Published : 25 Apr 2018 10:24 AM
Last Updated : 25 Apr 2018 10:24 AM

நீதித் துறை மீதான நம்பிக்கை காக்கப்பட வேண்டும்!

தலைமை நீதிபதி விசாரணைக்கு அப்பாற்பட்டவர் அல்ல!

து.அரிபரந்தாமன்,

முன்னாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

இப்படி ஒரு தீர்மானம் விவாதத்துக்கு வருவது நீதித் துறையைப் பலப்படுத்தும் என்றே நினைக்கிறேன். இதனால் நீதித் துறையின் சுதந்திரத்துக்குப் பாதகம் வராது. 50 மாநிலங்களவை உறுப்பினர்கள் சேர்ந்து தீர்மானத்தை முன்மொழிந்தால் அதைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், விசாரணைக்கே ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று மாநிலங்களவைத் தலைவர் கூறுவதுதான் பிரச்சினையே. தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் என்பதைக் காட்டிலும், லோயா மரணம், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகளை முடிவுசெய்தது பற்றி எழுந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. நான்கு மூத்த நீதிபதிகள் வெளியே வந்து பேசிய பிறகுதான் இதையெல்லாம் நாம் பேச முடிகிறது. இல்லையென்றால் இதுவே நீதிமன்ற அவமதிப்பு என்று ஆகிவிடக்கூடும்.

தீர்மானத்தை உண்மையிலேயே 50 பேர் முன்மொழிந்திருக்கிறார்களா என்பதைத்தான் மாநிலங்களவைத் தலைவர் பார்க்க வேண்டும். நீதிபதிகள் விசாரணைச் சட்டப்படி மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமிப்பது மட்டும்தான் அவரது பணி. விசாரணைக் குழுதான் நீதிபதி குற்றம் செய்திருக்கிறாரா என்பதை முடிவுசெய்து நாடாளுமன்றத்தின் முன் வைக்கும். குறிப்பிட்ட சில வழக்குகளுக்கான அமர்வுகளைத் தலைமை நீதிபதி தீர்மானிக்கவில்லை, வேறு யாரோ தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லப்படும் சந்தேகங்களில் நியாயம் இருக்கிறது. மாநிலங்களவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போகலாம் என்பதுதான் என் கருத்து. அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே அந்த வழக்கை விசாரிக்கக் கூடாது. அதை விசாரிக்கும் அமர்வையும் அவர் தீர்மானிக்கக் கூடாது!

 

உறுதிமொழிகள் வெறும் சடங்குதானா?

பொ.ரத்தினம், வழக்கறிஞர்,

சமூகச் செயல்பாட்டாளர்

அரசியல்வாதிகள் தவறுசெய்தால் தண்டிக்கப்படுகிறார்கள். நீதிபதிகள் தவறுசெய்தால் மட்டும் அவர்களை நீக்குவதற்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புதான் நடத்த வேண்டியிருக்கிறது. இன்றைக்கு இருக்கிற சூழலில் அது மிகக் கடினமானது. அம்பேத்கர் அன்றைக்கு இருந்த சூழலை மனதில் வைத்து மிகவும் கவனத்தோடு அரசியலமைப்பின் இந்தக் கூறுகளை எழுதினார். இன்றைய சூழல் அப்படியில்லை. தலைகீழாக மாறிவிட்டது. மாநிலங்களவைத் தலைவர் பாஜகவில் இருந்தவர். அவர் கட்சிச்சார்பற்ற பொறுப்புக்குப் போயிருந்தாலும் அவர் அப்படி செயல்படுகிறார் என்று நினைக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து முக்கிய வழக்குகள் மூத்த நீதிபதிகளிடம் வழங்கப்படுவதில்லை என்று கூறினார்கள். அவர் நினைத்த தீர்ப்பு வர வேண்டும் என்பதற்காகவே இப்படி அமர்வுகளைத் தீர்மானிக்கிறார் என்றார்கள். வழக்கறிஞர்களாகிறபோதே, சட்டத்தை, நீதியைக் காப்போம் என்றும் உண்மையாக நடப்போம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொள்கிறோம். அது வெறும் சடங்காகிவிட்டது. சில நீதிபதிகள் மத்தியிலும் அப்படித்தான் இருக்கிறது.

இப்போதும்கூட, ஏதோ ஒரு நீதிபதிதான் இப்படிச் செய்கிறார், மற்றவர்கள் மீது குறைசொல்லவில்லை என்றுதான் நாம் கூறுகிறோம். அந்த நிறுவனத்தைப் பாதுகாப்பதற்காகத்தான் அப்படிச் செய்கிறோம். நிறுவனத்தை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையில்லாமல் செய்வதற்கு அல்ல! நம்பிக்கை காக்கப்பட வேண்டும் என்றால், இந்த நிறுவனங்களில் இருப்பவர்கள் முழுவதும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்.

 

விசாரணை நடந்த பிறகுதானே முடிவெடுக்க முடியும்?

சுஹ்ரித் பார்த்தசாரதி,

உயர் நீதிமன்ற வழக்கறிஞர்

நீதிபதிகள் விசாரணைச் சட்டம் பிரிவு 3-ன்படி தவறான நடத்தை குறித்து நிரூபிக்கப்படவில்லை என்கிறார் மாநிலங்களவைத் தலைவர். தவறான நடத்தை நிரூபிக்கப்படவில்லை என்பதை விசாரணை நடந்த பிறகுதானே முடிவெடுக்க முடியும்? குற்றச்சாட்டு இருக்கிறதா, அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அது பதவி நீக்கத்துக்கான காரணமாக இருக்குமா, இல்லையா என்பதைப் பற்றித்தான் அவர் பார்த்திருக்க வேண்டும்.

என்.கிருஷ்ணசாமி எதிர் இந்திய ஒன்றியம்(1992) வழக்கில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பின்படி தீர்மானத்தில் உறுப்பினர்கள் போதுமான அளவில் கையெழுத்திட்டிருக்கிறார்களா, அவர்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்களா, அத்தகைய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி நீக்கம் செய்வதற்கான காரணமாக அமையுமா என்ற அளவுக்குத்தான் மாநிலங்களவைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. தற்போதைய அவருடைய உத்தரவில் அந்த வழக்கின் தீர்ப்பிலிருந்தும் மேற்கோள் காட்டியிருக்கிறார். ஆனால், அவர் மேற்கோள் காட்டியிருக்கும் பகுதிகள் சிறுபான்மையாக அளிக்கப்பட்ட தீர்ப்புரையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம் செய்வதால் மட்டுமே நீதித் துறையில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. நீதித் துறை மீதான மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையிலும் அதே நேரத்தில் நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய நடைமுறைகள் தேவை!

 

தலைமை நீதிபதி முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும்!

கி.நிலாமுதீன், சட்டத் துறைப் பேராசிரியர்,

அரசியல் சட்ட வல்லுநர்

சுதந்திரமான நீதித் துறை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பம்சம். எந்த அதிகார வர்க்கத்தினுடைய கைப்பாவையாகவும் நீதித் துறை இருக்கக் கூடாது, எந்த விதமான அச்ச உணர்வுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகாமல் இந்த நாட்டு மக்களுக்கு எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் நீதியை வழங்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கம். இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பதவி நீக்கம்செய்வதற்கான அதிகாரம், அரசியல் சட்டக் கூறு 124(2), நிபந்தனை (பி)-ல் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், நீதித் துறை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாகவே எப்போதும் இருக்க வேண்டும்.

தற்போதைய தலைமை நீதிபதி, சக நீதிபதிகளாலேயே குற்றம்சாட்டப்பட்டவர். இந்திய வரலாற்றில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீது பதவி நீக்க தீர்மானம் முன்மொழியப்படுவது இதுதான் முதன்முறை. அதைப் போலவே, சக நீதிபதிகள் தலைமை நீதிபதியின் மீது குற்றம்சாட்டுவதும் இதுதான் முதல் முறை. இப்படியொரு நிகழ்வு வந்ததற்குப் பிறகு அவர் தானாகவே முன்வந்து அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். பதவி நீக்கத் தீர்மானத்தின் மீதான விசாரணையையும் விவாதத்தையும் அவராகவே முன்வந்து வரவேற்றிருக்க வேண்டும். அதன் மூலம் சிறந்த ஓர் முன்னுதாரணத்தை அவர் உருவாக்கியிருக்க வேண்டும். அதற்கும்கூட, அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது!

தொகுப்பு: புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x