Last Updated : 31 Mar, 2015 09:39 AM

 

Published : 31 Mar 2015 09:39 AM
Last Updated : 31 Mar 2015 09:39 AM

இலக்கண ஆசிரியருக்கு ஒரு கோயில்

தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவருக்கு நன்னூல் இலக்கணம் வேதம் மாதிரி. இதன் ஆசிரியர் பவணந்தி முனிவரைத் தெரியாமல், தமிழ் இளங்கலைப் படிப்பைக் கடந்து போக முடியாது. மாணவர்களுக்காக என்று திட்டமிட்டு எழுதப்பட்டது நன்னூல்.

பவணந்தியார் கர்நாடகத்திலிருந்து தமிழகத்தில் குடியேறிய கன்னட ஜைனர் (சமணர்). இவருடைய வம்சாவழியினர் இன்னும் ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்துவருகிறார்கள். பவணந்தி முனிவர் வழிபட்ட கோயிலும் இவரது பெரிய சிற்பமும் இங்கே உள்ளது. இங்கே வழிபடு தெய்வமாக அவர் உள்ளார்.

நன்னூல் பாயிரத்தில் வரும்

‘திருந்திய செங்கோல் சீயகங்கன்

அருங்கலை வினோதன் அமராபரணன்

மொழிந்தனனாக முன்னோர் நூலின்

வழியே நன்னூல் பெயரில் வகுத்தனன்

பொன்மதில் சனகை சன்மதி முனியருள்

பன்னரும் சிறப்பில் பவணந்தி

எனும் நாமத் திருத்தவத்தோனே’

என்னும் வரிகள் இவரைப் பற்றிய பழைய சான்று.

பவணந்தி முனிவரின் ஞானபிதா சன்மதி முனிவர். இவரைப் பவணந்தியாரின் தந்தை என்றும் கூறுவர். பவணந்தியை ஆதரித்தவன் சீயகந்தன் என்ற சிற்றரசன். சீகாளத்திக் கல்வெட்டொன்று ‘குவலயாபுரம் பரமேஸ்வரன் கங்க குலத்தேவன் சூரநாயகன் திருஏகம்பமுடையானான அமராபரணன் சீயகந்தன்’ என்று இவனைப் பற்றிக் கூறும். இங்கு குறிக்கப்படும் குவலயாபுரம் இன்றைய கோலார் பகுதியில் உள்ள இடம் என்கிறார் கல்வெட்டியல் அறிஞர் கோபிநாத ராவ்.

சீயகங்கன் பிற்காலச் சோழ அரசனான மூன்றாம் குலோத்துங்கனுக்கு அடங்கித் திறைகட்டிய சிற்றரசன். குலோத்துங்கன் காலம் கி.பி.1176 - 1216. சீயகங்கனும் இந்த நூற்றாண்டைச் சார்ந்தவன். இச்சிற்றரசன் கேட்டுக்கொண்டதால், பவணந்தி முனிவர் நன்னூலை இயற்றினார் என்று பாயிரம் குறிப்பிடும். இதனால், பவணந்தியும் 13-ம் நூற்றாண்டினர் எனக் கொள்ளலாம்.

நன்னூலுக்கு முதலில் உரை எழுதிய மயிலைநாதர் பவணந்தி முனிவரின் ஊர் சனகாபுரம் என்பார். கொங்கு மண்டல சதகப் பாடல் ஒன்று,

‘சங்குக் குருசில் உவக்க

நன்னூலைக் கனிந்து புகல்

துங்கப் புலமை பவணந்தி

மாமுனி தோன்றிவளர்

கொங்கிற் குறும்பு தனியாகி

நாக குரு விளங்கும்

மங்குல் பொழில் சனகாபுரம்

கொங்கு மண்டிலமே’

எனக் கூறும்.

புலம்பெயர்ந்த சமணர்

பவணந்தியின் குடும்பம் மைசூர் பகுதியிலிருந்து 12-ம் நூற்றாண்டில் குடிபெயர்ந்திருக்கலாம். திருவிதாங்கூர் தொல்லியல் துறையில் இயக்குநராக இருந்த கோபிநாத ராவ், ‘‘கங்கநாட்டு காவிரியின் வடகரையிலிருந்த ராசிபுரம் பகுதியிலிருந்து கன்னடக் குடும்பங்கள் சில, கொங்கு நாட்டுக்குக் குடிபெயர்ந்தன” என்கிறார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் உள்ள சீனாபுரம் என்று அழைக்கப்படும் ஊர்தான் பவணந்தி வாழ்ந்த சனகாபுரம். இங்கே பவணந்தி முனிவர் வழிபட்ட ஆதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த ஊரில் இதை புத்தர் கோயில் என்கிறார்கள்.

இக்கோயில் கருவறை, முன்மண்டபம் என அமைந்தது. கருவறையில் அமர்ந்தகோல ஆதீஸ்வரரின் கற்சிற்பம் உள்ளது. கோயில் நன்கு பராமரிக்கப்படுகிறது. தினப்பூசை உண்டு (காலை மணி 7-9) இது இந்து அறநிலையத் துறையின் பொறுப்பில் உள்ளது. கோயில் இருக்கும் இடத்தை ஒட்டிய தார் சாலையில் ‘நன்னூல் ஆசிரியர் பவணந்தி முனிவர் வழிபட்ட கோயில்’ என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை உள்ளது. வடநாட்டிலிருந்தும் மைசூர் பகுதியிலிருந்தும் இக்கோயிலுக்கு ஜைனர்கள் வருகிறார்கள்.

பவணந்தியாரின் சிற்பம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் விஜயமங்கலம் அருகே மேட்டுப்புதூர் என்ற ஊரில் எட்டாம் தீர்த்தங்கரரான சந்திரபிரபாவின் கோயில் உள்ளது. இங்கே பவணந்தியாரின் அருமையான கல்சிற்பம் உள்ளது.

விஜயமங்கலம் பகுதியில் நெட்டைக் கோபுரக் கோயில் அல்லது புத்தர் கோயில் என்று சொன்னால், இந்த சமணக் கோயிலுக்கு வழிகாட்டுகிறார்கள். இக்கோயில், கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டலம், முகப்பு மண்டபம் சுற்றிலும் திறந்தவெளிப் பிரகாரம் சுற்றுமதில் என அமைந்தது.

கருவறை மூலவரான சந்திரப்பிரபாவின் மூன்றடி உயரக் கற்சிற்பமும், வேறு சில சமணச் சிற்பங்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருடு போய்விட்டன. இப்போது கருவறையில் பீடம் மட்டுமே உள்ளது. அதிர்ஷ்டவசமாக பவணந்தியும் ரிஷபதேவரும் தப்பிவிட்டார்கள்.

அர்த்தமண்டபத்தில் ரிஷபதேவரும் அவர் எதிரே பவணந்தியாரும் கற்சிற்பமாக உள்ளனர். ரிஷபதேவரின் சிற்பம் இலச்சினையுடன் கூடியது. அமர்ந்த கோலம் சுமார் 130 செ.மீ. உயரம். இவர் எதிரே பவணந்தியார் இருக்கிறார். பீடத்தின் மேல்; இந்தச் சிலையும் 130 செ.மீ. உயரம். அமர்ந்த கோலம். அபயவரத முத்திரை காட்டுகிறார்.

கோயில் முன் மண்டபத்தில் விதானத்திலும் பொதிகையிலும் நிறையச் சிற்பங்கள். பெரும்பாலும் வர்த்தமான மகாவீரர் பிறப்பு குறித்தவை. இதே மண்டபத்தில், கங்க அரசன் ஒருவனின் மனைவி வடக்கிருந்து உயிர்நீத்த செய்தியைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது.

இந்த சந்திரப்பிரபா கோயிலுக்குக் கொளுத்தும் வெயிலில் பகல் 10 மணிக்கு நானும் நண்பர் செந்தீ நடராசனும் போனபோது முன்வாசல் பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்து ஏமாற்றமடைந்தோம். கோயிலைச் சுற்றி வீடுகளும் இல்லை. ஆள் நடமாட்டமும் இல்லை. கோயில் அருகே ஒரு ஓலைக் குடிசை இருந்தது. அதன் வாயிலில் நின்று “அய்யா” என்றேன். 65-70 வயது மதிக்கத் தக்க ஒரு மனிதர் வந்தார். வேட்டி- சட்டை போடாத உடம்பு, மார்பில் பூணூல். எங்களைப் பார்த்து “என்ன வேண்டும்” என்றார். “கோயில் எப்போது திறப்பார்கள்” என்று கேட்டேன். அவர் எங்களைப் பற்றி விசாரித்தார். “என் மகன்தான் பூசை செய்கிறான். கோயிலைத் திறந்து காட்டுகிறேன்” என்றார். கோயிலைச் சுற்றிவரும்போது தன்னைப் பற்றியும் சொன்னார்; அவர் பெயர் நாககுமாரர். பூர்வீக ஜைனர். தாய்மொழி கன்னடம். மைசூர் அருகே உள்ள கோலாரிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்த மரபினர். இப்போதும் வீட்டில் கன்னடம்தான் பேசுகிறார்.

நாங்கள் பவணந்தியார் வம்சம்!

கோயிலினுள் சென்று ரிஷபதேவரைப் பார்த்து வணங்கினோம். எதிரே இருந்த சிற்பத்தைப் பார்த்து யார் என்றேன். “எங்கள் மூதாதையர்; பவணந்தியார். நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதினார். தமிழறியாத ஜைனர்களுக்காகத்தான் அந்த நூலை எழுதினார் என்று தாத்தா சொல்லிக் கேட்டிருக்கிறேன்” என்றார். அவர் பரவசத்துடன் பேசினார்; மரபுவழி சொல்லப்பட்ட செய்தியை மீண்டும் கூறுவதில் அவர் அலுப்படையவில்லை.

நாங்கள் அவரது குடிசைக்குப் போனோம். ஏழ்மை தெரிந்தது. அவர் தனது வம்சாவழியினரின் வரைபடத்தைக் காட்டினார். அவர் அடிப்படைக் கல்வி பெற்றவர்தான். நன்னூலைத் தெரிந்து வைத்திருக்கிறார். பேச்சில் தெரிந்தது. “பவணந்தியின் வம்சாவழி நாங்க” என்று மீண்டும் சொன்னார். அவரது உறவுப் பெண் கன்னடத்தில் ஏதோ சொன்னாள். நாங்கள் அவரிடம் விடைபெறும்போதும் “பவணந்தியின் வம்சாவழி” என்றார்.

தமிழுக்குக் காப்பியங்கள், புராணங்கள், நீதிநூற்கள், இலக்கணங்கள், நிகண்டுகள் என கணிசமான பங்கை அளித்தவர்கள் சமணர்கள். இவர்கள் முதலில் கொங்கு நாட்டின் வழியாகத்தான் வந்தார்கள் என்கிறார் புலவர் இராசு. கொங்கு நாட்டில் 72 சமணக் கோயில்கள் இருந்தன. இப்போது இருப்பவை ஐந்துதான். பவணந்தி முனிவரை ஆதரித்த சீயகந்தனின் கல்வெட்டுக்கள்கூட இங்கே நிறைய கிடைத்துள்ளன. ஆனால், இதெல்லாம் பழைய காலம். கொங்கு மண்ணில் இப்போது எஞ்சியிருப்பது பவணந்தி முனிவரின் கற்சிற்பம் மட்டுமே. அவரது பூர்விகத்தைப் பற்றிச் சொல்வதற்கு எஞ்சியிருப்பவர் அவரது வழிவந்த நாககுமாரர் மட்டுமே.

- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x