Published : 16 Jun 2014 10:00 AM
Last Updated : 16 Jun 2014 10:00 AM

அப்பா ஒரு முன்னுதாரணம்

படிக்காமலும் வேலைக்குப் போகாமலும் சும்மா இருப்பது, தகப்பன் இல்லாத வீடுகளில்தான் அதிகம்.

சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து உரைநிகழ்த்தும் நிகழ்ச்சிக்கு என்னுடைய 14 வயது மகன் கார்லோஸும் வந்திருந்தான். மேடைக்குப் பின்னால் இருந்த அறையில் எல்லாப் பேச்சாளர்களும் அறிமுகப்படுத்திக்கொண்டனர். குடிப்பதற்காக ஒரு பாட்டில் ரூட் பீரை கார்லோஸ் என்னிடம் கொடுத்தான்.

எனக்குத் தெரியாமலேயே அதை அவன் நன்றாகக் குலுக்கியிருக்கிறான். நான் பாட்டிலைத் திறந்தபோது உள்ளேயிருந்தது அப்படியே கொப்பளித்துப் பொங்கியது. நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் சிறிதளவு சிந்திவிட்டது.

இந்த ஒரு சம்பவத்தைத் தவிர, அவன் எனக்கு நல்ல உதவியாளன். அவனோடு சேர்ந்து பயணம் செய்யும்போது, நல்ல வாழ்க்கைக்கு அடிப்படை கடுமையான உழைப்பு என்பதை அவன் மனதில் என்னால் பதியவைக்க முடிகிறது.

புத்தரின் கடைசி போதனை

புத்தர் 45 ஆண்டுகள் அயராது மேற்கொண்ட பிரச்சாரத்துக்குப் பிறகு, கடைசியாகப் பேசிய வார்த்தைகள் ‘மனப்பூர்வமாகக் கடமையைச் செய்யுங்கள்’ என்ற உபதேச வார்தைகளைத்தான் என்பார்கள். நாம் செய்யும் வேலையே நம்முடைய ஆன்மிக விடுதலைக்கும் வழிவகுக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கடுமையான உழைப்பே நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும் என்பதற்கு எத்தனையோ வெற்றியாளர்களின் வாழ்க்கையே நல்ல உதா ரணங்கள். மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவொன்று ஆயிரக் கணக்கான அமெரிக்கக் குடும்பங்களின் வருவாய் மற்றும் குடும்பநிலை

குறித்த தரவுகளைத் திரட்டி, ஆய்வுகளை மேற் கொண்டுவருகிறது. 2009-ல் அது எடுத்த தரவுகளை ஆய்வுசெய்துவிட்டுக் கூறுகிறது, “தங்களைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டவர்களே அதிகம் உழைத்துக் குடும்பங்களை முன்னேற்றுகின்றனர். தங்களைப் பற்றிய நல்ல கருத்து இல்லாதவர்களின் வேலையும் சுமாராக இருக்கிறது, அவர்களுடைய குடும்ப முன் னேற்றமும் அதில் எதிரொலிக்கிறது” என்று.

மகிழ்ச்சி எதில்?

வாழ்க்கையில் எது நடந்தாலும் மகிழ்ச்சியே அடையாதவர்கள் வேலைத்திறனிலும் பின் தங்கியே இருக்கின்றனர். வழக்கமான வேலை நேரத்தைவிட அதிக நேரம் உழைக்கின்றவர்கள் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதுடன் வசதியாகவும் வாழ்கின்றனர். வேலைநேரத்திலேயே சோம்பித்திரிந்து, சலித்துக்கொண்டு, மற்றவர்கள் வேலையையும் கெடுக்கிறவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமில்லாமல் இருப்பதுடன் குடும்பத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்காதவர்களாக இருக்கின்றனர்.

அதிக நேரம் வேலைசெய்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதல்ல இந்த ஆய்வின் முடிவு, வேலையே செய்யாமல் இருந்தால் மகிழ்ச்சி வந்துவிடாது என்பதே இதன் பொருள்.

வேலை கிடைக்காமல் வறுமையில் இருப்பவர்களைவிட, வேலை கிடைத்தும் அதைச் செய்யாமல் இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிடுவதில்லை. திருப்திகரமான வாழ்க்கை அமைய வேண்டு மென்றால், சுயமாகச் செய்யும் வகையில் ஏதேனும் ஒரு கைத்தொழில் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இதை யார் நமக்குக் கற்றுத் தருவது? குடும்பத்தின் தலைவரான தந்தைதான் இதைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தருகிறார்.

சபாத் என்று அழைக்கப்படும் ஓய்வு நாளிலும் ஏசுநாதர் வேலை செய்துகொண்டிருந்தார். ஓய்வு நாளில் வேலையா என்று அவரைக் கேட்டனர். சபாத் நாளிலும் என் தந்தை வேலை செய்வார். எனவே, அவரைப்போலவே நானும் வேலை செய்கிறேன் என்றார் ஏசு. “தன் மகனுக்கு ஒரு தொழிலையோ, கைத்திறன்கொண்ட வேலையையோ கற்றுத்தராத தகப்பன் அவனுக்கு (மறைமுகமாக) திருடக் கற்றுத்தருகிறான்” என்று சற்றுக் கோபமாகவே கூறியிருக்கிறது யூதர்களின் புனித நூலான தால்முட்.

ஒரு தந்தைதான் வீட்டில் முன்னுதாரணமாக இருக்க முடியும். ஊக்கமும் உற்சாகமும் மிக்க ஒருவர் வேலையில் இருந்தால் நிச்சயம் சொல்லிவிடலாம், அவருடைய வீட்டில் இன்னொரு நல்ல வேலைக்காரர் உருவாகிக்கொண்டிருக்கிறார் என்று.

அப்பா இல்லாத குழந்தைகள்

பிரின்ஸ்டன் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியை சாராமெக்லனான், தகப்பன் மறைவுக்குப் பிறகு, மகன்களும் மகள்களும் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று பல ஆண்டுகள் தொடர்ந்து கவனித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். தகப்பன் இல்லாத வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்துவது, ஏராளமான குழந்தைகள் உள்ள வறிய குடும்பத்துப் பிள்ளைகள் படிப்பை நிறுத்துவதைவிட இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கிறது.

அதே பள்ளிக் கூடத்தில் தொடர்ந்து படித்தாலும், அதே முறையில் ஆசிரியர்கள் கற்றுத்தந்தாலும் தகப்பன் இல்லாத குழந்தைகளின் கல்வி ஆர்வம் குறைகிறது, பள்ளிக்குச் செல்லும் நாள்களின் எண்ணிக்கையும் குறைகிறது. தகப்பன் இல்லாமல் வளரும் பையன்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சோம்பலாக இருப்பதும் ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கிறது. வாலிபப் பையன்கள் மேற்கொண்டு படிக்காமலும் வேலைக்குப் போகாமலும் சும்மா இருப்பது, தகப்பன் இல்லாத வீடுகளில்தான் அதிகம்.

வேலையின்மை பிரச்சினை

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகிவருகிறது. 1953-ல் வேலையில்லாமலும் வேலைக்குப் போகாமலும் இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 14% ஆக இருந்தது. 2014-ல் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 30% ஆக இருக்கிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு 25 வயது முதல் 54 வயது வரையிலான ஆண்களில் 8% வேலைக்குப் போகாமல் இருந்தனர்.

இப்போது அந்த எண்ணிக்கை 17% ஆக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு மட்டுமல்ல, அதைச் சரியாக எதிர்கொள்ள நம்மிடம் தகுந்த உத்தி இல்லாததும். அமெரிக்க வரலாற்றிலேயே இருந்திராத வகையில், இளவயது ஆண்கள் கணிசமான எண்ணிக்கையில் வேலைக்குப் போகாமல் இருப்பது இப்போதுதான். 2007 டிசம்பர் முதல் 2009 டிசம்பர் வரையில் வேலையிழந்த ஒவ்வொரு 100 பெண்களுக்கும் இணையாக 217 ஆண்களும் வேலையிழந்துள்ளனர்.

அரசின் கொள்கை மட்டுமல்ல… மக்களுடைய கலாச்சாரமும் இந்த வேலையின்மைக்கு முக்கியக் காரணம். அமெரிக்கர்கள் ஆண்டுதோறும் கட்டாயம் ஒரு மாதம் ஓய்வில் இருக்க விரும்புகின்றனர் என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. ஸ்பெயினைச் சேர்ந்த என்னுடைய மாமனாரும் மாமியாரும் அடிக்கடி சொல்வார்கள், “நீங்கள் வேலை செய்வதற்காக வாழ்கிறீர்கள், நாங்கள் வாழ்வதற்காக வேலை செய்கிறோம்” என்று! அப்படி வாழ்ந்த அமெரிக்க சமூகமா இது?

ஓய்வும் இடையறாத சோம்பேறித்தனமும் வெவ்வேறு தன்மையை உடையன. ஸ்பெயினில் வேலையில்லாத் திண்டாட்டம் 25% என்னும்போது அவர்கள் சொல்வதைப் போல, வாழ்வதற்காக வேலை செய்யும் இனமாகத் தெரியவில்லை; அவர்கள் நாட்டு இளைஞர்களிடையே 54% வேலை யில்லாத் திண்டாட்டம் நிலவுவதைப் பார்க்கும்போது கார்லோஸ் அங்கிருந்தால் எதிர்காலம் கடினம்தான் என்று தெரிகிறது.

இந்த தந்தையர் நாளின்போது நானும் தொடர்ந்து வேலைசெய்துகொண்டு, அப்படி வேலை செய்யும் இடத்துக்கு என்னுடைய மகனையும் அழைத்துச் செல்வதை நான் பெருமையாகவே கருதுகிறேன்!

- © தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

ஜூன் 15 தந்தையர் தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x