Published : 23 May 2018 10:01 AM
Last Updated : 23 May 2018 10:01 AM

காவிரி ஆணையம் நிரந்தரத் தீர்வைத் தராது!: நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் பேட்டி

கா

விரி நதிநீர்ப் பங்கீட்டுக்காக மத்திய அரசு அறிவித்திருக்கும் ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ எந்த அளவுக்கு இந்தப் பிரச்சினையில் தீர்வைத் தரும்? நாடறிந்த நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜனிடம் இது குறித்துப் பேசினேன். இவர் தெற்காசிய நீராய்ச்சி நிறுவனத்தின் தலைவர். காவிரி விவகாரத்தைத் தமிழக விவசாயிகளின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல், கர்நாடக விவசாயிகளின் பிரச்சினையாகவும் அணுகும் ‘காவிரிக் குடும்ப’த்தின் ஒருங்கிணைப்பாளர். இரு தரப்பு நல்லுறவுக்காகத் தொடர் முயற்சிகளை முன்னெடுப்பதோடு, தண்ணீர்ப் பிரச்சினையை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான உலகளாவியப் பார்வையையும் கொண்டவர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

காவிரி மேலாண்மை ஆணையத்தை, ராவி-பியாஸ், நர்மதை, கோதாவரி போன்ற நதிகளுக்கான வாரியங் களுடன் சிலர் ஒப்பிடுகிறார்கள். அப்படியல்ல. அதில், உபரி நீரைப் பங்கிடுவது மட்டுமே பிரச்சினை. ஆனால், காவிரி அப்படி இல்லை. இங்கு ஏற்கெனவே பற்றாக்குறை நிலவு கிறது. இருப்பது 50% நம்பகத்தன்மைப்படி 740 டிஎம்சிதான். நான்கு மாநிலங்களுக்கும் தேவையான நீரோ 1,200 டிஎம்சிக்கு மேல். இதற்கான மேலாண்மை வாரியத்தை அமைக்கும்போது மிகமிகக் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், மேலோட்டமாகவும் அஜாக்கிரதையுடனும் அவசரக்கோலத்துடனும் திட்டத்தை உருவாக்கியிருப்பது மிக வருத்தம் அளிக்கிறது.

சர்வதேச நீர்ச் சட்டங்களின்படி, கீழே உள்ள மாநிலத்துக்குத்தான் நீர் பெறுவதற்கான முதன்மை உரிமை உண்டு. நாம் அதைக்கூடக் கோரவில்லை. பல ஆண்டு போராட்டங்களுக்குப் பின், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வந்த பிறகுகூட மாதவாரி நீர்த் திறப்பை உறுதிசெய்வதற்கான ஒரு நீர்த்துப்போன திட்டத்தைக் கொடுத்திருப்பது மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினையை அதிகரிக்கவே உதவும். நிரந்தரத் தீர்வைத் தராது.

நீர்த் தேக்கங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று சொல்லியிருப்பது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கும் நல்லது என்று சொல்லப்படுகிறதே?

காவிரி நீர் சேமிப்பு, பங்கீடு, ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்பாடு, நீர்த் தேக்கங்களின் மேற்பார்வை ஆகியவற்றுக்கான அதிகாரம் மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும் என்று சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தில், “நீர்த் தேக்கங்களை இயக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே” என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் என்ன சிக்கல் என்றால், அணைகளின் கட்டுப்பாடு கர்நாடக அரசிடம்தான் இருக்கும் என்றால், வாரியம் வெறும் ஆலோசனை அமைப்பாகச் சுருங்கிவிடும்.

எந்த மாநிலமும் புதிய அணைகள் கட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. கர்நாடகத்தில் புதிய அணைகள் கட்டினால் தமிழகத்துக்கு நீர் வருவது தடுக்கப்படும். எனவே, அதைத் தடுத்திருப்பது சரி. ஆனால், தமிழ்நாட்டில் புதிய நீர்த்தேக்கங்கள், அணைகள் கட்டினால் கர்நாடகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்கப்போவதில்லை. தமிழகத்தின் இந்த உரிமையை நாம் நிலைநாட்ட வேண்டும்.

காவிரி நீரை எதிர்நோக்கியிருக்கும் காவிரிப் படுகை மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்களின் இன்றைய நிலை என்ன?

தமிழகத்தின் 23 மாவட்டங்கள் நீர்த் தேவைக்குக் காவிரியைச் சார்ந்து இருக்கின்றன. குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் 100% காவிரியை நம்பியிருக்கின்றன. அங்கு சுத்தமாக நீர் இல்லை. சம்பா சாகுபடிக்குக்கூடத் தண்ணீர் வருவது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. மழை வந்தால் வெள்ளம், மழை வரவில்லை என்றால் வறட்சி என்பதுதான் மூன்று காவிரிப் படுகை மாவட்டங்களில் தொடரும் நிலவரம். கிணறு, ஆழ்துளைக் கிணறு ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் ஓரளவு பிழைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வரலாறு காணாத அளவு தற்கொலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இது வாழ்வாதாரப் பிரச்சினை. இன்னொருபுறம் மிகப் பெரிய சூழலியல் பிரச்சினையும் உள்ளது. ஆற்றுநீர் கடலுக்குப் போய்ச் சேரவில்லை என்றால், கடல்நீர் உள்ளே வந்துவிடும். ஏற்கெனவே 16 கி.மீ. அளவுக்கு கடல்நீர் உள்ளே வந்துவிட்டது. ஒட்டுமொத்த நாகப்பட்டின மாவட்டம் 100% உப்பாக மாறிவிட்டதாக மத்திய நிலத்தடிநீர் வாரியம் சொல்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் 50% உப்பாக மாறிவிட்டது. 20-25% டெல்டா நிலங்கள் விவசாயத்துக்குப் பயனற்ற நிலங்களாக மாறிவிட்டன. அவை விற்கப்படுகின்றன.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில்தான் பட்டியலின மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். 21% பட்டியலின மக்கள் அங்கு வசிக்கிறார்கள். இவர்களில் மிகப் பெரும்பாலானோர் நிலமில்லாத் தொழிலாளிகள். அவர்களுக்கு இப்போது வாழ்வாதாரம் இல்லை. வேலை தேடி நாடோடிபோல் திரியும் விரக்திநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதேபோல் 70-80% சிறு-குறு விவசாயிகள் பெரிய அளவில் கடனாளிகளாகி வாழ்வாதாரப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவுக்குப் பொதுவான அதிகாரமாக இருக்கும் மத்திய அரசு காங்கிரஸாக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் இந்த விஷயத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாகவே செயல்படும் சூழலை எப்படி மாற்றுவது?

அரை நூற்றாண்டாக தமிழகத்தில் பிராந்தியக் கட்சிகளே ஆள்கின்றன. மாறாக, கர்நாடகத்தில் தேசியக் கட்சிகள் ஆள்கின்றன. இப்படியான அரசியல் காரணங்களுக்காக தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்றால், இந்தியக் கூட்டாட்சி அமைப்புக்கு அது பெரிய அச்சுறுத்தலை உருவாக்கும்.

தமிழக அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

வரலாற்றுபூர்வமாகப் பார்த்தால் தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் காவிரி நீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு நமக்கு ஒதுக்கியது 192 டிஎம்சி. இப்போது அதை உச்ச நீதிமன்றம் 177.25 டிஎம்சியாகக் குறைத்துள்ளது. அதுவும் 15 வருடங்களுக்கு மட்டும். அதற்குப் பின் இதுவும் குறையலாம். மாறாக, நமது தண்ணீர் தேவையோ அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒதுக்கீடு இப்படிக் குறைந்துகொண்டே போனால் என்ன ஆகும்? தமிழகத்தை எந்தக் கட்சி ஆண்டாலும் சரி, தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது முக்கியம். இதைத்தான் நான் அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.

ஆணையம் செயல்பாட்டுக்கு வந்த பின் காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை எந்த அளவு இருக்கிறது?

இது உண்மையிலேயே தீர்வு தருமா, தராதா என்பது வரும் ஜூன் மாதம் தெரிந்துவிடும். இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. இதற்குள் அவர்கள் ஆணையத்தை உருவாக்கி, இதை அரசிதழில் வெளியிட வேண்டும். தண்ணீர் வர வேண்டும். பார்ப்போம்!

- ச.கோபாலகிருஷ்ணன்,

தொடர்புக்கு: gopalakrishnan.sn@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x