Published : 28 Nov 2014 10:36 AM
Last Updated : 28 Nov 2014 10:36 AM

மெல்லத் தமிழன் இனி... 35 - கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய்: மது நோய்களின் உச்சம்!

மது தொடர்பான நிறைய நோய்களைப் பார்த்தோம். அந்த நோய்களுக்கெல்லாம் உச்சம் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் (Liver cirrhosis). உயிருக்கே உலை வைக்கும் நோய். இதய மாற்று அறுவைச் சிகிச்சையெல்லாம் சாதாரணமாகிவிட்ட மருத்துவத் துறையில், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை சவாலானது; மிகவும் சிக்கலானது; அதிகம் செலவு பிடிக்கக்கூடியது. சிகிச்சை வெற்றியடைய 10% மட்டுமே வாய்ப்பு கொண்டது.

ராமதாஸின் எச்சரிக்கை மணி!

சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அந்த நோய் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை தமிழக அரசுக்கு மட்டுமல்ல, குடிநோயாளிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. சாதாரண எச்சரிக்கை அல்ல, உயிரைக் காக்கச் சொல்லும் அபாய எச்சரிக்கை. மருத்துவர் ராமதாஸ் அதில் சொல்லியிருக்கும் கருத்துக்கள் கவனத்துக்குரியவை. தமிழகத்தில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோய் கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதிலும், தமிழகத்தில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர் அந்த நோயால் உயிரிழக்கிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரியது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலுள்ள கல்லீரல் சிகிச்சைத் துறை புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இல்லை. இங்கு, கல்லீரல் பாதிப்புடன் ஆண்டுக்கு 3,650 பேர் வருகின்றனர். இவர்களில் சுமார் 2,200 பேர் மதுப் பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள். அப்படியெனில், மதுவினால் வரும் இன்ன பிற நோய்களால் உயிரிழப்பவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழப்பவர்கள், வன்முறையில் உயிரிழப்பவர்கள் என மொத்தமாக மதுவினால் உயிரிழப்பவர்களைக் கணக்கிட்டால், ஆண்டுக்கு ஐந்து லட்சத்தையும் தாண்டிச் செல்லும் அந்த எண்ணிக்கை. நம் நாட்டின் மாபெரும் வளமே மனித சக்திதானே. அதை இழந்துவிட்டு எதை சாதிக்கப்போகிறோம் நாம்?

வெளியே தெரியாத ஆபத்து!

ஒருவர் சுமார் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மது அருந்தினால் கொஞ்சமாகவோ அதிகமாகவோ நிச்சயம் இந்த நோய் இருந்தே தீரும். மற்ற நோய்களைப் போல உடனே அறிகுறிகள் தெரியாது. கல்லீரல் 80% சேதமடையும்போது

தான் வெளியே தெரியும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் உறுப்புகளில் தலையாயது கல்லீரல். செரிமானத்துக்குத் தேவையான பித்த நீரை உற்பத்தி செய்வதும் கல்லீரலே. நாம் உண்ணும் மருந்துகளை செரிமானம் செய்து, மருந்துகளின் பலனை மற்ற உறுப்புகளுக்கு அளிப்பது கல்லீரலே. காயம் பட்டு ரத்தம் வெளியேறினால் அங்கு ரத்தத்தை உறையச் செய்யும் புரோட்டீன்களை உற்பத்தி செய்வதும் கல்லீரலே. எல்லாவற்றுக்கும் மேலாக இனப்பெருக்கத்துக்குத் தேவையான ஆண் தன்மைக்கான ‘டெஸ்டோஸ்டிரன்’(Testosterone), பெண் தன்மைக்கான ‘ஈஸ்ட்ரோஜன்’ (Estrogen) ஹார்மோன்களை உற்பத்தி செய்வதே கல்லீரல்தான்.

சரி, மது அருந்துவதால் கல்லீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? ஒரு லார்ஜ் அளவான 60 மில்லி லிட்டர் மதுவை ஒருவர் அருந்தும்போது, அதைச் செரிமானம் செய்ய கல்லீரலுக்கு ஒரு மணி நேரம் ஆகிறது. ஆனால், ஒருவர் அதிக அளவு தொடர்ந்து மது அருந்தும்போது அதன் வீரியம் கல்லீரலைக் கடுமையாகத் தாக்குகிறது. அதனால், கல்லீரல் தனது கடமைகளைச் செய்ய முடியாமல் பாதிப்படைகிறது. நோயின் முதல் கட்டமாக கல்லீரல் லேசாக வீங்கத் தொடங்குகிறது. இதன் பெயர் ‘ஃபேட்டி லிவர்’(Fatty liver). நோயின் அறிகுறி வெளியே கொஞ்சமும் தெரியாது.

தொடர்ந்து மது அருந்தினால் கல்லீரல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கத் தொடங்கும். இது இரண்டாம் கட்டம். சுருங்கும் கல்லீரல் மீது படிப்படியாகக் கொப்புளங்கள் உருவாகும். காற்றடைத்த பலூன் போல இயல்புக்கு மாறாக வயிறு வீங்கும். ரத்தம் சுத்திகரிப்பு ஆகாததால் வயிற்றுக்குள் கெட்ட நீர் ஐந்து லிட்டர் வரை சுரக்கும். வயிற்றுக்குள் பெரிய ஊசியைச் செலுத்தி இந்த நீரை மருத்துவர்கள் அகற்றுவார்கள். தவிர கை, கால்களிலும் நீர் கோத்துக்கொண்டு, யானைக்கால் நோயாளிபோலத் தோற்றம் அளிப்பார்கள். தலை உட்பட உடலின் மொத்த முடிகளும் கொட்டிவிடும். டெஸ்டோஸ்டிரன்/ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் சுரக்காது. ஆண்மை/பெண்மை அத்தனையும் காலி. சிறு காயம் ஏற்பட்டால் கூடப் பெரும் ஆபத்து, ரத்தம் நிற்காது.

உணவுக் குழாய் பாதிப்பது நோயின் மூன்றாம் கட்டம். உணவுக் குழாயின் உட்புறச் சுவர்களின் ரத்த நாளங்கள் சிவப்பேறி, வீங்கிப் புடைத்துக்கொண்டிருக்கும். இதன் பெயர் ‘ஈஸோஃபஜியல் வெரிசீஸ்’ (Esophageal varices). ரத்த வாந்தி எடுப்பார்கள். கண்கள், முகம், உடல், கை, கால்கள் எல்லாம் மஞ்சள் பூக்கும். மற்ற உடல் உறுப்புகள் அளவுக்கு மூளையைக் கிருமிகள் பாதிப்பதில்லை. அது மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதி. ஆனால், அங்கும் உடலில் தேங்கிய நச்சு நீர் ஊடுருவும். தலைக்குள் தாங்க இயலாத கடுமையான வலி ஏற்படும். நோயாளி வெறி பிடித்ததுபோலக் கத்திக் கதறுவார். உடனடியாகச் சிகிச்சை அளிக்கவில்லையென்றால், கோமா நிலைக்குச் சென்று இறக்கவும் வாய்ப்பிருக்கிறது.

(தெளிவோம்)

- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x