Published : 21 Jun 2018 10:35 AM
Last Updated : 21 Jun 2018 10:35 AM

ராவுத்த குமாரசாமி: தமிழ் சகோதரத்துவத்தின் இன்னொரு அடையாளம்!

ள்ளூர் விலங்கினம் அல்லாத குதிரை தமிழ் நிலப்பரப்பின் பிரிக்க முடியாத அங்கமாக எப்படி மாறியது? காவல் தெய்வமாக எப்படி மாறியது? ஆச்சரியமான இந்தக் கேள்வி இன்னொரு பக்கம் தமிழ் நிலத்தின் அரவணைக்கும் பண்புக்கு ஓர் அடையாளமாகவும் ஆகிறது அல்லவா? அதுபோலவே தமிழ் மண்ணின் சகோதரத்துவம் எப்படி மதங்களைக் கடந்தது என்பதற்கான ஆச்சரியங்களும் வெவ்வேறு தருணங்களில் என்னுடைய ஆய்வுப் பயணத்தில் வந்தடைந்துகொண்டே இருக்கின்றன.

வயல்களின் நடுவேயும், ஊர் எல்லையிலும் தமிழ் நிலமெங்கும் நிற்கும் குதிரைச் சிலைகளின் மேல் சுடலை மாடன், அய்யனார், கருப்பண்ணசாமி ஆகியோர் அமர்ந்திருப்பதுபோல ஒரு முஸ்லிமான ‘ராவுத்த குமாரசாமி’ அமர்ந்திருப்பதைக் கொங்கு பகுதியில், சிவகிரியை அடுத்துள்ள காகம் கிராமத்தில் சமீபத்தில் கண்டேன்.

தமிழகத்தில் இஸ்லாமியரைச் சிறுதெய்வங்களாக வழிபடு வது என்பது அரிதெனினும் புதிதல்ல. வைணவர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் துலுக்க நாச்சியாரும், அய்யப்ப பக்தர்களுக்கு எருமேலியில் வாவர் சாமியும், வட மாவட்டங்களில் திரௌபதி அம்மன் வழிபாட்டில் முத்தால ராவுத்தரும் சிறு தெய்வங்களாக வழிபடப்பட்டுவருகின்றனர். தென் தமிழகத் தின் சிறு கிராமம் ஒன்றில் கப்பலோட்டிய மரைக்காயரும் சிறுதெய்வமாகப் பல நூற்றாண்டுகளாக வணங்கப்பட்டு வருகிறார்.

தமிழ் நிலத்தில் இஸ்லாம் பரவி ஆயிரம் ஆண்டுகளுக் கும் மேலாகும் நிலையில், மூதாதையரை, தம்மோடு உயிருக்கு உயிராக வாழ்ந்தோரைக் கௌரவித்து குலதெய்வமாக, காவல் தெய்வமாக வழிபட்டுவரும் இந்நிலத்தில், இந்துக்களோடு உறவுமுறை கொண்டாடும் இஸ்லாமியர்களும் சிறுதெய்வங்களாக இடம்பெற்றிருப்பதில் ஆச்சரியமில்லை. என்றாலும், காகம் கிராமத்தில், கண்ணன் கூட்டத்தினரால் காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வழிபடப்படும் ‘ராவுத்த குமாரசாமி’ சற்றே வேறுபடுகிறார். சிறு மினாராக்கள், விமானம் என்று கோயிலின் அமைப்பே, மதங்களைக் கடந்து இங்கு மனிதநேயம் வழிபடப்படுவதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. கோயிலின் நுழைவாயிலி லிருந்து கருவறை வரை, வாளை உயர்த்திப் பிடித்து அமர்ந்தவாறும், வாயில் சுருட்டுடன் கைலி உடுத்தி ஒருக்களித்துப் படுத்தவாறும், குதிரையின் மேல் அமர்ந்தவண்ணம் என வெவ்வேறு நிலைகளில் ராவுத்தர் சிலைகள் காணப்படுகின்றன. கருவறையில் குமாரசாமியான முருகனுக்குப் பின்னால், பீடத்தில் வாளை உயர்த்திப் பிடித்தவண்ணம், ஒரு கால் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் இரு ராவுத்தர்கள்.

தமிழ் முஸ்லிம்களில் குதிரை வணிகர்களாகவும் வீரர்களாகவும் அறியப்பட்ட ராவுத்தர்கள், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களின், காகம் கண்ணன் கூட்டத்தாரின் குலதெய்வமானது குறித்துப் பல்வேறு கதைகள் நிலவுகின்றன. புலவர் செ.இராசுவால் ஆவணப்படுத்தப்பட்ட ‘அரசூர் முழுக்காதன் குல வரலாறும் வெள்ளையம்மாள் காவியமும்’ நூல் உட்பட இதுகுறித்துச் சொல்லும் எல்லாக் கதைகளும் ஒரே பொதுத்தன்மையையே கொண்டிருக்கின்றன. ‘கண்ணன் கூட்டத்தாரின் மூதாதையர் பெரும் சங்கடத்தில் இருந்தபோது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, குலம் தழைக்க உதவியது முஸ்லிம் ராவுத்தர்கள்’ என்பதே அது! இதனாலேயே காவல் தெய்வமாகவும், குலசாமியாகவும் ராவுத்தரை வணங்குகின்றனர் இம்மக்கள். அதன் வெளிப்பாடாகச் சிலர் தங்கள் பெயரின் முன்னால் ராவுத்தர் என்றும் இணைத்துக்கொள் கிறார்கள். ஓர் உதாரணப் பெயர் ராவுத்தக் கவுண்டன்.

கொங்கு மண்டல சமூகத்தை வெகு உன்னிப்பாகக் கவனித்து தனது கதைகளின் மையப்புள்ளியாக்கியிருக்கும் கதாசிரியர் இரா.முருகவேள், இதில் ஒரு முக்கியமான தொடர்பைச் சுட்டிக்காட்டுகிறார். “கொங்கு வேளாளர் சேடக் குலத் தலைவர் தன்னுடைய பெண்ணுக்குச் சொத்தில் பங்கு தர வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய மறைவுக் குப் பின் அவளை ஏமாற்ற முற்படுகின்றனர் அவளுடைய சகோதரர்கள். அவள் நீதி கேட்கும்போதுதான் அவளுக்கு உதவுகிறார் ராவுத்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை, கொங்கு சமூகத்தில் பெண்ணுக்குச் சொத்துரிமை என்பது நடைமுறையில் இல்லை. அப்போது பெண்ணுக் கான சொத்துரிமையின் நியாயத்தை ஏனைய சமூகங்களைக் காட்டிலும் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒரு ராவுத்தரால் புரிந்துகொண்டிருக்க முடியும். இதில் ஒரு பண்பாட்டுப் பரிமாற்றமும் இருக்கிறது” என்கிறார் எழுத்தாளரும் வழக்குரைஞருமான இரா.முருகவேள். இதுபோக, தமிழ் முஸ்லிம் சமூகத்தில் ஒரு பிரிவினரான ராவுத்தர்கள் குதிரை வணிகர்களாக மட்டுமின்றி வீரர்களாகவும் அறியப்பட்டவர்கள். 15-ம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் முருகனைப் புகழ்ந்து பாடும்போது ‘சூர்க்கொன்ற ராவுத்தனே’ என்றும் ‘மாமயிலேறும் ராவுத்தனே’ என்றும் பாடுகிறார்.

சில வருடங்களுக்கு முன்னர் வரை வெறும் கூரையோடு வயல் வெளியில் வீற்றிருந்த சுதையிலான ராவுத்தசாமி களுக்கு ஆகம முறைப்படி கோயில் எழுப்ப வேண்டும் என்று கண்ணன் கூட்டத்தார் விரும்பியிருக்கின்றனர். ஸ்தபதியின் அறிவுரைப்படி அவை வேங்கை மரத்தால் செய்யப்பட்ட சிலைகளாக மாறின. “வேங்கை மரத்தின் உக்கிரத்தைத் தணிக்க, ‘மூன்றாவது மூர்த்தியாக குமாரசாமியான முருகனின் கற்சிலை அபிஷேக மூர்த்தியாக இடம்பெற வேண்டும்’ என்ற ஸ்தபதியின் ஆலோசனைப்படி, இன்று கருவறையில் ராவுத்தர்களுடன் குமாரசாமியான முருகனும் வீற்றிருக்கின்றார்” என்கிறார் கோயில் பூசாரியான மகாலிங்கம். நான்காவது தலைமுறையாக பூசாரியாகப் பணியாற்றும் மகாலிங்கம் கண்ணன் கூட்டத்தைச் சேர்ந்தவர்.

கருவறைக்குள் குமாரசாமியுடன் அமர்ந்திருக்கும் ராவுத்தர்களுக்குப் பூ, பழம் என்று பூசைசெய்யும் மகாலிங்கமும் அவரது உறவினரும், கோயிலின் ஒரு நுழைவாயிலின் மேல் ஒருக்களித்துப் படுத்தவாறு, வாயில் சுருட்டும், இடுப்பில் கைலியும் அணிந்து காணப்படும் ராவுத்தருக்கு, பிற காவல் தெய்வங்களுக்குப் பூசையில் படைக்கும் போதை வஸ்துக்களும் மாமிசமும் படைக்கின்றனர். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கண்ணன் கூட்டத்தினர் அனைவரும் ஒன்றுகூடி கெடா வெட்டி விமரிசையாக ராவுத்த குமாரசாமிக்குப் பொங்கல் வைக்கின்றனர். வாரத்தில் திங்கள், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை தீப பூசை மற்றும் மார்கழி மாதம் முழுவதும் என்று அட்டவணையின்படி பூசை நடத்துகின்றனர்.

இன்று அருகில் வெவ்வேறு ஊர்களில் வசித்துவந்தாலும், தங்கள் முறை தவறாது வந்து வழிபடுவது மட்டுமின்றி, வீட்டில் எந்த ஒரு விசேஷமென்றாலும் ராவுத்த குமாரசாமியிடம் வந்து கெடா வெட்டி, நல்ஆசி பெற்றுச் செல்கின்றனர். தங்கள் மூதாதையர்களைப் பாதுகாத்த ராவுத்தர்கள், தங்களையும் பாதுகாப்பார்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன். தமிழ்ச் சமூகத்தின் மதம் கடந்த சகோதரத்துவத்துக்கு மேலும் ஓர் உதாரணம், காகம் கண்ணன் குலத்தாரின் ராவுத்த குமாரசாமி வழிபாடு!

- கோம்பை எஸ்.அன்வர், தமிழ் முஸ்லிம்களின் வேர்களைப் பதிவுசெய்த ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியவர், வரலாற்று ஆய்வாளர்.

தொடர்புக்கு: anvars@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x