Published : 19 Feb 2017 10:54 AM
Last Updated : 19 Feb 2017 10:54 AM

எண்ணூர் முதல் இனயம் வரை: காயப்பட்ட கடற்கரை

சென்னை மெரினா கடற்கரை இன்று புதிய அடையாளம் பெற்றுவிட்டது. ‘தை எழுச்சி’க்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. ஃப்ளோரிடாவுக்கு அடுத்தபடியாக உலகின் நீளமான கடற்கரை மணல்வெளி. கி.பி. 1908-ல் இன்றைய சென்னை துறைமுகத்துக்கு முன்னோடியாகக் கடல் பாலம் நிறுவப்பட்டது முதல் கரைக்கடல் நீரோட்டங்களின் போக்கில் ஏற்பட்ட மணல் குவிவால் உருவானதுதான் மெரினா. 1978-ல் இயங்கத் தொடங்கியது விழிஞம் மீன்பிடித் துறைமுகம். அதற்குத் தென்கிழக்காக ஐந்து கி.மீ. நீளத்துக்கு ஒன்றரை கி.மீ. அகலத்தில் புதிய நிலமும் மணல்வெளியும் உருவாயிற்று. பாண்டியரின் துறைமுக நகரமாக விளங்கிய கொற்கை, இன்று கடல் விளிம்பிலிருந்து ஐந்து கி.மீ. விலகியிருக்க, கடல் பின்வாங்கி விட்டது.

கடல் ஒரு பிரம்மாண்டமான உப்புநீர்ப் பெருவெளி. மனிதத் தலையீடுகள் கடலையும் கடற்கரையையும் காயப்படுத்தி, அதன்மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தும்போது, கடல் தன்னைப் பழுதுபார்த்துக்கொள்கிறது. ஆனால், பெரும் கட்டுமானங்களும் கழிவுகளும் வேதிமங்களும் கடல் தாயைப் பதம் பார்க்கும்போது, கடல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறது. ஒரு சிறு உதாரணம், பயிர்ச் சாகுபடி முறையில் நிகழ்த்தப்பட்ட சடுதி மாற்றம் உக்ரைன் பகுதியில் உள்ள 65,000 சதுர கி.மீ. பரப்பு கொண்ட ஏரல் கடலையே வற்ற வைத்துவிட்டது.

உருவாக்கப்பட்ட பேரிடர்

கடற்கரை, கடலோடிகள் இரண்டும் நெருக்கடிகளை முன்னிட்டு மட்டுமே ஊடகக் கவனம் பெறும். சுனாமி, தை எழுச்சி, ராமேஸ்வரம், எண்ணூர் கப்பல் விபத்து - இப்படிப் பேரிடர்கள், பெருந்துயரங்கள், வன்முறைகள் தொடர்பாக நாடகக் காட்சிகள்போல் ஊடகக் கவனம் தோன்றி மறையும். பேரிடர்களால் ஏற்படுவதைவிட பேரிடர்களைக் கையாளும் அணுகுமுறைகளால் அதிக சேதாரங்கள் ஏற்படுகின்றன. அரசுகளும் அரசுத் துறைகளும் காட்டுகின்ற அலட்சியமும் புறக்கணிப்பும் இந்தச் சேதங்களைத் தீவிரப்படுத்துகின்றன. எண்ணூர் கச்சா எண்ணெய்க் கப்பல் விபத்து இயல்பான ஒன்றுதான் என வாதிடலாம். ஆனால், அதன் தொடர்ச்சியாக நிகழும் ‘கடலழிப்பு’ உருவாக்கப்பட்ட பேரிடர்.

எண்ணூர் காமராசர் துறைமுகத்தில் ஜனவரி 28 அதிகாலை 4 மணிக்கு சுமார் ஒன்றே முக்கால் கி.மீ. தொலைவில் எம்.டி.டபிள்யூ. மேப்பிள், எம்டி டான் காஞ்சிபுரம் என்னும் இரண்டு கப்பல்களும் குறுக்குமறுக்காக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் எம்டி டான் காஞ்சிபுரம் கப்பலிலிருந்து கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. திருவள்ளூர், சென்னை மாவட்டக் கடற்கரைகளையும் கரைக்கடலையும் கடுமையான சூழலியல், பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆட்படுத்தியுள்ள விபத்து இது.

கொண்டாட்டக் களம்

வசதிகளும் அனுபவமும் மிகுந்த சென்னைத் துறைமுகத்தில்கூட இதுபோன்ற ஒரு பேரிடரைக் கையாளும் தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இயற்கையும் இனக்குழு மக்களின் வாழ்வாதாரமும் அனைத்து மக்களின் புரத உணவு ஆதாரமும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுகிறது. சாக்குப்போக்கு, சப்பைக்கட்டு, மூடிமறைப்பு என்பதாக அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஓரணியாய் நின்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

மாறுபட்ட தொழில் நிலங்களில் உள்ள மக்கள், ஓரிடத்தில் கூடி உரையாடும் களமாக தை எழுச்சிக் களங்கள் அமைந்திருந்தன. தொழில் சூழல், வாழ்வாதாரச் சிக்கல்களைப் பகிரவும் புரிந்துகொள்ளவும் அக்களங்கள் வாய்ப்பளித்துள்ளன. வனத்தையும் நிலத்தையும் கடலையும் எல்லோரும் புரிந்துகொள்ளும் கொண்டாட்டக் களம் அது.

குமரி மாவட்டம் இனயம் துறைமுகத்துக்கு எதிராக மீனவர்கள் மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் போராடிவருகின் றனர். என்ன வகையான விபரீதங்களும் விபத்து களும் பெருந்துறைமுகங்களால் ஏற்படும் என்று அந்த மக்கள் அச்சம் தெரிவித்தார்களோ அதுவே எண்ணூர் துறைமுகத்தில் நிகழ்ந்திருக்கிறது. இனயம் துறைமுகத்தின் ‘பிதாமகர்கள்’ இப்போது என்ன சொல்கிறார்கள்? ‘கடற்கரையைச் சீக்கிரமாகச் சுத்தப்படுத்திவிடுவோம்’ என்று உறுதியளித்திருக்கிறார்கள்.

நேர்செய்ய முடியாத பேரழிவு

கடந்த செப்டம்பரில் ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சிக் குழுவுடன் எண்ணூர் சென்றிருந்தேன். தமிழகத்தின் கடற்கரை முழுவதும் பயணித்துப் பதிவுசெய்த அனுபவமும் உண்டு. சூழலியல் ஆய்வாளன் எனும் வகையில் நான் கண்டறிந்த உண்மைகளைத் தமிழுலகுக்குச் சொல்லியாக வேண்டும். அமோனியா வேதிமத் தொழிற்சாலை, அனல்மின் நிலையங்கள், துறைமுகங்கள், கடற்கரை முழுவதும் கற்களால் தடுப்புச் சுவர், வேதிமக் கழிவுக் கிடங்காகிப்போன கொசஸ்தலையாறு, முகம் சுளிக்கவைக்கும் கழிவுக் குன்றுகள், நதிக்கரை நெடுகச் சாம்பல் கழிவுகள்… எண்ணூர் குறித்து என் மனதில் படிந்துபோன பிம்பம் இவைதான். சாவை எதிர்நோக்கும் புற்றுநோயாளியின் முகத்தை நினைவுபடுத்தியது எண்ணூர். பெருந்துறைமுகங்கள் முன்வைக்கும் வளர்ச்சியின் உண்மையான முகம் அது.

பக்கிங்ஹாம் கால்வாயும் கொசஸ்தலையாறும் இணைந்து நிற்கிற பழவேற்காடு ஏரி, 29 மீனவக் கிராமங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது. நதிகள் கடலில் சேரும் இடங்களில் உருவாகும் கழிமுகமும் அதைத் தொட்டுக் கிடக்கும் கரைக்கடலும் மீன்வளம் கொழிக்கும் இடங்கள். பழவேற்காடு ஏரியும், தொட்டமைந்த கடலும் மீனவர்களுக்குக் காமதேனுவாக இருந்ததெல்லாம் பழைய கதை.

பல்லுயிர்க் கோளத்தின் அழிவு

சதுரங்கப்பட்டினம் பகுதியில் அணுஉலைக் கதிர்வீச்சும் கொதிகலனிலிருந்து வெளியேறும் கொதிநீரும் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உலை வைத்துவிட்டது. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை நிலத்தடி நீரையும் கடல் மீன்வளத்தையும் வேதிமங்களால் சிதைத்துவிட்டது. அலையாத்திக் காடுகள் அனல்மின் நிலையங்களால் சிதைந்துவருகின்றன. மன்னார் வளைகுடாக் கடலின் 10,000 சதுர கி.மீ. பல்லுயிர்க் கோளத்தின் அடிநாதமான பவளப் பாறைகளும் கடற்கோரைகளும் அழிவின் விளிம்புக்குப் போய்விட்டன. அருங்கனிமக் கொள்ளை தென் மாவட்டக் கடற்கரைகளைப் புற்றுநோய்போலச் சிதைத்துக்கொண்டிருக்கிறது. கேட்பாரில்லை. முத்துக் குளித்துறையில் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை முத்தும் சங்கும் கொழித்துக் கிடந்தன. இன்றைய சூழலில் தூத்துக்குடி துறைமுக நகரத்தின் அனல்மின் நிலையம், உர உற்பத்தி, தாமிர ஆலைக் கழிவுகள் முத்து, சங்குப் படுகைகளை 10 கி.மீ. தொலைவுக்குத் தள்ளிவிட்டது. அங்கு சங்கு குளிப்போரில் ஒரு தரப்பினர் பதிற்றாண்டுகளுக்கு முன்னால் புதைந்துபோன சங்குப் படுகைகளை நம்பித்தான் கடலுக்குள் போகிறார்கள்.

தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடற்கரையிலும் கடலோடிகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த ‘வளர்ச்சி’யைத்தான் இனயம் பகுதி மக்களுக்கும் அளிக்கக் களமிறங்கியிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

மீண்டும் எண்ணூர் கச்சா எண்ணெய்ப் பேரிடருக்கு வருவோம். இந்தச் சிக்கலின் ஆபத்துகளைப் பொதுப்புத்தி புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் அறிவியல் தகவல்கள் பயன்படும். கட்டுமானங்களின் துருத்தல்களால் கடற்கரை நிலங்கள் கடலரிப்புக்கு உள்ளாயின. கடலரிப்பைச் சமாளிக்கப் பல்வகையான தடுப்புச் சுவர்களை முயன்று பார்த்தார்கள். பூண்டி நீரியல் ஆய்வு மையமும் இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் நிகழ்த்திய மாதிரிச் சோதனைகளின் அடிப்படையில் 18 மீட்டர் அகலத்துக்குச் சாய்கோணத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை அடுக்கினார்கள். இதனால் இரண்டு வகையான சிக்கல்கள் ஏற்பட்டன. முதல் சிக்கல், கடல் ஏற்ற வற்றப் பகுதியில் (inertidal zone) வாழும் எண்ணற்ற உயிரினங்கள் காணாமலாயின. அதன் விளைவாக, கரைக்கடலின் மீன்வள உற்பத்தி பாதிப்படைந்தது. இரண்டாவது சிக்கல், பாரம்பரியக் கடலோடிகளால் இயல்பாகக் கடலுக்குள் நுழைய முடியவில்லை. சுனாமி பேரிடரைத் தொடர்ந்து ஏராளமான கடலோரக் கிராமங்கள் இடம்பெயர்க்கப்பட்டது வேறு கதை.

பலி கேட்கும் கல்லறை

கரை ஒதுங்கும் கச்சா எண்ணெய், பிசுபிசுப்பும் அடர்வும் மிகுந்த கரிம வேதிமம். அவ்வளவு எளிதில் சிதைவுறாத பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன். அதைக் பாறாங்கற்களுக்கு இடையில் சென்று அள்ளி அகற்றுவதில் சிரமம் உள்ளது. எவ்வளவு முயன்றாலும் கற்களுக்கு இடையே நிரம்பியிருக்கும் கழிவுகளை அகற்றுவதற்கு வேறு தொழில்நுட்பங்கள் வேண்டும். சேகரிக்கப்பட்ட கழிவுகளுடன் சிதைக்கும் நுண்ணுயிர்களைக் கலந்து மணல்வெளியிலேயே புதைப்பதாகச் செய்தி. இன்னும் ஒரு வாரத்தில், இந்தப் பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டதாக ஊடகங்களில் அதிகாரிகள் அறிவிப்பார்கள். ஆனால், பல பத்தாண்டுகளுக்கு உயிர்ப் பலி கேட்கும் கல்லறையாகவே இந்தக் கழிவுகள் நீடிக்கும்.

நடுக்கடல் கப்பல் விபத்துகளின்போது எரி எண்ணெய்க் கசிவினால் கடற்பரப்பில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எல்லோரும் அறிந்திருக் கிறோம். கடல் என்னும் பிரம்மாண்டமான பரப்பின் சராசரி ஆழம் மூன்று கி.மீ. இந்தக் கடல் முழுவதும் வாழ்கிற ஒட்டுமொத்த உயிர்களின் உயிர்நாடி, கடலின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு சென்டி மீட்டர் நீர்ப்படலம். இதில்தான், கண்ணுக்குப் புலப்படாத பச்சை உயிர்கள் எல்லோருக்கும் உணவு சமைத்துத் தருகின்றன. ஆமையினங்கள், கடற்பசு, கடற்பன்றி, திமிங்கிலம் முதலான உயிர்கள் மூச்சுவிட மேற்பரப்புக்கு அவ்வப்போது வந்தேதீர வேண்டும். மீன்கள் உள்ளிட்ட பிற உயிர்களுக்கு நீரில் கரைந்திருக்கும் உயிர்வளிதான் ஆதாரம். கடலின் ஒட்டுமொத்தப் பரப்பிலும் காற்றில் உள்ள உயிர்வளி கரைந்து கலந்தாக வேண்டும். பல நூறு சதுர கி.மீ. பரப்புக்கு எண்ணெய்க் கசிவுகள் பரவிப்போகும் வேளையில் கடலில் பெரு மரணங்கள் நிகழ்கின்றன.

கழிமுகங்கள் குப்பைத் தொட்டிகளா?

கடலில் நிகழ்வது எதுவும் நமக்குத் தெரிவ தில்லை. துறைமுகம் கட்டினால் மீனவர்களின் பொருளாதாரம் கிடுகிடுவென முன்னேறும் என்று அரசு கூட வானொலியில் விளம்பரம் செய்கிறது. துறைமுகங்கள் வேண்டாம் என்பதல்ல. உலக அளவில் வணிகப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்பது துறைமுகங்கள்தான். எளிதான, மலிவான சரக்குப் பரிவர்த்தனைக்கு நீர்வழிதான் ஏற்றது. ஆனால், உலகமெங்கும் அரூபியாக, பகாசுர சக்தியாக வளர்ந்து பரவும் கார்ப்பரேட் நிறுவனங்கள், துறைமுகங்களை ஏகபோகமாக்கிக்கொள்ளப் பார்க்கின்றன. குடிமக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட அரசு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட்டுகளின் வளர்ப்பு நாய்கள்போல் இயங்குவதுதான் நமது பிரச்சினை.

இந்தியச் சூழல் வேளாண் பொருளாதாரம் சார்ந்தது. அடிப்படையில் அது தாய்மைப் பொருளா தாரம். வன, நில, கடல் வெளிகளின் மக்கள் எல்லோரும் இயற்கையைப் பேணியவாறு தங்கள் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்துகொண்டனர். இன்று நம் பொருளாதாரம் பத்ம வியூகத்தில் சிக்கி நிற்கிறது. பயிரிட நிலங்கள் தேவையென்று வனங்களை வீழ்த்தியபோது, மழைப்பேறு குறைந்தது. தொழிலுக்கு நிலங்கள் தேவையென்று கண்டபடி தொழிற்பேட்டைகள் அமைத்தபோது, காங்கிரீட் காடுகள் உருவாயின. கண்மாய், குளம், சதுப்புநில நீர்ப்பரப்புகள் காணாமலாயின. நீர்வழித் தடங்களும் முடக்கப்பட்டன. நீர் கடலைச் சென்றடையவில்லை. கழிமுகங்கள் குப்பைத் தொட்டிகளாயின. கடலுணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. நிலத்தடி நீர் புத்தாக்கம் பெறவில்லை. வறட்சி தொடர்கதையாகிறது. விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க முடிய வில்லை. தொடர்ந்து மீனவர்கள் தற்கொலைகள் நிகழ்ந்தால் வியப்பில்லை.

வாருங்கள்.. வழி நடத்துங்கள்

இப்போது சொல்லுங்கள் - எதை வளர்ச்சி என்பது? ஞானிகளின் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அதிசய உடையை நம் ஒவ்வொருவருக்கும் உலகப் புகழ்பெற்ற தையல்காரர் மோடி அணிவிக்கிறார். மாதம் தோறும் பெருங்குரலில் உரையாற்றுகிறார். குடு குடுப்பைக்காரன் போல் இந்தியாவுக்கு ‘நல்ல காலம் பிறக்குது’ என்று உடுக்கையடிக்கிறார். அந்த அதிசய உடையில் நான் நிர்வாணமாய் நிற்கிறேன். வெட்கித் தலைகுனிகிறேன். இப்படி ஒரு ஆளுமையை அதிகாரத்தில் அமர்த்திய என் மடமையைக் குறித்து! வாருங்கள், நம் நிலத்தையும் கடலையும் மீட்டெடுக்க எங்களை வழிநடத்துங்கள் என்று தமிழ்நாட்டு இளைஞர்களைத்தான் களத்துக்கு அழைக்க வேண்டியதாயிருக்கிறது. அவர்கள்தான் கண்மூடித்தனமான இந்தத் தலைமைகளுக்குச் சரியான மாற்று!

- வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், கடலியல் ஆய்வாளர், தொடர்புக்கு: vareetha59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x