு நொடியில் ஏற்படும் துணிவுதான், துணிச்சலான நபரையும் கோழையையும் வேறுபடுத்துகிறது. தனது கொடிய சகோதரனையும் ஐஎஸ்ஐயையும் மீறிக்கொண்டு, எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தியா திரும்புவதென்ற முடிவை அவர் தீர்க்கமாக எடுத்தார். மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎஸ்ஐயின் முக்கியப் புள்ளியான தௌஃபிக் ஜாலியாவாலாவுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். ரகசிய இடங்களை வீடியோ எடுத்துக்கொண்டார்; புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்; உரையாடல்களையெல்லாம் பதிவு செய்துகொண்டார். பிறகு, போலி பாஸ்போர்ட்டுகள், பாகிஸ்தான் அரசு வழங்கியிருந்த வெவ்வேறு அடையாள அட்டைகள் போன்ற ஆவண ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டார்.

தனது பயணப்பெட்டி முழுவதும் ஆதாரங்கள் நிரம்பியதும், காராச்சி-காத்மாண்டு-துபாய்-காத்மாண்டு-கராச்சி என்று சுற்றுவழி பயணச்சீட்டை லூஃப்தான்ஸா விமானத்தில் எடுத்துக்கொண்டார். அவர் திரும்பிவருவார் என்ற உறுதியில் ஐஎஸ்ஐ ஆட்கள் அவரது பயணத்துக்கு முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு ஏற்பாடு. இந்தியாவுக்கு நேரடியாகப் போக முடியாதென்பது யாகூபுக்குத் தெரியும். பாகிஸ்தான் அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளும் கூட்டாளிகள் என்பதால், துபாயில் சரணடைவது என்பது மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். நேபாளம் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு என்று அவர் நினைத்ததால் காத்மாண்டுவைத் தேர்ந்தெடுத்தார். நம்பகத்தன்மை கொண்ட ஒரு தவறை அவர் வேண்டுமென்றே செய்ய நினைத்தார்.

பாதுகாப்புப் பரிசோதனையின்போது யாகூப் தனது பெட்டியைத் திறப்பதற்காக வேண்டுமென்றே தடுமாறியபோது, நிறைய பாஸ்போர்ட்டுகள் பெட்டியிலிருந்து சிதறிக் கீழே விழுந்தன. அதிகாரிகள் பிடித்தார்கள். யூசுஃப் அஹமத் என்ற பெயரில் சென்றிருந்த அவர் தனது உண்மையான பெயர் யாகூப் மேமன் என்ற உண்மையை, தான் பிடிபட்ட உடனேயே வெளிப்படுத்தினார். ரகசிய ஏற்பாட்டின்படி 48 மணி நேரத்துக்குள் அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தரப்பு கூறும் விளக்கம் சற்றே மாறுபடுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் யாகூபின் பெட்டியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒன்றைக் கண்டதாகவும் அதனால் பெட்டியைத் திறந்துகாட்ட அவர்கள் கேட்டதாகவும் அப்போதுதான் பாஸ்போர்ட்டுகள் சிதறி விழுந்தன என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பிறகு, நேபாள எல்லைக்கு அருகே யாகூப் விடப்பட்டார். தனி விமானம் ஒன்றில் அங்கிருந்து புதுடெல்லி அழைத்துவரப்பட்டார். புதுடெல்லி ரயில் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஏதும் தன் வாழ்க்கையில் நிகழவேயில்லை என்று தான் எழுதிய கடிதமொன்றில் யாகூப் தெரிவிக்கிறார்.

வெகு விரைவில் யாகூப் எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டார். சில வாரங்களுக்குள், யாகூப் மேமனின் உதவியோடு, மேமன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரச்செய்தது சிபிஐ. யாகூப் கைதுசெய்யப்பட்டதும் மேமன் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவர்களுடைய முந்தைய திட்டத்தின்படி இந்தியாவுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் துபாய்க்குச் சென்றிருந்தனர்.

பரபரப்பான ஒரு நடவடிக்கையின் மூலம் மேமன் குடும்பத்தினரை ஐஎஸ்ஐயின் கண்காணிப்பிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். பின்தொடரும் ஐஎஸ்ஐ ஆட்களை ஏமாற்றிவிட்டு, மேமன் குடும்பத்தினரில் எட்டுப் பேரை இந்தியாவுக்கு சிபிஐ அழைத்துவந்தது. எட்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளில் சில நிமிடங்களுக்குள், அதுவும் விண்ணப்பதாரர்களைச் சந்திக்காமலேயே, இந்திய விசாக்களுக்கான முத்திரை இடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் ஒற்றை நிகழ்வாக இருக்கலாம். டைகர், அயூப், அவர்களின் மனைவியர் ஆகியோர் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் திரும்பிவந்துவிட்டார்கள். ஒரு மாதக் குழந்தை ஜுபைதாவைக் கைகளில் ஏந்திய ராஹினும் சில நாட்களுக்குப் பிறகு அவர்களோடு சேர்ந்துகொண்டார்.

மன்னிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில்

ஒட்டுமொத்த நடவடிக்கையும் சாத்தியமானது ஒரே ஒரு மனிதரின் அசாத்தியமான துணிவாலும் உறுதியாலும்தான்: அவர்தான் யாகூப் மேமன். கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத இந்தப் பணியை நிறைவேற்றியதற்குப் பரிசாகத் தண்டனைக் குறைப்பும் மன்னிப்பும் கிடைக்கும் என்று யாகூப் எதிர்பார்த்தார். ஆனால், அரசு அவர் மீது தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்தது. சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ‘என்கவுன்ட்டர்’ செய்யப்போகிறோம் என்று சொல்லி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கும்கூட ஒரு முறை அழைத்துப்போயிருக்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சியிலும், ஆரம்பத்தில் தன்னைக் கையாண்ட சிபிஐ அதிகாரிகளிடமும் சொல்லியவற்றைத் தவிர, சொல்வதற்கு யாகூபிடம் வேறு எதுவும் இல்லை.

தண்டனை நிறுத்திவைக்கப்படும் என்று அவர் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகள் தசாப்தங்களாகின. இப்போது அவர் தூக்கு மேடையில் நிற்கிறார். ஒட்டுமொத்த விசாரணையிலும் பெரிய இழப்பு யாகூபுக்கு என்பதுதான் இதில் முரண்பாடான விஷயம். இந்திய விசாரணை முகமைகளுக்கு ஏராளமான ஆதாரங்களை அவர் கொடுத்து உதவியிருக்கிறார். அதனாலேயே, இந்தத் திட்டத்தின் மூளை என்று கடைசியில் ஆக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை டைகர் மேமனும் யாகூப் மேமனும் அனல்பறக்க விவாதித்தபோது, டைகர் மேமன் யாகூபிடம் சொல்லியிருக்கிறார், “காந்தியவாதியாக இந்தியாவுக்கு நீ போகிறாய், ஆனால் கோட்சேவாக நீ இந்தியாவில் தூக்கிலிடப் படுவாய்”. இதற்கு யாகூப் மேனன் இப்படிப் பதிலடி கொடுத்தார், “நீ சொன்னது தவறு என்பதைக் கடைசியில் நான் நிரூபிப்பேன்.”

இந்த உலகில் டைகர் மேமன்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுவதும் யாகூப்களெல்லாம் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவதும்தான் பெரும் துயரம்!

- எஸ். ஹுஸைன் ஜைதி, புலனாய்வுப் பத்திரிகையாளர், மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றிய ‘பிளாக் ஃபிரைடே’ புத்தகத்தின் ஆசிரியர்.

© ‘தி இந்து’ (ஆங்கிலம்),

சுருக்கமாகத் தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x