Published : 05 Jun 2016 11:56 AM
Last Updated : 05 Jun 2016 11:56 AM

பேப்பர் அண்ணாச்சி கொண்டுவந்த உலகம்

தமிழ்நாட்டின் அழகான கடற்கரைகளில் ஒன்றைத் தன்னகத்தே கொண்ட மணப்பாடு கிராமம் என் சொந்த ஊர். மண் குன்றுகள், அவற்றின் இடையேயான மரங்கள், சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாத மலர்ச்சியைத் தரும் சில்லென்ற கடல் காற்று என்று மணப்பாடு சூழலே தனி. எங்கள் கால மணப்பாடு வாழ்க்கையில், வெளியுலகத்தை ஊருக்குள் கொண்டுவருவதில் முக்கியமானவர் ‘பேப்பர் அண்ணாச்சி’.

சைக்கிளில் வருவார் அண்ணாச்சி. முந்தைய நாள் தினசரிகளைக் கொண்டுவந்து சந்தாதாரர்களுக்கு விநியோகிப்பார். வார இதழ்களும் அவர் கொண்டுவருபவையே. பல நாட்களில் அவர் எப்போது வருவார் என வீட்டு ஜன்னல் வழியாக வழிமேல் விழிவைத்துக் காத்துக் கிடந்த நினைவு இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் தினமணியுடன் இணைப்பாக வரும் தினமணி கதிரில் லா.ச.ராமமிருதத்தின் மிஸ்டிக் எழுத்துகளில் கிறங்கி, சுஜாதாவின் ‘சிலிக்கன் சில்லுப் புரட்சி’ அத்தியாயங்கள் எடுத்துச் செல்லும் எதிர்காலக் கனவுகளில் மிதந்ததுண்டு. 90 பைசா கொடுத்து வாங்கும் ‘ஜுனியர் விகடன்’ இதழை அண்ணாச்சியின் சைக்கிளில் தொங்கும் பையில் இருந்து எடுத்து, அங்கேயே நின்று படித்துத் தீர்த்த நினைவிருக்கிறது.

தினசரி, வார இதழ்களைத் தாண்டி வாசித்தல் விசாலமானதிற்குக் காரணங்கள் சில உண்டு. அப்பா மொழிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம். பாடப் புத்தகங்களைத் தாண்டி அவசியம் வாசிப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர் அவர். அப்பாவுக்கு இந்தி மற்றும் மலையாள மொழிகளில் வாசிப்பு அனுபவம் உண்டு என்றாலும், நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழ, அகல வாசிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக்கொண்டே இருப்பார்.

அடுத்து, பள்ளியில் இருந்த நூலகம். சிறிய கிராமப் பள்ளி ஒன்றின் நூலகம் என்றாலும், இலக்கியங்களிலிருந்து என்சைக்ளோபீடியா வரை தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து படித்துக்கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே இயங்கும். ராஜாஜியின் ‘சக்ரவர்த்தி திருமகன்’, கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, யாரோ ஒருவர் எழுதி யாரோ மொழிபெயர்த்த ‘கிரேக்கம் - முழு வரலாறு’, ராகுல் சாங்கிருத்யாயனின் ‘வால்கா முதல் கங்கை வரை’ எனக் கலவையாகப் படித்ததுண்டு.

எட்டாவது வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன் - குட்டியான கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நண்பர்கள் சிலருடன் ஆரம்பித்தேன். பள்ளியில் இருக்கும் நூலகம் சரியான பராமரிப்பு இல்லாததால், ஒரு அறை முழுக்க நிரம்பியிருக்கும் புத்தகங்களை கரையான் அரித்து அழித்துவிட்ட சோகத்தை ‘கவர் ஸ்டோரி’யாக எழுதிய நினைவிருக்கிறது.

எண்பதுகளில் சோவியத் யூனியனில் இருந்து நூல்கள் கொண்டுவரப்பட்டன. நல்ல காதிதங்களில், பளிச்சென அச்சடிக்கப்பட்ட ஓவியங்களுடன் ‘போரும் அமைதியும்’ போன்ற ரஷ்ய, உக்ரேனிய இலக்கியங்களின் மொழிபெயர்ப்பு நூல்களையும் ஆர்வமாகப் படித்த நினைவிருக்கிறது.

பள்ளியில் தமிழ் வழியில்தான் படித்தேன். அதனால் இயல்பாகவே தமிழ் ஆர்வம் இருந்தது. ஆங்கிலத்தைச் சரியாக எழுத, படிக்க, ஆங்கில இலக்கண நூலான ‘ரன் & மார்டின்’ நான் எழுத முயலும் ஆங்கிலத்தைக் கண்காணிக்கும். கல்லூரியில் படித்த காலத்தில் அப்பாவுக்கு எழுதிய கடிதங்கள் சிவப்பு மையால் சுழிக்கப்பட்டு எனக்குத் திரும்பி வந்து சேரும்.

பள்ளி முடிந்து கல்லூரி வந்ததும் வாசிப்புத்தளம் இன்னும் விரிவானது. பாரதியின் கவிதை மற்றும் கட்டுரைகள், மெளனி, லா.ச.ரா., அசோகமித்திரன் போன்ற சமகால எழுத்துகள். கி.ராஜநாராயணன் மூலம் அறிமுகமான ‘கோபல்லபுரத்து மக்கள்’. தொடர்ந்து சுஜாதா. ஆங்கிலத்தில் ரிச்சர்ட் பாக் எழுதிய ‘ஜோனத்தன் லிவிங்ஸ்டன் ஸீகல்’, ‘ஷோகன்’ மற்றும் பிற நாவல்கள், இவற்றுடன் 90களில் ஆங்கிலத்தின் ஜனரஞ்சக எழுத்துக்களை எழுதிய சிட்னி ஷெல்டன் போன்றோரையும் படித்ததுண்டு.

நான் அப்போது தங்கியிருந்த ஸ்ரீவில்லி புத்தூரில் இருந்த பென்னிங்டன் தனியார் நூலகம், அதன் ஊழியர்கள் நன்றி கலந்த நினைவில் எப்போதும் இருப்பார்கள். அதேபோல, எனது அண்ணன் விக்டருக்கும் எனக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உண்டு. எப்போதெல்லாம் சந்திக்கிறோமோ, அப்போதெல்லாம் அவர் கடைசியாகப் படித்த புத்தகத்தை எனக்கு அவர் தர வேண்டும். இன்று வரை அவர் புத்தகங்கள் தருகிறார்.

தொண்ணூறுகளில் புலம்பெயர்ந்து அமெரிக்கா வந்த புதிதில் தொலைக்காட்சி வாங்கி, அதன் நிகழ்ச்சிகளில் திளைத்தேன். வெகு சீக்கிரம் சீரியல்கள், விளையாட்டுப் போட்டிகள், திரைப்படங்கள் என வாசிப்பு நேரத்தைத் தொலைக்காட்சி கபளீகரித்ததை உணர்ந்தேன். அன்று தூக்கிப்போட்ட டிவியை அதன் பின் நினைக்கவே இல்லை. வீடு, அலுவலகம் தவிர்த்து அதிக நேரம் செலவழிப்பது, நானிருக்கும் கோர்ட் மடேரா (Corte Madera) என்ற சிற்றூரின் நூலகம்.

மணப்பாடு கிராமத்துச் சிறுவனை கோர்ட் மடேராவுக்குக் கொண்டுவந்தது வெறும் படிப்பு என்று நிறையப் பேருக்கு ஊரில் நினைப்பு உண்டு. வாழ்நாள் முழுக்க நான் கடந்துவந்த என் ஆசிரியர்கள் மட்டும் அல்ல; பேப்பர் அண்ணாச்சிகளும் சேர்ந்துதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தார்கள் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x