Last Updated : 28 Jun, 2017 08:24 AM

 

Published : 28 Jun 2017 08:24 AM
Last Updated : 28 Jun 2017 08:24 AM

இந்திய-அமெரிக்க கூட்டறிக்கை ஓர் அலசல்: பாகிஸ்தான் மீது கடுமை, சீனா மீது மென்மை

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த இரு தலைவர்களும் வெள்ளை மாளிகையில் நீண்ட நேரம் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி, ட்ரம்ப் சந்திப்பு இரு நாடுகளின் எதிர்பார்ப்பையும் மிஞ்சி இருப்பதை கூட்டறிக்கையின் மூலம் உணர முடிகிறது. இந்த சந்திப்புக்கான பணிகளில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் கடந்த ஒரு வாரமாக அதிக நேரத்தை செலவிட்டுள்ளனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் கூறும்போது, “இதற்கு முன்பு இந்திய பிரதமர்கள் மேற்கொண்ட அமெரிக்க சுற்றுப் பயணத்தைக் காட்டிலும் பிரதமர் மோடியின் இந்தப் பயணம் மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது” என்றார்.

முன்னாள் இணை செயலாளர் (அமெரிக்கா) மற்றும் அமெரிக்காவுக் கான இந்திய தூதராக பணியாற்றிய ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், சிங் - ஒபாமா மற்றும் மோடி-ஒபாமா ஆகியோருக்கிடையிலான உறவை அருகிலிருந்து பார்த்தவர் என்ற முறையில் அவ்வாறு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கிடையே கையெழுத் தான ஒப்பந்தங்களின் முழு விவரம் அடுத்த சில நாட்களிலோ, வாரங்க ளிலோ தெரியவரும். ஆனாலும், இப்போது வெளியான கூட்டறிக்கை யையும் ஓர் ஆண்டுக்கு முன்பு (2016 ஜூன்) மோடி - ஒபாமா சந்திப்புக்குப் பிறகு வெளியான கூட்டறிக் கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் சில முக்கியமான குறிப்புகள் தென் படுகின்றன.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டின் அறிக்கையில் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தக பற்றாக்குறையை சரி செய் வது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமானதாகவும் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு சற்று பின்னடைவாகவும் கருதப்படுகிறது.

ராணுவம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இந்த ஆண்டு அறிக்கையிலும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, இந்தியாவுக்கு 22 பிரடேட்டர் கார்டியன் ஆளில்லா விமானங்களை விற்க முன்வந்து, அதற்கு அமெரிக்க அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியது. அமெரிக்காவிடமிருந்து இந்தியா பாதுகாப்பு தளவாடங்களை வாங்குவது மகிழ்ச்சி என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், ஆளில்லா விமானங்களை வாங்குவது பற்றி இந்தியா இன்னும் உத்தரவாதம் தரவில்லை.

தீவிரவாதமும் பாகிஸ்தானும்

இந்த ஆண்டின் கூட்டறிக்கையில் தீவிரவாத அமைப்புகள் மீது குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து செயல்படும் குழுக் கள் மீது ஆவேசம் காட்டப்பட்டுள்ளது. ட்ரம்ப்-மோடி சந்திப்புக்கு சில மணி நேரம் முன்பாக, ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது சலாஹுதீனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது. இதை இந்தியா வரவேற்றுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான கூட்டறிக் கையிலும் இதுபோன்ற வாசகங்களே இடம்பெற்றன. “அல்-காய்தா, ஐஎஸ், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, தாவூத் கம்பெனி உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத் தலை எதிர்கொள்ள ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும். இதுவிஷயத் தில் ஐ.நா.வுடன் இணைந்து செயல் படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐ.நா.வைப் பற்றி குறிப்பிடப்படவில்லை.

“உலக நாடுகளுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஏவுதளமாக இருக்கக் கூடாது என்பதை அந்நாடு உறுதி செய்யவேண்டும் என அந்த நாட்டு தலைவர்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை (26/11) தாக்குல், பதான்கோட் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு நேரடியாகவே கூட்டறிக்கை எச்சசரிக் கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அணுசக்தி தொழில்நுட்ப விநியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினராக இடம்பெற்றிட அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என இப்போதைய அறிக்கையிலும் முன்பு போலவே கூறப்பட்டுள்ளது.

சீனா மீது மென்மை போக்கு

கடந்த 2015-ம் ஆண்டு ‘இந்தியா - அமெரிக்கா இடையே ஆசிய - பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்கான கூட்டு தொலை நோக்கு வியூகம்’ என்ற ஒப்பந்தம் கையெழுத்தானது. சர்ச்சைக்குரிய தென்சீன கடல் பகுதி மீதான சீனாவின் ஆதிக்கம் ஓங்குவதை கட்டுப்படுத்துவதற்காகவும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம், ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் உதவிட இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மிக முக்கிய ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஒப்பந்தம் பற்றி இப்போதைய கூட்டறிக்கை கண்டுகொள்ளவே இல்லை. இதன்மூலம் தென்சீன கடல் பகுதி மீதான சீனாவின் ஆதிக்கப்போக்கு விவகாரத்தில் தனது கடுமையை அமெரிக்கா தளர்த்திக் கொண்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

உதாரணமாக, இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் தடையற்ற கடல்வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை இரு நாடுகளும் உறுதி செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு கூறப்பட்டிருந்தது.

இந்த ஆண்டின் அறிக்கையோ, இந்திய - பசிபிக் பிராந்தியத்தில் தடையற்ற சுதந்திர கடல்வழி போக்குவரத்து, விமான போக்குவரத்து மற்றும் வர்த்தகத்துக்கு மரியாதை தருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

சீனாவுடன் ட்ரம்ப் நிர்வாகத்தின் உறவு மேம்பட்டிருப்பதை பிரதிபலிப்பதாகவே இது அமைந்துள்ளது.

வடகொரியாவுக்கு கண்டனம்

இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கை யில் வடகொரியா புதிய வரவாக இடம்பெற்றுள்ளது. அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான வடகொரியாவின் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைக்கு கடிவாளம் போட்டு அதன் போர்க்குணத்துக்கு முடிவு காண்பது என்கிற அமெரிக்காவின் நோக்கமே இதற்குக் காரணம்.

“வடகொரியாவின் தொடர் அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைக்கு இரு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் இந்த செயல் பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. எனவே, இதுதொடர்பான ஐ.நா. விதிகளை வடகொரியா கடைபிடிக்க வேண்டும். இதைத் தடுத்து நிறுத்த இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்” என கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடுமை மிக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்

பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது, ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க ராணுவத் துக்கு உதவ 15 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைக்க ட்ரம்ப் திட்டமிட்டிருப் பதாக தகவல் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். எனினும், ஆப்கானிஸ்தானுக்கான இந்திய வீரர் களின் எண்ணிக்கை குறித்து கூட்டறிக் கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதேநேரம், ஆப்கனில், ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, வளம் ஆகியவற்றை நிலைநாட்ட இந்தியா கூடுதல் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம்

இந்திய - அமெரிக்க அணுசக்தி (ஆக்கப்பூர்வ) ஒத்துழைப்பு உடன்படிக் கையின்படி, இந்திய அணுசக்தி கழகம் (என்பிசிஐஎல்) அமெரிக்கா வின் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனங் களுக்கிடையே 6 அணு உலைகளை இந்த மாதம் (ஜூன் 2017) அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் இது தாமதமாகும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறும்போது, “வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் திவாலானது. இந்நிறுவனத்தின் நிதிநிலை இந்த ஆண்டு இறுதியில்தான் சரியாகும் எனத் தெரிகிறது. இதனால், அணு உலைகள் அமைப்பது தாமதமாகும்” என்றார்.

இதுகுறித்து இந்த ஆண்டின் அறிக்கையில், “எரிசக்தி வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கான தடைகளை அகற்ற அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் இயற்கை எரிவாயு, நிலக்கரி, மரபுசாரா எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஏற்றுமதி செய்யப்படும். இதனால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x