Last Updated : 10 Jul, 2014 10:00 AM

 

Published : 10 Jul 2014 10:00 AM
Last Updated : 10 Jul 2014 10:00 AM

என் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி!- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் எங்கள் மகள் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். கொண்டாட்டமாகக் கழிந்தது அந்த நாள். நாள் முழுக்கப் பேசிக் களைத்த எங்களுக்கு அன்று மாலைதான், பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவைப் பார்த்தவுடன் பெற்றோர்கள் எல்லோரும் வாகனங்களைப் பிடித்துக்கொண்டு மேற்குத் தமிழகத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. ஊத்தங்கரையில் ஆரம்பித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்செங்கோடு போய் சத்தியமங்கலம் காடு வரை நீண்டது அவர்களின் பயணம். நீங்கள் என்ன இன்னும் இங்கேயே இருக்கிறீர்கள் என்று பலர் எங்களை “அட மக்குங்களா!” என்பதுபோல பார்த்தனர். “பாப்பா நல்ல மார்க் வாங்கியிருக்கு, அதனால் பரவாயில்லை. இன்னைக்கு நைட் கிளம்பி நாளைக்குப் போயிடுங்க. அப்பத்தான் நல்ல ஸ்கூலில் சீட் கிடைக்கும்” என்று எங்களுக்கு அக்கறையான ஆலோசனைகள் வழங்கினார்கள். எனக்கோ, நாங்கள் நடைமுறை வாழ்விலிருந்து பின்தங்கிவிட்டோமோ என்று சந்தேகம் எழ ஆரம்பித்தது.

மகளை எங்கு சேர்ப்பது என்று அப்போதுதான் யோசிக்கத் தொடங்கினோம். மேலே சொன்ன எந்த ஊரின் பள்ளியில் சேர்ப்பது என்றாலும் மகளை விடுதியில் சேர்க்க வேண்டும். பதினான்கு வயதுக்குள் விடுதி வாழ்க்கையா என்று எனக்கே பீதியாக இருந்தது. அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு, நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள், இரண்டாண்டுகளில் மாணவர்களுக்குத் தரப்படும் மனநெருக்கடிகள், அங்கு நடக்கும் மாணவர்களின் தற்கொலைகள் இவற்றையெல்லாம் கேட்டறிந்த பிறகு மதிப்பெண் அறுவடை நிலையங்களான இந்தப் பள்ளிகளே வேண்டாம் என்று முடிவுசெய்தோம். உள்ளூரிலேயே சேர்க்க முடிவெடுத்தோம். உள்ளூரில் சேர்க்க நல்ல பள்ளி எது என்று ஆலோசிக்கும்போது, நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் முன்வைத்த பள்ளிகள் 99% தனியார் பள்ளிகளாகவே இருந்தன. 23 ஆண்டுகள் அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்துக்கொண்டு, அரசாங்கத்திடமிருந்து நல்ல ஊதியத்தைப் பெற்று என்னை நடுத்தர வர்க்கத்துக்கு உயர்த்திக்கொண்டு, என்னுடைய பிள்ளைகளுக்கு வசதியான தனியார் பள்ளிகளில் கல்வி கொடுத்துக்கொண்டிருப்பதற்காகப் பலமுறை குற்றவுணர்ச்சியோடும் இயலாமையோடும் இருந்த எனக்கு இப்பொழுது லேசாகத் துணிச்சல் வந்தது. நம் பள்ளியைவிட வேறு நல்ல பள்ளி வேறெது இருக்க முடியும்? இந்த யோசனை எனக்குள் உதித்த கணம் மனசுக்குள் உடைந்த பனிக்கட்டியின் குளுமையை வார்த்தைகளில் சொல்ல முடியாது. என்னால் சரிசெய்யக்கூடிய தவறை நான் சரி செய்துவிட்டதுபோல் மனம் லேசானது.

ஆனால், என்னுடைய முடிவை நடைமுறைப் படுத்துவது அத்தனை எளிதல்ல என்பது நான் எடுத்த முடிவை வெளியில் சொன்ன பிறகே எனக்குப் புரிய வந்தது. என் உறவினர்களில் தொடங்கி நண்பர்கள் வரை எல்லோருமே என் யோசனைக்கு எதிராக இருந்தார்கள். மகள் முதல் வார்த்தையிலேயே மறுத்துவிட்டாள். “நான் பத்தாவதோட நின்னாலும் நின்னுப்போயிடுவேனே தவிர, உங்க ஸ்கூல்ல படிக்க மாட்டேன்” என்று முகத்தில் அறைந்ததைப் போலச் சொன்னாள். அரசுப் பள்ளியில் சேர்ப்பதை அவள் அவமானமாகக் கருதியதை உணர்ந்தோம். எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அரசுப் பள்ளிகளுக்கு எதிராக மாணவர்களின் மனநிலை நம் வீட்டிலேயே இப்படி இருக்கிறதே என்று எனக்கு மயக்கம் வராத குறையாகத் தலைசுற்றியது. ஆனால், மகள் மறுக்கமறுக்க நான் என்னுடைய முடிவில் உறுதியாக மாறினேன்.

கடும் பாலையைக் கடப்பதைப் போன்ற கடுமையான பத்து நாட்கள். தினம் விதவிதமான அணுகுமுறைகளில் அவளிடம் பேசி, அவளுக்குப் புரிகிற விதத்தில் பல செய்திகளைச் சொல்லி... அப்பாடா… ஒரு வழியாக அவளைச் சம்மதிக்க வைத்தோம். அரைமனதோ, முழுமனதோ ஒப்புதல்தானே முக்கியம்! பள்ளிக்கு அழைத்துச்சென்றோம். பள்ளிக்கான ஆண்டுக் கட்டணமாக 750 ரூபாயைக் கட்டியபோது எனக்கு ஒரு கணம் ஸ்தம்பித்தது. இதுவரை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக எத்தனை லட்சங்களை எண்ணிக் கொடுத்திருக்கிறோம்?

முதல் நாள் என்னுடன் வந்தவள் அடுத்த நாள் காலையிலேயே நான் தனியாக சைக்கிளில் போகிறேன் என்று கிளம்பிவிட்டாள். “ஏன்டா?” என்றால், “உன்கூடவே வந்து போனால் பசங்க ஃபிரெண்ட்லியா இருக்க மாட்டாங்கம்மா” என்றாள். அன்று மாலை வீட்டுக்கு வந்தவுடன், “எப்படிடா இருந்தது வகுப்புகள்?” என்றேன். “ம்மா...சூப்பர்ப்மா… எல்லா டீச்சரும் நல்லா நடத்துறாங்க...” என்றாள். இதைவிட வெகுமதி வேறென்ன எனக்கு? அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தேன்.

இப்போது என் மகள் அரசுப் பள்ளியில் படிக்கிறாள். முதல் மகிழ்ச்சி... மேடைகளில், படைப்புகளில் வலியுறுத்தும் ஒரு விஷயத்தை நடைமுறைப்படுத்தியிருப்பது. இரண்டாவது மகிழ்ச்சி அந்தப் பள்ளி இருபாலர் பள்ளியாக இருந்தபோது என் அப்பா படித்த பள்ளி. என் அப்பா படித்த பள்ளியில், நான் படித்த பள்ளியில், நான் ஆசிரியராக இருக்கும் பள்ளியில் என் மகளும் படிக்கிறாள். மூன்றாவது மகிழ்ச்சி, அடுத்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்தவுடன் இவளைப் பார்த்து, நன்றாகப் படிக்கும் இன்னும் சில குழந்தைகளும் எங்கள் பள்ளிக்கு வருவார்கள். நிச்சயம்!

- அ. வெண்ணிலா, எழுத்தாளர், ஆசிரியர், தொடர்புக்கு: vandhainila@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x