Last Updated : 22 May, 2018 09:06 AM

 

Published : 22 May 2018 09:06 AM
Last Updated : 22 May 2018 09:06 AM

காவிரி: வராத நீர், வழங்கப்படாத நீதி!

கா

விரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் மே 18-ல் இறுதித் தீர்ப்பை அளித்துவிட்டது. ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ என்ற அமைப்பை உருவாக்கப்போவதாக மத்திய அரசு சமர்ப்பித்த வரைவுத் திட்டத்தை அது அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பதைப் போல ஆளும் அதிமுகவினரும், பாஜகவினரும் கூறிவருகின்றனர். வாரியமோ ஆணையமோ பெயர் எப்படி இருந்தாலும் அதற்கு அதிகாரம் இருக்கிறதா என்று பார்ப்பதே முக்கியம் என்றும் அவர்கள் பேசிவருகின்றனர். இந்த ஆணையம் சுதந்திரமான அதிகாரம் கொண்ட அமைப்புதானா? அப்படி உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறதா?

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது. அந்த அமைப்பு ‘மத்திய அரசைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் கொண்ட சுதந்திர மான அதிகாரம்கொண்ட ஒரு அமைப்பாக இருக்கவேண்டும்’ எனவும் வலியுறுத்தியிருந்தது. ஆனால், சுதந்திரமான அமைப்பாக இந்த ஆணையம் இருக்க வேண்டும் எனத் தெளிவாகக் கூறாமல், குழப்பமான நிலையையே உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில் ‘ஸ்கீம்’ எனக் கூறியதால் நேர்ந்த குழப்பம்தான் இப்போது நினைவுக்கு வருகிறது.

இறுகும் மத்திய அரசின் பிடி

நடுவர் மன்றம் கூறியவற்றிலிருந்து பலவற்றை வரிக்கு வரி அப்படியே எடுத்துப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசின் வரைவுத் திட்டம், அமைப்பின் தலைவர், முழு நேர உறுப்பினர்கள் ஆகியோரை நியமிப்பதற்கு நடுவர் மன்றம் வரையறுத்த தகுதியை மட்டும் மாற்றிவிட்டது. மேலாண்மை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் நீர்ப்பாசனத் துறையில் வல்லுநராகவும் தலைமைப் பொறியாளராகவும் 20 வருட அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என நடுவர் மன்றம் கூறியிருந்தது. அவர் மூத்த, திறமைவாய்ந்த அதிகாரியாக இருக்கலாம் அல்லது செயலாளர், கூடுதல் செயலாளர் என்ற நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கலாம் என அந்தத் தகுதிகளை மத்திய அரசின் வரைவுத் திட்டம் தளர்த்தியிருக்கிறது. அதுபோலவே இரண்டு முழு நேர உறுப்பினர்களின் தகுதிகளும்கூட மாற்றப்பட்டுள்ளன. முன்னதாக ‘இந்த அமைப்புக்கான செயலாளர் இந்தப் பிரச்சினை யில் சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களையும் சேராத ஒருவராக இருக்க வேண்டும். அவரை வாரியம்தான் நியமிக்கும்’ என நடுவர் மன்றம் கூறியிருந்தது. ஆனால், அவரை மத்திய அரசு நியமிக்கும் என்கிறது வரைவுத் திட்டம். இந்த மாற்றங்களின் மூலம் இந்த ஆணையத் தைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்கு மத்திய அரசு முனைந்திருக்கிறது.

தமிழக அரசு தவறவிட்ட விஷயங்கள்

காவிரி வழக்கில் கர்நாடகத்தைப் போல இந்தத் துறை யில் திறமையும் அனுபவமும் வாய்ந்த வழக்கறிஞர்களைத் தமிழக அரசு நியமிக்கவில்லை. நிலத்தடி நீரையும், பெங்களூருவின் முக்கியத்துவத்தையும் காரணம் காட்டி, 14.75 டிஎம்சி குறைக்கப்பட்டதற்கு அதுதான் காரணம். இப்போதும்கூட தமிழகத் தரப்பு முக்கியமான சில விஷயங்களைத் தவறவிட்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 14.75 டிஎம்சியைக் குறைத்தபோது, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய மாதாந்திர அளவில் விகிதாச்சாரப்படி குறைத் துக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தது. ஆனால், கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் மோகன் கடார்க்கியோ, ‘ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலான நான்கு மாதங்களின் கணக்கில் அதைக் குறைக்கப் போகிறோம்’ எனக் கூறிவருகிறார். தமிழ்நாட்டின் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் தேவைப்படும் காலங்களில் அதைக் கொடுக்காமல் கர்நாடகா இழுத்தடிக்கும் பிரச்சினை நடுவர் மன்றத்திலேயே வாதிடப்பட்டது.

“1974-க்குப் பிறகு ஜூன் மாதத்தில் தண்ணீர் தராமல் குறுவைப் பட்டம் முடியும்போதுதான் கர்நாடகா தண்ணீர் தருகிறது” என நடுவர்மன்றத்தில் தமிழ்நாடு தெரிவித்திருந்தது. அதை சுட்டிக்காட்டி, மாதாந்திர அளவை உச்ச நீதிமன்றமே வரையறுக்க வேண்டும் என்று தமிழகத் தரப்பில் வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டத் தின் பிரிவுகளுக்கு இடையேயுள்ள முரண்பாடு ஒன்றை நடுவர்மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் சுட்டிக்காட்டி யிருந்தது. மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா திருத்தச் சட்டம் 2002 பிரிவு 6 (2)ல் “நடுவர்மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டால், உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்குச் சமமான அதிகாரத்தைப் பெறுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது. அதே சட்டத்தின் பிரிவு 6 (A) (7) இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்படும் செயல்திட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வைக்கப்பட்டு அதில், திருத்தங்கள் ஏதும் செய்யப்பட்டால் அதையும் உள்ளடக்கி அதன் பின்னர் நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு இணையான ஒரு ஆணையை நாடாளுமன்றத்தில் வைத்துத் திருத்தம் செய்யலாம் என்று சொல்வது முரண்பாடாக உள்ளது” என நடுவர்மன்றம் அப்போதே கூறியிருந்தது. இதையும் தற்போது நடைபெற்ற உச்ச நீதிமன்ற வழக்கு வாதத்தின்போது தமிழகத் தரப்பில் சுட்டிக்காட்டி தீர்வு கண்டிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த வரைவுத் திட்டத் தில் தமிழகத்துக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் திருத்தங்கள் வரக்கூடிய ஆபத்து இருக்கிறது.

உச்ச நீதிமன்றம், “இந்த வரைவுத் திட்டத்தை அடுத்து பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பே அரசிதழில் வெளியிடவேண்டும்” எனக் கூறியிருக்கிறது. அப்படியென்றால், இதை நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டுமா வேண்டாமா என்ற விளக்கத்தை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும். அதுவும் செய்யப்படவில்லை. ‘மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தின்மீது தமிழக அரசு எந்தவொரு ஆலோசனையையும் கூறவில்லை” என 18.05.2018 அன்று வழங்கப்பட்ட தனது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறி யிருப்பதே தமிழகத் தரப்பு எந்த அளவுக்கு இந்த வழக்கில் வாதாடியது என்பதற்கான சான்றாகும்.

ஆணையம் அமைந்ததும் அதில் இந்தப் பிரச்சினை களையெல்லாம் தீர்த்துக்கொள்ளலாம் எனத் தமிழகத் தரப்பு விளக்கம் அளிக்கக்கூடும். அது ஏற்கத்தக்கதல்ல. ஏனெனில், சட்டப் பிரச்சினைகளைத் தீர்க்கும் இடம் உச்ச நீதிமன்றமே தவிர, ஆணையம் அல்ல. ஒன்றை மட்டும் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்: காவிரி வழக்கில் நமக்கு இன்னமும் நியாயம் கிடைத்துவிடவில்லை. இப்போது நாம் வந்து சேர்ந்திருப்பது முடிவுக்கு அல்ல, அடுத்த போராட்டத்தின் தொடக்கத்துக்கு.

- ரவிக்குமார்,

எழுத்தாளர், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: adheedhan@gmail.c

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x