Published : 26 Nov 2015 09:09 AM
Last Updated : 26 Nov 2015 09:09 AM

களத்தில் தி இந்து: "நல்லா இருக்கணும்யா!"

உதவும் கரங்கள் ஒன்றுசேர்கின்றன!

கடலூர் மாவட்ட சகோதரர்களுக்கான ‘தி இந்து’ வாசகர்களின் உதவிகள் உற்சாகம் அளிக்கும் வகையில் தொடர்கின்றன.

சென்னை:

நேற்று ‘தி இந்து’வுக்கு ‘இந்தியராய் இணைவோம்’ யோசனை அனுப்பியிருந்தார் அல்லவா வாசகர் ராஜகோபால், அவர் தன் ‘வாட்ஸ் அப்’ நண்பர்களுடன் சேர்த்து ரூ. 50,000 மதிப்பிலான 140 மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்களை கே.பி.என். அலுவலகம் மூலம் அனுப்பினார். “இது முதல் தவணைதான். ஆளுக்குப் பத்து, இருபதுன்னு ஸ்டவ்க்கான பொறுப்பைத் தொடர்ந்து நண்பர்கள் ஏத்துக்கிட்டிருக்காங்க. அடுத்த ஓரிரு நாள்ல இன்னும் இருநூறு, முந்நூறு ஸ்டவ்களை அனுப்புவோம். இது மாதிரி தொடர்ந்து ‘தி இந்து’ சுட்டிக்காட்டுற விஷயங்களுக்கு உதவுறதுக்காகவே ‘ஸ்பார்க் 350’னு ஒரு குரூப்பை உருவாக்கிட்டோம்’” என்றார். வாசகர்கள் கே.மணி, ஏ.ராஜசேகரன் மற்றும் ‘ஓம் முருகா நிறுவனம்’ மூலம் போர்வைகள், பாய்கள் மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை உஸ்மான் சாலை ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் சார்பில் ஜி.ராஜேந்திரன் 200 போர்வைகளை அனுப்பியிருந்தார்.

வேலூர்:

வேலூர் யுவராஜ் 6 பாய்கள், 6 போர்வைகளை அனுப் பினார். காட்பாடியைச் சேர்ந்த ஜி. ஜெயந்தி, வேலப்பாடி ஜோதி மருத்துவமனை மருத்துவர் ஜெ. சரவணன், வாணியம்பாடி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வி. மகாதேவன், கணியம்பாடி டி.ரகுநாதன் ஆகியோர் போர்வைகள், பாய்களை அனுப்பினர். சரஸ்வதி ராமகிருஷ்ணன் ஸ்டவ் அனுப்பியிருக்கிறார். வாணியம்பாடி ‘சரவணா ஹார்டுவேர்ஸ்’ உரிமையாளர் சரவணன் 7 ஸ்டவ்களை அனுப்பினார். திருவண்ணாமலை காந்திய மக்கள் இயக்கம் சார்பில் 100 பாய்கள் மற்றும் 5 ஸ்டவ்களை அனுப்பினார்கள். விழுப்புரம் சுப்பராயலு போர்வைகளையும் புதுச்சேரி விஜயரங்கன் மண்ணெண்ணெய் ஸ்டவ்களையும் வழங்கினார்கள்.

கோவை:

ஈரோடு எஸ்.கே.எம். நிறுவனங்களின் சார்பில் அதன் தலைவர் மயிலானந்தம் ரூ.1 லட்சம் மதிப்பிலான 700 போர்வை களை அனுப்பினார். “நம்ம பேப்பர் மூலமா ஒரு நல்ல காரியம் நடக்குறப்ப அதுல நம்ம பங்கு இருக்கணும்; தயவுசெஞ்சு பேரெல்லாம் போடாதீங்க” என்றவர், “இதுபோன்ற செய்திகள் வெளியாகும்போதுதான் வெளியே இன்னும் நான்கு பேருக்கு உதவும் உத்வேகம் வரும்” என்று சொன்னதைத் தொடர்ந்து பெயரை வெளியிட சம்மதித்தார். “இது முதல்கட்ட உதவிதான்; தொடர்ந்து செய்வோம்” என்றார். விஜயமங்கலத்தை அடுத்த சரளை பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தலைவர் பி.வி. செந்தில்குமார், நிறுவனர் மோகனாம்பாள் மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து ரூ.50,000 மதிப்புள்ள 200 போர்வைகளை அனுப்பிவைத்தனர்.

சடையம்பாளையம் திருப்பதி கார்டனைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பாபு மற்றும் அவரது நண்பர் சிவக்குமார் மண்ணெண்ணெய் ஸ்டவ்களை அனுப்பினர். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் பேரன் மு.நா.பா. தமிழ்வாணன் - தமிழ்செல்வி தம்பதி நடத்திவரும் திருக்குறள் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் அனுப்பப்பட்ட 10 மண்ணெண்ணெய் ஸ்டவ்கள் வந்து சேர்ந்திருக்கின்றன.

மதுரை:

மதுரை மகளிர் தொண்டு நிறுவனம் 70 போர்வைகளை அனுப்பியிருக்கிறது. ‘சிவகாசி ரோட்டரி சங்கம்’ தரப்பிலிருந்தும் கணேஷ்பாண்டி, ராஜகோபாலன், மல்லிகா, செல்வராஜ், சத்தியமூர்த்தி, ராதாகணேஷ், ராகவன், ராமையா, ரமேஷ்பாபு, வீரப்பன், முருகானந்தம் ஆகியோரிடமிருந்து ஸ்டவ், பாய், போர்வைகள் மற்றும் துண்டுகள் வந்து சேர்ந்திருக்கின்றன.

திருச்சி:

திருச்சியைச் சேர்ந்த நன்மாறன், சஞ்சீவிகுமார் ஆகியோரும் விஷன் டெக்னாலஜி நிறுவனமும் ஸ்டவ், பாய், போர்வைகளை அனுப்பியிருக்கிறார்கள். தஞ்சாவூர் ரயில்வே டிடிஆர் வி.புண்ணிய மூர்த்தியி டமிருந்து 10 பாய்கள், 10 போர்வைகள், 5 ஸ்டவ்கள் வந்திருக் கின்றன. சரவணகுமார், ஆர். ரமணன் ஆகியோரிடமிருந்து போர்வைகள், ஸ்டவ்கள் வந்திருக்கின்றன. கரூர் வைஸ்யா வங்கி கரூர் மத்திய கிளை ஊழியர்கள் 9 ஸ்டவ்களை அனுப்பியிருக்கிறார்கள். கும்பகோணம் முருகன் டீ ஸ்டால் ஆர். நடராஜன் பிரதர்ஸ், பிரித்தீஸ் மற்றும் குடும்பத்தினர், வாசகர் விஜயகுமார் ஆகியோரிடமிருந்து ஸ்டவ்கள், போர்வைகள், புடவைகள் வந்திருக்கின்றன.

நாகப்பட்டினம் மதுசூதனன், மயிலாடுதுறை சி.டி. ராதாகிருஷ்ணன், மயிலாடுதுறை அரசுப் போக்கு வரத்துக்கழக ஊழியர் சுமதி ரமேஷ் மற்றும் நிவேதா ஹார்டுவேஸ் நிறுவனம் சார்பில் ஸ்டவ்கள், பாய்கள், போர்வைகள், ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம்:

சேலம் டிரக்கர்ஸ் கிளப் சார்பில் 110 பெட்ஷீட், 15 செட் வேட்டி-துண்டு, 10 புடவைகள் வழங்கப்பட்டுள்ளன. சேலம் நெய்க்காரப்பட்டி வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில் வேட்டி-துண்டு 10 செட், ஸ்வெட்டர் 2, தட்டு 11, பாய் 3 மற்றும் ஒரு புடவை வழங்கப்பட்டுள்ளன. வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி பம்ப் ஸ்டவ் அனுப்பியிருக்கிறார். சின்னாகவுண்டாபுரம் சிதம்பரம் பெட்ஷீட், பாய், ஸ்டவ் ஆகியவற்றையும், திலகவதி, ஆறுமுகம் ஆகியோர் சில நிவாரணப் பொருட்களையும் வழங்கி உள்ளனர்.

ஓசூர் டைட்டான் பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர்கள், பிற மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து 299 கிலோ கோதுமை, 262 கிலோ அரிசி, 14 கிலோ மைதா, பருப்பு வகைகள் 155 கிலோ என மொத்தம் 830 கிலோ உணவுப் பொருட்கள் சேகரித்திருக்கின்றனர். பள்ளி முதல்வர் சஜிதாபாரதி மற்றும் மாணவர்கள் சேர்ந்து ஒசூர் கே.பி.என். கிளை அலுவலகத்தில் அப்பொருட்களை ஒப்படைத்தனர்.

காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசியர் ஜெயராமன் - சுப்புலட்சுமி தம்பதியினர், மோகனா, வெங்கட்ராமன், ராமமூர்த்தி, ராஜேந்திரன், கோபி ஆகியோரிடமிருந்து பாய்கள், போர்வைகள் அடங்கிய பெட்டி வந்தது. ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி தேவராஜன் போர்வைகளை அனுப்பியிருக்கிறார்.

திருநெல்வேலி:

பாளையங்கோட்டையைச் சேர்ந்த சகாய ஆன்றோ மற்றும் நண்பர்கள் 13 ஸ்டவ் வழங்கியிருக்கிறார்கள். தூத்துக்குடி டீம் கார்கோ நிறுவனம், ராஜா ஏஜென்சி, வி.கே.எஸ். லாஜிஸ்டிக் ஆகியவை ஸ்டவ்கள், பாய்கள், போர்வைகளை அனுப்பியிருக்கின்றன. மில்லர்புரம் பேராசிரியை இரா. சாந்தகுமாரி ஸ்டவ் வழங்கினார்.

“நல்லா இருக்கணும்யா!”

நேற்றைய தினம் காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள மடப்புரம், வெங்கடேசபுரம், சப்பானிக்குட்டை ஆகிய ஊர்களில் ‘தி இந்து’ வாசகர்கள் அளித்த உதவிகள் அளிக்கப்பட்டன. நேற்றைய விநியோகப் பணியில் நம்முடைய குழுவுடன் வாசகர்கள் சார்பில் ஜி.கே. கல்விக் குழுமப் பள்ளித் தாளாளர் குமாரராஜா இந்தப் பணியில் இணைந்துகொண்டார். “எங்களோட தேவை அறிஞ்ச உதவியோட வந்திருக்கீங்கய்யா. உங்க வாசகர்களுக்கு ரொம்ப நன்றியைத் தெரிவிங்கய்யா. அவங்க நல்லா இருக்கணும்யா!” என்றனர் கிராமவாசிகள்.

உதவிகள் தொடரட்டும், இணைந்த கைகள் ஆறுதல் தரட்டும்!

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x