Last Updated : 03 Jul, 2015 10:45 AM

 

Published : 03 Jul 2015 10:45 AM
Last Updated : 03 Jul 2015 10:45 AM

கருப்பு நாளில் ஒரு வேலைநிறுத்தப் போராட்டம்!

நெருக்கடிநிலை பிரகடனம் செய்யப்பட்ட ஒரு மாதத்துக்குள் நாடாளுமன்றக் கூட்டம் நடந்தது. அப்போது ( 21, ஜூலை, 1975 ) மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி-யான ஏ.கே. கோபாலன், பிரதமர் இந்திரா காந்தியின் முகத்துக்கு நேராகக் குற்றம்சாட்டினார்.

“எங்கள் கட்சித் தோழர்கள் சுமார் 3,000 பேர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். யாருடைய நலனுக்காக இந்த சர்வாதிகாரப் பிரகடனம்? ஆளும் வர்க்கத்துக்கு ஒருபோதும் நாங்கள் அடிபணியோம்... வரலாறு நாங்கள் கூறும் நியாயத்தை உணர்த்தும்’’ என்று முழங்கினார் ஏ.கே.கோபாலன்.

நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த கருணாநிதி ஆட்சி 1976 ஜனவரி 31 அன்று மாலையில் கலைக்கப்பட்டது. உடனே, இங்கேயும் அடக்குமுறை தலைவிரித்து ஆடியது. இந்தியா முழுவதும் மயான அமைதி, மேல் தோற்றத்தில். உள்ளுக்குள் தொழிலாளர்களிடம் குமுறல் கருக்கொள்ளத் தொடங்கியது.

இந்தக் குமுறல், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள மார்ஷல் தொழிற்சாலையில் வேலைநிறுத்தமாக வெடித்தது. நெருக்கடிநிலையைக் காட்டி மிரட்டி, ஒடுக்குமுறையில் ஈடுபட்ட நிர்வாகத்தை எதிர்த்து 1976, ஏப்ரல் கடைசியில் இந்த வேலை நிறுத்தம் நடந்தது. அந்த சங்கக் கிளையின் செயலாளர் செல்லப்பா உடனே எனக்குத் தகவல் அனுப்பினார்.

அப்போது நான் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். அம்பத்தூர் - ஆவடி பகுதியின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கப் பொறுப்பாளர். நான் போவதற்கு முன்பே அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. காவல் கண்காணிப்பாளர் சரவணப்பெருமாள், “வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெறாவிட்டால், அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டியதுதான்’’ என்றார்.

தொழிலாளர்களோ உருக்குப்போல உறுதியாக இருந்தார்கள். என்னையும் சேர்த்து 99 பேர். வேலைநிறுத்தம் செய்ததற்காகக் கைது என்பதை அப்போதுதான் முதல் முறையாகப் பார்த்தோம். சிறையிலும் மிரட்டலை எதிர்த்துப் போராட்டங்கள். சில நாட்களில் மே தினம் வந்தது. சிறையிலேயே மே தினம் கொண்டாடினோம். அப்போது மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய ரகசிய இதழில் (கட்சிக் கடிதம், எண் 2) ‘சிறையில் மே தினம்’ என்ற தலைப்பில் இந்தச் செய்தி வெளியானது.

“நெருக்கடி நிலை அமலான பின் நடந்த இந்தியாவின் முதல் வேலை நிறுத்தம் இதுதான்’’ என்று அன்றைய தொழிலாளர் துறை உதவி ஆணையர் செல்லத்துரை பின்னர் என்னிடம் தெரிவித்தார். விரைவிலேயே நாங்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையானோம். ஆனால், போராட்டங்கள் மேலும் மேலும் தொடர்ந்தன. அரசின் அடக்குமுறையும் அதிகரித்துவந்தது.

தொழிலாளர்களின் பிரச்சினைகள்பற்றி விவாதிக்க, தொழிற்சாலை வாசலில் கூட்டம் போட்டுப் பேசுவது சாதாரண நடைமுறை. அதையும்கூடத் தடுக்க முனைந்தது அரசு. அப்படி ஒரு கேட் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த மூத்த தொழிற்சங்கவாதி பத்மனாபனைக் கைது செய்து, அம்பத்தூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றுவிட்டார்கள் என்று எனக்குத் தகவல் வந்தது.

அப்போது எனக்கு வயது 27. இளமை முறுக்கு. ஆத்திரமாக வந்தது. காவல் நிலையத்துக்குள் நுழைந்தேன். பத்மனாபனை உடனே வெளியில் அனுப்புங்கள் என்று கத்தினேன். இதற்கு முன்பும் சில முறை இப்படி நடந்திருக்கிறது. அப்போதெல்லாம் எங்கள் கோரிக்கை நிறைவேறிவிடும்.

இதில் என் தனிப்பட்ட பெருமை ஏதும் இல்லை. இல்லையென்றால், உடனேயோ அல்லது மறுநாளோ நூற்றுக் கணக்கான கட்சித் தோழர்களும் தொழிலாளர்களும் காவல்நிலையத்தை முற்றுகையிடுவார்கள் என்பது போலீஸுக்குத் தெரியும்.

ஆனால், இப்போது நடந்ததோ வேறு. உதவி ஆய்வாளர் டேனியல் துப்பாக்கியை எடுத்து எனது நெஞ்சுக்கு நேராக நீட்டினார். “சுடுங்கள்’’ என்றேன். அதற்குள் ஏனைய காவலர்கள் டேனியலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, என்னை வாசலுக்குத் தள்ளிக்கொண்டு சென்றார்கள்.

“இன்னும் அரை மணி நேரத்துக்குள் பத்மனாபன் விடுதலை ஆகவில்லை என்றால் என்னாகிறது பாருங்கள்’’ என்று கத்திக்கொண்டே வெளியே வந்தேன். வெளியில் சரியான மழை. எனக்காகக் காத்திருந்த சகாக்கள் மூர்த்தியும் கருணாவும் ஓடி வந்தார்கள். நெஞ்செல்லாம் கொந்தளித்துக்கொண்டிருந்தது.

டீக்கடையில் டீ வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தோம். கருணா இன்னொரு டீ சொன்னார்.தூரத்தில், பத்மநாபன் எங்களை நோக்கிச் சிரித்தபடி வந்துகொண்டிருந்தார்.

- இரா. ஜவஹர்,
பத்திரிகையாளர், மார்க்சிய ஆய்வாளர்.
தொடர்புக்கு: jawaharpdb@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x