Last Updated : 24 Apr, 2018 09:33 AM

 

Published : 24 Apr 2018 09:33 AM
Last Updated : 24 Apr 2018 09:33 AM

என்ன சாதித்திருக்கிறது பஞ்சாயத்து ராஜ்?- உள்ளாட்சி சீர்திருத்தங்களுக்கு மிகக் குறைந்த நிதி ஆதாரத்தைத் தரும் நாடு இந்தியா

ந்திய அரசியல் சாசனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதிய பஞ்சாயத்து ராஜ் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்புக்களை உருவாக்கிய இந்தப் பஞ்சாயத்து அரசாங்கம், சமூகத்தில் உருவாக்கிய தாக்கங்கள் குறித்துப் பேச வேண்டிய தருணம் இது. இது தொடர்பாக, ஒன்றிய அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு அறிக்கைகள் வந்துள்ளன. ஆனால், ஒரு மைய அரசாங்கம் அதில் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதற்கு அகில இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தேவை. அவ்வாறு அகில இந்திய அளவில் ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் சிலரே. அவர்களில் மிகச் சிலர் தொடர்ந்து ஆய்வு அறிக்கைகளைத் தொய்வின்றி தயாரித்துவருகின்றனர்.

இவர்கள்தான் உலக வங்கியிலிருந்து நம் அரசாங்க முடிவுகளுக்குக் காரணமான தரவுகளைத் தருபவர்கள். பெரும்பாலானவர்கள் பொருளாதார வல்லுநர்கள். அன்வர் ஷா, ஜேம்ஸ் மேனோர், திலிப் முகர்ஜி, பிரணாப் பர்தான், ஆண்ட்ரூ ஃபாஸ்டர், ராகவேந்திர ஜா, ஹான்ஸ் பின்ஸ்வாங்கர், ஹரி நாகராஜன் போன்றோர் தொடர்ந்து கிராமப்புற உள்ளாட்சி உருவாக்கியிருக்கிற தாக்கங்கள், குடும்பங்களில் மற்றும் கிராமங்களில் உருவாக்கி யிருக்கிற தாக்கங்கள் என்ன என்பதை ஆராய்ந்து அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளனர். மிகப் பெரிய அளவில், மிகப் பெரிய நிதிச் செலவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை. இந்தியா முழுவதும் அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்து உருவாக்கப்பட்டவை. அதில் ஒரு அறிக்கை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

மிகப் பெரிய ஆய்வுகள்

இந்த ஆய்வறிஞர்களின் அறிக்கைகளுக்குத் தேவையான புள்ளிவிவரங்களை அளித்த நிறுவனம் தேசிய செயல்முறை பொருளியல் ஆய்வுக் குழு (என்.சி.ஏ.இ.ஆர்.). 1999-ல் இந்த ஆய்வு நிறுவனம் இரு பெரும் கணக்கெடுப்புகளை இந்தியாவின் 17 மாநிலங்களில் நடத்தியது. 241 கிராமப் பஞ்சாயத்துகளில் 7,474 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு இது. இரண்டாவதாக 2006-ல் 8,659 குடும்பங்களையும் வைத்து புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த இரண்டு கணக்கெடுப்புகளும் கொண்டுவந்திருக்கும் புள்ளிவிவரங்கள் இந்தியக் கிராமங்களை, கிராமத்தில் வசிக்கிற குடும்பங்களை ஆய்வுசெய்யத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தருகின்றன. உலகில் பல முன்னோடி ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தப் புள்ளிவிவரங்களை வைத்து மிகப் பெரிய ஆய்வறிக்கைகளைத் தயாரித்துள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களை வைத்துதான் உள்ளாட்சி சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கைகளையும் ஆய்வறிஞர்கள் தயாரித்து வெளியிட்டனர்.

என்னென்ன பிரச்சினைகள்?

இந்த ஆய்வுகள் வெளிக்கொணர்ந்த பல முடிவுகள் எதிர்காலத்தில் கிராமப்புற உள்ளாட்சிகளை வழிநடத்துவதற்கு மிகப் பெரிய அளவில் உதவுவதாக உள்ளன. இந்தியாவில் இந்த 25 ஆண்டுகளில் உள்ளாட்சிகள் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாவதற்கான அடிப்படை அம்சங்கள் சாத்தியமாகவில்லை எனும் கருத்தை ஆய்வறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் அரசியல் சட்டத்தால் உள்ளாட்சிகள் உருவாக்கப்பட்டாலும், உள்ளாட்சிக்கான சீர்திருத்தங்களைச் செய்த நாடுகளிலேயே மிகக் குறைந்த நிதி ஆதாரத்தைத் தரும் நாடு இந்தியா என்பதையும் இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதிக நிதி ஆதாரத்தை உள்ளாட்சிகளுக்குத் தரும் நாடு சீனா. அந்நாட்டின் உள்ளாட்சிகள் அரசியல் சட்டத்தால் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் உள்ளாட்சிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட சேவைகளை மக்களுக்குச் செய்துவருகின்றன என்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

இந்த உள்ளாட்சிகள் செயல்படுவதற்கான ஊக்கச் செயல்பாடுகளை முறைப்படி செய்வது கிடையாது என்பதை இந்த அறிக்கைகள் பதிவுசெய்துள்ளன. பெண்களுக்கான இடஒதுக்கீடு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மிகப் பெரிய போராட்டங்களுக்கிடையில் பெண்களும் உள்ளாட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு சாதனை படைத்திருக்கிறார்கள். பெண்களும் தலித் மக்களும் பழங்குடியினரும் உள்ளாட்சியைப் பயன்படுத்தி முன்னேற்றங்களை அடைந்திருக்கிறார்கள். பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. உள்ளாட்சியில் ஊழலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அரசுக்குச் செலுத்தும் வரியைவிட, உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு அதிக லஞ்சம் தர வேண்டியிருக்கிறது என்று மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான அரசு உதவிகளைப் பெறக்கூட லஞ்சம் தர வேண்டியிருக்கிறது என்றும் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுவரை இருந்து வந்த தகவல் தொடர்பு பரிமாற்ற இடைவெளி குறைந்து அனைவருக்கும் தகவல்கள் கிடைப்பதில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு அதிகம். கிராமசபைச் செயல்பாடுகளில் பெண்களின் பங்களிப்புதான் இந்த இடைவெளியைக் குறைத்தது எனலாம். உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் முக்கியச் செயல்பாடுகளான பொருளாதார மேம்பாட்டிலும், சமூக நீதி வழங்குவதிலும் கவனம் செலுத்தவில்லை என்பதை இந்த அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

வலுவில்லாக் கட்டமைப்பு

அடிப்படையில் உள்ளாட்சி அமைப்பின் உருவாக்கமே ஒரு வலுவில்லாக் கட்டமைப்பில் உள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. உள்ளாட்சி சீர்திருத்தங்கள் தொடர்பாகக் கொடுக்கப்பட்ட அறிக்கையில் உள்ள பரிந்துரைகளில் 10%-ஐக்கூட மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. உலகிலேயே ஏழைகளுக்கான அதிக சட்டங்களையும், திட்டங்களையும், ஒதுக்கீடுகளையும் கொண்ட நாடு இந்தியா. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நாம் கோட்டைவிட்டுவிடுகிறோம் என்பதையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. மத்திய, மாநில அரசுகள் பஞ்சாயத்துக்களை வலுப்படுத்த போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது இந்த அறிக்கைகள் மூலம் உறுதியாகின்றன.

இந்தப் பின்னணியில் தமிழகத்தில் உள்ளாட்சிக்குத் தரும் முக்கியத்துவம் என்ன என்பதை, கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் பார்த்துவருகிறோம். முன்பெல்லாம் மாநில அரசுகள் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவில்லையென்றால், மத்திய அரசு தலையிட்டு தேர்தலை நடத்த முனைப்பு காட்டும். தற்போது இதை மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை, அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. இது ஒரு அரசியல் சாசன விதிமீறல். அதைப் பற்றி எவருக்கும் கவலை இல்லை என்பது வேதனை தரும் விஷயம்!

- க.பழனித்துரை, காந்திகிராமம் பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைப் பேராசிரியர்,

தொடர்புக்கு: gpalanithurai@gmail.com

ஏப்ரல் 24: புதிய பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கான 73-வது அரசியல் சாசனத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x