Published : 14 Jun 2015 12:15 PM
Last Updated : 14 Jun 2015 12:15 PM

ஒரு நதியின் வாக்குமூலம்: பாம்புபோல் வளைந்து செல்லும் காளிங்கராயன்!

நாடு சுதந்திரம் அடைந்த பிறகுதான், சமவெளியில் பவானியும் மோயாறும் இணையும் இடத்தில் பவானி சாகர் அணை கட்டப்பட்டது. ஆனால், 13-ம் நூற்றாண்டிலேயே காளிங்கராயன் அணைக்கட்டு மற்றும் வாய்க்கால் திட்டம் கட்டப்பட்டுவிட்டது.

காளிங்கராயன் அணைக்கட்டு, பவானி ஆறு மற்றும் காவிரியுடன் கலக்கும் பகுதிக்கு அருகே (தற்போதைய பவானி நகரம்) கட்டப் பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு மூன்று பகுதிகளைக் கொண்டது. அணையின் முதன்மைப் பகுதி 757 அடியும், மத்திய பகுதி 854 அடியும், இறுதிப் பகுதி 13,500 அடியும் நீளம் கொண்டுள்ளது. நவீன வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இந்த அணையில் கட்டப்பட்ட காளிங்க ராயன் வாய்க்கால், சிறந்த நீர் மேலாண் மைக்கான இயற்கை சார்ந்த அறிவியல் திட்டமாகப் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ, இதை உலகின் பழமையான வாய்க்கால்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

வாய்க்காலின் தலை மதகு முதன்மை அணைக்கட்டின் தென்கோடியில் உள்ளது. மட்டச் சரிவு மற்றும் பாம்பு போல் வளைந்து நெளிந்து செல்லும் இயற்கை தொழில்நுட்பம் மூலம் இந்த வாய்க்கால் தாழ்வான பகுதியிலிருந்து மேடான பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்கிறது. வாய்க்காலின் நீளம் 90 கி.மீ. இந்த வாய்க்கால் மூலம் 17,776 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

அரசன் எடுத்த சபதம்

அணை மற்றும் வாய்க்கால் கட்டப் பட்ட வரலாறு குறித்து வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன் கூறும் போது, "சத்தியவர்மன் வீரபாண்டி யனின் பிரதிநிதியாக கொங்கு நாட்டை ஆட்சி செய்தவர் காளிங்கராயன். இந்தக் கால்வாயை அவர் 13-ம் நூற்றாண்டில் 1270 - 1282 கால கட்டத்தில் கட்டியிருக்கலாம். வாய்க்கால் திட்டம் பற்றி பல்வேறு செவிவழிச் செய்திகள் நிலவினாலும், பெரும் பாலும் சொல்லப்படுகிற வரலாறு இதுதான். காளிங்கராயனின் சொந்த ஊர் வெள்ளோடு. அவர் வாழ்ந்த பகுதிகள் மேடானவை. அதனால், அங்கு ஆற்றுப் பாசனம் கிடையாது. கிணற்றுப் பாசனம் மட்டுமே.

தண்ணீர் பற்றாக்குறையால் சரியான விவசாயம் இல்லை. புன்செய் பயிர்களை மட்டுமே விளைவிக்க முடிந்தது. ஒருமுறை காளிங்கராயன் தன் மகனுக்கு பெண் கேட்க தஞ்சைப் பகுதி யில் வசிக்கும் தன் சகோதரி வீட்டுக் குச் சென்றிருக்கிறார். அந்த வீட்டின் சமையற்காரர் இவர்களுக்கு விருந்து சமைக்க பழைய அரிசி போடுவதா? புதிய அரிசி போடுவதா? என சகோத ரியின் குடும்பத்தினரிடம் கேட்டிருக் கிறார். அதற்கு, 'நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியாய் இருந்தால் என்ன?' என்று கேலி செய்திருக்கிறார்கள்.

கனவில் வந்த பாம்பு

கோபமடைந்த காளிங்கராயன், தனது தேசத்தின் புன்செய் நிலங்களை எல்லாம் நன்செய் நிலங்களாக மாற்றிக் காட்டுகிறேன் என்று சபதம் எடுக்கிறார். பவானி ஆற்றிலிருந்து தனது தேசமான மேட்டுப் பகுதிக்கு கால்வாய் வெட்ட திட்டமிடுகிறார். பல ஆண்டுகள் ஆய்வுகள் செய்தும் அது சாத்தியம் இல்லை என்று பொறியாளர்கள் கைவிரிக்கிறார்கள்.

ஒருநாள் காளிங்கராயனுக்கு கனவு வருகிறது. அதில், ஒரு பாம்பு மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து முன்னேறு கிறது. அப்போதுதான் தண்ணீரையும் அப்படி கொண்டு செல்லலாம் என்று காளிங்கராயனுக்கு பொறி தட்டியது. அதன்படி, தனது சொந்த செலவில் வாய்க்காலையும் பாம்புபோலவே வளைத்து நெளித்து கட்டி முடிக்கிறார். அவர் சபதம் எடுத்தபடி மேட்டுப் பகு தியை நோக்கி பாய்ந்து வந்து சேர்ந்தது பவானி தண்ணீர். புன்செய் நிலங்கள் எல்லாம் நன்செய் நிலங்களாயின.

நாட்டைவிட்டு வெளியேறிய அரசன்

காளிங்கராயன் 'சாத்தந்தை' என்ற குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப் படுகிறது. ஆனால், இந்த வாய்க்காலை வெட்ட பெரும்பாலும் உதவியர்கள் தலித் சமூகத்தினரே. மேலும், வாய்க்காலை கட்டும்போது உதவாத தன் குலத்தினர் எந்த விதத்திலும் வாய்க்காலை பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறார். அப்போது, சிலர் காளிங்கராயனின் சொந்த உபயோகத் துக்காக வாய்க்காலை வெட்டினான் என்று பேசினார்கள். அதைக் கேட்ட காளிங்கராயன், நான் மற்றும் எனது சந்ததியினர் எவரும் வாய்க்காலில் இருந்து சொட்டுத் தண்ணீர்கூட பயன் படுத்தமாட்டோம் என்று சொல்லி, தனது நாட்டை விட்டு வெளியேறி ஊத்துகுளிக்கு இடம் பெயர்ந்துவிட்டார்.

இந்த வாய்க்காலை கோண வாய்க் கால், பழைய வாய்க்கால், காரை வாய்க் கால் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இன்றும் இந்த வாய்க்கால் சற்றும் சிதிலமடையாமல் இருப்பதே அன்றைய தரமான கட்டுமானத்துக்கு சாட்சி" என்கிறார் இளங்கோவன்.

*

17-ம் நூற்றாண்டில் கொடிவேரி கிராமத்தில் பவானி ஆற்றில் மைசூர் அரசர்களால் கட்டப்பட்ட கொடிவேரி அணைக்கட்டும் மிகப் பெரிய சாதனையே. இன்றைக்கும் ஏராளமான விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்குகிறது இந்த அணை. இதன் நீளம் 496 அடி. நீர்ப் பிடிப்பு பகுதிகள் 1,900 சதுர மைல்கள். அங்கிருந்து வினாடிக்கு 1,22,066 கன அடி தண்ணீர் வரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அணையின் வலது பக்கமிருந்து தடப்பள்ளி வாய்க்காலும் (77 கி.மீ. நீளம்), இடது பக்கமிருந்து அரக்கன்கோட்டை வாய்க்காலும் ( 32 கி.மீ. நீளம்) பிரிகின்றன. இரு வாய்க்கால்களிலும் மொத்தம் 655 மதகுகள் கட்டப்பட்டுள்ளன. இரு வாய்க்கால்கள் மூலம் தற்போது 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 1948-49 ஆண்டில் இந்த அணையின் முழு நீளத்துக்கும் இரண்டு அடி உயரத்தில் கதவுகள் பொருத்தப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில் அணையின் உயரம் இரண்டரை அடி உயர்த்தப்பட்டுள்ளது.

(பாய்வாள் பவானி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x