Published : 21 Jun 2018 10:37 AM
Last Updated : 21 Jun 2018 10:37 AM

விவசாயப் பயன்பாட்டில் நீர் சிக்கனம் அவசியம்

‘வே

ளாண் உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் சாகுபடிப் பரப்பை மட்டும் கணக்கில்கொண்டு உற்பத்தியையும் உற்பத்தித் திறனையும் பெருக்க முயற்சிகள் எடுக்கிறோம். சாகுபடிக்குக் கையாளும் நீரின் அளவும் இனி இதற்கு அடிப் படையாகக் கணக்கிடப்பட வேண்டும்’ என்று ‘வேளாண்மை, ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி’ (நபார்டு) ஆராய்ச்சி அறிக்கை வலியுறுத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கிடைக்கும் தண்ணீருக்கேற்ற பயிர்களையே கடைப்பிடித்து விவசாயம் செய்ய வேண்டும். இலவசமாகத் தண்ணீரும் மின்சாரமும் கிடைப்பதால் பயிர் சுழற்சி முறையைக் கைவிட்டு எப்போதும் பணப்பயிர்களாகவும் நன்செய் பயிர்களாகவும் சாகுபடிசெய்யும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்த வழக்கம் மாற்றப்பட வேண்டும் என்கிறது அந்த அறிக்கை.

அரிசி, கோதுமை, சோளம், துவரை, பட்டாணி, கரும்பு, பருத்தி, நிலக்கடலை, கடுகு, உருளை ஆகியவற்றுக்கான தண்ணீர்ப் பயன்பாட்டு அட்டவணை தயாரிக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் சாகுபடிப் பரப்பில் 60% அளவில் இந்தப் பயிர்கள்தான் வளர்கின்றன. நாட்டில் உள்ள நீர் வளத்தில் 80% விவசாயத்துக்காக மட்டுமே செலவழிக்கப்படு கிறது. எனவே, பயிர்ச் சாகுபடியில் நிலத்தின் அளவு மட்டுமல்ல, தண்ணீருக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. நீர் வளம் குறைந்துகொண்டே வருவதாலும் அதன் தேவை அதிகமாகிவருவதாலும் இதை ஆய்வுசெய்வது அவசியமாகிறது என்கிறது அறிக்கை.

நிலம், நீர் பயன்பாட்டின் அடிப்படையிலான உற்பத்தித் திறனைக் கணக்கிடும்போது, இரண்டிலும் நேரெதிரான வித்தியாசம் இருப்பது புலப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஹெக்டேரில் 4 டன் அரிசி கிடைக்கிறது. ஆனால், ஒரு கன மீட்டர் தண்ணீரில் பஞ்சாபில் விளைவது 0.22 கிலோ கிராம் அரிசி மட்டுமே. ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் ஒரு கன மீட்டருக்கு அரிசி சாகுபடி 0.75 கிலோ, 0.68 கிலோவாக இருக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் சாகுபடிப் பரப்பு மிகவும் குறைவு என்பதால் உற்பத்தித் திறன் குறைகிறது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள நிலப்பரப்பில் வெறும் 3% மட்டுமே பாசன வசதி பெற்றுள்ளது.

அதிகம் நீர் குடிக்கும் பயிரான கரும்பு, தமிழ்நாட்டில் ஒரு ஹெக்டேரில் 105 டன் சாகுபடியாகிறது. தேசிய அளவில் தமிழகம்தான் முதலிடம். கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகியவற்றிலும் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் சாகுபடி அதிகம். ஆனால், இந்த நான்கு மாநிலங்களிலும் ஒரு கன மீட்டருக்கு 5 கிலோ கிராமுக்கும் குறைவாகத்தான் கரும்பு விளைகிறது. தமிழ்நாட்டில் 40 முறை தண்ணீர் பாய்ச்சுகின்றனர். கங்கைச் சமவெளி யான பிஹார், உத்தர பிரதேசத்தில் முறையே 5, 8 முறைகள் மட்டுமே தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

விவசாயத்துக்குத் தேவைப்படும் அனைத்து இடுபொருட்களையும் மானியமாக அளிப்பதற்குப் பதில், சாகுபடிக்கு ஆகும் முழுச் செலவின் அடிப் படையில் லாபமும் சேர்த்து கொள்முதல் விலை யாக நேரடியாக விவசாயிகளின் கணக்கில் பணம் செலுத்தும் முறை வர வேண்டும். பயிருக்கான விலை, சந்தையின் தேவை அடிப்படையில் நிர்ணயமாகும் என்கிறது ‘நபார்டு’ அறிக்கை.

- ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x