Last Updated : 23 Jun, 2017 09:19 AM

 

Published : 23 Jun 2017 09:19 AM
Last Updated : 23 Jun 2017 09:19 AM

சென்னை வானொலிக்கு வயது 80

சென்னை அகில இந்திய வானொலி ஜூன் 16-ம் தேதியன்று 80-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள மற்ற அகில இந்திய வானொலிகளுக்கோ, தனியார் வானொலிகளுக்கோ இல்லாத சிறப்பு சென்னை வானொலிக்கு உண்டு. அங்கு, ஒரே வளாகத்திலிருந்து ஒரு சேர ஐந்து வெவ்வேறு ஒலிபரப்புகள் செய்யப்படுகின்றன. இவற்றைத் தவிர, வெளிநாட்டுத் தமிழ் நேயர்களுக்காக ‘திரைகடல் ஆடிவரும் தமிழ் நாதம்’(7270, 7380 கி.ஹெ) என்ற ஒலிபரப்பும் உண்டு.

திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளையின் மங்கள இசையோடு தொடங்கியது சென்னை வானொலியின் பயணம். முதலில் ஒலித்த பாடல் டி.கே.பட்டம்மாள் பாடியது. முதல் நாள் ஒலிபரப்பில், அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி பேசினார். அவரது பேச்சு இப்படித்தான் தொடங்கியது, “வெகு தூரத்தில் இருந்து பேசுகிறேன்… என்னவானாலும் எந்திரம் எந்திரம்தான். ஆகையால் குரலிலிருந்து பேசுகிறவன் யார் என்று சொல்லுவது உங்களுக்கும் கஷ்டம், நான்தான் ராஜாஜி. சென்னை வானொலி நிலையத்திலிருந்து பேசுகிறேன். நான் பழைய தினுசு மனிதன். வைதிக மனப்பான்மை, புது நாகரிகங்கள் அவ்வளவாகப் பிடிக்காது. அநாகரிகங்களுக்குள் பழைய அநாகரிகங்களே தேவலை என்று எண்ணுகிறவன். ஜனங்களுக்குப் பேசும் படங்களாலும், வானொலிப் பேச்சாலும் உபதேசங்கள் அவ்வளாக ஏறாது என்பது என் எண்ணம். ஆயினும் எதுவும் ஓரளவு பயன்படும் என்பதுவும் ஒரு புறமிருந்து கொண்டிருக்கிறது. ஆகையால், இந்த ரேடியோவுக்கு என்னுடைய பூரண ஆசியைத் தருகிறேன்” என்றார்.

இந்த உரை ஒரு விதத்தில் அவர் வானொலி மீது வைத்திருந்த மதிப்பீடாகவே உள்ளது. வானொலி அன்றைய காலகட்டத்தில் சாதித்தது மிக அதிகம். இன்றும் இந்த முதல் ஒலிபரப்பின் ஒலிக் கீற்றுகள் எல்லாம் டிஜிட்டல் தரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அப்போது சென்னையானது ஒருங்கிணைந்த மாகாணமாக இருந்ததால், முதல் அறிவிப்பானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் செய்யப்பட்டது. தமிழில் முதல் அறிவிப்பினை ஜி.எஸ்.விஜயராவ், கே.என்.எஸ்.சர்மா மற்றும் டி.துரைராஜ் ஆகியோர் செய்தனர். சென்னை வானொலிக்கு அதன் அறிவிப்பாளர்கள்தான் பெரும் பலம். அந்தக் காலத்தில் நேயர்கள் யார் சென்னைக்குச் சுற்றுலா வந்தாலும் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கத்துக்கு எதிரே இருக்கும் சென்னை வானொலியைப் பார்க்காமல் போக மாட்டார்கள். இன்றும்கூட வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்களைக் காண வேண்டி தமிழகத்தின் பல ஊர்களிலிருந்தும் நேயர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

சென்னை வானொலி நிலையத்துக்குப் பெரும் தூண்களாக இருந்தவர்கள் அதன் இயக்குநர்கள். ஒவ்வொருவரின் காலகட்டத்திலும் சென்னை வானொலி நிலையமானது, ஒரு புது முயற்சியைச் செய்தது. குறிப்பாக, விக்டர் பரஞ்சோதி, எஸ்.கோபாலன், ஜி.டி.சாஸ்திரி, எஸ்.என்.மூர்த்தி, டாக்டர். வி.கே.நாராயணன் மேனன், எஸ்.வி.நடராஜன், பி.வி.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.எ.தாக்கூர், எம்.எஸ்.கோபால், எஸ்.கந்தசாமி (துறைவன்), ஏ.சத்தியபாமா, இ.கோவிந்தராஜுலு, ஆர்.என்.நாயர், ஜி.சுப்பிரமணியன், கோ.செல்வம், எஸ்.வேணுகோபால் ரெட்டி, விஜய திருவேங்கடம், பா.ரா.குமார்,

ஸ்ரீநிவாச ராகவன், கா.பொ.சீனிவாசன் மற்றும் சக்ரவர்த்தி (பொறுப்பு) ஆகியோரின் காலகட்டத்தில் வானொலி பல சாதனைகளைச் செய்தது.

சென்னை வானொலியில் அறிஞர்கள் பலரும் இருந்துள்ளனர். குறிப்பாக, சாகித்திய அகாடமி வழங்கும் ‘ஞானபீட விருது’ பெற்ற எழுத்தாளர் அகிலன் இந்த வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் முதன்மையானவர். தமிழ்ப் பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தன், மீ.ப.சோமு ஆகியோரும் சென்னை வானொலியின் தயாரிப்பாளர்களாக இருந்தவர்களே.

நேரடி ஒலிபரப்பு

தொடக்க காலத்தில் சென்னை வானொலியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாகவே ஒலிபரப்பப்பட்டன. காரணம், அன்றைய காலகட்டத்தில் ஒலிப்பதிவுக் கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சவால் நிறைந்த அந்தப் பணியை நேயர்களுக்கு மகிழ்வூட்டும் வண்ணம் திறம்படத் தயாரித்தனர், அன்றைய நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள்.

சென்னை வானொலியில் ஒலிபரப்பாகிய நாடகங்கள் நேயர்கள் மத்தியில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, நடிகை மனோரமா நடித்த ‘காப்புக்கட்டிச் சத்திரம்’, ‘துபாஷ் வீடு’, ‘ஜனதா நகர் காலனி’ஆகிய தொடர்கள் நேயர்களின் வரவேற்பைப் பெற்றவை. சென்னை வானொலிக்கு நேயர் மன்றங்கள் பலவும் இருந்தன. அவர்கள் ஒன்றிணைந்து வருடந்தோறும் நேயர் சந்திப்புகளை நடத்தினர். குறிப்பாக, ‘வானொலி நேயர் வட்டம்’ என்ற அமைப்பானது ஒவ்வொரு மாதமும் மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் கூடி, சென்னை வானொலிக்காகத் தனி இதழ், நாள்காட்டி மற்றும் சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்தார்கள்.

அறிவியல் நிகழ்ச்சிகளிலும் பல புதுமைகள் புகுத்தப்பட்டன. 1983 மே 17-ல் உலகத் தொலைத் தொடர்பு நாளை சென்னை வானொலி வித்தியாசமாகக் கொண்டாடியது. விமானத்தில் பறக்கும் ஒருவர், ரயிலில் பயணம் செய்யும் ஒருவர், கடலில் கப்பலில் பயணம் செய்யும் ஒருவர் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் ஒருவர் என்று நால்வரிடமும் ஒரே நேரத்தில் நேரலையில் கலந்துரையாடியது. இதில் முக்கியமான விஷயம், அவர்கள் அனைவரையும் வயர்லெஸ் கருவியில் தொடர்புகொண்டு ஒலிபரப்பியது. மொபைல்கள் இல்லாத அந்தக் காலத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அந்த நிகழ்ச்சியைத் தயாரித்தது டாக்டர் ஸ்ரீதர்.

‘வானொலி’க்காகத் தனி இதழ்

சென்னை வானொலியே ஒரு இதழையும் நடத்தியது. ‘வானொலி’ என்ற பெயரில் இருவார இதழாக அது வெளிவந்தது. அன்றைய காலகட்டத்தில் அனைத்து செய்தித்தாள் கடைகளையும் இது அலங்கரித்தது. அகில இந்திய வானொலி ஒலிபரப்பும் நிகழ்ச்சி விவரங்களைப் பார்ப்பதற்கே பலர் அதனை வாங்கினர்.

சென்னை வானொலி, இன்றும் தனது நேயர்களுக்குப் பல்வேறு வகைகளில் சேவையாற்றி வருகிறது. குறிப்பாக, இயற்கை இடர்பாடுகளின்போது. ஒவ்வொரு டிசம்பரிலும் நாம் ஏதேனும் ஒரு வகையில் மழை, புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிப்படைந்து வருகிறோம். அந்த நேரத்தில், தடையில்லாமல் தனது சேவையை நேயர்களுக்குச் செய்த ஒரே வானொலி சென்னை வானொலிதான்.

- தங்க.ஜெய்சக்திவேல்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x