Published : 30 Mar 2015 09:22 AM
Last Updated : 30 Mar 2015 09:22 AM

குர்துகளின் வீரப் போர்

குர்துகள் தாய்நாட்டுப் பற்றும் மதப்பற்றும் நிறைந்தவர்கள், கட்டுக்கோப்பானவர்கள், கண்ணியமிக்கவர்கள்.

சிரியாவின் பெரும் பகுதியை ஐ.எஸ். அமைப்பு தான் இன்னமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இராக்கில் அதன் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டது. ஷியா படைகளும் ஈரானியத் தோழமைப் படைகளும் கடுமையாக எதிர்த்துப் போரிடும் அதே வேளையில், 640 கிலோ மீட்டர் எல்லை நெடுகிலும் குர்துகள் நவீன ஆயுதங்களும் பெரிய உதவிகளும் இல்லாமல் வீரத்துடன் போரிட்டு வருகிறார்கள்.

உலகின் மிகப் பெரிய ‘நாடற்ற இனத்தவர்கள்’ என்று அழைக்கப்படும் குர்துகளின் தீரத்தையும் உறுதியையும் நேரில் பார்த்த பிறகாவது அமெரிக்கா தன்னுடைய உத்தியை நிச்சயம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

சில வாரங்களுக்கு முன்பு சதாம் உசைனின் சொந்த ஊரும் சன்னிகளின் கோட்டையுமான திக்ரித், இராக்கைச் சேர்ந்த ஷியா படையிடம் வீழ்ந்தது. ஈரானின் ஆதரவு அப்படைகளுக்கு இருக்கிறது. இராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான மோசுல், குர்துகள் வசமாகும் நிலையில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் ஐ.எஸ். நுழைவதற்கு முன்னால் குர்துகள் அதிக எண்ணிக்கையில் வசித்த மோசுல் நகரின் கிழக்குப் பகுதிக்குள் நுழையப் படைகள் தயாராகிவிட்டன. ஷியா ஆட்சியின் குறைகள் காரணமாகத்தான் சன்னிகள் ஐ.எஸ்.ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பதை குர்துகள் சுட்டிக்காட்டுகின்றனர். இஸ்லாமியப் படைகளுக்கு இணையான உணர்வோடு அவர்களை எதிர்க்கின்றனர் குர்துகள்.

கொன்றுவிடுவார்கள்

கடந்த வாரம் கிர்குக் நகரில் குர்துகளையும் ஐ.எஸ். படைகளையும் குறுகிய ஒரு வாய்க்கால்தான் பிரித்தது. அங்கே பிடிபட்ட மூன்று இஸ்லாமியப் படையினருடனும் அவர்களைக் கைதுசெய்த குர்து போலீஸ் படைத் தலைவர் ஜெனரல் சராத் காதிர், அவரது துணை அதிகாரி கர்னல் காஜி அலி ரஷீத் ஆகியோருடனும் பேசினோம்.

அந்தச் சண்டையில் தன்னுடைய சகோதரனை இழந்திருந்தார் காதிர். சன்னிகளுடனான சண்டைகளில் 14 முறை காயம் அடைந்திருக்கிறார். சமீபத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் பலத்த காயம் அடைந்திருக்கிறார். ஐ.எஸ். படையினர் காதிரின் சகோதரரையும் தாங்கள் கைப்பற்றிய இதர கைதிகளையும் ஒரு கூண்டில் அடைத்து வண்டியில் ஏற்றி நகரில் அனைவரும் பார்க்கும்படி இழுத்துச் சென்றனர். என்னுடைய சகோதரனை விடுதலை செய்ய மாட்டார்கள், கொன்றுவிடுவார்கள் என்று தெரியும் என்கிறார் காதிர்.

பிடிபடும் ஐ.எஸ். கைதிகளும் உடனுக்குடன் கொல்லப்படுகின்றனர். பிடிபட்ட மூன்று இளம் கைதிகளுக்கும் சுமார் 20 வயதுதான் இருக்கும். மூவருக்கும் திருமணமாகி இளம் மனைவியரும் குழந்தைகளும் இருக்கின்றனர். மூவரும் ஆரம்பப் பள்ளியைக்கூடத் தாண்டவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக இராக்கில் வளர்ந்துள்ளனர். அடிக்கடி நடந்த கெரில்லா சண்டை காரணமாக வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையோ விருப்பமோ அவர்களுக்கு இல்லை. ஈரானையும் ஷியாக்களையும் தங்களுடைய மிகப் பெரிய எதிரிகளாகக் கருதுகின்றனர். அரபு சன்னிகளை அமெரிக்காதான் அடக்கி ஒடுக்கியது என்று கருதுகின்றனர்.

இஸ்லாம் என்றால் என்ன?

‘இஸ்லாம் என்றால் என்ன?’ என்று கேட்டபோது மூவரும், ‘எங்களுடைய உயிர்’ என்று பதில் அளித்தனர். ஆயினும், திருக்குரான் பற்றியும் இஸ்லாமிய வரலாறுகுறித்தும் அவர்களுக்கு அதிகம் தெரியவில்லை என்பது புரிந்தது. அல்-காய்தாவும் ஐ.எஸ்.ஸின் பிரச்சாரகர்களும் சொன்னதைத் தவிர அதிகம் தெரியவில்லை. மதவழிப்பட்ட அரசியல் ஆட்சிக்கு உதவ வேண்டும், நம்முடைய மார்க்கத்தில் நம்பிக்கையில்லாதவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்று மட்டுமே அவர்களுக்குப் புகட்டியுள்ளனர்.

குர்துகள் தாய்நாட்டுப் பற்றும் மதப்பற்றும் நிறைந்தவர்கள். அவர்களுடைய மதப்பற்று பாரம்பரிய மானது, கட்டுக்கோப்பானது, கண்ணியமிக்கது. அவர்கள் யஜீதுகள், கிறிஸ்தவர்கள், அரபு சன்னிகள் என்று எல்லோரையும் ஐ.எஸ். தாக்குதலிலிருந்து காப்பாற்றிவருகின்றனர். மிகக் குறைவான ஆயுதங்கள் தளவாடங்கள் உதவியோடு மிகப் பெரிய எல்லையை அவர்கள் தற்காத்துவருகின்றனர். மஹ்மௌர் நகருக்கு அருகில் ஜனவரி 30-ம் தேதி அதிகாலை பனிப்படலம் சூழ்ந்திருந்த வேளையில், ஐ.எஸ். படையினர் திடீரெனத் தாக்கி குர்துகளில் 7 பேரைக் கொன்றார்கள். குர்துகள் உடனே தயாராகிப் பதில் தாக்குதலில் இறங்கினார்கள்.

அமெரிக்காவின் அனுமதி

பெரிய பீரங்கிகளை நீண்ட தொலைவு ஓட்டி வந்தால் தாக்கப்படுவோம் என்பதால், குர்துகளின் படைகளுக்கு அருகே ரகசியமாக வரும் ஐ.எஸ். படையினர் தங்களுடைய கவச வாகனங்களைத் திடீரென ஓட்டிவந்து தாக்கி, சேதம் ஏற்படுத்துகிறார்கள். அதைத் துப்பாக்கிகளாலோ கையெறி குண்டுகளாலோ தடுக்க முடிவதில்லை. இவ்வளவுக்குப் பிறகும் குர்துகள் தங்களிடம் ஒவ்வொரு முறையும் அனுமதி வாங்கிக்கொண்டுதான் போர் செய்ய வேண்டும் என்று அமெரிக்கா பிடிவாதம்காட்டுகிறது.

ஐ.எஸ். படைகள் களத்தில் விட்டு வெளியேறத் தயாரில்லை. இறந்த வீரர்களின் உடல்களையே மனித குண்டுகளைப் போலப் பயன்படுத்துகின்றனர். இதற்காகவே இறந்தவர்களின் சடலங்களை மீட்க உயிரையும் பணயம் வைக்கின்றனர். மத நம்பிக்கை யுடனும் துணிச்சலுடனும் செயல்படுவதால், அவர் களை எமிர்கள் என்று ஐ.எஸ். ஆதரவாளர்கள் அழைக் கின்றனர். மேற்கத்திய நாடுகளிலிருந்து வரும் ஐ.எஸ். ஆதரவாளர்கள்தான் தற்கொலைப்படையாகச் செயல் படுகின்றனர்.

வடஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து வருகிறவர்கள், செசன்யா, உஸ்பெகிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்து வருகிற வர்கள் தொழில்முறை ராணுவத்தினரைப் போலவே கடுமையாகச் சண்டையிடுகின்றனர். போர்க் களத்திலிருந்து பின்வாங்கும் ஐ.எஸ். வீரர்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. எனவே, படுகாயமடைந்தால் தாய்நாடு திரும்புகிறார்கள் அல்லது தலைமை அனுமதித்தால் வீட்டுக்குப் போகிறார்கள்.

குர்துகளிடம் சிக்கிவிட்ட உள்ளூர் ஐ.எஸ். வீரர் ஒருவர், “என்னுடைய சகோதரனைக் கொன்றுவிட்டீர்கள், என்னைச் சுற்றிவளைத்துவிட்டீர்களே, உடலை எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாதா?” என்று கேட்கிறார். “ரொம்ப நல்லது, உன்னுடைய சகோதரனுடன் நீயும் சொர்க்கத்தில் சேர்ந்துகொள்வாய்” என்று குர்துகள் கோபமாக அவருக்குப் பதில் அளிக்கின்றனர்.

“சரி, இந்த முறை மண்ணில் என்னை வாழ அனுமதியுங்கள், சொர்க்கத்தை அப்புறம் பார்த்துக் கொள்கிறேன்” என்கிறார் அவரும் விடாமல்!

மூன்று மகன்களைப் பெற்ற ஒருவரை மறித்து, “உங்கள் மகன்களில் ஒருவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள், இல்லாவிட்டால் உங்கள் பெண்ணை எங்களுடைய படையினருக்கு மணப்பெண்ணாக எடுத்துச் செல்கிறோம்” என்று பேரம் பேசுகின்றனர்.

15 வயதுப் பெண்ணை ஐ.எஸ். வீரர்களிடமிருந்து மீட்டுள்ளனர். அவர் கண்ணீர் மல்கக் கூறுகிறார், “ஒரே நாளில் என்னை அடுத்தடுத்து 15 பேருக்குத் திருமணம் செய்து வைத்து, விவாகரத்து செய்ய வைத்து பாலியல் ரீதியாக என்னைச் சித்தரவதை செய்தார்கள்” என்று.

இந்தக் கொடூரங்களைக் கேட்ட பலர், ஐ.எஸ். படைகளை ஆதரிப்பதை விட்டுவிட்டு, அரபு சன்னி களையும் குர்துகளையும் ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். அரசியல், பொருளாதார, ராணுவ விவகாரங்களில் தங்களுக்குச் சுயாதிகாரம் கொடுத்தால் இராக்கியக் கூட்டமைப்பில் இணைந்து செயல்படத் தயார் என்கின்றனர் குர்து தலைவர்கள். அமெரிக்கா ஆதரவு தரத் தவறினால், குர்துகள் தாங்களாகவே சுயாட்சி அறிவிப்பார்கள். ஆனால், அதை துருக்கி, ஈரான், சிரியா ஆகியவை கூட்டாகத் தடுக்கும். தங்கள் பகுதியில் உள்ள குர்துகள் அவர்களுடன் சேர்ந்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகக் குர்துகளை அடக்க முற்படு வார்கள். குர்துகளின் வீரம் ஐ.எஸ். படைகளை வெற்றி கொள்வதற்கு அமெரிக்கா ஆதரவு தர வேண்டும்.

- ஸ்காட் அட்ரான், மானுடவியல் நிபுணர். டக்ளஸ் எம்.ஸ்டோன், அமெரிக்கக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்.

| ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி. |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x