Published : 24 May 2018 09:33 AM
Last Updated : 24 May 2018 09:33 AM

ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தின் தோல்வி தூத்துக்குடி படுகொலை!: ஹென்றி டிஃபேன் நேர்காணல்

மிழகம் நன்கறிந்த மனித உரிமைச் செயல்பாட்டாளரான ஹென்றி டிஃபேன் இந்தப் போராட்டக் களத்தில் உள்ளே இருந்தவர். தூத்துக்குடியில் என்னவெல்லாம் நடந்தன? சொல்கிறார் ஹென்றி டிஃபேன்.

அமைதியாக ஆரம்பித்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் இப்படி ரத்தக்களரியில் நடந்து முடிந்திருக்கிறதே?

இந்தப் போராட்டத்துக்கு 1994-லிருந்து சரித்திரம் இருக்கிறது. கடந்த 99 நாட்களாக நடந்த போராட்டம் அதில் முக்கியமான ஒரு கட்டமென்று சொல்வேன். கிராமங்களிலும் நகரங்களிலும் மிகுந்த அமைதியுடன் கண்ணியமாக நடத்தப்பட்ட போராட்டம் இது. அதற்கு உதாரணமாக மார்ச் 24-ம் தேதி 2 லட்சம் பேர் கூடி எந்த அசம்பாவிதமும் நிகழாமல் ஒரு போராட்டத்தை நடத்த முடியும் என்பதை தூத்துக்குடி மக்கள் நிரூபித்தார்கள். ஆனால் சிப்காட்டோ, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ, மாவட்ட நிர்வாகமோ போராடுபவர்களுடன் ஒரு பேச்சுவார்த்தைகூட நடத்தாமல் அவர்களைப் பைத்தியக்காரர்களைப் போல நடத்தின. இதை அரசு நிர்வாகத்தின் முழுமையான தோல்வி என்றே சொல்வேன். அத்துடன் நேற்று முன்தினம் திரண்ட பேரணியில் மக்களின் கோபத்தை முன் உணரவும் மாநில அரசின் காவல் துறை, உளவுத் துறை, மத்திய அரசின் உளவு அமைப்புகள் தவறிவிட்டன.

ஆனால், நான்கு நாட்களுக்கு முன்னர், மாவட்ட நிர்வாகம் ஒரு பேச்சுவார்த்தை நடத்தியது அல்லவா?

ஜல்லிக்கட்டு போராட்டத்தை எப்படிக் கையாண்டார்களோ அதே வழிமுறையைத்தான் இதிலும் கையாண்டனர். போராட்டக்காரக் குழுக்களுக்குள் சில அமைப்புகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாட்டைப் பார்த்து காவல் துறையினரும் நிர்வாகமும் சிரித்துக்கொண்டிருந்தனர். இவ்வளவு பெரிய எதிர்ப்பு மக்களிடம் உருவாகிவரும்போது ஆட்சியாளர்கள் அதற்குரிய முக்கியத்துவத்தைத் தந்து அணுக வேண்டுமா, இல்லையா?

பேரணி எந்த சமயத்தில் வன்முறையானது?

போராட்டக் களத்தில் இருந்த எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். பேரணி தொடங்கிய இடத்திலிருந்து காவல் துறையினர் யாரும் மக்களைத் தடுக்கவே இல்லை. அதேபோல, போராட்டக்காரர்களும் வன்முறை மனநிலையில் இல்லை. மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் என பல தரப்பினரும் அமைதியுடன் கலந்துகொண்டதைப் பார்த்தேன். மூன்று மைல் பாலத்துக்கு அருகில் காவல் துறையினர் திடீரென்று தடியடி நடத்தினார்கள். ஆனாலும், மக்கள் திரண்டு பேரணியைத் தொடர்ந்தார்கள். மக்கள் கூடிக்கொண்டே இருந்தார்கள். ஆட்சியர் அலுவலகம் முன்புதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆங்காங்கே துப்பாக்கிச்சூடு நடக்கத் தொடங்கியதும்தான் வன்முறை தொடங்கியது. கூட வந்தவர்கள் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததையும், இறந்ததையும் மக்கள் பார்த்தபோது கலவரம் வெடித்தது.

போலீஸார் மக்களைச் சுடும் காணொலி அவர்கள் எந்த விதிகளையும் பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை உருவாக்கியிருக்கிறது. காவல் துறை அதிகாரிகள் இதை மறுக்கிறார்கள். என்ன நடந்தது?

போலீஸ் சீருடையில் இல்லாத போலீஸார் பச்சை, மஞ்சள் சட்டைகளுடன் போலீஸ் வாகனத்தின் மேல் நின்று சுட்டிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன் போராட்ட இடத்தில் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கைகள் வெளியிடப்பட வேண்டும்.

போராட்டம் செய்யும் மக்களைக் கலைந்துபோகச் சொல்ல வேண்டும். ஆனால், அப்படியான எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. பட்டாசு வெடிப்பதுபோல அவ்வளவு அலட்சியமாக மக்களைக் கையாண்டார்கள். மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டியில் இருந்ததாகச் சொல்கிறார்கள். சம்பவ இடத்தில் இரண்டு டிஐஜி, ஒரு ஐஜி இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் ஒருத்தரைக்கூடப் பார்க்கவில்லை. மக்கள் ஜனநாயக முறையில் போராடுவதையும் திரள்வதையும் அடிப்படை உரிமையாக இந்திய அரசியலமைப்பு அனுமதித்துள்ளது. போராட்டம் என்பது ஜனநாயகத்தின் வடிவம். ஆனால், இன்று நம்மை ஆள்பவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. மெரினா கடற்கரையை ஏன் இத்தனை புனிதமாகப் பாதுகாக்கிறார்கள்? உயர் நீதிமன்றமே இதைக் கேள்வியாகக் கேட்டுவிட்டது.

ஆயுதங்களின்றி அமைதியாகப் போராடுவதற்கு ஏன் இத்தனை கெடுபிடிகளை அரசு வைத்துள்ளது? மார்ச் 24-ல் ஆரம்பித்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் நூறு நாட்களும் பேசாமல் அதைப் படுகொலைகள் மூலம் முடித்துவைத்தது அதிகாரவர்க்கத்தின் ஒட்டுமொத்த தோல்வி. ஆட்சியர் அலுவலகத்துக்குப் பக்கத்திலேயே அமைதியான முறையில் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்திருந்தால் இந்த அசம்பாவிதங்கள் நடந்திருக்காது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

உயர் நீதிமன்றம் ‘ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாவது அலகைத் திறக்கக் கூடாது’ என்று நேற்று உத்தரவிட்டிருக்கிறதே?

இது தொடர்பான பொது விசாரணைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பொது விசாரணையில் பொதுமக்கள் முதலமைச்சருக்கும் இந்த ஆட்சிக்கும் பாடம் கற்பிப்பார்கள். முதலமைச்சருக்கு உண்மையிலேயே இந்த விஷயத்தில் அக்கறை இருந்தால், அந்த ஆலையின் முதல் அலகை மூட அவரே நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் தொடர்ந்து நடைபெறும் காவல் துறை வன்முறைகளை உடனடியாக நிறுத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

- ஷங்கர்ராமசுப்பிரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x