Last Updated : 23 May, 2018 10:04 AM

 

Published : 23 May 2018 10:04 AM
Last Updated : 23 May 2018 10:04 AM

கூட்டாட்சியின் நூற்றாண்டு

ன்றைக்கு இந்தியாவின் மிகப் பெரும்பாலான கட்சிகள் முன்வைக்கும் முழக்கம் ‘கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்பட வேண்டும்’ என்பதுதான். இந்தியா ஒரு கூட்டாட்சியா? அரசியல் சட்டத்தில் கூட்டாட்சி என்கிற சொல் கிடையாது.

அரசியல் சட்டம் உருவான காலத்திலிருந்து இன்று வரை அதனை ஆய்வுசெய்த நிபுணர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியா ஒரு ஒற்றையாட்சி அமைப்பும் அல்ல, முழுமையான கூட்டாட்சி நாடும் அல்ல என்றே கூறியிருக்கிறார்கள். இந்தியாவில் இருக்கும் அரசியல் சட்டம் உணர்வில் கூட்டாட்சியாகவும், அமைப்பில் ஒற்றையாட்சியாகவுமாகவே கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

இந்தியாவின் அதிகாரம் செலுத்தும் முறை யைப் பற்றி ஆராய்வதற்காக 1907-ல் நியமிக்கப்பட்ட ராயல் கமிஷன் ‘நிர்வாக வசதிகளுக்காகவும்’, ‘பொறுப்புணர்ச்சியை அதிகரிப்பதற்காகவும்’ அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. இந்த அறிக்கைக்குப் பிறகுதான் மாகாணங்களில் மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, பட்ஜெட் மீது விவாதம் நடத்தும் உரிமை கொடுக்கப்பட்டது.

எனினும், மாண்டேகு வைஸ்ராயாகப் பொறுப்பேற்ற பிறகுதான் இந்தியா குறித்த பிரிட்டிஷின் எதிர்காலத் திட்டத்தைப் பற்றி 1917-ல் ஆகஸ்ட் பிரகடனம் வெளியிடப்படுகிறது. அந்தப் பிரகடனத்தில்தான், படிப்படியாக இந்தியர்களை அதிகாரம் பெறச் செய்வது என்கிற திட்டத்தைக் குறிப்பிடுகின்றனர். அத்திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக, இந்தியாவில் செய்யப்பட வேண்டிய அதிகார மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து கொடுக்கப்பட்ட மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கை 1918 மே மூன்றாவது வாரம் சமர்ப்பிக்கப்பட்டு, ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.

மாகாணங்களுக்கும், மத்திய அரசுக்குமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, இரட்டை ஆட்சி முறை உருவாக்குவது போன்ற அம்சங்கள் அடங்கிய அந்த அறிக்கையின் பரிந்துரையில் தான் முதன்முதலாக, இந்தியாவின் அதிகார அமைப்பை உருவாக்கும் ஓர் திட்டத்தில் ‘கூட்டாட்சி’ என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது.

காத்திரமான மாற்றங்கள் ஏதும் இல்லை என்றாலும்கூட, கூட்டாட்சியின் வாசனையை இந்தியாவின் அதிகார மட்டத்தில் மெலியச்சேர்த்த அந்த அறிக்கை வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இந்தியா காலனியாக இருந்தபோது வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் அறிக்கை ஆயிற்றே என்கிற மனப்பாங்கைக் கழித்துவிட்டுப்பார்த்தால், இந்தியா வில் கூட்டாட்சித் தத்துவத்துக்கான நூற்றாண்டு இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x