Last Updated : 25 Oct, 2016 09:41 AM

 

Published : 25 Oct 2016 09:41 AM
Last Updated : 25 Oct 2016 09:41 AM

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?

சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?

என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள். பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில் சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக் கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி. தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும் பிரிந்துவிட்டார்கள். ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத் தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி. அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும் அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை வாங்கியிருக்கிறான். ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப் போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.

“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள். தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை. பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக் குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள் போய்விட்டிருக்கிறாள்.

பெற்றோர் மீது புகார்

1098 எனும் கட்டணமில்லா தொலைபேசிக்கு ஓராண்டில் சராசரியாக இந்தியாவில் 20 லட்சம் அழைப்புகள் வருகின்றன. “இப்படி வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை கட்டாய வேலையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள் பற்றியது தான்” என்கிறார் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர் தாமஸ் ஜெயராஜ். “முதலில் பார்த்தபோது அவள் நடுநடுங்கிப் போயிருந்தாள். தற்போது அரசின் காப்பகத்தில் இருக்கிறாள். இனிமேதான் பள்ளியில் சேர்க்கணும். இவளைக் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தியவர் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளோம். குழந்தையை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்ட பெற்றோர் மீதும் புகார் பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பின் பொறுப்பாளர் டாக்டர் மணிகண்டன்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் நார்வே நாட்டில் வசித்த இந்திய மென்பொருள் பொறியாளர், அவரது மனைவியிடமிருந்து குழந்தைகளை அரசு பறித்து வைத்துக் கொண்டது. ‘குழந்தைக்குத் தேவையான பராமரிப்பைக் கொடுக்கவில்லை’ என்பது குற்றச்சாட்டு. சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை போராடி அந்தக் குழந்தைகளை மீட்டது. ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு, குழந்தைகள் இந்தியா வந்து சேர்ந்தன. தாயிடம் இணைந்தன. அமெரிக்காவிலும் இதுபோன்ற ஒரு சம்பவம். குழந்தையை நன்றாகப் பராமரிக்கவில்லை என்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் கைதுசெய்யப்பட்டனர். குழந்தைகள், ஒரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் சொந்தமானவர்கள் அல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்துகள். மக்கள் நல அரசுகள் அப்படித்தான் பார்க்கின்றன. குழந்தையைக் கைவிட்டதற்காகப் பெற்றோர் மீது வழக்கு போடும் நிலை அரசுக்கு இருக்கிற கடமையின் அடையாளம்தான்.

மனதை உலுக்கும் சூழல்

இந்தியச் சூழல் மனதை உலுக்குகிறது. ஆள் கடத்தல் தொடர்பாக 2015-ல் இந்தியாவில் பதிவான குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்கள் 40% குழந்தைகள். பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள். இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம். பாதிக்கப்பட்ட 9,127 பேரில் 18 வயதுக்குள்ளானவர்கள் 43% என்கின்றன தேசியக் குற்றப் பதிவேடுகளின் நிறுவனம் தரும் புள்ளிவிவரங்கள்.

தாம்பரத்திலிருந்து தப்பித்த சிறுமிக்கு உதவும் உள்ளங்கள் கிடைத்தன. கிடைத் திருக்காவிட்டால்? அப்படிக் கிடைக்காமல் எத்தனை எத்தனை குழந்தைகள் இந்தப் புள்ளிவிவரங்களுக்குள் புழுங்கித் தவிக்கும்? கோவில்பட்டியில் சில தினங்களுக்கு முன்புகூட 10 வயதுச் சிறுமியைப் பாய் முடைகிற கம்பெனியினர் கடத்தி, 20 நாட்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினர் என்றும் கடத்தவில்லை, பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் வைத்திருந்தோம் என்றும் மாறுபட்ட செய்திகள் வந்தன.

வெட்கமாக இல்லையா?

எப்படித் தீர்வுகாண்பது இந்தப் பிரச்சினைக்கு? சமூகத்தில் காணப்படும் மௌனத்தைவிட அரசியல் களத்தில் காணப்படும் மௌனம்தான் மனதை அரிக்கிறது. ஆளும்கட்சியான அதிமுகவுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை. பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இது ஒரு பிரச்சினை இல்லை. காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு, பாமகவுக்கு, விடுதலைச் சிறுத்தைகளுக்கு, மதிமுகவுக்கு எவருக்குமே பிரச்சினை இல்லை என்றால், யாருக்குத்தான் இது பிரச்சினை? ஒரு குழந்தையை நடைப்பிணமாக ஆக்கும் இந்தக் கொடுமை ஏன் யாரையும் உலுக்கவில்லை?

உலகின் பெரும்பான்மை நாடுகளின் ஊடகங்களுக்குச் செய்திகளைப் பரிமாறும் ‘ராய்ட்டர்’ நிறுவனம் ‘15 டாலருக்கு சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்டாள்’ என்ற தலைப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. யாருக்குமே வெட்கமாக இல்லையா?

பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமில்லை. அது எலியைப் பிடிக்க வேண்டும். காரியம் முக்கியமா, வீரியம் முக்கியமா என்பார்கள் கிராம மக்கள். காரியம் நடக்க வேண்டும். எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்; எப்படியான திட்டங்களை வேண்டு மானாலும் வகுத்திடுங்கள்; குழந்தைகள் விற்கப்படுவதை, பிச்சையெடுக்க அனுப்பப் படுவதைத் தவிர்க்க வழி காணுங்கள். அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், முதலில் அரசியல் களத்தில் இதுகுறித்து விரிவான விவாதங்கள் நடக்க வேண்டும். முதலில் பேசுங்கள்!

- தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x