Last Updated : 10 May, 2018 09:14 AM

 

Published : 10 May 2018 09:14 AM
Last Updated : 10 May 2018 09:14 AM

அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகும் லிஃப்கோ!

டந்த சில தசாப்தங்களுக்கு முன்புவரை, ஆங்கிலம்-தமிழ் அகராதி என்றதும் நினைவில் வரும் பெயர் ‘லிஃப்கோ’தான். ‘தி லிட்டில் பிளவர் கம்பெனி’ (லிஃப்கோ) நிறுவனம் வெளியிட்ட அந்த அகராதி அனைத்துத் தரப்பினராலும் பயன்படுத்தப்பட்டது. தமிழரால் தமிழ்நாட்டில் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட அகராதி எனும் பெருமையும் இதற்கு உண்டு. 1929-ல் கிருஷ்ணஸ்வாமி சர்மாவால் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்துக்கு இது 90-வது ஆண்டு.

ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான நம்பகமான தமிழ் வார்த்தைகள், எளிமையான பொருள் விளக்கங்கள், விளக்கப்படங்கள், மலிவான விலை என்று பல்வேறு காரணங்களால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் முதல் தேர்வாக லிஃப்கோ அகராதி விளங்கிவந்தது. இதுவரை, பத்து விதமான அகராதிகளைப் பதிப்பித்திருக்கும் லிஃப்கோ, தற்போது இரண்டு பாகங்களாகப் பிரித்து 50,000 சொற்களுக்கும் அதிகம் கொண்ட அகராதியாக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.

அகராதிகள் தவிர ஆன்மீக நூல் வெளியீட்டிலும் தனிமுத்திரை பதித்த பதிப்பகம் லிஃப்கோ. இதுவரை பதிப்பித்திருக்கும் 728 நூல்களில் 433 ஆன்மீகம் தொடர்பானவை. இதர துறைகளில் 200 நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

பதிப்புப் பணியோடு சமூக சேவைகளிலும் இந்த நிறுவனம் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறது. 1970-ல் கிருஷ்ணசாமி சர்மாவால் தொடங்கப்பட்ட ‘லிஃப்கோ அறக்கட்டளை’, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசப் புத்தகங்கள், அகராதிகள், புத்தகப் பை, கல்வி உபகரணங்களை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. ராமானுஜரின் கொள்கைகளைப் பரப்பும் ஆன்மீக அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் ‘ராமானுஜசேவாஸ்ரீ’ என்ற விருதையும் வழங்கிவருகிறது.

தமிழர்களின் மங்காத நினைவுகளில் ஒன்றாக நிறைந்திருக்கும் லிஃப்கோ, பதிப்புலகின் மரபையும் நவீனத்தையும் ஒருசேரப் பின்பற்ற முயல்கிறது. தன்னுடைய 90-வது ஆண்டு விழாவையொட்டி, ராமாயணப் பிரதி வாங்குபவர்களுக்கு இலவச சிக்கு பலகை, குறுந்தகடு வெளியீடு, ‘லிஃப்கோ பரம்பரா’ என்ற செயலி, மாவட்டங்கள் தோறும் கிளைகள், மின்னூல்கள் என்று பல எதிர்காலத் திட்டங்களை அறிவித்திருக்கிறது லிஃப்கோ. மனமார வாழ்த்துவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x