Last Updated : 24 Apr, 2018 09:38 AM

 

Published : 24 Apr 2018 09:38 AM
Last Updated : 24 Apr 2018 09:38 AM

இன்றும் தொடரும் புறா விடு தூது!

பு

றாவின் கால்களில் கடிதங்களைக் கட்டி அனுப்பும் அஞ்சல் சேவை உலகிலேயே இப்போது இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தில் மட்டும்தான் தொடர்கிறது. ஒடிஷா காவல்துறையில் இன்னமும் 50 புறாக்களுக்குத் தகுந்த பயிற்சியும், உணவும் அளித்து இதற்காகவே வளர்த்துவருகின்றனர்.

இந்த அரிய, பழங்காலக் கடிதப் போக்குவரத்து சேவையைக் கொண்டாடும் விதத்தில் கடந்த ஏப்ரல் 14-ல் புவனேஸ்வரத்திலிருந்து கட்டாக் நகருக்கு தகவல்களை அனுப்பினர். 25 கிலோ மீட்டர் தொலைவை 20 நிமிடங்களில் கடந்து, பார்வையாளர்களுக்கு உற்சாகம் ஊட்டின புறாக்கள். கலை, கலாச்சாரப் பாரம்பரியத்தைக் காப்பதற்கான இந்திய தேசிய அறக்கட்டளை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்திருந்தது.

தகவல் தொழில்நுட்பம் நவீனமடைந்துவிட்ட இக்காலத்தில் மின்னஞ்சல் சேவை உள்ளிட்ட எல்லாவித சாதனங்களும் விரல் நுனியில் காரியங்களைச் சாதிப்பதால் புறா விடு தூது பொதுவாக வழக்கொழிந்துவிட்டது. இருந்தாலும், ஒடிஷா மாநிலத்தில் இந்தப் பாரம்பரியத்தை அறுத்து எறிய மனமில்லாமல் இன்னமும் தொடர்கிறார்கள். பெரிய புயல், சூறாவளி அல்லது அதுபோன்ற இயற்கைப் பேரிடர்களின்போது மின்சாரம் தடைபட்டால் விரைவாகவும் நிச்சயமாகவும் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்க புறாக்கள்தான் பயன்படுகின்றன.

ஒடிஷா காவல்துறையில் 1946-ல் 200 புறாக்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது. அதற்கும் முன்னால் இந்தப் புறாக்கள் ராணுவத்தின் அஞ்சல் சேவைப் பிரிவில் செயல்பட்டன. இவை யாரோ-யாருக்கோ எழுதிய கடிதங்களைக் கொண்டுபோய்க் கொடுக்காது. ஒரு ராணுவப் பாசறையிலிருந்து இன்னொரு பாசறைக்கோ, தலைமையிடத்துக்கோ அனுப்பும் ரகசியச் செய்திகளை வழி மாறாமல் கொண்டுபோய்ச் சேர்க்கும். இப்போதும் காவல்துறையினர் தங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமே இதை அடையாளத்துக்குப் பயன்படுத்துகின்றனர். வாகனங்களால் போக முடியாத வழிகளில்கூட இவை பறந்து செல்லும்.

முதலில் கோராபுட் மாவட்டத்தில்தான் இச்சேவை தொடங்கியது. பெல்ஜியம் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டு பிறகு உள்நாட்டு இனங்களுடன் கலப்பினமாக்கப்பட்ட 700 புறாக்கள் இச்சேவையில் பயிற்சி பெற்றன. எளிதில் அணுகமுடியாத தொலைதூரத்தில் இருந்த காவல் நிலையங்களுக்குத் தகவல் அனுப்ப இவைதான் பெரிதும் பயன்பட்டன. 1999-ல் பெரு வெள்ளம் ஏற்பட்டபோதும் புயல் வந்தபோதும் இந்தப் புறாக்கள் மிகவும் துடிப்பாகச் செயல்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் தகவல் தொடர்பு கோபுரங்கள் செயலிழந்ததாலும் ஏற்பட்ட தகவல் தொடர்பு இடைவெளியைப் புறா படைதான் இட்டு நிரப்பியது.

1982-ல் பங்கி என்ற சிறு நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டபோது அங்கிருந்த நிலைமையைக் காவல் துறை மூலம் பெற்றுவர இந்தப் புறாக்கள்தான் அனுப்பப்பட்டன. இந்தப் புறாக்கள் வெறும் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் தூது வேலையைத்தான் செய்தன என்று நினைக்க வேண்டாம். சில குற்றவாளிகளை அவர்களுக்குத் தெரியாமலேயே பின்தொடர்ந்து கண்காணித்து பிடித்தும் கொடுத்துள்ளன!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x