Published : 26 Apr 2018 09:19 AM
Last Updated : 26 Apr 2018 09:19 AM

கழிப்பறை கட்டவில்லையா? ஊதியம் கிடையாது!

க்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அரசு ஊழியர்களே வீடுகளில் கழிப்பறை கட்டாமல் பொது இடங்களில் இயற்கை உபாதைகளுக்கு இடம் தேடுவதைக் கண்டித்து, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. கிஷ்ட்வர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டிருக்கிறதா என்று ஆய்வுசெய்தபோது, 616 ஊழியர்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறைகளைக் கட்டவில்லை என்று தெரியவந்தது. கழிப்பறை கட்டி முடிக்கும் வரை அவர்களுக்குரிய மாதச் சம்பளத்தை நிறுத்திவைக்க மாவட்ட வளர்ச்சி ஆணையர் அங்ரேஸ் சிங் ராணா உத்தரவிட்டிருக்கிறார்.

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டிருக்கிறதா என்று ஆய்வுநடக்கிறது. வசதியற்றவர்கள், ஏழைகள் வசிக்கும் வீடுகளாக இருந்தால், அரசே மானிய உதவியளித்து கட்டிக்கொடுக்கிறது. நிரந்தர வேலையில் இருக்கும் அரசு ஊழியர்கள், பொது சுகாதாரத்தில் அலட்சியம் காட்டும் வகையில் கழிப்பறைகளைக் கட்டாமல் இருப்பதால், தண்டிக்கும் வகையில் அவர்களுடைய மாத ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. கழிப்பறையைக் கட்டி முடித்து ஆய்வுக் குழு சான்றிதழ் தந்ததும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 71.95% வீடுகளில் இப்போது கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டன. கிஷ்ட்வர் மாவட்டத்தில் 57.23% வீடுகளில் இப்போது கழிப்பறைகள் உள்ளன. லடாக் பகுதியில் லெ, கார்கில் மாவட்டங்களிலும், தெற்கு காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்திலும், ஸ்ரீநகரிலும் எல்லா வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டுவிட்டன. பொது இடங்களில் கழிப்பதால் மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர் அல்லது நோய்களைப் பரப்புகின்றனர். பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே இது தேசிய திட்டமாகத் தீவிரமாக அமல்செய்யப்படுகிறது. வீடுகளில் கழிப்பறை கட்டுவதால் இரவு நேரங்களில் வெளியே செல்ல அவசியமின்றி, கழிப்பறைகளைப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது!

-ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x