Published : 20 Jun 2018 08:59 AM
Last Updated : 20 Jun 2018 08:59 AM

மாநிலத்தின் நிதியுரிமை காப்போம்!

“மா

நிலங்களின் நிதி அமைச்சர்களாக இருக்கும் சகாக்களே, நிதிக் குழுவின் பரிந்துரைகள் மாநிலங் களுக்கு முக்கியமானவை என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்; கேரளத்தின் திருவனந்தபுரத்திலும் ஆந்திரத்தின் அமராவதி நகரிலும் சந்தித்த நம்மில் சிலர், அடுத்த நிதிக் குழுவுக்கு மத்திய அரசு அளித்துள்ள ஆய்வு வரம்புகள் குறித்து விவாதித்துக் கவலை தெரிவித்திருந்தோம்.

நிதிக் குழுவுக்கான ஆய்வு வரம்புகள், அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சியின் விழுமியங்களுக்கும், மாநிலங்களுக்குள்ள நிதிச் சுதந்திரத்துக்கும் பெரிய அச்சுறுத்தல்களாக இருக்கின்றன. நாங்கள் நடத்திய இரு கூட்டங்களும், நிதிக் குழுவின் பரிந்துரைக்கு அடிப்படையான மக்கள்தொகை ஆண்டை 1971-லிருந்து 2011-க்கு மாற்றியது குறித்துதான் என்று நீங்கள் கருதிவிட்டீர்களோ என்று அஞ்சுகிறோம். அது மட்டும் பிரச்சினையல்ல. நிதியாதாரங்களைக் கிடைமட்டமாக வழங்க சிறந்த அளவுகோல் என்ன என்பதில் கருத்து வேற்றுமை நமக்குள் வரலாம் என்பதை ஏற்றுக்கொள்வோம். அதே சமயம், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு செங்குத்தான நிதிப் பகிர்வில் நம் அனைவருக்கும் பொதுவான உரிமை உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாநிலங்களின் உரிமைகளையும் நிதி நிர்வாகத்தில் கூட்டாட்சியையும் பாதுகாக்க நமக்குள்ள தேசியக் கடமைக்கு, நாம் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் சார்பு அல்லது இதர காரணங்கள் தடையாக இருந்துவிடக் கூடாது. மாநிலங்களின் நிதி ஆதாரங்களையும் நிதி உரிமைகளையும் பாதிக்கக் கூடிய வகையில் நிதிக் குழுவின் ஆய்வு வரம்பு சில இருப்பதைப் பகிரங்கமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நான்கு கேள்விகள்

முதலாவதாக, 14-வது நிதிக் குழு, வரி வருவாயில் மாநிலங்களுக்கு 42% தர வேண்டும் என்று பரிந்துரைத்ததைக் குறைப்பதற்கு எந்த நிதியமைச்சராவது ஆதரவு தெரிவிப்பீர்களா? ஆய்வு வரம்பில் இது இடம்பெற்றுள்ளது. முந்தைய நிதிக் குழு பரிந்துரைத்த அளவை ஆய்வு செய்யுமாறு இந்திய வரலாற்றில் இதுவரை கேட்டுக்கொண்டதே இல்லை. 13-வது நிதிக் குழு மாநிலங்களுக்கு 32%-யும் 14-வது நிதிக் குழு 42%-யும் பரிந்துரைத்ததை ஒப்பிட்டுப் பேசவே முடியாது. 13-வது பரிந்துரைத்தது ‘திட்டமல்லா வருவாய் செலவு’ பற்றியது. 14-வது நிதிக் குழு பரிந்துரைத்தது ‘மொத்த வருவாய் செலவு’ தொடர்பானது. திட்டங்களுக்கு வழங்கப்பட்டுவந்த மத்திய அரசின் மானியங்கள் ரத்தாகிவிட்டன. மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு, மாநிலங்கள் செய்ய வேண்டிய அளவு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஜிடிபியுடன் ஒப்பிடும்போது, செலவுசெய்யும் நிதியளவு குறைந்துவிடக் கூடாது என்று இப்படிக் கூறப்பட்டது. பொதுச் சரக்கு -சேவை வரி (ஜிஎஸ்டி) அமல், மாநிலங்களின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது. இந்த வரி வருவாய் மத்திய - மாநில அரசுகளிடையே 50:50 என்ற கணக்கில் பகிர்ந்துகொள்ளப்படவிருக்கிறது. பொதுச் சரக்கு-சேவை வரி அமல் காரணமாக மத்திய அரசின் நிதியாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று போலியாகக் கவலை தெரிவிக்கப்படுகிறது. இது நகைப்புக்கு உரியது.

இரண்டாவதாக, கூட்டாட்சி என்பது மக்கள் அனைவருக்கும் ஒப்பிடக்கூடிய வகையில் அனைத்து சேவை களும், வரி விதிப்புகளும் இருக்க வேண்டும் என்பதாகும். இதனால்தான் மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டால், அதை மத்திய அரசு மானியம் தந்து இட்டு நிரப்ப வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இது எந்த நிதிக் குழுவாலும் பரிசீலனை செய்யப்படக் கூடாது. அப்படியிருக்க, வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட வழங்கப்படும் மானியம், தரப்படத்தான் வேண்டுமா என்று ஆராயுமாறு ஆய்வு வரம்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

கடன் வாங்கும் உரிமை

மூன்றாவதாக, மாநிலங்களின் கடன் வாங்கும் உரிமையைக் கட்டுப்படுத்த ஆய்வு வரம்பில் கூறப்பட்டிருக்கிறது. இப்போது மொத்த ஜிஎஸ்டிபியில் 3% அளவுக்கு, மாநிலங்கள் பொதுக் கடன் மூலம் நிதியைத் திரட்டிக்கொள்ளலாம் என்று இருந்தது. அதாவது, அந்தந்த மாநிலத்தின் ஜிஎஸ்டிபி மதிப்பில் அதிகபட்சம் 3% கடன் திரட்டலாம். இதை 1.7% ஆகக் குறைக்கலாமா என்று பரிசீலிக்குமாறு ஆய்வு வரம்பில் கூறப்பட்டிருக்கிறது. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரை அடிப்படையில்தான், மாநிலங் கள் தங்களுக்குத் தேவைப்படும் மூலதனத்தைப் பொதுக் கடன் மூலம் திரட்டிக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மாநிலங்கள் கடன் திரட்ட என்ன நிபந்தனைகளை விதிக்கலாம் என்று விஷமத்தனமாகப் புதிதாகக் கேட்கப்பட்டிருக்கிறது. இதுவரை இப்படி நிபந்தனை எதுவும் இல்லாமல்தான் அனுமதி தரப்பட்டிருக்கிறது. எனவே, மாநிலங்களின் நிதிச் சுதந் திரத்தில் தலையிடும் இப்படிப்பட்ட ஆய்வு வரம்புகளே கூடாது என்று நாம் ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்.

நான்காவதாக, மாநிலங்களுக்குத் தரும் மானியங்களுக்கு வெவ்வேறு விதமான நிபந்தனைகளை விதிக்க நிதிக் குழுவைப் பயன்படுத்தப் பார்க்கிறது மத்திய அரசு. ஒன்பது விஷயங்களைப் பட்டியலிட்டு, இவற்றைச் சரியாகச் செயல்படுத்தினால் ஊக்குவிப்புத் தொகை தரலாமா, பாருங்கள் என்று கேட்கிறது மத்திய அரசு. அந்த ஒன்பதில் பெரும்பாலானவை தொடர்பாக எனக்கும் கருத்து உடன்பாடு உள்ளது. ஆனால், அது மாநிலங்களின் விருப்பப்படி முடிவுசெய்யப்பட வேண்டும். மக்களைக் கவரும் அல்லது மக்களுக்கு மிகவும் தேவைப்படும் அம்சங்களை விலையில்லாமல், அதாவது இலவசமாகத் தருவது குறித்து நிதிக் குழு ஆய்வுசெய்ய வேண்டும் என்ற பரிந்துரை தேவையற்றது. இது மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கே விரோதமானது.

அரசியல் சட்டத்தைத் தாங்கிப் பிடிக்கவும், மாநிலங்களின் உரிமைகளைக் காக்கவும் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் ஒன்றுபட வேண்டும். இந்தியாவின் நிதிக் கூட்டாட்சி முறைமையை மதிப்பிழக்கச் செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே நிதிப் பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், மத்திய அரசு மாநிலங்களின் நிதியுரிமைகளையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்துவதற்கு நாம் துணைபோகக் கூடாது. அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று நினைப்போர் எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள். மாநிலங்களின் உரிமைகளைக் காக்கும் விஷயத்தில், நம்முடைய அரசியல் சார்பு குறுக்கே நிற்க வேண்டாம்.

- டி.எம். தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர்

‘தி இந்து’ ஆங்கிலம். தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x