Last Updated : 04 Oct, 2015 12:24 PM

 

Published : 04 Oct 2015 12:24 PM
Last Updated : 04 Oct 2015 12:24 PM

ஜெர்மனியின் சர்வதேசியத்துக்கு வாழ்த்துகள்

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தை பிரிட்டனில் கழித்தேன். சிரியா நாட்டு அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துவருவதுதான் அப்போது முக்கியச் செய்தி. துருக்கி கடற்கரையில் அகதிகளின் சடலங்கள் ஒதுங்குவது அதிகரித்தன. தங்கள் நாட்டு எல்லை வரை வந்த அகதிகளை ஹங்கேரிய போலீஸார் குண்டாந்தடி கொண்டு அடித்து விரட்டினர். இவையெல்லாம் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகின. இச்சூழலில் அகதிகளுக்கு உதவ பிரிட்டன் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் விவாதங்களும் எங்கும் எழுந்தன.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், "நம்மால் இனி அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அறிவித்தது நாளிதழ்களில் தலைப்புச் செய்தியாக வந்தது. அதற்கான காரணங்களும் அதில் தரப்பட்டிருந்தன. 2014 முதல் அதுவரையில் பிரிட்டன் ஏற்ற சிரியா அகதிகள் எண்ணிக்கை 216. அதே காலத்தில் சுவிட்சர்லாந்து 2,700, ஜெர்மனி 38,000 அகதிகளை ஏற்றிருந்தன. 216-க்கு மேல் பிரிட்டனால் ஏற்க முடியாதாம்!

சிரியா மோதல்களால் அகதிகளானவர்களை ஐரோப்பிய நாடுகள் அதிகம் ஏற்க வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல் வேண்டுகோள் விடுத்தார். ஜெர்மனி 8 லட்சம் பேரை ஏற்கும், பிற நாடுகளும் அதேபோல முன்வர வேண்டும் என்றார். பலர் இதை வரவேற்றனர், சிலர் விமர்சித்தனர்.

ஜெர்மனியில் கிழவர்கள் அதிகமாகிவருகின்றனர், ஆலைகளில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்பதால் இப்படித் தாராளம் காட்டுகிறார் என்றனர். பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கிரேக்கத்துக்கு நெருக்கடி கொடுத்ததால் ஏற்பட்ட அவப்பெயரைப் போக்கிக்கொள்ள இப்படிச் செய்கிறார் என்றனர். எனினும், அவருடைய பரந்த மனப்பான்மையை அப்படிக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியும் என்று தோன்றவில்லை. தான தருமமும், பிறரிடத்தில் பரிவும் தங்களுடைய ரத்தத்தில் ஊறியவை என்று பெருமை பேசும் பிரிட்டிஷாரை ஒருவகையில் மெர்கெல் தலைகுனிய வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஹெல்முட் கோலின் பெருந்தன்மை

சர்வதேச அக்கறையுடன் ஜெர்மனி இதற்கு முன்னாலும் செயல்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. 1995-ல் நான் பெர்லினில் வசித்தேன். பருவ மாறுதல் குறித்து சர்வதேச அளவில் முதல் மாநாட்டை ஜெர்மனி நடத்தியது. பருவநிலை மாறுவதால் புவிவெப்பம் உயர்ந்து எதிர்காலத்தில் மக்கள் மிகவும் சிரமப்பட நேரும் என்று அப்போதே பிற நாடுகளை எச்சரித்தார் கோல். மெர்கெலைவிடக் கவர்ச்சி குறைவானவர் கோல். பழமைவாதி. சுதந்திரச் சந்தை வேண்டும் என்பவர். ஆனால், அவர் முற்போக்கான ஒரு விஷயத்தை வலியுறுத்தினார்.

அப்போது மேற்கத்திய நாடுகளின் பிற பகுதிகளில் வலதுசாரித் தலைவர்கள்தான் உயர் பதவியில் இருந்தனர். சுற்றுச்சூழலுக்கு நேரும் ஆபத்துகள் குறித்தோ அவற்றைப் போக்க வேண்டும் என்ற அக்கறையோ அவர்களுக்கு இல்லை. அமெரிக்காவில் அதிபர் ரொனால்டு ரீகன் அவருக்கு முன்னால் ஆட்சியில் இருந்த ஜனநாயகக் கட்சியினர் ஏற்படுத்தியிருந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அகற்றினார். இந்தியாவில் சுதந்திரச் சந்தை ஆதரவாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களைத் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தினர்.

ஜெர்மனியிலிருந்த பசுமைக் கட்சியின் பாதிப்பால்தான் ஹெல்முட் கோல் இந்தக் கருத்தை வலியுறுத்தினாரோ என்றுகூட முதலில் நினைத்தேன். ஆனால், கோல் தானாகவே இந்த நிலையை எடுத்திருக்கிறார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்கள் சோவியத் ஒன்றியத்தின் ஆதரவாளர்கள் என்று ரீகன் 1987-ல் குற்றஞ்சாட்டிய சமயத்திலேயே, பசுமைக்குடில்கள் வெளியேற்றும் நச்சுக் காற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஜெர்மனி நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசியிருக்கிறார் கோல்.

1995-ல் பெர்லினின் சுற்றுச்சூழல் காப்பு மாநாடு நடந்தபோது, அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார் ரீகன். ஜனநாயகக் கட்சியின் பில் கிளிண்டன் அதிபராக இருந்தார். அல் கோர் துணை அதிபராக இருந்தார். ‘எர்த் இன் தி பாலன்ஸ்’ (Earth in the Balance) என்று 1992-ல் புத்தகம் எழுதினார் அல் கோர். ரீகன் ஆட்சியில் நீக்கப்பட்ட, சுற்றுச்சூழல் காப்பு நடவடிக்கைகளை கிளிண்டன் மீண்டும் கொண்டுவந்தார். இருந்தாலும், உலக அளவில் சுற்றுச்சூழல் காப்புக்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்கவில்லை. காற்று மண்டலத்தில் நச்சு வாயு அதிகம் கலப்பதற்கு அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள்தான் காரணம். சுற்றுச்சூழலை அதிகம் கெடுக்கும் நாடுகள்தான் அதற்கேற்ப இழப்புகளை ஈடுகட்ட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். மேற்கு ஐரோப்பிய நாடுகள் தயாராக இருக்கின்றன. ஆனால், ஜனநாயகக் கட்சியின் தலைமையில்கூட அமெரிக்க அரசு அதற்குத் தயாரில்லை.

கியாட்டோ சர்வதேச மாநாடு

பருவ மாறுதல்கள் தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாடு ஜப்பானின் கியாட்டோ நகரில் 1997 டிசம்பரில் நடந்தது. இதன் பிறகு கியாட்டோ உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி எல்லா நாடுகளும் தாங்களாகவே சுயமாக வந்து கரிப்புகை வெளியீட்டைக் குறைத்துக்கொள்ள முன்வந்தன. அதில் முதலில் கையெழுத்திட்டது ஜெர்மனி. தனது பதவிக்காலத்தின் கடைசிக் கட்டத்தில் இருந்தார் ஹெல்முட் கோல். 2020-க்குள் தமது நாட்டின் கரிப்புகை வெளியீட்டை 20% அளவுக்குக் கட்டுப்படுத்துவோம் என்று உறுதியளித்தார். பிரான்ஸ், பிரிட்டன் உள்பட சில சிறிய ஐரோப்பிய நாடுகளும் அதேபோல உறுதியளித்தன. அமெரிக்கா உறுதிமொழி அளிக்க மறுத்துவிட்டது.

1997-98 வாக்கில் கரிப்புகையை அதிகம் வெளியிடுவது அமெரிக்காதான் என்று உலகுக்கே உறுதிபடத் தெரிந்துவிட்டது. அடுத்து வரும் காலங்களில் விரைவாகத் தொழில்வளர்ச்சி கண்ட சீனாவும் இந்தியாவும் முக்கியப் பங்கு வகித்தன. கியாட்டோ உடன்பாட்டை ஏற்க மறுத்த கிளிண்டன் - கோர் அமெரிக்க அரசு, கரிப்புகை வெளியீட்டைக் குறைப்பதில் தோல்வி கண்டது என்பதை மறுக்க முடியாது. அந்த உடன்பாட்டைத் தாங்களாகவே முன்வந்து ஏற்றதுடன், அதன்படி குறைத்த ஜெர்மனியும் பிற ஐரோப்பிய நாடுகளும் உலக நன்மையைக் காப்பதில் அக்கறையுடன் நடந்துகொண்டன. ஆனால், அமெரிக்காவையும் அவ்வாறு செயல்பட வைப்பதில் தோல்வி கண்டன. அமெரிக்கா மட்டும் அப்போது அதில் கையெழுத்திட்டிருந்தால் இந்தியாவும் சீனாவும் தங்களுடைய சூழல் மாசு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும். 1990-களில் அமெரிக்கா, சீனா, இந்தியா மூன்றும் கியாட்டோ உடன்பாட்டை ஏற்று கரிப்புகை வெளியீட்டைக் குறைத்திருந்தால் புவிவெப்ப நிலை இந்த அளவுக்கு உயர்ந்திருக்காது, நாடுகளுக்கும் மழைக் குறைவு, தண்ணீர் பற்றாக்குறையால் இப்போது ஏற்பட்டுவரும் பெருத்த இழப்புகள் ஏற்பட்டிருக்காது.

அல் கோர் சூழல் காவலர் அல்ல

அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த அல் கோரைச் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கச் செயல்பட்ட அரசியல் காவலர் என்பதைப் போலச் சித்தரிக்கின்றனர். உண்மையில் அவர் சந்தர்ப்பவாதி. கிளிண்டன் நிர்வாகத்தில் இருந்தபோது சுற்றுச்சூழலைக் காக்க அவர் எதையுமே செய்யவில்லை. 2000-ல் அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டபோது, சுற்றுச்சூழல் காப்பு குறித்து வெகு கவனமாகப் பேசாமல் தவிர்த்தார். தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் திடீரென சுற்றுச் சூழல் மீது அவருக்குப் பாசம் பீறிட்டது. பருவ மாறுதல்களால் ஏற்படப்போகும் ஆபத்துகள் குறித்து திரைப்படம் தயாரித்தார். அப்பட்டமான இந்த வெளிவேஷத்தை ஆஸ்லோவில் இருந்தவர்கள் நம்பி, அவருக்கு சமாதானத்துக்கான நோபல் விருதை வழங்கினர்.

1990-களில் சுற்றுச்சூழல் காப்பதில் ஹெல்முட் கோலுக்கு இருந்த உண்மையான அக்கறையும் அமெரிக்கர்களுக்கு இருந்த அலட்சியமும் ஒரு சேர வெளிப்பட்டது. இப்போது அகதிகள் மீது ஏஞ்செலா மெர்கெலுக்கு உள்ள உண்மையான பரிவு, பிரிட்டிஷ் பிரதமரிடம் இல்லாத மனிதாபிமானத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. மத்தியக் கிழக்கிலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் நிலவும் உள்நாட்டுப் போர் காரணமாகத்தான் லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக நாடுகளைவிட்டு வெளியேறுகின்றனர். பிரிட்டனும் பிரான்ஸும்தான் இதில் முக்கியக் குற்றவாளிகள்.

முதலாம் உலகப் போருக்குப் பிறகு இராக், சிரியா, ஜோர்டான், சவூதி அரேபியா போன்ற செயற்கையான மன்னராட்சி நாடுகளை அவர்கள்தான் உருவாக்கினர். அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இராக்கில் படையுடன் நுழைந்து சண்டையிட்டபோது, சவூதி அரேபியா கண்மூடித்தனமாக ஆதரித்தது. இந்தத் தவறுகளும் அப்போது நடந்த குற்றங்களும்தான் பல இயக்கங்களுக்கு வித்திட்டன. அவற்றை மதத் தீவிரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சமூகங்களைப் பிளவுபடுத்தினர்; கலாசாரச் சின்னங்களை அழித்தனர், நாடுகளையும் சமூகங்களையும் பெருத்த இன்னல்களில் ஆழ்த்தினர்.

மற்றவர்களால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்க்க ஜெர்மானியத் தலைவர்கள் அக்கறையுடன் முன்வருவது மிகவும் பாராட்டத்தக்கது. சுற்றுச்சூழல் கெட அமெரிக்காவின் தொழிற்சாலைகள்தான் அதிக காரணம் என்றாலும், கரிப்புகையைக் குறைக்க அது முன்வரவில்லை. ஆனால், ஜெர்மனி தன்னுடை நாட்டின் கரிப்புகை வெளிப்பாடு குறைவு என்றாலும் கரிப்புகை வெளியீட்டைக் குறைக்கத் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இஸ்லாமிய அரசு என்ற ஐ.எஸ். உருவாகக் காரணம் அமெரிக்காவும் பிரிட்டனும்தான். ஜெர்மனிக்கு இதில் பங்கேதும் இல்லை.

அமெரிக்கர்கள், அதிலும் அமெரிக்க அரசியல்வாதிகள் - மேலும் குறிப்பாக அமெரிக்க அதிபர்கள் மற்ற நாட்டினரைவிட தாங்கள்தான் மனிதாபிமானம் மிக்கவர்கள் என்று நினைத்துக்கொள்கின்றனர். உலகையே கட்டி ஆண்ட பேரரசாக இருந்த காலத்தில் பிரிட்டிஷ்காரர்களும் அதிலும் குறிப்பாகப் பிரதம மந்திரிகளும் உலகுக்கே வழிகாட்டக்கூடிய, நம்பகமான, சிறந்த தலைவர்கள் தாங்கள்தான் என்று இறுமாந்து இருந்தனர்.

ஜெர்மானிய அரசியல்வாதிகளால் தூண்டிவிடப்பட்ட உலகப் போர்களுக்கு மக்கள் எந்த விதத்திலும் பொறுப் பில்லை என்றாலும், அமெரிக்காவும் பிரிட்டனும் போரில் அவர்களைத் தோற்கடித்ததை இன்னமும் மறக்காமல் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆண்டுதோறும் டஜன் கணக்கில் புத்தகங்களை எழுதி வெளியிடுகின்றனர். அதில் பிரிட்டிஷ்காரர்களை நல்லவர்களாகவும் ஜெர்மானியர் களைக் கெட்டவர்களாகவும் சித்தரிக்கின்றனர்.

இந்தப் பழைய பிம்பங்களிலிருந்து நாம் கண்களை அகற்றியாக வேண்டும். ஹெல்முட் கோலும் ஏஞ்செலா மெர்கெலும் கைசல் வில்ஹெல்ம், அடால்ஃப் ஹிட்லரைப் போன்றவர்கள் அல்லர். அமெரிக்க, பிரிட்டிஷ் அரசியல் வாதிகள் இப்போது சுயநலமிகளாகவும் குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். மூன்று நாடுகளையும் ஓரளவுக்குத் தெரிந்து வைத்திருப் பவன் என்ற வகையில் கூறுகிறேன் ஜெர்மனியில் இருப்பதை விட அமெரிக்கா, பிரிட்டனில் இருக்கும்போது சுதந்திரமாக, வசதியாக இருப்பதாகவே உணர்கிறேன். ஜெர்மானிய அறிவுஜீவிகள் மிகவும் தீவிர சிந்தனையாளர்கள். வீதியில் சந்திக்கும் ஜெர்மானியர்கள் அடக்க சுபாவம் உள்ளவர்கள், சட்டென்று நண்பர்களாகிவிட மாட்டார்கள். ஆனால், ஜெர்மானிய அரசியல்வாதிகள் மிக நல்லவர்கள், உலக நலனில் அக்கறையுடன் செயல்படுகிறவர்கள். இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு ஹெல்முட் கோல், ஏஞ்செலா மெர்கல் போல எந்த அமெரிக்க, பிரிட்டிஷ் தலைவரும் பரந்த மனதுடன் செயல்பட்டிருக்கவில்லை.

தமிழில் சுருக்கமாக:சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x