Published : 27 Jan 2015 08:39 AM
Last Updated : 27 Jan 2015 08:39 AM

ஆர்.கே.லக்ஷ்மண் வாழ்வில் சில துளிகள்...

ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டூன் வரையும்போது யாரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை நிர்வாகமும் அதற்கேற்ப, அவருக்குத் தொலைபேசி அழைப்போ, பார்வையாளர்கள் தொல்லையோ இல்லாமல் தவிர்த்துவிடுவார்கள். அலுவலக நண்பர்களும் அனுசரித்து நடந்துகொள்வார்கள். யாராவது அவரைச் சந்திக்க விரும்பினாலும் லக்ஷ்மணுக்கு விருப்பம் இருந்தால்தான் அவரைச் சந்திக்க முடியும்.

தன்னுடைய வேலையை முடித்த பிறகு நண்பர்களிடம் மகிழ்ச்சியாகப் பேசுவார். உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களைப் போலவே அவர்களுடைய குரலில் பேசியும் நடித்தும் காட்டி சிரிக்க வைப்பார். உலகிலேயே சிறந்த கார்ட்டூனிஸ்ட் யார் என்று கேட்டால், நொடியும் தாமதிக்காமல் “நான்தான்” என்பார். அகந்தையில் அல்ல தன்னம்பிக் கையில் அப்படிச் சொல்வார். அந்த உணர்வு எல்லா கார்ட்டூனிஸ்ட்களுக்கும் இருக்கும் என்பார்.

தமிழ் திரைப்படங்களில் சிறந்த நாட்டிய நடிகையாகத் திகழ்ந்த குமாரி கமலாவைத் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக மணவிலக்கு பெற்றார். அடுத்து திருமணம் செய்துகொண்டவரின் பெயரும் கமலா.

லக்ஷ்மணுக்கு 5 சகோதரர்கள் 2 சகோதரிகள். அவருடைய தந்தை பள்ளிக்கூட தலைமையாசிரியராக இருந்தார். ஊரில் அவர் மீது மதிப்பு. பிள்ளைகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாக இருப்பார். லக்ஷ்மணுக்கு அப்பாவைப் பார்த்தாலே பயம்.

அம்மாவோ எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். எல்லா குழந்தைகளுக்கும் கதை சொல்வார். புத்தகங்களில் வரும் புராணக் கதைகளைப் படித்துக் காட்டுவார். டென்னிஸ், செஸ், பால் பாட்மிண்டன், பிரிட்ஜ் என்று எல்லாம் விளையாடுவார். ஆனால் அவருக்கு ஆங்கிலம் தெரியாது. மாமியாரான பிறகுகூட எல்லா மருமகள்களையும் பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அவர்களுடன் பிரிட்ஜ் (சீட்டாட்டத்தில் ஒருவகை) விளையாடுவார்.

ஓவியக் கலைஞராக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் லக்ஷ்மணுக்கு ஆரம்பத்தில் கிடையாது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் எதையாவது வரைந்து கொண்டிருப்பார். பள்ளியிறுதி வகுப்புத்தேர்வில் தோல்வி அடைந்தார். மும்பையில் உள்ள ஜே.ஜே. ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பி தான் வரைந்த சில ஓவியங்களையும் சேர்த்து அனுப்பியிருந்தார். “உங்களு டைய ஓவியத்தைப் பார்த்தோம், இக் கல்லூரியில் சேர்ந்து பயில்வதற்கான தகுதி உங்களுக்கு இல்லை” என்று அவர்கள் பதில் எழுதிவிட்டார்கள்.

மைசூர் மகாராஜா கல்லூரியில் கலைப்பிரிவில் சேர்ந்து தத்துவம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்தார். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸின் கொள்கைகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். பள்ளியிலிருந்த பழக்கமான ஓவியம் வரைவது கல்லூரியிலும் தொடர்ந்தது. மைசூர் மார்க்கெட்டுக்கு அடிக்கடி சென்று ஓரமாக உட்கார்ந்து, அங்கு வருவோர் போவோரைப் பார்த்து படங்கள் வரைவார். இவருடைய படங்களை சகோதர, சகோதரிகள் அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்.

இவ்வளவு நன்றாகப் படம் வரைகிறாயே என்னுடைய கதைகளுக்கும் வரைந்து தருகிறாயா என்று அண்ணன் ஆர்.கே.நாராயண் கேட்டார். அன்று முதல் அந்த வெற்றிக்கூட்டணி உருவா னது. தி இந்து ஆங்கில பத்திரிகைக்கு ஆர்.கே. நாராயண் அனுப்பும் கதை களுக்கு ஓவியம் ஆர்.கே.லக்ஷ்மண் என்றாகிவிட்டது. கன்னடத்தில் மை என்றொரு பருவ இதழும் கொற வஞ்சி என்ற நகைச்சுவை இதழும் வெளிவந்தன. இரண்டுக்கும் அவர்தான் ஓவியர். மிகச் சிறிய வயதிலேயே கேலிச் சித்திரக்காரராகிவிட்டார்.

பட்டப்படிப்பு முடிந்ததும் வேலை தேடி டெல்லி சென்றார் லக் ஷ்மண். தி இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வேலைகேட்டார். “ரொம்ப சின்னப் பையனாகவும் அனுபவம் இல்லாமலும் இருக்கிறாயே, வேலை கிடையாது போ” என்று அனுப்பிவிட்டார்கள். பிறகு ரயில் ஏறி ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது பம்பாய் வழியாகச் சென்றார். உடனே பம்பாயில் இறங்கி ஒரு அறையை 2 நாள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, தலால் தெரு வழியாக நடந்துசென்றார். ‘தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல்’ என்ற போர்டைப் பார்த்தார். அப்போது உடனிருந்த நண்பர், அதோ போகிறாரே அவர்தான் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர், போய் வேலை கேள் என்று தூண்டினார்.

லக்ஷ்மண் உடனே அவரைப் பின்தொடர்ந்து போய் வேலை கேட்டார். அவரும் வேலை தந்தார். அங்கே அவருடைய மூத்த கார்ட்டூனிஸ்ட் சகா பால் தாக்கரே! தாக்கரேவும் நல்ல கார்ட்டூனிஸ்ட். சில மாதங்கள் அங்கே வேலை செய்தார். பத்திரிகை ஆசிரியரான சதானந்த் கார்ட்டூன்கள் தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்ததால் லக்ஷ்மண் அந்த வேலையை விட்டுவிட்டு நேராக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று வேலை கேட்டார். அங்கே ஓவியப் பிரிவுத் தலைவராக இருந்த வால்டர் லங்காமர் என்ற ஜெர்மானியர், அவருடைய ஃப்ரீ பிரஸ் ஜர்னஸ் கார்ட்டூன்களைப் பார்த்திருந்தார். சிறிது நேரம் இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டு, பதவி நியமன உத்தரவுடன் வந்து வாழ்த்தினார். அன்று தொடங்கிய தொடர்பு 60 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்தது.

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது பிரதமர் இந்திரா காந்தியின் நேரடி கண்டனங் களுக்கு ஆளானார் லக்ஷ்மண். “இந்தியாதான் இந்திரா, இந்திரா தான் இந்தியா” என்றொரு கோஷத்தை அப்போதைய காங்கிரஸ் தலைவர் தேவ்காந்த் பரூவா முன் வைத்தார். அதை கேலி செய்யும் விதத்தில் குழந்தைகளை வைத்து தள்ளிச் செல்லும் பெராம்புலேட்டரில் வாயில் நிப்பிளுடன் பரூவா இருப்பதைப்போல ஒரு கார்ட்டூனை வரைந்தார் லக்ஷ்மண். அவமதிப்பதைப்போல இருக்கிறது என்றார் இந்திரா. அவமதிப்பையும் கேலியையும் சேர்த்து குழைத்துத் தரும் கலைதான் கார்ட்டூன் என்றார் லக் ஷ்மண். நீங்கள் அப்படி வரைந்திருக்கக்கூடாது என்றார் இந்திரா.

ராஜீவ் காந்தியை கேலிச்சித்திரமாக வரைய மிகவும் சிரமப்பட்டார் லக் ஷ்மண். காரணம் அவர் மிக அழகாக இருந்தார். எனவே அவரது முகத்தை வட்டமாக வரைந்து மூக்கை சற்றே வளைத்தெல்லாம் போட்டார். ஒரு புத்தக வெளியீட்டின்போது நேரில் சந்தித்த ராஜீவ் காந்தி சிரித்துக்கொண்டே, “என்னை ஏன் குண்டாக இருப்பது போல வரைகிறீர்கள்” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். “அப்படியா, அது என்னவென்று பார்க்கிறேன்” என்று பதிலளித்தார் லக் ஷ்மண். இருவருமே அதற்குப் பிறகு சேர்ந்து சிரித்தார்கள். எந்தப் பிரச்சினை குறித்துப் பேசினாலும் ராஜீவ் காந்தி இந்த பதிலைத்தான் எல்லோருக்கும் கூறுவார். தேவ கவுடா பிரதமராக இருந்தபோது லஷ்மணுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. காரணம் அவர் நாடாளுமன்றக் கூட்டங்களில், பொதுக்கூட்டங்களில் என்று எங்கு வேண்டுமானாலும் தூங்கிவிடுவார்.

மொரார்ஜி தேசாயும் நிறைய படங்கள் வரைய வாய்ப்புகளைத் தந்துகொண்டே இருந்தார். லக்ஷ்மணுக்கு மதுவிலக்கு பிடிக்கவே பிடிக்காது. மொரார்ஜி தேசாய்க்கோ அதில் அபார நம்பிக்கை. எனவே அவரை நிறையவே கிண்டல் செய்தார். என்னை வைத்துப் படம் போடுவது பிடிக்கவில்லை என்று அவரிடம் சொல்லுங்கள் என்று பலமுறை சொல்லி அனுப்பியிருக்கிறார் தேசாய். ஒரு கிளர்ச்சியின்போது மற்றவர்கள் பஸ், ரயில் ஆகியவற்றுக்கு தீ வைக்கும்போது ஒரு சிறுவன் பைக்குக்கு தீ வைக்க முயல்வது போல கார்ட்டூன் வரைந்தார். அதில், ஒரு மோட்டார் சைக்கிளுக்குக்கூட தீ வைக்காவிட்டால் நீயெல்லாம் என்ன ஒரு ராமபக்தன் என்று அந்தச் சிறுவனைக் கேட்பது போல வாசகம் இருந்தது. அது இந்து சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயல் என்று கூறி வழக்கு தொடுத்தனர். நாசிக் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரணைக்கு நடுவில் பலர் வந்து ஆட்டோகிராஃப் வாங்கினர். அவருக்கு எதிராக வழக்கு தொடுத்த ஒரு பெண்ணும் வந்து வாங்கிச் சென்றார்!

ஒரு குடை, கோட், மீசை, வழுக்கைத் தலை ஆகியவற்றோடு லக் ஷ்மண் வரைந்த திருவாளர் பொதுஜனமும் அவருடைய மனைவியும் 50 ஆண்டுகளாகியும் அதே தோற்றத்தில் தொடர்ந்தனர். அவர்களுடைய உருவத்தை மாற்ற லக்ஷ்மணும் விரும்பவில்லை, வாசகர்களும் ஏன் என்று கேட்கவில்லை.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது திருவாளர் பொதுஜனத்தை உறையில் அச்சிட்டு வெளியிட்டு பெருமைப் படுத்தியது இந்திய அஞ்சல்துறை.

புணேயில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்து வளாகத்திலும் மும்பை மாநகரின் ஒர்லியில் கடலைப் பார்த்த நிலையிலும் மிகப்பெரிய சிலையாகவே திருவாளர் பொதுஜனம் எழுப்பப்பட்டிருக்கிறார். இது லக்ஷ்மணின் ஓவியத்துக்குக் கிடைத்த தனிப்பெரும் அங்கீகாரம்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x