Published : 21 May 2018 08:42 AM
Last Updated : 21 May 2018 08:42 AM

கர்நாடகத் தேர்தல் காங்கிரஸுக்குக் கற்றுத்தந்த பாடம்!

ந்தியாவில் எங்கு, எப்போது தேர்தல் நடந்தாலும் தோற்பதே காங்கிரஸின் வழக்கமாகிக்கொண்டிருக் கிறது. பார்வையாளர்களான மக்கள் திகைத்துக் கரகோஷம் செய்யும்போது, தொப்பிக்குள்ளிருந்து முயல்களாக இழுத்துத் தள்ளும் மந்திரவாதியைப் போல, பாஜக தொடர்ந்து வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறது.

சித்தராமையாவின் அகங்காரம்

தேர்தல் களத்தில் வெற்றியைத் தீர்மானிப்பது தலைமையின் கவர்ச்சி மட்டுமல்ல, சமூகப் பிரச்சினைகளும் போக்குகளும்தான் என்று எல்லாக் கட்சிகளுக் கும் தெரியும். காங்கிரஸைவிட தான் நிரந்தரமானவர் என்று கருதினார் சித்தராமையா. நம்ப முடியாத அளவுக் குச் செருக்கு ஏற்பட்டுவிட்டது அவருக்கு. இத்தனை ஆண்டுகளாக அவரை ஆதரித்துவந்த சமூகங்களையே மறந்துவிட்டார். தன்னோடு தன் மகனுக்கும் பேரவைத் தொகுதி கேட்டு வாங்கினார், வாரிசுகளைக் களத்தில் இறக்கும் உத்தியை ஒரு வியாதியாகவே மாற்றிவிட்டார். கட்சிக்குள் உள்பூசலை அனுமதித்தார். பாஜகவோ வெற்றியை ஒவ்வொரு கவளமாகச் சேர்த்துக்கொண்டிருந்தது. இறுதியில், மொத்த இடங்கள்தான் கைகொடுக் கும் என்று அதற்குத் தெரியும். களநிலை தெரிந்தவர், அரசியல் வித்தகராக அறியப்பட்ட சித்தராமையா காற்றடைத்த பலூன்போல திடீரென உப்பினார். உடைந்தார்.

காங்கிரஸ் கட்சி தனது உத்தியால் இடங்களை இழக்கவில்லை, ஒட்டுமொத்தமான வியூகத்தை வகுக்காமல் போனதால் இழந்தது. மஜத போன்ற கட்சிகளுடன் உறவை வலுப்படுத்தி வலிமையான கூட்டணி அமைப்பது அவசியம் என்று சுயமோகியான சித்தராமையா கருதவில்லை. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்பதை மக்களே கணித்திருந்த நிலையிலும் காங்கிரஸ் அதற்கேற்பத் தன்னைத் தயார்செய்துகொள்ளவில்லை. சித்தராமையாவுக்குக் கற்பனை வறண்டுவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட பாஜக, அவரை உசுப்பிவிட்டது.

பாஜக அல்லாத கட்சிகளை அரவணைத்து, அவர் களுடைய மனப்புண்ணை ஆற்ற வேண்டிய சமயத்தில், மஜதவைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் சித்தராமையா. கள நிலைமை என்னவென்று கணிக்கத் தவறினார். பாஜகவிடம் அபாரமான திறமைகள் இரண்டு உள்ளன. முதலாவது, தன்னுடைய அரசியல் எதிரியின் பலம் - பலவீனங்களை நன்கு தெரிந்துகொள்வது. இரண்டாவது, தனக்கு வெற்றி கிடைக்கும் காலம் கனியும் வரை பொறுமையாகக் காத்திருப்பது. காங்கிரஸை உசுப்பிவிட்டு அது தன்னைத்தானே ரணமாக்கிக்கொள்ள வைக்கும் உத்தியையும் கற்று வைத்திருக்கிறது.

உத்தி, வியூகம் ஒருபக்கம் இருக்க, சித்தராமையாவுக்கு சமூகத் தொடர்புகளும் போதவில்லை. கர்நாடகத் தின் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் உள்ள இடைவெளி தனக்குச் சாதகமாக இல்லை என்பதையும் அவர் உணரவில்லை. குஜராத்தில் கோட்டைவிட்டதைப் போலவே நகர்ப்புறங்களைப் பாஜகவுக்குத் தாரை வார்த்துவிட்டது காங்கிரஸ்.

மக்களின் மனதில் என்ன இருக்கிறது?

சித்தாந்தரீதியாக பாஜகவைப் பழமைவாதக் கட்சி என்று முத்திரை குத்தினாலும் வாக்காளர்களின் மனங்களைப் படிப்பதில் அது முன்னோடியாக இருக்கிறது. எனவேதான் சமூகநீதியைக் காட்டிலும் மக்கள் அதிகம் எடுபடும் நிர்வாக மேலாண்மைக்கு அது கவனம் கொடுத்துப் பேசுகிறது. நகரங்களில் குப்பைகளை அகற்றாமல் வீதிகளை நாறடிப்பது, பொதுப்போக்குவரத்து இல்லாமல் மக்கள் வாடுவது, சொந்த வாகனங்களைக் கூட ஓட்டிச் செல்ல முடியாமல் நகரங்கள் வாகன நெரிச லால் திணறுவது போன்றவை மக்களுடைய பிரச்சினை கள் என்று பாஜக அடையாளம் கண்டுள்ளது. எனவே, இவற்றைச் சுட்டிக்காட்டினாலே நகர மக்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்று சிந்தித்துச் செயல்பட்டது.

நகரங்களின் துயரங்கள் எவையென்று பார்ப்பதையே காங்கிரஸ் கைவிட்டுவிட்டது. அனைத்து மத, இன, மொழி மக்களுக்குமான நகரமாக பெங்களூரு இப்போது இல்லை. அதெல்லாம் ஒரு காலம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் நகருக்குள் குடியேறுவது அதிகரித்தாலும் மக்களிடையே முன்பைப் போல ஒட்டுறவு இல்லை. உள்ளூர்வாசிகளுக்கு இணையாக, வெளியூரிலிருந்து வந்து குடியேறுகிறவர்களும் பெரிய பெரிய கதவுகளால் அடைக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு களுக்குள் தனித்தனியாக வாழ்கின்றனர்.

தேர்தல்ரீதியாக பெங்களூரு இரு வேறு நகரங்களாகிவிடுகிறது. முதலாவது, தகவல் தொழில்நுட்பத் துறை யின் கனவு நகரம். இரண்டாவது, சின்ன விஷயத்துக்கும்கூட முட்டிக்கொள்கிற நகரம். அரசின் கொள்கை வகுப்பாளர்களைவிட அரசியல்வாதிகள்தான் பெங்களூருவின் இந்த இரட்டைத்தன்மையை முதலில் கவனித்திருக்க வேண்டும். சாலையோரத்தில் உள்ள எந்த தேநீர்க் கடையில் ஐந்து நிமிஷம் நின்று பேசினாலும் நகரின் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொண்டிருக்க முடியும்.

பொது இடங்களில் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை அறிந்து மோதல்களைத் தவிர்க்கவும் மனப்புண்களை ஆற்றவும் பேச அரசியல் தவறும்போது நகரங்கள் நொறுங்கிவிடுகின்றன. பெங்களூருவுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க காங்கிரஸ் தவறியது, உள்கட்சிப் பூசல்கள் வலுத்ததுதான் முக்கிய காரணம். இறுதியாக, லிங்காயத்துகளைத் தனிச் சிறுபான்மையராக அங்கீகரிக்க எடுத்த முடிவானது நன்கு ஆராயாமல் மேற்கொள்ளப்பட்டது. அது காங்கிரஸுக்கு ஆதரவைப் பெருக்குவதற்குப் பதிலாக மக்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. சித்தாந்தம் என்று காங்கிரஸ் நினைத்துச் செய்ததை, சாதிரீதியிலான பிளப்பு என்றே மக்கள் பார்த்தார்கள், அதற்கேற்பச் செயல்பட்டார்கள். அரசியல் கட்சிகளைவிட சாதாரண வாக்காளன்தான் மதச்சார்பற்றவனாகவே இருக்கிறான்.

தேர்ந்தெடுக்க மாற்று இல்லை

வாக்காளர்களுக்கு இந்தத் தேர்தலில் பாஜகவைவிட நல்ல மாற்று இல்லாமல் போய்விட்டது. அதேசமயம், பாஜகவுக்கு எச்சரிக்கையாகத்தான் ஆதரவு தந்துள்ளனர். சித்தராமையா கொண்டுவருவதாகக் கூறிய மாற்றங்கள், உண்மையிலேயே மாற்றங்கள் அல்ல என்பதால் வாக்காளர்கள் ஏற்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் என்பது ஊராட்சி தொடங்கி வட்டாட்சியர் அலுவலகம் வரை வீரியமாகவே இருந்தது.

இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டவோ, உற்சாகப் படவோ ஏதுமில்லை என்றே என்னுடைய நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் அதைத் தங்களுக்கு அளித்த ஆதரவாக வலதுசாரி தீவிரவாதகும்பல்கள் நினைத்துவிடும் என்று வருத்தப்பட்டார். மற்றபடி இந்தியாவில் அரசியல் எப்போதும் அரசியலாகவே இருக்கிறது. கடவுளர்கள் தேவலோகத்திலும் ஊழலும் வகுப்புவாதமும் அதனதன் இருப்பிடங்களிலும் சுகமாக வாழ்கின்றன! இது எதிர்காலத்துக்கு நல்லதா என்றால், எதிர்காலத்தில்தான் பார்க்க வேண்டும். அரசியல் என்பது யாருக்கு, என்ன, எப்படி, எப்போது கிடைக்கிறது என்பதுதான். அதில் சில வியப்பூட்டும் அம்சங்களும் சேர்ந்துவிடுகின்றன.

தமிழில்: சாரி, ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x