Last Updated : 07 Jul, 2018 11:38 PM

 

Published : 07 Jul 2018 11:38 PM
Last Updated : 07 Jul 2018 11:38 PM

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாறுமா காவிரிப் படுகை?

 

வாய்க்கால்களில் நிரம்பிவரும் நீரில் கெண்டையும், கெழுத்தியும் எதிர்த்து விளையாடிவர, காலால் மடைதிறந்து, வெள்ளமென நீர்பாய்ந்த வயல்களில் வரப்பு மறைந்து செந்நெல் விளைந்து, எங்கெங்கும் பச்சை ஆடை போர்த்தி முப்போகம் விளைந்த காவிரிப் படுகை, கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்குக் கருகிப்போய் கிடக்கிறது.

அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் கிராமத்து டீக்கடைகளில் தொழிலாளர்கள் டீக்கும் காபிக்கும் அலைமோதுவார்கள். அவர்களைத் தங்கள் வயலுக்கு வேலைக்கு அழைக்க விவசாயிகளும் அங்கே முகாம் போடுவார்கள். இட்லியும், பதநீரும், ஆப்பமும், பனங்கள்ளும் கழனிக்கே தேடிவரும். பணத்துக்குப் பதிலாக நெல்லை பண்டமாற்றாகத் தருவார்கள் கழனித் தொழிலாளர்கள். ஒருபக்கம் ஏர் ஓடும், இன்னொரு பக்கம் நடுவார்கள், வேறொரு பக்கம் அறுவடை நடக்கும். இப்படி எப்போதும் களைகட்டியிருக்கும் காவிரிப்படுகை களையிழந்து கிடக்கிறது. கர்நாடகத்தால் காவிரி நீர் கானல் நீர் ஆனது ஒருபுறமென்றால்... இன்னொருபுறம் காவிரிப் படுகை முழுக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களும், அனல்மின் நிலையங்களும், இரால் பண்ணைகளும், வீட்டடி மனைகளும் தங்களது ஆக்டோபஸ் கரங்களால் காவிரிப் படுகையை ஆக்கிரமித்துவருகின்றன.

போராட வேண்டியிருக்காது!

எஞ்சியிருக்கும் விளைநிலங்களையாவது காப்பாற்றி காவிரிப் பிரதேசத்தில் நெல் உற்பத்தி தொடர வேண்டுமானால், காவிரிப் பிரதேசத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது மட்டுமே ஒரேவழி என்ற கோரிக்கை இப்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. அப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் கதிராமங்கலம், நெடுவாசல் என்று மக்கள், எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்காது. விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக, வீட்டடி மனைகளாக மாற்றப்படாது. கண்ட இடத்திலெல்லாம் விருப்பம்போல் இறால் பண்ணைகள் அமைக்க முடியாது, மணல் கொள்ளை பெருமளவு தடுக்கப்படும், பேரழிவு ஏற்படுத்தும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டங்கள் உட்பட எந்தத் திட்டத்தையும் காவிரிப் படுகையில் செயல்படுத்த முடியாது. இத்தனை பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும், காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க அரசு தயங்குவதுதான் வேதனையிலும் வேதனை.

படுகையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

காவிரி பாயும் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் முழுமையும், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளையும் உள்ளடக்கிய 12,000 சதுர கி.மீ சமவெளிப் பகுதியே காவிரிப் படுகை. இத்தனை பெரிய வண்டல் மண் சமவெளிப் பகுதி ஆசியாவிலேயே வேறெங்கும் இல்லை. மொத்தம் 28 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இதற்குள் உள்ளன. இதில், குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் விளையும் நெல்தான் தமிழகத்தின் உணவுத் தேவையில் பெரும் பகுதியைப் பூர்த்திசெய்கிறது. அதனால்தான் இதைத் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றுகிறோம். காவிரி தாவாவுக்கு முன்பு, தமிழக உணவுத் தேவையில் 60 சதவிகிதத்தை பூர்த்திசெய்தது காவிரிப் படுகை. ஆனால், இயற்கை எரிவாயு எடுத்தல் உள்ளிட்ட பல காரணங்களால் அது இப்போது 34 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்நிலையில்தான் முற்றிலுமாக விவசாயம் முடங்கிப்போய்விடாமல் தடுக்க, காவிரிப் பிரதேச சமவெளிப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்கிறார்கள்.

கடையில் அரிசி வாங்கும் அவலம்!

இந்தக் கோரிக்கையைக் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக வலியுறுத்திவரும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ச.செயராமன் நம்மிடம் இது தொடர்பாகப் பேசினார். “தமிழகத்தின் உணவுக் கோப்பை எனப்படும் காவிரிப் படுகையில் சுமார் 53 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்களில் 80% பேர் நேரடியாகவும் 20% பேர் மறைமுகமாகவும் காவிரியைத்தான் நம்பி வாழ்கிறார்கள். இந்நிலையில் கர்நாடகத்தின் பிடிவாதத்தால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு, முன்பு 28 லட்சம் ஏக்கராக இருந்த விவசாயப் பரப்பு தற்போது 15 லட்சம் ஏக்கராகச் சுருங்கிவிட்டது. மேலும் ஓஎன்ஜிசி உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி, விளைநிலங்களை எண்ணெய் வயல்களாக மாற்றிவருகின்றன.

இவற்றால் விவசாயம்செய்ய முடியாமலும், நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குப் போயும், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டும் மக்கள் அவதியுறுகிறார்கள். சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதால் மக்கள் பல்வேறு நோய்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகிவருகிறார்கள். விவசாயம் பொய்த்துப்போனதால் விவசாயிக்கும் இப்போது கடையில் அரிசி வாங்கிச் சாப்பிட வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. இப்படித் தொடர்ந்து உணவு உற்பத்தி குறைந்துகொண்டே போனால் ஊருக்கே உணவளித்த காவிரிப் பிரதேச மக்கள், தங்கள் உணவுக்காக அரசிடம் கையேந்த வேண்டியிருக்கும். அப்படியொரு நிலை வராமல் தடுக்க வேண்டுமானால், தாமதமின்றி காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்துவிட்டால் எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்கள் கால்பதிக்க முடியாது. எந்தவித நாசகார, ரசாயன தொழிற்சாலைகளுக்கும் இங்கே வேலையிருக்காது” என்கிறார் செயராமன்.

உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க...

“முன்பெல்லாம் ஒவ்வொரு ஊரும் அங்கங்கே விளையும் அரிசி, காய்கறிகளின் மூலமாக உணவில் தன்னிறைவு அடைந்துகொண்டிருந்தன. இப்போது எல்லாவற்றுக்கும் பிறரிடம் கையேந்திக்கொண்டிருக்கிறோம். உதாரணமாக, சென்னையில் வசிக்கும் நாங்கள் கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வரும் அரிசி, காய்கறிகளைத்தான் வாங்கி பயன்படுத்துகிறோம். காவிரி மாவட்டங்களில் விவசாயம் நலிந்துபோனதுதான் இதற்குக் காரணம். காவிரிப் பிரதேச மக்களே இப்போது ஆந்திரா பொன்னி, கர்நாடகா பொன்னி என்று பைகளில் அடைக்கப்பட்ட அரிசியையும், பலவித ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள் தெளிக்கப்பட்ட காய்கறிகளையும்தான் வாங்கி பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சுமார் ஏழரைகோடி மக்கள்தொகை என்ற தற்போதைய நிலையிலேயே தமிழகம் தனது உணவுத் தேவைக்காக அடுத்த மாநிலங்களை நம்பியிருந்தால் அடுத்த சில ஆண்டுகளில் மக்கள்தொகை பத்து கோடியை எட்டும்போது நிலைமை என்னாகும்? இதை இப்போதே யோசிக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும். காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தால் மட்டுமே அது சாத்தியமாகும்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்.

காவிரிப் படுகையின் சுயம் காக்க...

உணவுத் தேவைக்காக மட்டுமல்ல... காவிரிப் படுகையின் சுயம் குலையாமல் காக்க வேண்டிய அவசியமும் இப்போது ஏற்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்துப்போனதால், விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து கடன்களைச் சுமந்து நிற்கிறார்கள். சுமார் 11 லட்சம் விவசாயக்கூலிகள் வேலைவாய்ப்பு இழந்து நகரங்களுக்குப் பஞ்சம் பிழைக்க இடம் பெயர்கிறார்கள். இதனால் கிராமம், நகரம் என இரண்டு பக்கமும் சமன் குலைகிறது. அத்தோடு, எண்ணெய் நிறுவனங்களால் காவிரிப் பிரதேசம் பேரழிவை நோக்கிப் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது. மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இதுகுறித்த கோணத்தில் பேசுகிறார். “காவிரிப் படுகையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இப்போதுள்ள எண்ணெய்க் கிணறுகளால் ஏற்பட்டுள்ள விளைவுகளே மிக அதிகமாக இருக்கின்றன. இந்த நிலையில் மேலும் பல எண்ணெய்க் கிணறுகளை அமைக்கத் திட்டங்களைத் தீட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, கடலூர் - நாகை மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து பெட்ரோ கெமிக்கல் மண்டலமாகவும் அறிவித்திருக்கிறார்கள். இதுவும் செயல்பாட்டுக்கு வந்தால் இம்மாவட்டங்கள் ரசாயன மண்டலமாக ஆகிவிடும்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஏற்கெனவே மணலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படித்தான் ரசாயனத் தொழிற்சாலைகள் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாநதிப் படுகையில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறுகளால் அப்பகுதியே மக்கள் வசிப்பதற்கு லாயக்கில்லாமல் போய்விட்டது. இங்கும் அதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. இப்பகுதி, மக்கள் மிக அடர்த்தியாக வாழும், முழுக்க முழுக்க விளைநிலங்கள் அடங்கிய வேளாண் உற்பத்தி பகுதி. இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைந்தால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். அப்படி எத்தனை ஆயிரம் பேருக்கு இவர்களால் வேலை கொடுத்துவிட முடியும்? விவசாயம் நடந்தால் அதன் மூலம் இங்குள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்கும். தனி நபரின் வருமானம் உயரும். வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். அதனால், இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலாக அறிவிக்க வேண்டும். இதுதான் எங்களின் நிலைப்பாடும்” என்கிறார் பாலகிருஷ்ணன்.

முதல்வரிடம் சொல்வேன்

இதுகுறித்து தமிழக வேளாண்துறை அமைச்சரும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான துரைக்கண்ணுவிடம் கேட்டதற்கு, “இது பெரிய பாலிசி மேட்டர். இது எந்த அளவுக்குச் சாத்தியம், நடைமுறைக்கு உகந்ததா என்பதையெல்லாம் வேளாண்துறை அதிகாரிகளிடம் விரிவாக ஆலோசித்து அதன் பிறகு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசெல்கிறேன்” என்றார்.

தஞ்சை கதிராமங்கலத்தில் இப்போதே குடிநீர் மஞ்சளாகவும், எண்ணெய்ப் படலங்கள் நிறைந்ததாகவும் மாறிவிட்டது. திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிவருகிறார்கள். நாகை மாவட்டம் பழையபாளையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் நின்றுபோய் வருடங்களாகிவிட்டன. அங்கு ஓஎன்ஜிசி எண்ணெய் சேகரிப்பு மையத்தில் வெளியாகும் எரிவாயு தீப்பிழம்பால் மேகத்தின் ஈரத்தன்மை உறிஞ்சப்பட்டு அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழையே பெய்யாமல் பொய்த்துவிடுகிறது. சீக்கிரமே எண்ணெய்க் கிணறுகளால் ஒட்டுமொத்த காவிரிப் பிரதேசத்துக்கும் இந்த நிலை ஏற்பட்டு காவிரிப் படுகை பாலைவனம் ஆகலாம். அதைத் தடுக்க வேண்டுமானால், காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிப்பது ஒன்றே வழி. அறிவிக்குமா அரசு?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x