Last Updated : 27 Jan, 2015 09:21 AM

 

Published : 27 Jan 2015 09:21 AM
Last Updated : 27 Jan 2015 09:21 AM

இன்னொரு மோடி ஆவாரா கேஜ்ரிவால்?

லோக்பால் மசோதாவைத் தாக்கல் செய்ய முடியவில்லை என்று அறச்சீற்றத்துடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் பெருமகிழ்ச்சியடைந்த கிரண் பேடி, கட்சிக்குள்ளேயே மறைமுகமான எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார். தோல்வியின் நிழல் இன்னும் அகலாத காங்கிரஸ் கட்சி, குருட்டு நம்பிக்கையில் அஜய் மக்கானை நிறுத்தி இரண்டு கட்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண் டிருக்கிறது. பிற கட்சிகள் பேருக்கு வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றன. இப்படியாக, டெல்லி மாநிலத் தேர்தல் களம் சுறுசுறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

பாஜகவைப் பொறுத்தவரை ஆம் ஆத்மியை வீழ்த்துவதுதான் இலக்கு. காங்கிரஸைப் பற்றி அக்கட்சிக்குக் கவலை இல்லை. அக்கட்சியைப் பொறுத்தவரை மோடி எனும் பெயர்தான் தேர்தல் களத்தின் பிரம்மாஸ்திரம். மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மோடியை முன்வைத்துதான் அந்தக் கட்சி போட்டியிட்டது. முதல்வர் வேட்பாளர் என்று யாரும் முன்னிறுத்தப்படவில்லை.

ஆனால், டெல்லி கதை வேறு. ராம்லீலா மைதானத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கிவைத்த மோடி, அரவிந்த் கேஜ்ரிவாலைக் கடுமையாகத் தாக்கிப் பேசியதிலிருந்தே ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜக எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது தெரிந்தது. வழக்கமான ஆவேசத்துடன் மோடி பேசினாலும் அவரது பிரச்சார உரை பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை. நிலைமையை உணர்ந்த பாஜக, முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்த முடிவு செய்தது. இதையடுத்து அவசர அவசரமாக கிரண் பேடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளராக கிரண் பேடி தேர்வுசெய்யப்பட்டது இப்படித்தான். தேர்தலில் வென்றால் மோடியின் பெயரையும், தோற்றால் (கிரண்) பேடியின் பெயரையும் பாஜக சொல்லிக்கொள்ளும் என்று ஆம் ஆத்மி கட்சி கிண்டலடித்திருக்கிறது.

அவரும் நானும் சிநேகிதர்கள்

டெல்லி பாஜகவைப் பொறுத்தவரை, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுக்குத்தான் செல்வாக்கு அதிகம். டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாய, விஜய் கோயல் என்று முக்கியமான தலைவர்கள் இருக்கும்போது, கிரண் பேடியை முன்னிறுத்தியதில் கட்சித் தொண்டர்களுக்குக் கடும் அதிருப்தி. கிருஷ்ணா நகர் தொகுதியில் கட்சித் தொண்டர்களை முதன்முறையாக கிரண் பேடி சந்தித்தபோது, திடீரென்று ஹர்ஷவர்தனுக்கு ஆதரவாகத் தொண்டர்கள் கோஷமிடத் தொடங்கினார்கள். சுதாரித்துக்கொண்ட கிரண் பேடி, தனக்கும் ஹர்ஷவர்தனுக்கும் இடையே இருக்கும் நட்பைப் பற்றிப் பேசிச் சமாளிக்க வேண்டிவந்தது.

அண்ணா ஹசாரேயுடன் இணைந்து ஊழலுக்கு எதிராகப் போராடிய சமயத்தில், பாஜக மீது கரிசனத்துடன் நடந்துகொள்ளுமாறு ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் பிற உறுப்பினர்களை கிரண் பேடி கேட்டுக்கொண்டதாக ஒரு பேச்சு உண்டு. கிரண் பேடிக்கு வாய்ப்பளிக்கப்பட இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுவதை அமித் ஷா திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா சமீபத்தில் சந்தேகம் தெரிவித்திருந்ததையும் இதன் பின்னணியில் வைத்துப் பார்க்க வேண்டும். அண்ணா ஹசாரேயுடன் இணைந்து போராடிய வி.கே. சிங் பாஜகவில் இணைந்ததன் தொடர்ச்சியாக கிரண் பேடி பாஜகவில் இணைந் திருப்பதை, காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் சுட்டிக்காட்டுகின்றன.

ஆம் ஆத்மி கட்சிக்குள்ளும் நிலவரம் சிலாக்கி யமாக இல்லை. “கிரண் பேடி முதல்வரானால் ஊழலை ஒழிப்பதில் திறம்படச் செயல்படுவார்” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சாந்தி பூஷண் குறிப்பிட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது மகன் பிரசாந்த் பூஷணே இதை எதிர்க்க வேண்டிவந்தது. போராட்டத்தில் சிறந்தவர் எனினும் கட்சியினரை ஒருங்கிணைப்பதில் கேஜ்ரிவாலின் திறமை, கட்சிக்குள்ளேயே சந்தேகிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதிலும் ஆம் ஆத்மி தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

வெற்றியை உறுதிசெய்துகொள்ள மீண்டும் பிரச்சாரம் செய்ய முடிவுசெய்திருக்கிறார் மோடி. மோடிக்கு ஈடுகொடுக்க வேண்டுமென்றால், இன்னொரு மோடியாக வேண்டும் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் மூலம் கேஜ்ரிவால் உணர்ந்திருப்பார். ஈடுகொடுப்பாரா, இல்லை ஒதுங்கி வழிவிடுவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

- வெ. சந்திரமோகன், தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x