Published : 24 Jun 2018 10:55 AM
Last Updated : 24 Jun 2018 10:55 AM

அன்று ஜெயலலிதா - சசிகலா... இப்போது ஓபிஎஸ் - ஈபிஎஸ்! ஆட்சிக்கு எதிராக திமுக கையிலெடுக்கும் ஊழல் அஸ்திரம்!

மிழகத்தில் இவ்வளவு களேபரங்கள் நடந்தும் திமுக அமைதியாக இருக்கிறது என்று விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தச் சலசலப்புகளைத் தாண்டி சத்தமில்லாமல், அதேசமயம் உறுதியுடன் அதிமுகவின் அடித்தளத்தை அசைக்கும் வேலைகளைச் சட்டப்படி செய்துவருகிறது திமுக!

அந்த வகையில் அதிமுகவின் இரு தூண்களாகக் கருதப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் மீது திமுக கொடுத்திருக்கும் ஊழல் புகார்கள், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கைப் போலவே எதிர்காலத்தில் பூதாகரமாக சூடுபிடிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்! தமிழக அரசியல் வரலாற்றில் திமுக மேற்கொண்ட சட்டப் போராட்டங்களுக்கு நிறைய உதாரணங்கள் உண்டு. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கைத் தொடங்கி வைத்தது சுப்பிரமணியன் சுவாமிதான் என்றாலும், அதைக் கண்காணித்து, தீவிரமாக வழி நடத்தியது திமுகதான் என்பது ஒரு உதாரணம்.

அம்புகளாக ஏவப்படும் வழக்குகள்!

கடந்த ஜூன் 13-ம் தேதி, திமுக அமைப்புச் செயலாளரும் எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் இயக்குநரிடம் ஊழல் புகார் அளித்து, முதல்வர் மீது குற்ற வழக்குப் பதிவுசெய்யக் கோரினார். மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஐந்து திட்டங்களில் முதல்வருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து அந்தப் புகாரில் விளக்கப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் சில மாதங்களுக்கு முன்பாகவே வாய்திறந்தார்கள். கடந்த மார்ச்சில் கூட்டாக பேட்டியளித்த அவர்கள், “சமீபத்தில் நெடுஞ்சாலை துறையில் ஐந்து சாலைத் திட்டப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இவை அனைத்தும் முதல்வரின் உறவினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இதனால், அரசுக்கு 1,500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்றார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, “முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை துறை திட்டங்களில் ஊழல் செய்திருக்கும் தகவல்கள் பல்வேறு வழிகளில் எங்களுக்குக் கிடைத்தன. தொடர்ந்து பலரிடம் பேசி நிறைய ஆதாரங்களைச் சேகரித்துள்ளோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் ஆதாரங்களைப் பெற்றுள்ளோம். முதல்கட்டமாக இதை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அரசாங்க நடைமுறைகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனெனில், ஒரு மாதம் முன்பாக துணை முதல்வர் ஓபிஎஸ் மீது சொத்துக்குவிப்பு புகார் ஒன்றை அளித்தோம். அந்தப் புகாரை தலைமைச் செயலாளருக்கு அனுப்பியிருப்பதாக டிஜிபி எங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். எனவே, எடப்பாடி பழனிசாமி மீதான புகார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவோம். ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுத்தந்தது போலவே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் சிறைக்கு அனுப்புவோம். இது ஆரம்பம்தான். சட்டத்தின் வாயிலாக திமுக இன்னும் நிறைய நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறது” என்றார்.

புகாரில் திமுக சொல்லியிருப்பது என்ன?

ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் இடையிலான நான்குவழிச் சாலைக்கு (70.20 கி.மீ) முதலில் ரூ.713.34 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. பிறகு, இது ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டது (இதில் ரூ.315 கோடியை ரொக்கமாக அரசு ஒதுக்கியது). இதன்படி, ஒப்பந்ததாரருக்கு எட்டு ஆண்டுகளுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.75 கோடி வீதம் கட்டணமாகக் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இது ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ரூ.315 கோடி ரொக்கப் பணத்துக்கு அப்பாற்பட்டது. சந்தை நிலவரப்படி ஒரு கி.மீ தூரத்துக்கு சாலை போட, ஒப்பந்ததாரருக்கான லாபம் உட்பட ரூ.2.2 கோடிதான் செலவாகும். எனவே மொத்த செலவு, வருங்காலத்தில் ஏற்படும் விலை ஏற்றங்களையும் சேர்த்து கணக்கிட்டால்கூட ரூ.200 கோடிக்கு மேல் தாண்டாது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு ரூ.1,515 கோடியை ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு.

இந்தத் திட்டம் ‘ராமலிங்கம் அண்ட் கோ’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராமலிங்கத்தின் மகன் சந்திரகாந்த் ராமலிங்கம் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர். எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் குமார், திவ்யா என்பவரை மணந்திருக்கிறார். திவ்யாவின் நெருங்கிய உறவினர்தான் சந்திரகாந்த். முதல்வராகவும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தனது மகன் மிதுனின் மைத்துனருக்கு ரூ.1,515 கோடி மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.

அடுத்து, திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் மாநில நெடுஞ்சாலை (45.64 கி.மீ) நான்குவழித்தடம் திட்டம். முதலில் இந்தத் திட்டத்துக்கு ரூ.407.6 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டது. இதுதவிர, ரூ.179.94 கோடி ரொக்கப் பணம் ஒதுக்கப்பட்டது. பின்பு, இந்தத் திட்டத்துக்கான மொத்த செலவு ரூ.720 கோடியாக உயர்த்தப்பட்டது. ஒப்பந்ததாரருக்கு எட்டு ஆண்டு காலத்துக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.45 கோடி வீதம் செலுத்த வேண்டும். இது ரூ.179.94 கோடி ரொக்க ஒதுக்கீட்டுக்கு அப்பாற்பட்டது. இதற்கும் ஒரு கி.மீட்டருக்கு ரூ.2.2 கோடி என்று கணக்கிட்டால் மொத்த செலவு ரூ.130 கோடியைத் தாண்டாது. ஆனால், இந்தத் திட்டத்துக்கு ரொக்க ஒதுக்கீடு, ஒப்பந்ததாரருக்கான கட்டணம் உட்பட ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ‘வேங்கடாசலபதி கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இது பி.சுப்ரமணியம் என்பவருக்குச் சொந்தமானது. இவர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனின் மாமனார். அதாவது, எடப்பாடியின் சம்மந்தி.

மூன்றாவது திட்டம், மதுரை ரிங் ரோடில் நான்கு வழித்தடம் அமைப்பதற்கானது. இதன் மொத்த செலவு ரூ.200 கோடி. இது சென்னை முகப்பேரில் உள்ள ‘ஸ்ரீ பாலாஜி டோல் வேஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியம், நாகராஜன், ஜே.சேகர் (சேகர் ரெட்டி) ஆகியோரே இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள். இவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர்களே. இந்த நிறுவனத்துக்கு இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டவுடன் இந்தத் திட்டத்துக்கு ரூ.18.57 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. நான்காவது திட்டம் வண்டலூர்- வாலாஜாபாத் ஆறுவழித்தடம். இதுவும் நாகராஜன் என்பவரின் ‘எஸ்கேபி அண்ட் கம்பெனி எக்ஸ்பிரஸ்வே’ நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது திட்டம், ராமநாதபுரம், திருவள்ளூர், விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் மாநில நெடுஞ்சாலைகளையும் பராமரிப்பதற்கானது. இந்தத் திட்டத்தை முடிப்பதற்கான ஒப்பந்தமும் எஸ்கேபி நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஒரு பொது சேவகர். அவர் சந்திரகாந்த் ராமலிங்கம், பி.சுப்பிரமணியம், பி.நாகராஜன். ஜே.சேகர் (சேகர் ரெட்டி) ஆகியோருடன் குற்ற சதியில் ஈடுபட்டுள்ளார். முதல்வர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வைத்து, அதிகார துஷ்பிரயோகம் செய்து மேலே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கச் செய்துள்ளார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன் பிரிவுகள் 13(1), 13 (2) ஆகிய பிரிவுகளிலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120-பி ஆகியவற்றின் கீழ், எடப்பாடி செய்திருக்கும் இந்தக் குற்றங்கள் தண்டனைக்குரியவை. இந்த ஒப்பந்தங்கள் எடப்பாடியின் மகனது உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதற்காகவே இந்தத் திட்டங்களின் செலவும் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டன. ஒப்பந்தப் புள்ளி வெளிப்படைத் தன்மைச் சட்டம் 1998-ன் விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மற்றவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவுசெய்து விசாரிக்க வேண்டும் என்கிறது திமுகவின் புகார் மனு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x